Friday, December 26, 2008

IFFK - 2K8 :: My Marlon and Brando.

My Marlon and Brando
Gitmek
Turkey/2008/35mm/Colour/92'/Turkish,English

Direction:Huseyin Karabey
Producers:Huseyin Karabey, Lucinda Englehart, Sophie Lorant
Screeplay:Huseyin Karabey, Ayca Damgaci
Cinematography:A.Emre Tanyildiz
Editing:Mary Stephen
Sound:Mohammed Mokhtari
Cast:Ayca Damgaci, Hamali Khan, Emrah Ozdemir, Mahir Gunsiray, Volga Tekinoglu, Ani Ipekkaya, Cengiz Bozkurt Nesrin Cavadzade


ன்றைய தினமே மதியம் கைரளி தியேட்டரில் இப்படம். போட்டிக்கென வந்த படங்களில் இதுவும் ஒன்று. அந்த வரிசையில் முதலில் திரையிடப்படும் படம் இது என்பதால், கூட்டம் அள்ளியது. சுந்தர் வரத் தாமதம் ஆகும் என்பதால், முன்னதாகவே சென்று, சீட் பிடித்து வைத்திருந்தேன். அவர் வந்து படம் துவங்கும் போது, எல்லா சீட்டும் நிரம்பி, நடைபாதைகளில் எல்லாம் குந்திக் கொண்டனர். படத்தின் இயக்குநர் ஹுஸைன் வந்திருந்தார். 'இந்தப் படத்திற்கு ஏன் இவ்வளவு கூட்டம்' என்று ஆச்சரியக் கேள்வியிட்டார். பால்கனியில் சிறிது சலம்பல் சத்தம் கேட்டது. பின் வரிசைகளில் ஏதோ சண்டை கேட்டு, பின் சிரிப்புச் சத்தம் கிளம்பியது.

படம் துவங்கிய கொஞ்ச நேரத்திலேயே மெளனம் ஆக்ரமித்துக் கொள்ள, எனக்கு இடது பக்கம் அமர்ந்து கொண்டிருந்த ஒரு மத்திய வயது மனிதர் சாய்வாகச் சரிந்து விட்ட குறட்டை சப்தத்தின் மெல்லிய இடையூறின் பின்புலத்தில் படம் பார்க்கத் தொடங்கினேன்.

ய்ச்சா ஒரு துருக்கிய தியேட்டர் நடிகை. கொஞ்சம் குண்டானவள். அவளுடன் நடிக்கும் மற்றோர் இளம் நடிகை (Nesrin Cavadzade) இண்டர்நெட்டில் தன்னை விட இரண்டு வயது இளையவனுடன் டேட்டிங் செய்பவள். ஆய்ச்சாவின் காதலரும் ஒரு நடிகர். அவர் வடக்கு ஈராக்கில் இருக்கின்ற ஒரு குர்திஷ் இனத்தவர். ஏதோ ஒரு சந்திப்பில் இருவருக்கும் பழக்கம் ஏற்பட்டு விரும்புகிறார்கள். இருவரும் பரஸ்பரம் வீடியோக்கள் அனுப்பித் தங்கள் காதலைச் சொல்கிறார்கள். ஹமா அலி தான் பயணிக்கும் ராட்டினத்தில் அமர்ந்து கொண்டு, நாட்டைச் சூழ்ந்திருக்கும் அமெரிக்க ஆக்ரமிப்புப் போர் பயத்தைச் சொல்கிறார். தான் சூப்பர்மேன் போல் பறக்கும் காமெடி வீடியோக்கள் அனுப்புகிறார்.

நாடகத்தில் சரியாக கவனம் செலுத்த முடியாத வகையில், பயம் அவளுள் பரவி விடுகின்றது. நாளுக்கு நாள் அதிகரிக்கின்ற போர்ச் செய்திகளும், வதந்திகளும் அவளை பீதி அடையச் செய்து விடுகின்றன. அவள் ஒரு முடிவெடுக்கிறாள். எல்லையைக் கடந்து, ஈராக் சென்று காதலருடன் சேர!

அமெரிக்க ஆக்ரமிப்பு ஆரம்பித்துள்ளதால், ஈராக்கின் எல்லைகள் மூடி சீல் வைக்கப்படுகின்றன. செக் போஸ்டுகளில் பாதுகாப்பு தீவிரம் செய்யப்படுகின்றது. எனவே நேரடியாகச் செல்லாமல் ஈரான் வழியாக, ஈராக் செல்ல நினைக்கிறாள்.

ஈராக்கில் இருந்து கள்ளத்தனமாகத் தப்பி வந்த ஒருவன் உதவி செய்வதாகக் கூறுகிறான். அவன் அதற்குப் பதிலாகத் தனது ஓவியங்களைப் பாதுகாத்து வைக்குமாறு கூறி, அவளது வீடு வரை வந்து வைத்து விட்டுப் போக, அவளது நடத்தை மேல் சந்தேகப்பட்டு ஒரு கிழவர் கத்துகிறார். இஅவளும் திருப்பிக் கத்தி அவரைத் துரத்தி விடுகிறாள். இதனாலும் ஊரை விட்டுக் கிளம்பும் அவள் எண்ணம் உறுதியாகிறது.

துருக்கியில் இருந்து ஈரான் சென்று, அங்கு டாக்ஸிகள், பஸ்கள் வழியாக பல தொலைவு கடக்கிறாள். ஓர் இடத்தில் செக் போஸ்ட்டில் காத்திருக்கச் செய்ய, அங்கு எதேச்சையாக ஒரு நாடக ஆதரவாளரைக் கண்டு, அவரது சிபாரிசில், ஈரானில் நுழைகிறாள். லஞ்சம் புழங்கும் எல்லைகளில், ஒரு டாக்ஸி வழியாக நகருக்குள் சென்று விடுகிறாள். அங்கு மகா இரவு நேரத்தில் ஒருவன் பின் தொடர, பயந்து கொண்டே ஹோட்டல் அறைக்குத் திரும்புகிறாள்.

மீண்டும் பஸ் பயணம் செய்து, ஈராக்கில் நுழைந்து விடுகிறாள். அங்கே ஒரு சின்ன கடை. அதன் வாசலில் ஒரு கிழவர் குந்தி இருக்கிறார். பனி பெய்யும் மலைகள். ஒரு நாய். இவள் வரும் முன்பாக இருந்த இரு பர்தாப் பெண்கள் கொஞ்ச நேரத்தில் சென்று விடுகிறார்கள். இவள் மட்டும் தனியாக! மாலை மயங்கி வருகிறது. அந்தக் கிழவர் மட்டும் இவளைப் பார்த்துக் கொண்டே இருக்கிறார். கொஞ்ச ஏரத்தில் அவளை உள்ளே கூப்பிடுகிறார். பனி பெரியதாகப் பெய்யத் தொடங்குகிறது. உள்ளே சென்ற அவளுக்குச் சூடாக குடிக்கத் தருகிறார். குடிக்கிறாள். மீண்டும் காத்திருக்கத் தொடங்குகிறாள்.

தூரத்தில் இருக்கின்ற பனிமலைகளுக்கு காமிரா மாறுகிறது. காமிராவின் பார்வை ஹமா அலியின் பார்வை ஆகிறது. காமிரா நடக்கின்றது. வெகு தூரத்தில், ஆய்ச்சா இருக்கும் வீடு புள்ளியாகத் தெரிகின்றது. காமிரா சொல்கிறது,'இன்னும் இரண்டு மணி நேரம் தான். ஆய்ச்சா, நான் வந்து விடுவேன்.ஐ லவ் யூ. ஐ மிஸ் யூ... ஐ கிஸ் யூ...!' காமிரா ஒரு மலையில் ஏறுகின்றது. வெகு அருகில் ஒரு தோட்டா வெடித்துப் பாயும் சத்தம் கேட்கின்றது. காமிரா அப்படியே சுற்றி விழுகின்றது. காமிரா இப்போது வானம் பார்க்கின்றது. கூட வரும் நண்பர் ஒருவர், 'அலி...அலி..' என்று காமிராவை உலுக்குகின்றார். காமிரா மெல்ல மெல்ல இருள்கின்றது.

திரையை இருள் கவ்விக் கொள்ள.... சுருள் சுருளாக அரபி இசை அவிழத் தொடங்க... எழுத்துக்கள் மெல்ல மெல்ல மேலேறுகின்றன.

யணம்...பயணம்...பயணம்..! படம் முழுக்கப் பயணம் தான். ஈரான், ஈராக்கின் எல்லைகளில் படர்ந்திருக்கும் பனிமலைகளின் முன் சின்னதாக பஸ் செல்கின்றது. வழியில் காணும் ஒரு திருமணக் கொண்டாட்டத்தில் ஆய்ச்சா கலந்து கொண்டு, நடனமாடும் போது, வேன்களில் கடக்கின்றனர் அமெரிக்க இராணுவ வீரர்கள். எல்லோரும் பர்தா அணிந்து கொண்டிருக்க, ஹோட்டலில் இவள் மட்டும் ஜீன்ஸ், சல்வார் போட்டிருக்க, வெய்ட்டர் வந்து மான் போல் சைகை காட்டுகிறான். கொஞ்சம் குழம்பி, பின் புரிந்து கொண்டு, தலை வரை இழுத்துக் கொள்கிறாள். ஈரானுக்கும், துருக்கிக்கும் இடையில் இருக்கும் கலாச்சார வேறுபாட்டைச் சொல்கிறது.

எல்லையில் அமர்ந்து புலம்பும் கிழவியின் வார்த்தைகள் உண்மை பூண்டிருக்கின்றன. லஞ்சம் புழங்கும் பார்டர்கள், டி.வி.ஷோக்கள், சி.என்.என்., தெரிவிக்கும் போர்க்களக் காட்சிகள், காத்திருத்தலின் வலிகள், கள்ள இம்மிகிரண்ட்களின் சிறைபிடிப்பு, பெண்ணுக்குப் பாதுகாப்பற்ற இரவு....!!!

டத்தைப் பற்றித் தெரிந்து கொள்ள இணையத்தைப் பிறாண்டியதில், இது படம் அல்ல என்பதும், ஆய்ச்சாவின் உண்மைக் கதை என்பதும், ஹமா அலி காட்டும் வீடியோக்கள் உண்மையாகவே அவர் அனுப்பி வைத்தவை என்பதும், இப்போது அவர் இல்லை என்பதும்...படத்தின் மேல் வைத்திருந்த பிரமிப்பை முற்றிலும் வேறொரு தளத்திற்கு நகர்த்தி விட்டது.

5 comments:

Karthik said...

காதலுக்கு எல்லைகள் எப்போதும் புரிவதில்லை. எல்லைகளை மூடுபவர்களுக்கு, காதல் புரிவதில்லை.

படத்தின் தலைப்பு கொஞ்சம் சம்பந்தம் இல்லாதது போல் தெரிகிறது?

இரா. வசந்த குமார். said...

அன்பு கார்த்திக்...

வீடியோ பார்த்தீர்கள் எனில் ஆய்ச்சா 'you are my marlon and brando' என்று சொல்வதைக் கேட்கலாம். மார்லன் ப்ராண்டோ என்பவர் ஒரு பெரும் ஹாலிவுட் நடிகர். 'Godfather' என்ற மெகா ஹிட் படத்தில் நடித்தவர். எனவே அவரைப் போல் உன்னை விரும்புகிறேன் என்று சொல்கிறார்.

Karthik said...

//வீடியோ பார்த்தீர்கள் எனில்

இங்கே இயர் போன் இல்லை. அதனால் வீடியோ பார்க்கவில்லை. :(

//மார்லன் ப்ராண்டோ என்பவர் ஒரு பெரும் ஹாலிவுட் நடிகர். 'Godfather' என்ற மெகா ஹிட் படத்தில் நடித்தவர்.

அவரை எதிர்பார்த்துதான் வந்தேன்.
:)

இரா. வசந்த குமார். said...

அன்பு கார்த்திக்...

கலைப் படங்களில் மார்லன் பிராண்டோவை எதிர்பார்த்து வந்தீர்களா..? ஹையோ.. ஹையோ...! :)

Karthik said...

//கலைப் படங்களில் மார்லன் பிராண்டோவை எதிர்பார்த்து வந்தீர்களா..? ஹையோ.. ஹையோ...! :)

அவர் நடித்ததில் Godfather மட்டும்தான் பார்த்திருக்கிறேன். சொல்லப் போனால் எனக்கு Marlon brando என்றாலே Vito Corelone தான்.

அதைத்தாண்டி ஒன்றும் தெரியாது.