Wednesday, March 04, 2009

மெளனமாய்...!!!

20.Mar.2006.

ரு முன்பனிக் காலத்தின் பின்னிரவு நேரம்..!

பெய்கின்ற கருமையில் நனைந்த பெரும் இருட்டுத் திரட்டுக்குள் புள்ளி வைத்த வெளிச்சப் பொட்டுக்கள் நிரம்பிய ஒரு வீடு!

நினைப்பதற்கான மொழியை அறியுமுன், எழுந்த முதல் நினைவாய், உன் முதல் சிரிப்பை நினைத்துப் பார்க்கிறேன்.

பெய்யெனப் பெய்யும் மழையில், ஒளிக் கதிர்களை நனைத்து, கரைந்து கொண்டிருந்த மழை நேரம் அது!

ஒளித் தூறல்களும், மழைச் சாரல்களும் பின்னிப் பிணைந்து வகிடெடுக்கையில், சாலை ஓரங்களிலேயே வழிந்து சென்றன வாகனங்கள்!

வரப் போகும் முன்னிரவின் துளி நகல்களாய், ஒவ்வொருவரும் ஏந்திக் கொண்டிருந்த, கறுப்புக் குடைகளின் மேல், பொட்டு வைத்து, ஈரம் தொட்டு வைத்துச் சென்றது, வானின் மழை மகரந்தத் தூள்..!

இரு கரைகளிலும் நுரை ததும்பும் அலைகளை இறைக்கும் மாக்கடலின் சிறு பிரதியாய், பேருந்துகள் இருபுறமும் சேற்றை வாரியடித்தன.

கோவர்த்தனகிரியும் கோவிந்தனும் இல்லாததால், ஒடுங்கிய பொது நிறுத்தக் குடைக்குள், ஒண்டியிருந்தோம், ஒரு முனையில் நீயும், மறு முனையில் நானும்..!

நடை பயிலும் ரோஜாக் குட்டிகள் போல், நடந்து வந்தனர் பள்ளிக் குயில்கள். ஒரு மயிலைப் போய், நீ தழுவிக் கொண்டு, குடைக்குள் நிறுத்தினாய். அன்று உன்னைக் கவனித்தவர்களுள் ஒருவனானேன் நானும்..!

மற்றுமொரு நாளின் முன்மாலைப் பொழுது..!

வியர்வையும் வெப்பமும் நிரம்பி அலையடிக்கின்ற பெருங்கோயிலின் உட்புறம். வார இறுதியின் களைப்பு நிரம்பிய கைகளைக் கூப்பி நான் தொழுகையில், எதிரே நின்றாய் ஒரு சிலையென..!

தீபம் நகர்ந்து உன்னருகில் நிற்கையில், ஒரு ஜ்யோதியைப் போல், நீ ஒற்றிக் கொள்கையில், தோடுகளில் பட்டுத் தெறித்த ஒளித் துளியை, ஒளித்துக் கொண்டே நான்!

பிறிதொரு நாள். உன் முகம் போன்ற மலர் தேடிக் கொண்டிருந்த தேனீக்கள் நிரம்பிய பூங்கா. வெயில் சரிந்து, மஞ்சள் பொழிவில் சிவந்து கொண்டிருந்தன காலத்தின் முட்கள்.

தனிமையில் தளும்பும் சோகம் போல், ஒற்றையாய் வந்தமர்கிறாய். உன் கண்களில் கசிகிறது கவலைகளில் பாதச் சுவடுகள். துடைத்து வைக்க விரல்கள் கொண்டிருந்தும், நீளவேயில்லை என் கைக்குச்சிகள்.

பிறகு தொடர்ந்து எந்தக் கணமும் நினைவில் நிற்கவேயில்லை, உன்னை நினைக்காததால்! சபித்துக் கொள்கின்றன, என் கைகள், சலித்துக் கொள்கின்றன, என் கண்கள்.... பெரும் பயணத்தின் இறுதிப்புள்ளி வரையிலும்...!!

4 comments:

அனுஜன்யா said...

உங்கள் வழக்கமான நடையிலிருந்து விலகிய, பின்.நவீன நடை. நல்லா இருக்கு. இப்படியும் எழுதுங்கள்.

அனுஜன்யா

ps: மசாக்கலி - அட்டகாசம். என்ன அவ்வப்போது மியூட் செய்ய வேண்டியுள்ளது! தேங்க்ஸ்.

இரா. வசந்த குமார். said...

அன்பு அனுஜன்யா...

மிக்க நன்றிகள் தங்கள் கருத்துக்கு...!!

ps: உங்களது வ.பு.அணி புரிந்தது. மசாக்கலி - ஆஃப் செய்தாகி விட்டது. :)

அனுஜன்யா said...

வ.பு.எல்லாம் இல்லை. நான் அந்தப் பாட்டுக்கு பெரிய ரசிகன். ஆபீஸில் சப்தமாகக் கேட்டால் வேலை செய்வதில்லை என்ற தவறான கருத்து வந்துவிடுமே :))

நீங்க இந்தப் பாட்டை போட்டு வைத்திருப்பதை கேபிள் சங்கர் வலைப்பூவில் கூட சொல்லி இருந்தேன். (இலவச விளம்பரம்தான்; நோ சார்ஜஸ் ப்ளீஸ் :) )

அனுஜன்யா

இரா. வசந்த குமார். said...

அன்பு அனுஜன்யா...

:)

இப்டி விளம்பரம் கெடச்சா தான் உண்டு..!!!