Tuesday, September 22, 2009

செவன்லிங், சிட்ஜோ.

மாலை நேரம்
மழை தூறும் காலம்
என் ஜன்னலோரம் நிற்கிறேன்.

நீயும் நானும்
ஒரு போர்வைக்குள்ளே
சிறுமேகம் போலே மிதக்கிறேன்.

ஓடும் காலங்கள்.

அன்னா அக்மாதொவா என்ற இரஷ்ய கவிஞர் உருவாக்கிய கவிதை வடிவம் செவன்லிங்.

இதில் மொத்தம் ஏழு வரிகள் இருக்கும். சில விதிகள் இருக்கின்றன. இரண்டு பகுதிகளாக எழுதப்பட வேண்டும். கடைசியாக ஒரு வரி வர வேண்டும். முதல் மற்றும் இரண்டாம் பாராக்கள் மூன்று வரிகளில் மட்டுமே இருக்க வேண்டும். சிறப்பம்சம் என்னவென்றால், முதல் பாராவில் மூன்று பொருட்கள்/ மூன்று உணர்வுகள்.. ஏதேனும் மூன்று தொடர்பான விஷயங்கள் வர வேண்டும். இரண்டாம் பாராவிலும் ஏதேனும் தொடர்பான மூன்று வர வேண்டும். ஆனால் முதல் பாராவில் வரும் மூன்று விஷயங்களும், இரண்டாம் பாராவில் வரும் மூன்று விஷயங்களும் ஒன்றுக்கொன்று தொடர்பில்லாமல் இருப்பது சிறப்பு. கடைசி வரி இரண்டு பாராக்களுக்கும் சம்பந்தமேயில்லாமல் இருப்பது நலம். முக்கிய நிபந்தனை, எழாவது வரியோடு கவிதை முற்றுப் பெற்று விடக்கூடாது. இன்னும் கதை இருக்கின்றது என்பதைப் படிப்பவர் மனதில் ஏற்படுத்துமாறு எழுத வேண்டும். இதில் ஆங்காங்கே எதுகை, மோனைகள் வந்தால் எழில் கூடும்.

ஏழு வரிகள் வருவதால் இது செவன்லிங் எனப்படுகிறது. நாம் தமிழில் என்ன சொல்லலாம்? நான் 'ஏழ்வரி' முன் வைக்கிறேன். வேறு அழகான வார்த்தை கிடைத்தால் சொல்லுங்கள்.

ஓர் அழகான ஏழ்வரி :

அவன் மூன்றை மட்டும் விரும்பினான்:
வெண் மயில்கள், ஈவென்சாங்,
அமெரிக்காவின் பழைய வரைபடங்கள்.

குழந்தைகள் அழுவதையும்,
செர்ரி ஜாமுடன் தேயிலை குடிப்பதையும்,
பெண்ணின் கத்தலையும் வெறுத்தான்.

...மற்றும் அவன் என்னை மணந்து கொண்டான்.

மேற்கண்ட கவிதை மேற்கண்ட அம்மணியின் கவிதை.

அவன் பையில் இருந்தது, இங்க் பேனா,
ஐநூறு ரூபாய் நோட்டு,
டி.பி. மருந்துச் சீட்டு.

என் கையில் பேனாக் கத்தி,
ஆக்ஸா ப்ளேடு,
ஆசிட் முட்டை.

தியேட்டரில் கரண்ட் போனது.

http://en.wikipedia.org/wiki/Sevenling
http://en.wikipedia.org/wiki/Anna_Akhmatova

சிட்ஜோ என்பது கொரியக் கவிதை வடிவம்.

மூன்றே வரிகள். ஒவ்வொரு வரிக்கும் 14 - 16 அசைகள் வரலாம். முதல் வரியில் ஒர் காட்சியை அறிமுகப்படுத்துவது; இரண்டாம் வரியில் அதனை விரிவுபடுத்துவது; மூன்றாம் வரியின் முதல் பாதியில் ஒரு திருப்பம் வைத்து, மறு பாதியில் கவிதையை முடித்து விடுவது. ஒரு திரைக்கதையினை எழுத வேண்டிய முறை இது. ஒவ்வொரு வரிக்கும் அசை எண்ணிகையையும் தெளிவாக குறித்து வைத்து விட்டார்கள்.

முதல் வரி : 3, 4, 4,4
இரண்டாம் வரி : 3, 4, 4, 4
மூன்றாம் வரியின் முதல் பகுதி: 3, 5
மூன்றாம் வரியின் இரண்டாம் பகுதி: 4, 3

U Tak (1262–1342) எழுதிய ஓர் அற்புதமான சிட்ஜோ :

பின்பனிக்காலக் காற்று மலைகளின் பனியை உருக்கி உடனே மறைய வைத்து விடுகிறது.
கொஞ்சம் அதை வாங்கி என் தலைமுடி மேல் வீசச் செய்ய விரும்புகிறேன்.
என் காதுகளின் மேல் தேங்கியிருக்கும் முதுமையின் பனியை உருகச் செய்வதற்காக!

மொழிபெயர்ப்பில் நிறைய அசைகள் ஆகி விட்டன. கொரிய எழுத்தில் சரியாக வந்திருக்கும் என்று நினைக்கிறேன்.

http://en.wikipedia.org/wiki/Sijo
The Bamboo Grove

***

கூகுள் செல்லுங்கள். how என்று டைப் அடித்து விட்டு, கூகுள் சஜஷன்ஸ் முதலில் என்ன தருகின்றதென்றால்,முதல் கேள்விக்கு கூகுளில் தேடித்தான் கண்டுபிடிக்க வேண்டுமா?

2 comments:

வெண்பூ said...

கவிதைக்கும் எனக்கும் ரொம்ப தூரம்.. ஆனா அந்த கூகுள் சர்ச் சூப்பர்... உங்க கமெண்டுக்கு சிரிச்சிட்டு இருக்கேன்..

இரா. வசந்த குமார். said...

அன்பு வெண்பூ...

நன்றிகள்...:)