Saturday, March 27, 2010

மொக்ஸ் - 27.Mar.2010

சென்ற வாரம் ஊருக்குப் போயிருந்தேன். சனிக்கிழமை மாலை இரண்டு பஸ்கள் மாற்றி, பவானிக்கு வந்த போது பள்ளி நண்பன் ஒருவன் பிடித்துக் கொண்டான். போன மாதம் அவனுக்கு அவன் மனைவியுடன் திருமணம் ஆகியிருந்தது. திருமணம் பவானியில் ஒரு புதன் காலையில். இப்படி நட்ட நடு வாரத்தில் வைத்தால் கேரளாவில் இருந்து எப்படி வருவது? போகவில்லை. ரிசப்ஷன் சென்னையில், தொடர்ந்த ஞாயிறில். கச்சேரி எல்லாம் வைத்து, மேடையில் ஷர்வானி ஆடைகளில் ஜிகினா வர்ணங்கள் நனைந்த இரவுக்கும் என்னால் போக முடியவில்லை.

"ஏன்டா ரெண்டுக்கும் வரலை..?"

"வர முடியலை. விடு..!"

"சரி..! ஹனிமூனுக்காவது வந்திருக்கலாமில்ல..?" என்று கேட்டான்.

அதிர்ச்சி வேண்டாம். தேனிலவு திருவனந்தபுரத்தில் ஏற்பாடு செய்திருந்தான். கோவளம் கடற்கரை ரிசார்ட் ஒன்றில். சனி, ஞாயிறு, திங்கள் என்று மூன்று நாட்கள் + இரண்டு இரவுகள்.சென்னை செல்ல வேண்டிய வேலைகள் வந்து விட்டதால், என்னால் இருக்க முடியவில்லை.

மூன்று நாட்களுக்கும் ஊர் சுற்றிப் பார்க்கச் சில ஐடியாக்களைச் சொல்லியிருந்தேன்.

சனிக்கிழமை ரெஸ்ட் மற்றும் பத்மனாபர் கோயில். ஞாயிறு தென்மலை. திங்கள் ரெஸ்ட் மற்றும் கோவளம் கடற்கரையில் உலாவல்.

"என்னடா..! ப்ளான் போட்டமாதிரி எல்லா எடத்துக்கும் போனீங்களா..?"

"இல்லடா..!"

"என்னாச்சு..?"

"நாங்க போன டைம்ல ஏதோ பொங்கல் பண்டிகையாமே..! ரோடெல்லாம் ப்ளாக் பண்ணியிருந்தாங்க. அதனால எங்கயும் போகாம, ரூமுக்குள்ளயே அடைஞ்சிருந்தோம்..!" கண்ணடித்துச் சிரித்தான்.

ன்று இரவு, வி.என்.சி. முனைக்கு எதிர்ப்புறம் இருக்கும் திருமணக் கூடத்தில் ஒரு நூல் அழகம் நடந்து கொண்டிருந்தது. 'ச்சும்மா ஒரு விசிட்' என்று போய் நான்கு புத்தகங்கள் வாங்கினேன்.

'சிப்பி புக்ஸ்' வெளியீடான ந.சி.கந்தையா பிள்ளை என்பவரின் 'தென்னிந்திய குலங்களும் குடிகளும் என்ற 45/- நூல். பெரும்பாலான பக்கங்களில் தென்னகத்தில் புழங்கும் குலங்களின் பழக்கவழக்கங்கள் - குறிப்பாகத் திருமணம் செய்யும் முறைகள் - போன்றவை குறிப்புகளாகச் சொல்லப்பட்டுள்ளன. கொஞ்சம் வட இந்திய குலங்கள் பற்றி ஒரு வரிகளும், இலங்கைத் தமிழர் இடையே உள்ள குலங்கள் பற்றியும் உள்ளன.

பொள்ளாச்சி நல்லமுத்துக் கவுண்டர் மகாலிங்கம் கல்லூரியின் பதிப்புத்துறை வெளியீடான 'ஆண்டாள்'. ஆசிரியர் 'முனைவர் நிர்மலா மோகன்'.

பன்னிரு ஆழ்வார்களில் ஒரே பெண், ஆண்டாள். தாயாய்க் காதலியாய்க் கற்பனை செய்து கொண்டு, 'கண்ணா... வாடா...' என்று அழைப்பதை விட, உண்மைப் பெண்ணாய்த் தான் உணர்வதை எழுதி வைத்த ஆண்டாள், அழகி.

'வானிடை வாழும் அவ்வானவர்க்கு
மறையவர் வேள்வியில் வகுத்த அவி
கானிடைத் திரிவது ஓர்நரி புகுந்து
கடப்பதும் மோப்பதும் செய்வது ஒப்ப
ஊனிடை ஆழி சங்கு உத்தமர்க்கு என்று
உன்னித்து எழுந்த என் தடமுலைகள்
மானிடர்க் கென்று பேச்சுப்படில்
வாழகில்லேன் கண்டாய் மன்மதனே..!'

என்று காமனிடம் சொல்லி விடுகிறார்.

வாரணம் ஆயிரமும், நாச்சியார் திருமொழியும் செழுமையான நம்மொழியைச் சுவைக்க எப்போதும் படிக்க தேன்.

மூன்றாவது, சாகித்ய அகாடமி வெளியீடான 'தமிழ் இலக்கிய வரலாறு'. தொகுத்தவர் ஆசிரியர் மு.வரதராசனார். முதல் பதிவ்வு வந்தது 1972-ல். என் கையில் இருப்பது 20080ல் வந்த 25-ம் பதிப்பு.

மு.வ. அவர்களின் திருக்குறள் மட்டுமே படித்திருக்கிறேன். அதிலும் மூன்றாம் பால் மிகப் பிடித்தம். 'நனிமொழி வாயில் ஊறும் நீரும்', 'யாரை நினைத்துத் தும்மினீரும்', 'இந்தக் கண்கள் பாவம். காதலரைப் பிரிந்தால் பிரிவுத் துயரால் தூங்குவதில்லை; காதலர் இருந்தாலோ, அவன் தூங்க விடுவதில்லை',' ஊடல் நல்லது. ஏனெனில் பின் வரும் கூடல் கூடுதல் போதை' போன்றவை உடனே நினைவுக்கு வருகின்றன. குறட்பாக்கள் தான். ஆனால் மு.வ. வரிகளில் படித்திராவிட்டால் இன்றும் என் நினைவில் இருக்குமா... தெரியவில்லை.

அவருடைய 'கரித்துண்டு' பிரபலம் என்கிறார்கள். அதுவும் படிக்க வேண்டும்.

எனவே, அவரது நடை பற்றிய தயக்கத்தோடு தான் இந்நூலை வாங்கினேன். ஏமாற்றவேயில்லை ஆசிரியர்.

'ஆங்கிலச் சொற்களும் இந்திச் சொற்களும் தமிழ் நாட்டின் தமிழர்களின் பேச்சில் - வடக்குப் பகுதியாரின் பேச்சில் - கலந்து வழங்குகின்றன. ஆனால் அவற்றில் இவ்வாறு வடிவங்களை முழுதுமாகத் திரிக்காமல், கூடியவரையில் அந்தந்த மொழிகளின் வடிவங்களிலேயே வழங்குகிறார்கள். பஸ், சைக்கிள், கார், ஆபீஸ், லேட், போஸ்ட், பாங்க், காப்பி, முதலான சொற்களை இன்றைய நாடகங்களின் உரையாடலிலும், நாவல்களிலும், சிறு கதைகளிலும் எழுத்தாளர்கள் அப்படியே கையாள்கிறார்கள்.'

மிக இலகுவான நடை. தெளிந்த நீரோட்டம் போல் அழகாகச் சொல்லிச் செல்கிறார். எந்த ஓர் இடத்திலும் சலிப்பு ஏற்படவேயில்லை. படிப்பவர்களோ, எழுதுபவர்களோ கண்டிப்பாக ஒருமுறையாவது படித்திருக்க வேண்டிய நூல் இது. விலை. 100/-

நான்காவதாக, உயிர்மை வெளியீடான 'புறநானூறு - ஓர் எளிய அறிமுகம்'. அ.செய்பவர் சுஜாதா. 225/-.

ஏற்கனவே குறுந்தொகை பழைய பதிப்பு ஒன்றை, பாளை பேருந்து நிலையத்தில் ப்ளாட்பார விரிப்பு ஒன்றில் இருந்து வாங்கியிருந்தேன். புலியூர்க் கேசிகனார் விளக்குனர். அவரது விளக்கங்கள் கிஃப்ட் ரேப்பர் முடிச்சுகளை அவிழ்ப்பது போல், அத்தனை எளிதாகப் புரிய வைத்துப் பதிய வைத்தன. அதில் எனக்குப் பிடித்த ஒரு பாடலை, எப்போதும் குறுந்தொகை பற்றிப் பேசும் போதுச் சொல்வேன்.

'கழனி மாஅத்து விளைந்துகு தீம்பழம்
பழன வாளை கதூஉ மூரன்
எம்மிற் பெருமொழி கூறித் தம்மிற்
கையும் காலும் தூக்கத் தூக்கும்
ஆடிப் பாவை போல
மேவன செய்யுந்தன் புதல்வன் தாய்க்கே.'

இதன் எளிமையான பொருள் : தோட்டத்தின் மதில் சுவரைத் தாண்டி இருக்கும் கிளையில் இருந்து விழுந்த இனிய பழத்தை குளத்தில் இருக்கும் மீன்கள் உண்ணும் ஊரைச் சேர்ந்தவனான அவன், எம் வீட்டுக்கு வரும் போது என்னைப் பாராட்டி விட்டு, அவனைப் பற்றி பெரிதாகக் கூறி விட்டு, அவன் வீட்டுக்குச் சென்ற உடன், தோல் பாவைக் கூத்து போல் தன் மகனின் தாய் ஆட்டி வைப்பதற்கேற்ப ஆடும் இயல்பினன்.

இது தலைவி தம்மை இகழ்ந்து பேசியதாகத் தனது தோழி வந்து சொல்ல, கோபம் கொண்ட பரத்தை தலைவனைப் பற்றி அந்தத் தோழிக்குக் கூறியது.

இப்போது இதன் உள்ளார்ந்த கூறுகளைப் பார்ப்போம்.

தோட்டத்தின் மதில் சுவரைத் தாண்டி வந்த கிளையில் இருந்து விழுந்த இனிய பழத்தைக் குளத்தில் வாழும் மீன்கள் உண்ணும் ஊரைச் சேர்ந்தவன். கிளை காவலை மீறுகின்ற போது, தோட்டக்காரன் அதனை கவனித்து கட்டுக்குள் வைக்க வேண்டும். இல்லாவிட்டால், அது காவலான மதிலை மீறி வளர்ந்து விடும். அப்போது அதில் விளைகின்ற இனிய சுவையுடைய பழம், மதில் சுவரை ஒட்டி அமைந்திருக்கின்ற, ஊர் மக்கள் யாவரும் வந்து குளித்து உபயோகப்படுத்துகின்ற பொதுக் குளத்தில் இருக்கும் மீன்களுக்கு உணவாகுமாறு குளத்தில் விழுந்து விடும்.

தோட்டம் குடும்பத்திற்கும், காவல்காரன் தலைவிக்கும், கிளை தலைவனுக்கும், இனிய சுவையுடைய பழம் தலைவனது காதலுக்கும், பொதுக் குளமும், மீன்களும் ஊர்ப் பொது பரத்தையருக்கும் உவமையாக வருகின்றன.

அடுத்தது,

தலைவி தம்மை இழித்துப் பேசியதை தலைவன் கண்டிக்கவில்லையே என்ற ஆதங்கத்தில் அவனையும் திட்ட வேண்டும் என்பதற்காக, அவனை 'மனைவி சொல் கேட்பவன்' என்ற கேவலப்படுத்துகிறாள், பரத்தை. அக்காலத்தில் அப்படி இருந்திருக்கலாம். அது வேறு கதை.

அதுவும் எப்படி? மனைவி கையில் நூல் இருக்க, அவள் ஆட்டி வைக்கும் பொம்மை போல் ஆடுகிறான். அது மட்டுமா, தலைவன் பரத்தையுடன் இருக்கும் போது, தன்னைப் பற்றி 'நல்லவன், வல்லவன், நாலும் தெரிந்தவன், சூரன், வீரன்' என்றெல்லாம் பெருமையடித்துக் கொண்டு, தனது வீட்டிற்குப் போனவுடன் 'கையது கொண்டு வாயது பொத்தி, மெய்யது குறுகி' மனைவி சொல்வதற்கெல்லாம் தலையாட்டுகிறான்.

அப்பாடா... தலைவனை வைதாகி ஆயிற்று.

அடுத்தது... தலைவி..!

அவளைச் சும்மா விடலாமா..? ஒரே ஒரு வார்த்தையில் அவளை காலி செய்கிறாள். எப்படி..? 'தன் புதல்வன் தாய்க்கே!'.

அதாவது 'அம்மாடி..! உனக்கு வயசாகிடுச்சு..! ஒரு பையன் பொறந்துட்டான். உன்னோட இளமை எல்லாம் காணாமப் போச்சு. இனிமேல் நீ களியாட்டங்களில் இறங்கும் அளவு அழகும், இளமையும் இல்லாதவள்.. ஹையோ..ஹையோ.. அதனால் தான், உன் புருசன் என்னைத் தேடி வரான்..'

ஒரு பெண்ணை கோபமூட்டி, எரிச்சல் படுத்தும் ஒரே ஒரு வார்த்தை, 'உனக்கு வயதாகி விட்டது' என்பது தான். இது பெண்ணாகிய பரத்தைக்குத் தெரியாதா..?

இப்படி ஒரே பாடலில், தலைவியின் இமேஜை காலி செய்து, தலைவனின் காலை வாரி விட்டு, தன் ஆத்திரம் தீர்த்துக் கொள்கிறாள்.

இப்போது மீண்டும் ஒருமுறை பாடலைப் படித்துப் பாருங்கள்.

புறநானூறு எனக்கு ஒரு dry area. மன்னரைப் புகழ்ந்து கொண்டேயிருப்பதும், போர்க்களத்துக்குச் சென்று வரும் (வந்தால்!) வானளவுக்குத் தூக்கிப் பிடித்து ஐஸ் வைப்பதும் தான் பெரும்பான்மை என்று நினைத்திருந்தேன். இல்லை. அவற்றைத் தவிரவும் பல அற்புதமான பாடல்கள் இருக்கின்றன என்பதை இந்நூல் காட்டிவிட்டது.

தாயங்கண்ணியார் என்ற புலவரின் ஒரு பாடல்.

குய் குரல் மலிந்த துலை அடிசில்
இரவலர்த் தடுத்த வாயிற், புரவலர்
கண்ணீர்த் தடுத்த தண்நறும் பந்தர்,
கூந்தல் கொய்து, குறுந்தொடி நீக்கி,
அல்லி உணவின் மனைவியொடு, இனியே
புல்லென்றனையால் - வளங்கெழு திருநகர்! -
வான் சோறு கொண்டு தீம்பால் வேண்டும்
முனித்தலைப் புதல்வர் தந்தை
தனித் தலைப் பெருங் காடு முன்னியபின்னே!

விளக்கம்:

தாளிப்பு வாசனையுடன் சுவையான உணவுக்கு
இரவலர்கள் காத்திருக்கும் வாசலையும்
அவர்கள் கண்ணீரை நிறுத்தும் பந்தலையும்
கூந்தலை நீக்கி
இனிமேல் அல்லி அரிசியை உண்ண வேண்டிய
மனைவியையும்
பால் வேண்டும் மக்களையும் விட்டு
வான்சோறு கொள்ள
இடுகாடு சென்று விட்ட
தந்தை இறந்த பின்
அழகிழந்தாய் நகரமே..!

நூற்றாண்டுகள் தாண்டி அந்த இருள் நிரப்பிய இரவில் எனக்கு என் ஊர் எப்படித் தோற்றமளித்தது என்பதை யார் தாயங்கண்ணியாருக்கு முன்பே சொன்னது..?

மற்றுமொன்று:

காய்நெல் அறுத்துக் கலம் கொளினே,
மா நிறைவு இல்லதும், பல் நாட்கு ஆகும்;
நூறு செறு ஆயினும், தமித்துப் புக்கு உணினே,
வாய் புகுவ தனினும், கால் பெரிது கெடுக்கும்.
அறிவுடை வேந்தன் நெறி அறிந்து கொளினே!

கோடி யாத்து, நாடு பெரிதும் ஏந்தும்;
மெல்லியன் கிழவன் ஆகி, வைகலும்
வரிசை அறியாக் கல்லென் சுற்றமொடு,
பரிசு தடவெடுக்கும் பிண்டம் நச்சின்,
யானை புக்க புலம் போல,
தானும் உண்ணான், உலகமும் கெடுமே.

விளக்கம்:

ஒரு மா அளவினும் குறைவான
நிலமாக இருந்தாலும் விளைந்த
நெல்லை அறுத்துக் கவளமாக்கிக்
கொடுத்தால் பலநாள் வரும்.
நூறுதளை வயல் என்றாலும்
யானை புகுந்து தனியாக
உண்ண நேர்ந்தால்
அதன் வாயில் புகுவதைவிட
காலால் மிதிபடுவது அதிகமாகிக்
கெட்டுப் போகும்.
அறிவுள்ள அரசன்
அளவாக வரி விதித்தால்
கோடிக்கணக்காகச் செல்வம் சேர்ந்து
நாடு செழிக்கும்.
அறிவில்லாமல் சுற்றுப்பட்டவர்
பேச்சைக் கேட்டு
அதிகமாக வரிப்பணம் விரும்பினால்,
யானை புகுந்த நிலம் தான்!

பிசிராந்தையார் பாண்டியன் அறிவுடை நம்பிக்குப் பாடியது.

மார்ச் மாதத்தில், இந்த டேக்ஸ் பாடலை யாராவது, அறிவுடை நம்பிகளுக்குச் சொல்வார்களா..?

இப்பாடல்களை நான் படிக்கும் முறை இது தான். முதலில் பாடலைப் படித்து விடுவது. அது என்ன தான் பல்லிடுக்குப் பாதாம் போல் இம்சைப்படுத்தினாலும், ஒரு வார்த்தை விடாமல் படித்துப் பார்ப்பது. கண்களோடு, காதுகளையும் கட்டிக் காட்டில் விட்டது போல் தான் இருக்கும். பிறகு விளக்க உரை. 'ப்பூ!.. இவ்வளவு தானா' என்று தோன்றும். மீண்டும் ரிவர்ஸ் கியர் எடுத்து, பழந்தமிழைத் தடவிப் பார்க்கும் போது, பொருள் மெல்ல மெல்ல மலர்வது, இனிமை.

மற்றும் பல பாடல்களில் மிகைப்படுத்தல் ஒன்றை மற்றொன்று மிஞ்சுகின்றது. ஒரு பாடலில், அரசன் விட்ட அம்புகள் எல்லாவற்றையும் எண்ணி முடிப்பதற்குள், வான் மீன்களை எண்ணி முடித்து விடலாமாம்.

யோசித்துப் பார்த்தால், இன்றைய பாராட்டு விழாக்களில் புகழ்மாரி பொழிகின்ற கவிஞர்கள், அரசியல்காரர்கள், நடிகர்களின் வரிகளையும் யாராவது தொகுத்து ஒரு 'புதுநானூறு' கொண்டு வரலாம். தமிழர்களின் கற்பனைத் திறத்தின் வீச்சு, இருபத்தோராம் நூற்றாண்டிலும், புறநானூற்றுப் புலவனுக்குக் கொஞ்சமும் சுதி குறையவில்லை என்பதை உணர முடியலாம்.

நேற்று இரவு மீண்டும் ஒருமுறை 'திருவாசகம்' கேட்டேன். சில சமயங்களில் இளையராஜா அவர்களின் இசை அலையடிக்கின்றது. மற்றும் சில சமயங்களில் மாணிக்கவாசகரின் தமிழ் காட்டுக்கொடி போல் மேனி மேல் ஊர்ந்து உள்ளே எங்கோ இறங்குகிறது. அதிலும் 'பூவேறு கோனும்...' பாடலில், ஒவ்வொரு முறையும் 'வானும், திசைகளும் மாகடலும் ஆயபி்ரான்..' என்று கேட்கும் போது, அந்த மகா பக்தக் கவிஞரின் வார்த்தைப் பிரயோகம் பிரமிக்க வைக்கின்றது.

விண்ணை சொல்லிய பின், மண்ணைச் சொல்வதற்கு அவர் சொல்வது என்ன..? திசைகள். என்னவொரு கற்பனை,,! மூன்றே அடிகளில் அளந்த முகுந்தன் போல, மாணிக்கவாசகர் மூன்றே entityகளில் பிரபஞ்சத்தையே பிரானாக்கி விடுகிறார்.

4 comments:

Anonymous said...

நல்லாருக்கு

ஜீவி said...

//இப்பாடல்களை நான் படிக்கும் முறை இது தான். முதலில் பாடலைப் படித்து விடுவது. அது என்ன தான் பல்லிடுக்குப் பாதாம் போல் இம்சைப்படுத்தினாலும், ஒரு வார்த்தை விடாமல் படித்துப் பார்ப்பது. கண்களோடு, காதுகளையும் கட்டிக் காட்டில் விட்டது போல் தான் இருக்கும். பிறகு விளக்க உரை. 'ப்பூ!.. இவ்வளவு தானா' என்று தோன்றும். மீண்டும் ரிவர்ஸ் கியர் எடுத்து, பழந்தமிழைத் தடவிப் பார்க்கும் போது, பொருள் மெல்ல மெல்ல மலர்வது, இனிமை.//

என்ன ஒரு அழகு நடை!.. இப்படித் தாங்க இருக்கணும். தரு நிழலின் நடுவே வழவழத்த தார்ச் சாலையில் குளுகுளு காற்றில் ஜன்னலோர சீட்டில் உட்கார்ந்து பேருந்தில் பயணிப்பது போன்றதொரு சுகம்.. படிக்கப் படிக்க தமிழின் தெம்மாங்கு சுகம் தாலாட்டியது. நிறைய எழுதுங்கள். தொடர்ந்து படிக்க, படித்ததைப் பரிமாறிக் கொள்ளக் காத்திருக்கிறேன்.
மிக்க அன்புடன்,
ஜீவி

thamizhparavai said...

ரொம்ப நாளைக்கப்புறம் தமிழ்ப்பக்கம் வந்திருக்கும் வசந்தே வருக...
சுவையாக இருந்தது...
தாயங்கண்ணியாரின் பாடலை ஏற்கென வே எனக்குச் சொன்னதாய் ஞாபகம்.. மறுபடியும் படித்தேன்:படித் தேன்(நன்றி: கலைஞர்)....
பதிவின் முதல் பத்தியை, குறுந்தொகையோடு இணைத்தே பார்க்கிறது மனது...
பழைய குருடி கதவைத் திறடி(நான் டெம்ப்ளேட்டைச் சொன்னேன்)...
இதுக்கு முன்பு ஒரு டெம்ப்ளேட் வைத்திருந்தது நன்றாக இருந்தது...ஆனால் பதிவு இடது பக்கம் வந்தது...உங்களுக்குப் பிடித்திருக்காது...

இரா. வசந்த குமார். said...

அன்பு அனானி...

நன்றிகள்.

***

அன்பு ஜீவி...

நீங்கள் வலையுலகில் செய்து வரும் பணிகளை எப்படிப் பாராட்டுவது என்று தெரியவில்லை. நிறைய முன்னோடிகளை உங்கள் பதிவில் இருந்து தான் தெரிந்து கொண்டேன்.

நன்றிகள்.

***

அன்பு தமிழ்ப்பறவை...

நன்றிகள். :)