Tuesday, June 15, 2010
கேரளத்தில் சில காலங்கள்.
"Adieu...Cheers..."
பாஸ்கின் ராபின்ஸில் ஐஸ்க்ரீம் கோப்பைகளை உயர்த்தி க்ளிங்கிக் கொண்ட நேரத்தில், ஒரு டிசம்பர் மாதம் பனி இறங்கிக் கொண்டிருந்த பதினோரு மணிக்கு திருவனந்தபுரம் இரயில் நிலையத்தில் வந்திறங்கிய நினைவு வந்தது.
குருவாயூர் எக்ஸ்பிரஸ் தாமதமாக அடைந்து மூச்சு விட்டுக் கொண்டிருந்தது. அது இன்னும் மேலே செல்ல வேண்டும். முதலாம் ப்ளாட்பாரத்தில் இரண்டு பெட்டிகளுடன் நின்றேன். ட்யூப் லைட்டுகளில் பூச்சிகள் இரைந்தன. ஸ்பீக்கர் போனில் புரிந்தும் புரியாத பாஷை. வெளியே வந்து ஆட்டோ பிடித்து, அறை கிடைக்காமல், கிழக்குக் கோட்டைப் பிள்ளையார் கோயிலுக்குப் பக்கத்தில் ஒரு லாட்ஜில் ரூம் (307) பிடித்து, உள் நுழைந்து, கதவைச் சாத்தி, ரிமோட்டை அழுத்த, ஏஸியாநெட்டில் இளம் மோகன்லாலும் ஷோபனாவும் ஓடக்கரையில் நடந்தனர். ஒரு மென்மையான தென்றல் போல நகர்ந்த பாடலைச் சகிக்க முடியாமல் ரிமோட்டைக் கதற வைத்து ஏதோ ஒரு பழைய ஆஷ் சீரிஸுக்குப் பாய்ந்தேன்.
இன்று அப்படிச் செய்ய மாட்டேன். இந்த இரண்டரை ஆண்டு காலக் கேரள வாசம் கொஞ்சம் பதப்படுத்தி இருக்கின்றது.
எத்தனை சம்பவங்கள், எத்தனை மனிதர்கள், எத்தனை உணர்ச்சிகள்..!!!
ரிட்டர்ன் சார்ஜையும் சேர்த்து மீட்டர் போடும் ஆட்டோக்காரர்கள்; ஒற்றை வாசல் மட்டுமே கொண்ட செம்பேருந்துகள்; மழை ஊற்றினால் படுதாவைச் சரித்துக் கொள்ளும் அழுக்கடைந்த ஜன்னல்கள்; பெரிய பெரிய கண்களில் மையெழுதிய மங்கைகள்; தென்னங்கீற்றுக்களில் தெறிக்கும் இரவின் பனி; பேக்கரி ஜங்ஷனில் இன்னமும் நடந்து கொண்டிருக்கும் மேம்பாலப் பணிகள்; ம்யூஸியத்தில் கண்ட ராஜாவின் தேர்; டி.ஸி. புக்ஸ் நூல் அழகம் நடந்த சந்திரசேகரன் மைதானம்; அதிலேயே புழுதி கிளம்பிய கால்பந்துப் போட்டிகள்; பிக்ஃபன் நிற மசூதி சுற்றிய வி.சி.டி. கடைகள்; ஆளற்ற கடற்கரையில் விரிந்த வெட்டவெளியில் கழித்த பெரியவரும், சுற்றிய நாயை விரட்ட அவர் கையில் விசிறியும்; சங்குமுகத்தில் படுத்திருக்கும் ஒய்யார நிர்வாணி; ஸ்ரீகார்யத்தில் பழம் விற்கும் தூத்துக்குடி அன்பரும் அவர்தம் தமிழ் படிக்கத் தெரியாத இரு பெண்களும்; வாழைப்பழத்தை எண்ணெயில் பொறித்துத் தரும் 'பழப் பஜ்ஜி'; சர்வதேசத் திரைப்பட விழாவில் 'My Marlon and Brando' படத்திற்கு நிரம்பிய கைரளி தியேட்டர் கண்டு வியந்த அதன் குறுந்தாடி இயக்குனர்;
மகாத்மா காந்தி கல்லூரியின் மூடிக்கிடந்த கம்பிக் கதவை ஒட்டி உடைந்த சுவரைத் தாண்டிக் குதித்து விளையாடிய கிரிக்கெட்; அனந்தபுரி ஹோட்டலில் கரைந்த மதிய உணவு; தாமரைக்குளங்கள் மிதக்கும் வாசல் அடைந்த வீடுகள்; இரண்டிரண்டு நாட்களில் 'கோஸ்ட் ஹவுஸும்', அயனும், பழஸிராஜாவும், 2012ம் திரையிடப்படும் கழக்குட்டம் க்ருஷ்ணா தியேட்டரின் புதிய குஷன் சீட்டுகள்; வெள்ளிக்கிழமைகளில் ஏர் பஸ்ஸுக்காகக் காத்திருக்கும் அந்த கோழிக்கோடு இளளின் அடர் ரோஸ் நகப்பூச்சு; மகாதேவர் கோயிலின் அமைதி கலைக்கும் இரண்டே இரண்டு ஆடுகள்; கல்லார் காட்டருவியில் தன்னந்தனியாகக் குளித்த களித்த ஞாயிறின் பகல்; ஆட்டிங்கல் பேருந்து நிலையத்தில் குடித்த கோழி சூப்;
மெல்லிய சேலை வழுவும் புகையாய் அரபிக் கடலிலிருந்து விரவும் மென் முகில்கள்; உடனே கரைந்து எல்லோரையும் நனைத்து விட்டுக் காணாமல் போகும் அதிசயங்கள்; ஹெலிக்கல் ஸ்ட்ரக்சரில் வளைந்து மேலேறும் தம்பானூர் இண்டியன் கஃபேயில் காந்தி படம்; கிழக்குக் கோட்டை கணபதி க்ஷேத்ரத்தில் படீர் படீரென அடிக்கும் தேங்காய்ச் சிதறல்கள்; விஜய், சூர்யா கட்-அவுட்களில் மாலை சூட்டும் ஜீன்ஸ் பையன்கள்; கொஞ்சம் சாக்கடையாகவே ஓடும் பட்டம் அருகின் நதி; மாடிகளின் மேலே இரவெங்கும் மின்னும் கல்ஃப் தங்க நங்கைகள்; நீல விளக்கு கூவும் ஆம்புலன்ஸ்கள்; கேசவதாசபுரம் ஜங்ஷனின் ஆலமரத்தின் மேல் ராத்திரி பத்தரைக்கு சிறுநீரடித்தவரைச் சுற்றியிருந்த செங்கொடிகள்;
கோவளம் கரையில் அலை உடைக்கும் பாறை வரை சென்ற தைரியர்கள்; 'நீலத்தாமர'யில் பார்த்த அர்ச்சனா; நாகர்கோயில் பேருந்துகளுக்கு அருகில் ஒரு சுருள் கடலை இரண்டு ரூபாய்க்கு விற்கும் சைக்கிள் பெரியவர்; இதய ஆப்ரேஷன் அம்மாவுக்காக ப்ளஸ்2 கம்ப்யூட்டர் சயின்ஸ் படித்து விட்டு, ஆர்யாஸில் தட்டம் எடுக்கும் நெல்லைப் பையன்; சாலை பஜாரில் கவிழ்த்த குடைக்குள் பச்சை மிளகாய்; மார்பளவு காந்தியைச் சுற்றிய பச்சைப் பூங்கா;
ரோட்டோரம் மாயக் கால்பந்தை உதைத்தே செல்லும் பள்ளிச் சிறுவர்கள்; 'ஆல் கேரளா மம்முட்டி ஃபேன்ஸ் அண்ட் வெல்ஃபேர் அஸோஸியேஷன், சாவடிமுக்கு யூனிட்' போர்டு தொங்கும் நடு ரோட்டு மின் கம்பம்; இஞ்சினியரிங் கல்லூரி வாசலில் பறக்கின்ற கொடியில் SFI; பண்டிகைக்களுக்காக வாசலில் ஸ்டூல் மேல் விளக்கேற்றி, பொரியும், பழமும் வைத்துக் காத்திருக்கும் ஆண்கள்; எப்போதும் யாராவது உண்ணாவிரதம் இருக்கும் செக்ரட்ரியேட் வாசல்; பார்த்திருக்கும் திவானின் கம்பீரச் சிலை; பத்மநாபன் கோயிலின் கோபுரத்தின் இருட்டுகளிலிருந்து சிதறிப் பறக்கும் புறாக்கள்; தேஜஸ்வினி உச்சியில் நின்று பார்க்கத் தெரியும் விசிறியடித்த தென்னை சாம்ராஜ்யம் - திருவனந்தபுரம்!!!
இங்கே இருந்த இரண்டரை ஆண்டு காலங்களில் சென்ற இடங்கள் ஒப்பிடக் குறைவு தான்.
வந்த முதல் ஞாயிற்றுக் கிழமையிலேயே பொன்முடி சென்று காய்ந்து போய் வந்தேன்; கல்லார் அருவியில் காட்டுக் குளியல் போட்டேன்; அரவிந்த், சுந்தர் மற்றும் அவர்களின் நெல்லூர் நண்பருடன் காரில் கிளம்பி செங்கோட்டை சாலை வழிச் சென்று குற்றாலம், பாபநாசம், பாணசமுத்திரம் அருவி, கடையநல்லூர், திருநெல்வேலி நாற்கரச் சாலை வழி நாகர்கோயிலில் ராத்தங்கல், விடியல் கண்டு மீண்டு அனந்தபுரம் திரும்பும் போது பத்மனாபபுரம் அரண்மனை பார்த்தேன்; அம்மா, தம்பியுடன் கன்னியாகுமரியில் வைகறை ஐந்து மணிக்கு அலைகள் தங்கக் கரை கட்டி ஈரமாய்ப் பாய வெய்யக் கதிர்ரோன் வெளிவந்த செஞ்ஞாயிறு வியந்தேன்; விவேகானந்தர் பாறை, வள்ளுவர் பேருரு கண்டேன்; 2008 இறுதியில் பகல்கள், இரவுகளாக ஆட்டோக்கள் பிடித்தும், பஸ்கள் ஏறியும் கையேட்டை நோட் செய்தும் கைரளி, அஜந்தா, கலாபவன், ஸ்ரீ தியேட்டர்களில் மாறி மாறிப் உலகத் திரைப்படங்கள் ரசித்தேன்; சாரல் விழும் மாலை நேரங்களில் புகை நகரும் கூரைகளின் கீழ் நின்று கட்டன் சாயா குடித்தேன்; லயோலா மைதானத்தில் டெக்னோபார்க் கால்பந்து போட்டிகளில் நடனங்களில் விசில் ஊதிக் கொண்டே கலந்தேன்; நிலா பின் பக்கக் கதவு ஒட்டிய தமிழ் உணவகத்தில் தோசை, மாம்பழச் சாம்பார் கொண்டேன்;
சந்தித்த பெரும் மனிதர்களையும் மறக்க முடியாது.
எழுத்தாளர் நீல.பத்மனாபன் அவர்கள். முதன் முறையே நேரந்தாழ்த்திப் போய்த் திட்டு வாங்கினேன். ஒரு முறை கூட அவர் நடத்தும் நீலபத்மம், தலைமுறைகள் விருதுகள் வாங்க முடியவில்லை. வருத்தமே. ஐம்பது வருட இடைவெளி இருந்த போதும் எத்தகைய மனத் தொலைவும் வராத வகையில் இயல்பாகப் பேசுவார்; இவரைச் சந்திக்க முடிந்தது ஒரு தமிழ் வாசகனாக மகிழ்வே!
தமிழ்ச்சங்கர்கள். மாதத்தில் ஒரு ஞாயிறு கதைநேரம், மற்றொன்றில் கவிதை வேளை என்று நடத்துகிறார்கள். என்னால் சரியாகக் கலந்து கொள்ள முடியாமல் போனாலும், சில விழாக்களில் இருந்தேன். கமலநாதன் அவர்களின் வீட்டிற்கு எப்போது போனாலும் கேரள உணவு கிடைக்கும்.
நாகர்கோயில் சென்று ஜெயமோகன் அவர்களைச் சந்திக்க முடிந்தது மற்றொரு நல்லூழ். ;)
இன்னும் எத்தனையோ எளிய மனிதர்களுடன் பழக முடிந்ததும் அவர்களுடைய வாழ்வைக் கொஞ்சமாவது உற்று நோக்க முடிந்ததும் கேரளத்தில் இருந்ததன் சாறு என்று நம்புகிறேன்.
இங்கே சொல்லாத சம்பவங்களும், மனிதர்களும், ஆச்சரியங்களும், அனுபவங்களும், கசப்புகளும் பட்டுப் புடவையில் ஊடாடி ஊடுறுவும் சரிகை நூல் போல் எப்போதாவது ஏதாவது கவிதையிலோ, கதையிலோ, கட்டுரையிலோ தென்படலாம். அப்போதும் கேரளா எனக்கு வியப்புப் பிரதேசமாகத் தான் இருக்கும்.
மீண்டும் ஏதாவதொரு நாள் நான் அனந்தபுரம் போக வேண்டி வரலாம். இன்று எனக்கான நிகழ்ச்சிகளில் பங்கேற்றுக் கொண்டு நான் வெளிவந்து விட்டாலும் செக்ரெட்ரியேட் வாசலில் ஆளாக் கட்சியின் தர்ணாவையும், உயர்நீதிமன்ற முகப்பில் சோம்பிய காந்தி சிலையையும், தம்பானூர் ஸ்டேஷன் சாம்பார் இட்லியையும், பத்மனாபன் கோயிலையும், ஆர்ப்பரிக்கும் அரபிக் கடல் அலைகளையும், மென் நாரைகளின் சுருள் சிறகுகளாக மிதந்து கரையும் சாம்பல் மேகச்சரங்களையும் திருவனந்தபுரத்தை விட்டு யாரும் எடுத்துக் கொண்டு வர முடியாது என்று தோன்றுகின்றது.
***
கேரளத்தில் இருந்த அனுபவங்களை 'தேவதைகளின் தேசம்' வகையில் படிக்கலாம்.
Image Courtesy :: http://www.keralagreenads.com/photos/trivandrum_big5.jpg
Subscribe to:
Post Comments (Atom)
6 comments:
சற்றே பொறாமையுடன் படித்தேன் பாஸ் :)
தொடருங்கள்...!
Kadavulin sondha oor yendru varnikapadum Keralam..Koduthu vaithavar neengal..Melum ezudhungal
ரொம்ப நல்லாருந்தது. :)
என்ன ரொம்ப நாளைக்கு அப்புறம் ?
ஒரிஜினல் ”பயணத்தின் பிம்பங்கள்!”
அன்பு ஆயில்யன்...
நன்றிகள்.
***
அன்பு Chan...
நன்றிகள்.
***
அன்பு கார்த்திக்...
நன்றிகள்.
***
அன்பு மெனக்கெட்டு...
நன்றிகள். கேரளத்தில் இருந்து வெளிவந்து விட்டேன். எனவே ஒரு தொகுத்த அனுபவம். :)
***
அன்பு இளா...
மிக்க நன்றிகள்.
வசந்த் பொறாமையா இருக்கு...
Post a Comment