பாழாய்ப்போன என்மனம் ஒரு நாய்க்குட்டி - அதைப்
பறித்துக் கொண்டாய் அடியே என் சின்னக்குட்டி
உன் மேனி ஒரு பூத்தொட்டி
உதடு தித்திக்கும் வெல்லக்கட்டி!
இந்த வரிகளை எழுதியவர் யாராய் இருக்கும்..?
ஈரோட்டுக்குப் போய்ச் சேர்ந்தேன். ... கட்டை வண்டி ஒன்று கிடைத்தது. கட்டை வண்டியில் ஒரு மனிதன் நிமிர்ந்து உட்கார இடமில்லை. ஒன்றரை அடி நீளம். மாடு ஒரு சிறு பூனைக்குட்டி போன்று இருந்தது. நான் ஒன்று; வண்டிக்குடையவன் இரண்டு; அவனுக்குக் கீழே கூலிக்கு வண்டி ஓட்டும் சிறுவன் ஒருவன்; எங்கள் மூவரையும் மூன்று பர்வதங்களாக நினைத்து அந்த மாட்டுப் பூனை இழுத்துக் கொண்டு போயிற்று.
மேற்கண்ட பத்தியைப் போல் இல்லாமல் ஞாயிற்றுக்கிழமை பகல் ஒரு மணி சுமாருக்கு ஈரோடு நூல் அழகத்திற்குச் சென்றேன். வழக்கம் போல் பேருந்து நிலையத்தின் அருகே வ.உ.சி. பூங்காவிற்குப் புறத்தில் அமைக்கப்பட்டிருந்தது. வழியெங்கும் நோட்டீஸ் சிதறல்கள். ஐஸ் வண்டிகள். இளநீர் அரிவாளிகள். வரவேற்கும் பதாகை. அன்றைய தினம் 89,90 ஸ்டால்களில் வழியே நுழைவாயிலாக இருந்தது. நுழைந்தேன்.
ஒவ்வொரு பதிப்பகத்தின் உள்ளும் சென்று, கண்களைக் கட்டவிழ்த்து விட, அவை நூல் அட்டைகளையும், விலையையும், அகத்தே சில வரிகளையும் மேய்ந்து விட்டு வந்தன. கொஞ்சம் நீளமான 'ப' போல் ஸ்டால்கள் இருந்தன. நிறைய பள்ளிக் குழந்தைகளைப் பார்த்தேன்; மகிழ்ந்தேன்.
கொஞ்சம் ரூபாய்களுக்குப் புத்தகங்கள் வாங்கினேன். அவற்றில் படிப்பவற்றைப் பற்றிப் பின் சொல்கிறேன். ஒரு ஸ்டாலில் பதிவர்கள் ஜாஃபர் மற்றும் மதுரை கார்த்திகை பாண்டியன் அவர்களையும் பார்த்துப் பேசினேன்.
வெளியே வந்து ஜிகர்தண்டா எடுத்துக் கொண்டு, திடீரென ஒரு விசிட் செய்த கொஞ்சம் மழையில் நனைந்து கொண்டு வெளியேறினேன்.
இன்னும் கொஞ்சம் படங்கள் மற்றும் செய்தி.
மாடுப்பூனை பத்தி, 'என் ஈரோட்டுப் பயணம்' என்ற கட்டுரையில் 14.8.1921. சுதேசமித்திரன் இதழில் வந்திருக்கின்றது. எழுதியவர் மகாகவி பாரதியார். அ.கருப்பண்ண செட்டியார் என்ற 'உலகம் சுற்றிய தமிழர்' ஏ.கே. செட்டியார் அவர்கள் தொகுத்த 'தமிழ்நாடு - நூறாண்டுகளுக்கு முந்தைய பயணக் கட்டுரைகள்' என்ற நூலில் இது போன்ற பல கட்டுரைகள் உள்ளன.
அழகத்தில் வாங்கிய நூல்களில் முதலில் படிக்கத் தொடங்கியிருக்கும் நூல் இது. சந்தியா பதிப்பகம் - ரூ.180.
மகாத்மா காந்தியடிகளின் கிராமசுயராஜ்ஜியம், தேவைகளை உள்ளூரிலேயே நிறைவேற்றிக் கொள்ளுதல் போன்றவற்றை அம்மா படித்ததில்லை என்று நினைக்கிறேன். ஆனால் அவர்களுக்குள் இந்த கருத்தாக்கம் எப்படியோ தோன்றியிருக்கின்றது. அவர்கள் மீஅடிப்படைக் கிராமத்திற்குச் சென்று வங்கிப் பணியாற்றிய காலகட்டத்தில் அங்கிருந்த கிராமப் பெண்கள் தத்தம் தேவைகளையும், குடும்பத்தின் தேவைகளையும் தாமே பூர்த்தி செய்து கொள்ளுதலையும், வங்கிக்கடன்கள், கூட்டுறவுப் பணிகள் ஆகியவற்றின் மூலமாகக் குடும்பம் சீராக நடைபெற முன் நிற்பதையும் கண்டிருக்கக் கூடும்.
'தாம் நுகர்வதற்கான பொருட்களுக்கான மூலப்பொருட்களைத் தாமே உற்பத்தி செய்து கொள்வதன் மூலம் வெளியுலகைச் சார்ந்திருக்கும் அளவைப் பெரும் அளவில் குறைப்பது' என்ற விருப்பத்தை அவர்கள் கொண்டிருக்கிறார்கள். குப்பாண்டம்பாளையத்தில் வீடு வாங்கும் போது, அவர்களின் கொள்கையை நடைமுறைப் படுத்துவதில் ஆர்வமாய் இருந்தார்.
கிராமப்புறத்தில் ஒரு வீடு வாங்கிய போது, அதுவரை பயிர்களை உருவாக்கிப் பல்லாயிரம் நுண்ணுயிர்களும் பூச்சிகளும் வாழ்ந்த செழுமையான ஒரு வாழ்விடத்தின் மேல் அது கட்டப்பட்டிருக்கின்றது என்ற குற்ற உணர்ச்சி எனக்கு இருந்தது. அதற்கான பரிகாரமாக என்ன செய்ய முடியும் என்ற கேள்விக்கு 'என்னால் முடிந்த அளவுக்கு அந்த வீட்டிற்குள்ளும் சுற்றியும் செடிகளை வளர்ப்போம்' என்பதே என் பதிலாக இருந்தது.
அம்மா மற்றும் என் எண்ணங்களுக்கு ஏற்ப வீட்டின் முன்புறம் சில செடிகளை வைத்திருக்கின்றோம். ரோஜா, மந்தாரை மரம், பாகற்காய், வாழை, பூசணிக் கொடி, சங்குப்பூ, கீரைகள், மாதுளஞ்செடி, பனை, வேம்பு, வெண்டைக்காய், வெங்காயம், தக்காளி ஆகியவை இப்போது விளைந்திருக்கின்றன.
தினசரி உபயோகக் காய்கறிகளுக்கான வெளிச் சந்தைச் சார்பை இப்போது குறைக்கும் முயற்சியில் இருக்கின்றார்கள். இது வெற்றிகரமாக நிறைவேற்றப்பட்ட பின் அடுத்த படிக் காய்கறிகள் மற்றும் பழங்களை விளைவிப்பது என்று நினைத்திருக்கின்றோம்.
மாடியிலிருந்து வடகிழக்குப் பார்வை ::
மாடியிலிருந்து தென்மேற்குப் பார்வை ::
மாடியிலிருந்து தெற்குப் பார்வை ::
மாடியிலிருந்து வடக்குப் பார்வை ::
மாடியில் ரோஜாச் செடிகள் ::
வாசல் கோலம் ::
எந்திரன் பாடல்களை டெக்னோ அதிரடி எனலாம். இப்போது பிடித்திருக்கும் பாடல் 'கிளிமாஞ்சாரோ...'. காரணம், அது பலமுறை கேட்ட வடிவிலும் இசைக் கோர்வைகள் எளிதில் பதிய வைத்துக் கொள்ளுவதாகவும் இருப்பதால் என்று நினைக்கிறேன். அடுத்தது 'அரிமா..' தான்.
ஜென்டில்மேன் வந்த போது 'சிக்குபுக்கு..'வும், காதலனில் 'முக்காலா...'வும் முதலில் பிடித்திருந்தன. சில மாதங்களில் வீட்டுத் தோட்டத்தில் பூக்களைக் கேட்டுப் பார்ப்பதும், என்னவளும் பிடித்திருந்தார்கள். எனவே எந்திரனிலும் இப்போது கேட்கவே கேட்காத 'காதல் அணுக்கள்...' சில காலம் கழித்து உள் ஊறலாம்.
முதல் பத்தியை எழுதியவர் யார் என்று கண்டுபிடித்து விட்டீர்களா..?
பாவேந்தர் பாரதிதாசன்.
1 comment:
சூடு ஆறிப் போயிருக்கு....
படங்கள் அருமை...நினைவைக் கிளறிவிடுகின்றன்... :-)
Post a Comment