Sunday, January 02, 2011

மொக்ஸ் - 06.Jan.2011

குமரன், பட்டுக்கோட்டை
‘நாயக‘னை விட தமிழில் சிறந்த படங்களே இல்லையா ? ‘டைம்’ பத்திரிகை உலகில் நூற்றில் ஒன்றாக அதனைத் தேர்ந்தெடுத்திருக்கிறதே ? என் லிஸ்டில் மகேந்திரனின் ‘உதிரிப்பூக்கள்‘ , ருத்ரையாவின் ‘அவள் அப்படித்தான்‘ , பாரதிராஜாவின் ‘முதல் மரியாதை‘ இருக்கின்றன. உங்கள் டாப் டென் படங்கள் என்ன ?

இப்படி ஆளுக்கு ஆள் லிஸ்ட் மாறத்தான் செய்யும். ‘டைம்’ போன்ற பத்திரிகைகள் பலரைக் கேட்டு, கருத்துக் கணிப்புச் செய்து பெரும்பான்மையினர் கருத்தைப் பட்டியலிடுகின்றன. அவர்கள் ஆன்ஜெலினா ஜோலியை உலகத்திலேயே சிறந்த அழகி என்கிறார்கள். உங்களைக் கேட்டால், பட்டுக்கோட்டை குமரன், பக்கத்து வீட்டுக் குமரி யாரையாவது சொல்வீர்கள்.


கடைசி வரியைப் படித்ததும் வாய் நிறைய சிரிப்பு வந்தது. பிறகு கொஞ்சம் கொஞ்சமாய்க் குறைந்து இரு கண்களிலும் அழுகை நிறைந்தது.

Boss,we miss you so much.

வ்வாண்டின் இந்திய அறிவியல் மாநாடு சென்னையில் நடைபெறுகின்றது. மகிழ்ச்சி. ஆனால் ஏன் எஸ்.ஆர்.எம். கல்லூரி வளாகத்தில் நடத்தப்பட வேண்டும் என்று தோன்றுகிறது. அரசுக்குச் சொந்தமான எந்த ஒரு கல்லூரி அல்லது பல்கலைக்கழகமும் இடம் தர மாட்டோம் என்று மறுத்து விட்டார்களா? கல்விக்குச் சம்பந்தமில்லாத நிகழ்வுகளுக்குக் கூட சென்னைப் பல்கலைக்கழகத்தின் நூற்றாண்டு விழா அரங்கை ஆக்ரமித்து மாலைகள் சூடிக் கொள்கின்ற அரசியல்காரர்கள் கண்களில் இப்போது அது படவில்லையா? அண்ணா பல்கலைக்கழக அரங்கமும் கூடவா அகப்படவில்லை?

சென்ற ஆண்டின் விழா திருவனந்தபுரத்தில் கேரளப் பல்கலைக்கழக வளாகத்தில் தான் நடைபெற்றது. ரிப்போர்ட் இங்கே :: இந்திய அறிவியல் மாநாடு - 2010. .

கி.பி.2010 முடிந்து போய் 6 நாட்களாகின்றன. ராத்திரி 12:45க்கு மடிக்கணிணியில் தட்டிக் கொண்டிருக்கிறேன்.

என் அறைக்கு வெளியே பெங்களூரு குளிரில் நனைந்து கொண்டிருக்கின்றது. ஜன்னலைத் திறந்துக் கொஞ்சம் ஊதினாலே சார்மினார் போல் புகை நிரவுகிறது. சோடியம் விளக்குகளின் கீழே மஞ்சள் போட்டான்கள் ஈரமாய் மிதக்கின்றன. மார்கழியைப் பழகிய தெரு நாய்கள் பின்னங்கால்களுக்கிடையில் வாலைச் இடுக்கிக் கொண்டு கைகளுக்குள் முகத்தை நுழைத்துத் தெருக்களில் சுருண்டிருக்கின்றன. கூர்க்காக்கள் நீள பிகில் அடிக்கிறார்கள்.

இந்த நகரத்தோடு எனக்குத் தொடர்பு கொஞ்சம் தான். அவ்வப்போது தொட்டுப் பார்க்கும் சின்ன வீட்டைப் போல் வந்து வந்து போயிருக்கிறேன். சில மாதங்கள் கூடத் தொடர்ந்து வசித்திராததால் இதன் வளர்ச்சியையும் மாற்றங்களையும் கவனித்ததில்லை. இப்போது சில உருவடி மாறுதல்களைக் காண முடிகின்றது.

ரோடுகளின் மேலெல்லாம் மேம்பாலங்கள் எழும்பிக் கொண்டேயிருக்கின்றன. பீகார்த் தொழிலாளர்கள் பழுப்புச் சேறு படர்ந்து விட்ட ஜீன்ஸும் பற்களில் பானும் அணிந்து கொண்டு பில்லர்களை இறக்குகிறார்கள். எலெட்க்ரானிக் சிட்டி ஹைவேயில் எண்பது கி.மீ.ல் பறக்கும் போது கண்களில் பொறி பறக்கின்றது. எம்.ஜி.ரோட்டில் தலைக்கு வெகு மேலே மெட்ரோ ரயில் பாதைகள் அமைக்கப்படுகின்றன. மெஜஸ்டிக் ரயில் நிலையத்தில் டிக்கெட் வால்கள் நீள்கின்றன. பெலந்தூர் வழியாக ஓ.ஆர்.ஆர். சாலை முழுதும் டபுள் ரோடாகின்றது. மளிகைக் கடைகள் நிறைய மலையாளிகள் ஆரம்பித்துக் கட்டை மீசையின் கீழ் விளிக்குகிறார்கள். விடிகாலை நான்கு மணிக்கு வந்தால் மடிவாலா போக்குவரத்துக் காவல நிலையத்தை ஒட்டிச் சுற்றிலும் தமிழர்கள் காய்கறிகள் விற்கிறார்கள். மால்களில் இளைஞ/ஞிகள் விண்டோ ஷாப்பிங் செய்கிறார்கள். இந்திரா நகர் தாண்டி இந்தப்பக்கம் எல்லாம் இன்னும் காவேரி நீர்க் கனெக்ஷன் தரப்படாததால், புதிதான அபார்ட்மெண்ட்களுக்குத் தளும்பும் ட்ராக்டர்கள் பக்கத்து கிராமங்களில் இருந்து நீர் நிரப்பி சப்ளை செய்கின்றன. கிராமவாசிகள் என்ன செய்வார்கள் என்று தெரியவில்லை. ஐ.டி. பார்க்குகளின் வெளியே பச்சைப் படுகைகளில் புற்களுக்குத் தண்ணீர் சரமாரியாகப் பாய்கின்றது. கண்ணாடிக் கட்டிடங்களுக்கு வெளியே குளிர் கலந்த வெயில் அடிக்கின்றது. தெருக்களில் ஒவ்வொரு கிளை ரோட்டுக்கும் இரண்டு ஸ்பீட் ப்ரேக்கர்கள். ராத்திரிகளில் கூட்டம் கூட்டமாய்த் தெரு நாய்கள் ராஜாங்கம் நடத்துகின்றன.

இந்த நகரம் சென்னையைப் போல் வளருமா என்று கேட்டால் முடியாது என்று தான் சொல்லத் தோன்றுகின்றது.

சென்னையின் முகம் வேறு. காலனி ஆட்சிக் காலத்திலிருந்து துறைமுகத் தொழில்கள் நடந்து கொண்டிருக்கின்றன. சினிமாத்/சீரியல் தொழில் இருக்கின்றது. அது சார்பான ஆயிரம் வேலைகள் இருக்கின்றன. வடநகரத்தில் வன்பொருள் ஆலைகள் உள்ளன. தென் சென்னையில் ஐ.டி. இருக்கின்றது. புறநகரங்களில் கார்த் தொழிற்சாலைகள். அரசுப் பணிகள். தனியார் அலுவலகங்கள் என்று ஒன்றையொன்று சார்ந்திராத மல்டி-வெர்டிக்கல் வளர்ச்சிகள் இருப்பதால் சென்னை வளர்கின்ற வேகம் மற்றும் தளங்கள் வேறு.

பெங்களூரில் நான் பார்த்த வரைக்கும் ஐ.டி. தவிர்த்து வேறு பெயர் சொல்லும் அளவுக்கு எந்தத் தொழிலும் விருத்தி அடைந்திருப்பதாகத் தெரியவில்லை. சென்ற ரிஸஷனில் வீட்டு வாடகைகள் சர்ரென்று இறங்கின இங்கு. இந்நகரம் தொடர்ந்து இயங்கிக் கொண்டே இருக்க வேண்டுமெனில் சென்னையைப் போல் மல்டி-வெர்டிக்கல் தொழில்கள் நடைபெற வேண்டும்.

புத்தாண்டுக் கொண்டாட்டங்களுக்காகச் சென்னையிலிருந்து கல்லூரி நண்பர்கள் வந்திருந்தார்கள். மனைவியை ஊருக்கு அனுப்பி வைத்திருந்த ஒரு நண்பனுடன் அவர்கள் டிசம்பர் கடைசி இரவை எம்.ஜி.ரோட்டில் எஞ்சாய் செய்தார்கள். நானும் அவளும் மற்றொரு குடும்ப நண்பன் வீட்டுக்குப் போனோம். பக்கத்து அபார்ட்மெண்ட் மாடிகளில் எல்லாம் ஸ்பீக்கர்களில் ஆங்கில இசையைக் கசிய விட்டுப் இளம்பெண்கள் இறுக்க ஆடைகளில் பொன் திரவத்தைக் குடித்தார்கள். நாங்கள் கொஞ்ச நேரம் கதை பேசினோம். கேரம் விளையாடினோம். படம் பார்க்கலாம் என்று தேடி நாகேஷ் காமெடி சி.டி. போட்டு சிரித்துக் கொண்டோம். சரியாக 12 மணியில் ப்ளம் கேக் வெட்டி ஆளுக்காள் வாழ்த்திக் கொண்டோம். நாங்கள் இருவரும் வீடு திரும்பும் போது வழியில் கூட்டம் கொஞ்சம் தான் இருந்தது. பையன்கள் எல்லோருக்கும் விஷ் சொன்னார்கள். வீடுகளில் இன்னும் கழட்டப்படாத கிறிஸ்துமஸ் நட்சத்திரங்கள் குளிரில் நடுங்கின. வானில் மேகங்கள் விரைவாக நகர்ந்து கொண்டிருந்தன.

அனைவர்க்கும் இனிய ஆங்கிலப் புத்தாண்டு நல்வாழ்த்துக்கள்.

4 comments:

Chithran Raghunath said...

இவ்வளவு அருமையாக பெங்களூரை வர்ணித்துவிட்டு பதிவுக்கு மொக்ஸ் என்று தலைப்பிட்டதை வன்மையாகக் கண்டிக்கிறேன்.

மெனக்கெட்டு said...

வர்ணனைகள் அருமை.

//கி.பி.2010 முடிந்து போய் 6 நாட்களாகின்றன. ராத்திரி 12:45க்கு மடிக்கணிணியில் தட்டிக் கொண்டிருக்கிறேன்.//

:-(

புத்தாண்டு அன்று சரி.. தினசரி நள்ளிரவு வரை விழித்திருந்தால்?
8 அல்லது 7 மணி நேர தூக்கம் அவசியம்.

உடம்பைப் பார்த்துக் கொள்ளவும்.

thamizhparavai said...

புத்தாண்டு வாழ்த்துக்கள் வசந்த்....
பெங்களூர் சென்னை- நகர ஒப்பீடு அழகு.(என்ன இருந்தாலும் சென்னையை விட்டுக்கொடுக்க மாட்டேங்கிறீங்க...)

ஈரோடு கதிர் said...

பெங்களூரு குறித்த பார்வை மிக அழகாய்!