டாய்லெட்டில் கூட புல்லாங்குழல் ஒழுகும் பூனா விமான நிலையத்திலிருந்து எழுதுகிறேன். இது என்னுடைய இரண்டாவது விமானப் பயணம்.
முதலாவது, ஐந்து வருடங்களுக்கு முன்பு சென்னையிலிருந்து பெங்களூருக்கு நிகழ்ந்தது. ஏறி அமர்ந்து காது அடைப்பைச் சரி செய்து 'ப்ஹா' என்று மூச்சு விடுவதற்குள் பெங்களூரே வந்து விட்டது. அப்போது ஹெச்.ஏ.எல். பழைய விமான நிலையம் இயக்கத்தில் இருந்தது. இப்போது ஹெபாலில் இருந்தே ரொம்ப நேரம் செல்ல வேண்டியதாய் இருக்கின்றது.
இன்று காலை நான்கு மணிக்கு ஊரே பனிக்காட்டில் உறங்கிக் கிடந்த போது எழுந்தேன். தூங்குவதற்கு முன்பே ஆடைகளைத் தேர்வு செய்து, அயர்ன் செய்து விட்டு, காலையில் குளிப்பதற்கு வெந்நீர் தயார் செய்து கொள்வதற்காக பக்கெட்டில் நீர் நிரப்பி, ஹீட்டரை ஊறப் போட்டு விட்டிருந்தேன். ஆன் செய்து விட்டுப் பல் துலக்கி விட்டுச் சூடாய்க் குளித்து விட்டு வந்தால், பற்கள் கடமுட என்றன. எவ்வளவு சாத்தி வைத்தாலும், ஏழை வயிற்றுப் பசி போல் எப்படியாவது புகுந்து விடுகின்றது குளிர்.
மாநகரப் பேருந்துக் கழகம் பெங்களூருவின் தேர்ந்தெடுக்கப்பட்ட மூலைகளில் இருந்து இண்டர்நேஷனல் விமான முனையத்திற்குச் சொகுசுப் பேருந்துகளை 24x7ல் இயக்குகின்றது. வீட்டுக்குப் பக்கத்தில் பார்த்தால் ஹெச்.ஏ.எல். முக்கியச் சந்திப்பிலிருந்து வெகுகாலை ஐந்து முப்பதுக்குக் கிளம்பும் பேருந்தைப் பிடித்தால், நேரமாய்ப் போய்ச் சேர்ந்து விடலாம் என்று தோன்றியது. எனக்கு உள்நாட்டு விமானம் காலை 8:10க்கு ஏற்பாடு செய்யப்பட்டிருந்தது.
மனைவி வந்து ட்ராப் செய்து பார்த்தால், நடத்துனர் பல் துலக்கிக் கொண்டிருந்தார். ஓட்டுநர் உள்ளே உறக்கத்தில். ஐந்து முப்பதுக்கு எப்படியோ கிளம்பி விட்டார்கள்.
வெள்ளிக்கிழமைக்குத் தயாராகிக் கொண்டிருந்தது பெங்களூரு. மஞ்சள் பூச்சிகள் எரிய தெருவெல்லாம் மின்சாரச் செண்பகப்பூக்கள். ரோட்டில் மாடுகள் சாவகாசமாய் மிதந்து கொண்டிருந்தன. எட்டாத உயரத்தில் சர்ஜாபூர் சாலை அடுக்கு மாளிகைகளின் ஃப்ளக்ஸ் தீற்றல்கள். மேகப் புதர்கள் அத்தனை அவசரமாய் நகர்ந்தன. பைத்தியக்காரர்கள் மட்டுமே பொறுத்துக் கொள்ளக்கூடிய ஈரக் காற்று. முன் கண்ணாடியில் விழுந்த பொட்டுத்துளிகளை இரக்கமேயின்றி வைப்பர்கள் வைத்த நோக்கத்திற்குக் குறையின்றி அழித்தன. சரக்கென்று கடந்த கோயிலின் ஸ்பீக்கர் கொண்டைகளில் கன்னட ஜதிகள்.
நடுவே கொஞ்ச நேரம் தூங்கி விட்டேன். சட்டென்று விழிப்பு தட்ட கண் விரித்தால், இரவெல்லாம் மெனக்கெட்டு யாரோ பனித்துகள்களைப் பொடித்து வழிக்காற்றில் நிரப்பி வைத்தாற்போல் வெள்ளை மெத்தைகள். புறநகரின் புறமெங்கும் பூத்த குளிர்தேசக் குத்தூசிகள். முன்னே வருவது மெளனமா இல்லை மயக்கமா என்று கண்டறிய இயலாவண்ணம் தடித்துக் கவிழ்ந்திருந்தன பனித்திரைகள். வன்ம எண்ணம் தோன்ற உடலெங்கும் ஊடுறுவும் சூட்டைப் போல, செம்பேருந்து செருகிக் கொண்டு சென்றது.
பெங்களூருப் பன்னாட்டு முனையத்திற்கு வருவது இது தான் முதன்முறை. பளிங்கு போட்டு வழித்தாற்போல் வெள்ளை மினுக்கத்தின் உள்ளே இயங்கிக் கொண்டிருந்தது. ஓர் ஓரமாய் நிறுத்தி செம்பேருந்து பூங்கதவுகளைத் தாழ்திறந்து விட, சில்லென்று ஓர் ஊதல் உள்ளே புகுந்து உற்சாகமாய் அலைபாய்ந்தது. கேரிபேக்கை எடுத்துக் கொண்டு உள்ளங்கைகளை உரசிக் கொஞ்சம் சூடு பறக்கத் தேய்த்துக் கொண்டு என்ட்ரியை நோக்கி நடந்தேன். நடுவே கடக்கும் சாலையில் ரேடியம் பட்டைகளை அணிந்த காவலர்கள் நமக்கு வழி செய்து கொடுக்க, காத்திருக்கும் டாக்ஸிகளின் மின்னொளி முன் விளக்குகளில் நனைந்து நுழைந்தேன்.
வலப்புறம் வருபவர்கள். இடப்புறம் செல்பவர்கள். கீப் லெஃப்ட் என்ற முன்னோர்களின் வாக்கிற்கிணங்க அமைத்திருக்கும் வடிவமைப்பைக் கொண்டுத் திறம் வியந்து செயல் மறக்காமல் வாழ்த்தி, ஏர் இந்தியாவின் கெளண்டருக்குச் சென்றேன். ஈ-டிக்கெட்டைச் சரிபார்த்து ஒரு ப்ரிண்ட் அவுட்டைக் கொடுத்து 'உள்ளே செல்லுங்கள். போர்டிங் பாஸ் கொடுப்பார்கள்'. எண்ட்ரியில் செண்ட்ரி பிடித்து மறுபடியும் டிக்கெட்டை ஒருமுறை சரிபார்த்து அல்லோவினார்.
பளிங்கினாலான ஒரு மாளிகையில் உயரத்தில் கோபுரங்கள் அமைத்திருந்தனர். எனக்கான கெள்ண்டரில் செக் செய்து விட்டு போர்டிங் பாஸில் ஸீல் குத்தி இருக்கை எண்ணைச் சுழித்துக் காண்பித்து முதல் தளத்திற்குச் செல்லுமாறு சொன்னர். இன்னும் நேரமிருந்ததால் x போல இணைந்திருந்தா காஃபி ஷாப்பில் ஒரு கீமா மசால பப்ஸை ஆர்டர் செய்தேன். அலுத்திருந்த அது மைக்ரோ ஓவனில் உயிர் பெற்று, வெட்டுப்பட்டுப் பின் எனக்குத் தரப்பட்டது. கெட்ச் அப் கிழித்து மேலே பூசி கடித்துப் பார்த்தேன்.
தத்தம் மடிக்கணிணிகளில் தலை புதைத்திருந்தனர் சிலர். நான்கு மத்திய வயது பிராமணத் தமிழ் மங்கைகள் நாளைத் தாங்கள் சந்திக்கப் போகும் யாரோ ஒரு மிஸஸ் ஸ்ரீனிவாசனைப் பற்றியும் அவர் வாங்கியிருக்கும் ஃபேன்ஸி ஸாரிகளைப் பற்றியும் பேசிக் கொண்டனர். ஜெர்மன் மொழியில் ஒருவர் ஆண் கழிவறையைக் கேட்க, பெங்களூர்க் காவலர் சுட்டிக் காட்டினார், தன் சுண்டு விரலால். மென் கரடியைக் கட்டிப் பிடித்து பெதும்பை ஒருத்தியின் ஜீன்ஸ் கவ்விய இடையைச் சுற்றி சங்கிலி இறுக்கியது. நரைத் தலையர் ஒருவர் செல்ல, அந்தக் காலத்து கட்டிய மனைவி போல ரோலிங் பெட்டி மெளனமாய்ச் சென்றது.
நகரும் படிக்கட்டுகளைப் புறக்கணித்து நடுவில் இருந்த நிலைப் படிகளை ஒன்று விட்டு ஒன்று தாவி முதல் தளமடைந்தேன். வரிசைகளில் மாந்தர்கள். செக்-இன் நேரம் வந்ததும் திறந்து விட்டார்கள். லேப்டாப்பை மணப்பெண் போல் தனித்தட்டில் வைத்துத் துணையாக கேரிபேக்கைத் தனியறையில் அனுப்பினால் வெளியிலிருந்து ஒருவர் சோம்பலாய் வாயேயர் செய்தார். அகமும் புறமும் ஆபத்தற்றவை என்று உறுதியளிப்பார் போல் கொட்டாவி விட்டார். அந்தப்புரத்திலிருந்து நகர்ந்து அந்தப்புறம் சென்றடைந்தார்கள் இருவரும். தள்ளி ஒரு வரிசையில் காத்திருந்தால், ஒவ்வொருவராக மெட்டல் டிடெக்டரில் தடவி அப்பிராணி என்று சான்றளித்து போர்டிங் பாஸில் ஒரு சீல் குத்தி, மீட்டெடுத்துக் கொண்டு வந்த கேரி பேக்கில் ஒரு சீல் அடித்த தோடு மாட்டி விட்டார்கள். அதில் ஸ்பைஸ் ஜெட்டில் மீல்ஸ் கிடைக்க ஆர்டர் செய்யுங்கள் என்று விளம்பரம்.
கண்ணாடிச் சுவர்களுக்கு வெளியே வானம் கொஞ்சம் கொஞ்சமாய்ச் சூரியனை அனுமதித்த சுவடுகளில் காலை வெளிச்சம் 'மே ஐ கம் இன்?' கேட்டு நுழைய ரன்வே குறித்த பாதையில் ஜெட் ஏர்வேஸ் ஒன்று தத்திக் கொண்டிருந்தது. இன்னும் சில விமானங்கள் இளைப்பாறிக் கொண்டிருக்க, ஏணிப் படிகள் விரைந்து கொண்டிருந்தன. ஏர்பஸ் ஒன்று பறந்து விழுந்தவர்களை அள்ளிக் கொண்டு அரைவல் வாசலுக்கு நகர்ந்தது.
டி.ஸி., டைம்ஸ் ஆஃப் இந்தியாவைக் காத்திருந்துக் கைப்பற்றிக் காலியான ஒரு சீட்டில் அமர்ந்து காக்கத் தொடங்கினேன். ஐந்தாம் எண் வரிசைக்கு ஏர் இந்தியா நிறுவனம் செக்-இன்னுக்கான பூர்வாங்கப் பணிகளை அப்போது தான் மேற்கொள்ளத் தொடங்கித் தன் தாவர ஜங்கம சொத்துக்களை எடுத்து வைத்தனர். வாக்கி டாக்கிக் குரல்கள் பிறந்து கொஞ்ச தூரத்திலேயே செத்து விழுந்தன.
2 comments:
welcome boss...! அதே டச் இருக்கு வசந்த்... enjoyed again...!
புத்தாண்டு நல் வாழ்த்துக்கள்
எனது ப்ளாக்கில்:
பாட்டைக் கேளுங்க பரிசு வெல்லுங்க
புத்தாண்டு பரிசு ஒரு வாரம் கோவாவில் குடும்பத்தோடு தங்கும் வாய்ப்பு
A2ZTV ASIA விடம் இருந்து.
Post a Comment