Friday, December 28, 2012

...மற்றும் சில லிமெரிக்குகள்.



றந்த பறவையை விலகி ஒரு சிறகு
மிதந்த காற்றுடன் அதற்கோர் உறவு
நீரில் நிழல் போல நீந்தி
வெளியின் நுண் கரங்கள் ஏந்தி
நிலம் தொட்ட சில நாளில் ஆனது ஒரு சருகு.

***

நிழல் கரும் இருளின் தூதன்
நீங்காமல் வரும் உடலின் மீதன்
ஒளி தடவினால் தெரியும்
எதிர்த் திசையிலே சரியும்
அருகாமை விளக்கடியில் பூதன்.

***

மேகம் தொட்டு ஒளிர்ந்தது ஒரு மின்னல்
முட்டி மோதிச் சுழன்றது மின் பின்னல்
தெருவெல்லாம் நீராகும்
செம்பழுப்புச் சேறாகும்
முன்னம் அடைந்தன சில ஜன்னல்.

***

போகாத பாதை காணாத காட்சி
பார்த்தபின் எதற்கு மனை மாட்சி
கேள்விகள் பிறந்தன
கதவுகள் திறந்தன
புத்தனாய் ஆனபின் சொன்னது மீட்சி.

***

சமுத்திரப் பேரொலி சிறு சங்கில் கேட்கும்
சாம்ராஜ்ய சந்தோஷம் வங்கில் கேட்கும்
ஈராயிரப் பண்பாடு
ஈந்த ஈந்த நற்பாடு
குறளெனும் இருவரிச் சொல்லில் கேட்கும்.

வங்கு :: பெருச்சாளி பூமியில் பறித்து வசிக்குமிடம்.


ஒரு sevenling:

ஆகாயத்தில் மிதக்கின்றன
நிலா, வலசைப் பறவைகள்
ஒரு உள்நாட்டு விமானம்.

கைகளில் கவிதைக் காகிதம்,
வரவேற்புப் பூங்கொத்து,
கடன் விவரங்கள்.

எது முதலில் விழுமோ?

Monday, November 26, 2012

இராதா மது.

லைக் கரும் குயிலின் கானத்தில் மனம் லயித்திருந்தேன். என் ஜன்னல் கம்பிகளில் நகர்ந்து கொண்டிருக்கும் மாலை பெய்த மழைத்துளிகளின் சர வரிசையில் பிரதிபலிக்கின்றது குயிலின் ஒற்றைக் குரல். இரவின் மென் குளிரில் ஊடுருவி நெஞ்சை அறுக்கும் துயரத்தின் இனிமையை ஸ்ருதி மாறாது படைத்தவனின் பேராணவத்தை யார் வைவது? தூணோரம் நின்றாடும் விளக்கின் திரி கருகிக் கொண்டு செல்கிறது. ஒளிக்குஞ்சுகள் திரியும் அதன் பிறவி இன்னும் சொற்ப கணங்களில் கழிந்து கொண்டிருப்பதை மனமே அறியாயோ?

என் மேலாடையில் நடுங்கிக் கொண்டிருக்கும் நூலாடையே, என் பெருத்த மார்புகளின் கனத்தை எவ்வாறு தாங்குகின்றாய்? பெருமூச்சின் அனல் பட்டுப் பட்டு பட்டுத் தேகம் கரைய எதற்காக நீ என்னை இன்னும் விடாது தழுவுகின்றாய்?

தூரத்து வானத்தில் ஒற்றைப் பெரும் பூவாய் தணிந்து தவிக்கின்ற வெண் பாவாய், என்னுடன் என் இல் ஏக மாட்டாயோ? தெருவெங்கும் தோரணங்கள், தோட்டமெங்கும் மணம் நிறை மலர்கள், மாடத்து ஒவ்வோர் இடுக்கிலும் ஒளிரும் மண் விளக்குகள்... என் பெருந்தனிமையின் ஒரேயொரு சொட்டையாவது காணாமல் ஆக்கி விடாது அலைபாய்வதைக் காண வாராயோ?

உறிகளில் தொங்கும் பானை அடுக்குகளில் ஊற வைத்த மோரும் வெண்ணெய்க் கட்டிகளும் யார் கைகளும் படாமல் அவன் வந்து குழப்பி, உதிர நிறம் ஊறும் அதரங்களில் பூசிக் கொண்டும் தரையெல்லாம் சிந்தி, மேனியெங்கும் பூசிக் கொண்டு உழப்பி இன்புற்று விளையாடுவதைக் கொள்ளாது, மேக ஊர்திகளில் ஏறிப் பயணம் செய்து ஏகாந்தம் நோக்கிச் சென்று தான் என்ன பயன்?

எட்டிப் பார்த்தவள் விட்டுச் சென்ற நீர்த் தாரைகள் கூரை விளிம்புகள் எங்கும் வழிகின்றன. ஆருயிரே...உன்னை எண்ணி எண்ணி ஏங்கி உருகிக் கரைகின்ற என் கண்களைக் கண்டு அவை அழுக்காறு அடைந்துச் மண்ணெங்கும் சேறாக்கி நகர்கின்றனவே...பிரபு, மனமெங்கும் தகிக்கின்ற அக்னித்தாரையை நின் விரல் நுனிகள் குளிரச் செய்து விடும் என்று நீ அறிந்திருந்தும் அருகில் வாராது இருப்பதேனோ?

கறக்காது இருந்தால், கட்டிக் கொள்ளும் பால் என்பதை அறியாதவனா நீ, கோபாலா? என் நெஞ்செங்கும் கட்டிக் கொள்கின்ற உன் ப்ரேமையை நீ அடையாது போனால், பின்னல் அணிந்து நடமிடும் இந்த சிரத்தைச் சுமந்து கொண்டு தான் என்ன செய்வது?

சலசலக்கும் நதிக்கரையில் மடி மீது சாய்ந்து கொண்டு உன் இதழ் பெய்யும் இனிப்பிசையைச் சுவைத்த என் செவிகள் சுமக்கும் தோடுகளில் தேங்கி நிற்பதெல்லாம் அன்று வாங்கி வந்த உன் உறுதிமொழிகள் அன்றோ?

கார்காலமும் வந்தது; மேற்கிலிருந்து குப்பல் குப்பலாய்க் கிளம்பி வந்த கரும்பூதங்கள் நின் நிறத்தைக் கடத்திச் செல்ல விடுவேனா? நீராய்ப் பொழிந்துத் தம்மைக் கரைத்துப் போயின. நாரை நிழல்கள் மிதக்கும் குளக்கரைகளில் ஆம்பல் மலர்களும் ஒற்றைக் காலில் நின்று முன்னிரவில் தூறும் சிறு துளிகளை உண்டு உதிர்ந்தன. பசிய சுவர்களின் முகப்புகளில் விளக்குகளை ஏற்றி வைத்தேன். விழுதுகளை மெல்ல அசைத்துக் கொண்ட ஆலமரத்தில் ஊஞ்சல்களைக் கட்டிக் கொண்டு, முன்னும் பின்னும் போய் வந்தேன், உன் நினைவுகளோடும் நிகழ் காலத்தோடும் தினம் சென்று வருவது போல. ஊதா வானத்தில் அந்தி நிறம் திக்குகளெங்கும் பரவிப் பரவி நாணத்தின் கிளைகளைப் பரப்பியது. தொலைவின் மலைச் சிகரங்களில் சுடர்ந்த செவ்வானம் ஆகாரம் அடங்கா அட்சயப் பாத்திரம் போல் தினம் தினம் ஆனந்தம் அள்ளித்தந்தது. மேலிருந்து ஆழி திறந்து நாளெல்லாம் நனைந்து கிடந்த பாதைகளெங்கும் பசுக்களும் கன்றுகளும் நடந்து சென்ற தடங்களில் பொங்கிய பால் நுரைத்து ஓடியது. முற்றமெங்கும் தேங்கிய மழைத்தேக்கங்களில் முகங்கள் அசைவதைப் பார்த்துப் பார்த்து விரல் களைத்தேன். காலையில் சொட்டும் கூரை மேனிகள், ராவெல்லாம் வானும் மண்ணும் பேசிக் கொண்ட ரகசிய மொழிகளின் மிச்சங்களை உதிர்த்தன. தளும்பிய ஏரிகள் உடையா நின்றன. பீலிகளைத் தாங்கும் மயில்கன்றுகள் மாலை முழுதும் முகில் அரசர்களைக் கண்டுக் கண்டு ஸ்நேகத்தின் ஒலியெழுப்பிக் கூத்தாடின.

குளிர்காலத்தில் காற்றிலே பனி மிதந்தது. இருள் விலகா முன்காலையில் புல் நுனிகளில் முத்தாய்த் துளிகள் சரிந்தன. புகை கிளம்பிய வீடுகளின் முக்காட்டில் ஈரம் இன்னும் மிச்சம் இருந்தது. பால் தெய்வங்கள் தொழுவத்தின் முடுக்குகளில் தூங்கிக் கழித்தன. திண்ணைகளில் போர்வை மூடிய தோழிகளும், வெந்நீர் அழைக்கும் குளியல்களுமாய்க் கழிந்தது.

காற்றில் பனி விலகி, வெயில் வந்தது. குளங்களில் நாங்கள் குதித்தாடினோம். மெல்லிய படர்பரப்பில் தாமரை மலர்கள் விரிந்து எங்களை மறைத்தன. மலர்ந்து வந்த எங்களைக் காற்றின் பொன் கரங்கள் அன்றி, வேறாரும் தீண்டா வெளியில் நீரில் வெளுத்திருந்தோம். வயல்களில் பச்சைகள் அசைந்தாடின. அரும்புகள் கூம்பி, வானத்துப் பேரரசனின் பொன் வரவைத் தேகம் முழுதும் தாழ்த்தி வரவேற்றன. அவனது நகங்கள் பட்டு விரிந்த மொட்டுகள், நிலத்தின் ஆழத்தில் எங்கிருந்தோ அள்ளிக் கொண்டு வந்த நறுமணத்தைத் திசைகளெங்கும் பரப்பின. சொர்ணமாய் நதி ஓடியது. வனத்தில் புது உயிர்கள் உலவின. மனமெங்கும் நிறைந்த காதலைப் போல், பகல் நிரம்பி வழிந்தது. இரவில் வந்த சந்திரனும் பெரு மரங்களின் இலைகளில் வெள்ளம் சிந்திப் போனான்.

காலங்கள் கடந்தன; முகில் நீரானதும், நீர் முகிலானதும் நிற்கவேயில்லை. ஸ்வரூபம் யாவும் காதல் மதுரம் சொறிந்த என் நீலப் பிள்ளையே, எனைக் காண நீ வரவேயில்லை.

இன்னும் உயிர் சுமந்திருக்கும் தேகம் நீ தொடாது தீ விடாத போதாவது வாராயா?

Thursday, September 20, 2012

மேற்கில் பொழிந்த நதி! (A)


மூடுமேகங்கள் விரைந்து செல்கின்றன. வனத்தின் பச்சைப் பந்தல்களில் முன்மாலைப் பனித்துகள்கள் போர்வையிடுகின்றன. நிலா முற்றத்தில் வெட்கிச் சரியும் தாவணிப் பெண்கள் போல் எட்டிப் பார்த்து மறைகின்றது. தொலைதூர நட்சத்திரங்கள் தங்கள் கள்வெறி குடித்து மாந்திய கண்களைச் சிமிட்டிச் சிமிட்டி வர்ணஜாலம் காட்டுகின்றன. கூடடைந்த சின்னஞ்சிறு பறவைகள் தத்தம் சிறகுகளின் கதகதப்பில் காய்ந்த புற்கதவுகளைத் தாழிட்டுக் கொண்டு அணைக்கின்றன.

முன் நெற்றியில் வந்து விழுந்த ஒற்றைப் புல் கேசம் விழிகளை மறைக்க முயன்று காந்தள் மலர் விரல்களால் வெகுவாகத் தோற்கடிக்கப்பட்டன.

புகைப்படலம் எழும்பிப் பரவும் வீடு கொண்ட நங்கை, பாறை மீது மோதி மோதி விலகி விலகிச் செல்லும் நதியின் நுரை போல் தெறித்து அணைந்த வேளையில் சருகுகளின் மேல் தென்றலும் மெல்ல நடை போடுகின்றது.

பொன்னார் மேனியளே..!

மெளனக் கருவெளியில் நிறைந்த வைரப் பொடிகள் மினுக்கின்றன.

மெல்லிய உன் சருமம், நதியில் துவைத்துப் பிழிந்த பின் சுருக்கங்கள் ஓடும் காவி வேட்டி பரவிய மாலை வானில் இருந்து எடுத்துக் கொண்டதா? அல்லது மண்ணில் விழித்துக் கொண்ட விதைகளின் விருட்சங்கள் விரவிய மாபெரும் வனத்தின் இடையிடையே ஊடுறுவும் மஞ்சள் கதிர்களில் ஊற வைத்ததா?

வெம்மை கொளுத்தும் பாலை நிலத்தின் ஒரு துண்டில் கீறிய குருதிக் கோடாய் யார் செந்தூரம் தீற்றியது?

செய்வதற்கு வேறேதும் பணியற்ற வேடுவர்களைப் போல் நிமிர்ந்து நிற்கும் இந்தப் புருவக் குள்ளர்கள் அறிவரோ, தாங்கள் காவல் காக்கின்ற விழிகளின் கூர்மை, தாங்கள் ஏந்தியிருக்கும் ஈட்டிகளை விடவும் கூரியதும், சென்று தைப்பவரை 'கொல்' என்பதற்குள் கொன்று தின்று விடுவதையும்? மோகன நிலவின் பால் பொழிவு மதியத்தின் பகல் காலம் முன் எங்கோ சென்று விடுவதைப் போல், நின் பார்வையில் புரண்டோடி வரும் காதல் அமுதை, கடும் கோபத்துடன் ஏன் இந்த இமைகள் மறைக்கின்றன? சந்தனப் பேழையில் கோரைப்புற்கள் சூழ்ந்த பால் குளங்களில் இரவின் ஒழுகி விழுந்த இரு துளிகளைப் போல் உன் கண்கள் தத்தளிக்கின்றன.

காற்றில் கலந்து வரும் மதுரம் போல உலா வரும் வேணு கோபாலனின் குழலோசையைக் குழைத்தெடுத்துச் செய்த இந்த நாசி, பாகீரதி இறங்கிய ஆடல் வல்லானின் குழல் சரிவா? அல்லது வெண்பனித் துளிகள் சறுக்கி விளையாடிக் கரைத்த தங்கக் கட்டியின் தடமா?

மேலைத் திசையிலிருந்து வீசுகின்ற வாடைக் காற்றுக்கு அசைந்தாடும் கதிர்கள் செறிந்த பயிர்களைப் போல், உன் கழுத்தோர முடிகள் கலந்தாடுவது சபையில் செழித்த இசைஞன் வழியவிடும் பெருவிருந்துக்கு நுணுக்கங்களும் நுட்பங்களும் அறிந்த ரசிகர்கள் அனுபவித்து தலையாட்டுவது போலவும் அல்லவா உள்ளது!

ஒளியின் ஓர் அணு கூட நுழையாத பேராழியின் ஆழத்து அடர் கருமை அலை பொங்கி நழுவிச் சரிவது போன்ற உன் கருங் கூந்தல், மஞ்சள் ஆகாயத்தின் ஒளிச் சிதறல்களை எதிரொலிப்பது, இரவின் கடல் மேல் ஒளிர்ந்து தெறிக்கும் பொன் கிரண வட்டங்கள் போலவும், பசிய இலைகள் மேல் படர்ந்திருக்கும் அந்திக் கால வெயில் படலங்களைப் போலவும் உள்ளது. ஸரத் கால முகில்கள் யுகயுகாந்திரமாய்ப் பயணித்து அலுத்த பின் தங்கியிருக்கும் வழித்தடம் போன்ற உன் சிகையில் வைக்கப்படும் மலர்க் கொத்துக்கள் இருண்ட வெளியில் மின்னல் சரங்கள் போல் ஒளிர்கின்றன.

பெருமழை அடித்து ஓய்ந்த பின்னான வீதிகளைப் போல பரிசுத்தமான உன் கன்னங்கள், சந்தனக் கரைசலில் கழுவிய பட்டுத்துணியா, எழுப்பும் மண் வாசனையை நிரப்பிச் செல்லும் திசையெல்லாம் பரப்பும் தென்றலைக் கட்டி செய்து பரவச் செய்த பளிங்குப் பழமையா அல்லது மனோகர சுகந்தம் மெல்லென கிளம்பும் பத்திகளைக் கரைத்துக் கரை கட்டிய வரப்பு வயலா?

Monday, March 26, 2012

ஒரு குயிலின் கூடடைதல்.

ப்போது நாங்கள் ஆயா வீட்டில் குடியிருந்தோம். சதுரமான ஓட்டுப் பாளங்கள் ஒன்றன் மீது ஒன்று தாங்கி சரிந்திருந்த கூரைகள். நடுவில் ஆங்காங்கே கண்ணாடித் தடுப்புகள். பகல் பொழுதுகளில் வெயில் ஒரு திரைச்சீலை போல அசைந்து அசைந்து வீட்டுக்குள் நிறையும். சமையற்கட்டிற்கும் பட்டாசாலைக்கும் நடுவிலே ஒரு பாதை இருந்தது. இருபுறங்களிலும் திண்ணை போல திட்டுகள் வைத்து, நிலைகளில் கரைக் கோலங்கள் போடுவோம். சின்னக் கிண்ணத்தில் சிவப்பாய்க் கரை கரைத்து கிழித்த பழைய இட்லித் துணியை நனைத்து, நிலைப்படிகளில் தேய்த்து விட்டால் மற்றுமொரு மழை வரும் வரை காய்ந்து வாசலுக்கு அடையாளமாய் இருக்கும்.

பின்பக்கம் மூன்று தறிகள் போட்டு நெய்வார்கள். தென்மேறு மூலைத் தறிக்கு அருகில் இரண்டு பப்பாளி மரங்கள் இருந்தன. கால் வைத்து ஏறுவடஹ்ற்கு வசதியாகக் கரணைகள் இருக்கும். ஏறி, தறிக் கொட்டாய் ஓடுகள் மீது மெதுவாக நடந்து, பப்பாளிப் பழங்களைப் பறித்து கீழே குதிப்போம். ஓடுகளின் மேலேயே இன்னும் கொஞ்சம் நடந்தால், பின்பக்க வீட்டுத் தோட்டத்தில் வேர் விட்ட தென்னை மரங்களின் குரும்பைகள் விழுந்து கிடக்கும். பொறுக்கிக் கொண்டு வந்து, உடைத்து அஞ்சாங்கல்லோ, ஜல்லி விளையாட்டுக்கோ பயன்படுத்திக் கொள்வோம்.

மழைக் காலங்களில் மேற்கிலிருந்து கரு மேகங்கள் திரண்டு வரும். அடிக்கடி மின்சாரம் காணாமல் போகும். மருந்து பாட்டில் மூடியை மயிர்கோதியால் துளையிட்டு, பாவு நூலைத் திரியாக்கி, கெரஸின் நிரப்பி, ஒளியேற்ற, என் நிழல் என்னை விட பிரம்மாண்டமாய் வளர்ந்து, ஓதம் இறங்கிய சுவரெங்கும் நடனமாடும். வாடைக்காற்று எல்லாத் திசைகளிலிருந்தும் ஈரமாய் அள்ளிக் கொண்டு வரும் குளிர், வைகறையில் தோட்டத்தின் அத்தனைப் புற்களிலும் நுரை நுரையாய்ச் சேர்ந்திருக்கும். மழை கரைத்த பழுப்பு ஓடைகள் ஓரமாய் வழிந்து, ஒரு குட்டிச் சேகரம் போன்ற சாக்கடையில் கலந்து, வெளியே கறுப்பாய்க் கலந்து விடும்.

ஞாயிறு மதியங்களில் பாடங்களை ஒப்புவித்து விட்டு, மாலை நான்கு மணி சுமாருக்கு, புதிதாய் வாங்கி வைத்திருந்த பிபிஎல்- சான்யோவில் ட்யூன் செய்தால், இலங்கை ஒலிபரப்புக் கூட்டுத் தாபனத்தின் மதுரை ஹாஜி மூஸா, திருச்சி சாரதாஸ், கோவை ஷோபா – ஷோபா கார்னர் விளம்பரங்களின் இடையே ராஜேஸ்வரி ஷண்முகம் குரலில் மாலை மயங்கி மெல்லிய ரீங்காரத்தோடு இரவு கவிழும் செவ்வானம். அந்திப் பறவைகள் கூட்டங்களாய் நீல ஆகாயத் திரையில் புள்ளிகளாய்க் காணாமல் போகும். காமாட்சி அம்மன் கோயிலின் கோபுர ஸ்பீக்கரில் சீர்காழியோ, ஜெயராமனோ குரலிறக்குவார்கள். தோட்டத்துப் பூச்சிகள் இரைந்து கொண்டு, வடமேற்குச் சுவருக்கு அருகில் இருந்த கிணற்றின் வாசத்தைச் சுமந்து வரும்.

இன்று ஆயாவும் இல்லை; வீடும் இல்லை; தறிகளும், பப்பாளி மரங்களும், கிணறும் இல்லை; ராஜேஸ்வரி ஷண்முகமும் இல்லை. கண்ணீர் மட்டும் கனவுகளிலும் தேங்குகின்றது.