Thursday, September 20, 2012

பொன்னார் மேனியளே..!

மெளனக் கருவெளியில் நிறைந்த வைரப் பொடிகள் மினுக்கின்றன.

மெல்லிய உன் சருமம், நதியில் துவைத்துப் பிழிந்த பின் சுருக்கங்கள் ஓடும் காவி வேட்டி பரவிய மாலை வானில் இருந்து எடுத்துக் கொண்டதா? அல்லது மண்ணில் விழித்துக் கொண்ட விதைகளின் விருட்சங்கள் விரவிய மாபெரும் வனத்தின் இடையிடையே ஊடுறுவும் மஞ்சள் கதிர்களில் ஊற வைத்ததா?

வெம்மை கொளுத்தும் பாலை நிலத்தின் ஒரு துண்டில் கீறிய குருதிக் கோடாய் யார் செந்தூரம் தீற்றியது?

செய்வதற்கு வேறேதும் பணியற்ற வேடுவர்களைப் போல் நிமிர்ந்து நிற்கும் இந்தப் புருவக் குள்ளர்கள் அறிவரோ, தாங்கள் காவல் காக்கின்ற விழிகளின் கூர்மை, தாங்கள் ஏந்தியிருக்கும் ஈட்டிகளை விடவும் கூரியதும், சென்று தைப்பவரை 'கொல்' என்பதற்குள் கொன்று தின்று விடுவதையும்? மோகன நிலவின் பால் பொழிவு மதியத்தின் பகல் காலம் முன் எங்கோ சென்று விடுவதைப் போல், நின் பார்வையில் புரண்டோடி வரும் காதல் அமுதை, கடும் கோபத்துடன் ஏன் இந்த இமைகள் மறைக்கின்றன? சந்தனப் பேழையில் கோரைப்புற்கள் சூழ்ந்த பால் குளங்களில் இரவின் ஒழுகி விழுந்த இரு துளிகளைப் போல் உன் கண்கள் தத்தளிக்கின்றன.

காற்றில் கலந்து வரும் மதுரம் போல உலா வரும் வேணு கோபாலனின் குழலோசையைக் குழைத்தெடுத்துச் செய்த இந்த நாசி, பாகீரதி இறங்கிய ஆடல் வல்லானின் குழல் சரிவா? அல்லது வெண்பனித் துளிகள் சறுக்கி விளையாடிக் கரைத்த தங்கக் கட்டியின் தடமா?

மேலைத் திசையிலிருந்து வீசுகின்ற வாடைக் காற்றுக்கு அசைந்தாடும் கதிர்கள் செறிந்த பயிர்களைப் போல், உன் கழுத்தோர முடிகள் கலந்தாடுவது சபையில் செழித்த இசைஞன் வழியவிடும் பெருவிருந்துக்கு நுணுக்கங்களும் நுட்பங்களும் அறிந்த ரசிகர்கள் அனுபவித்து தலையாட்டுவது போலவும் அல்லவா உள்ளது!

ஒளியின் ஓர் அணு கூட நுழையாத பேராழியின் ஆழத்து அடர் கருமை அலை பொங்கி நழுவிச் சரிவது போன்ற உன் கருங் கூந்தல், மஞ்சள் ஆகாயத்தின் ஒளிச் சிதறல்களை எதிரொலிப்பது, இரவின் கடல் மேல் ஒளிர்ந்து தெறிக்கும் பொன் கிரண வட்டங்கள் போலவும், பசிய இலைகள் மேல் படர்ந்திருக்கும் அந்திக் கால வெயில் படலங்களைப் போலவும் உள்ளது. ஸரத் கால முகில்கள் யுகயுகாந்திரமாய்ப் பயணித்து அலுத்த பின் தங்கியிருக்கும் வழித்தடம் போன்ற உன் சிகையில் வைக்கப்படும் மலர்க் கொத்துக்கள் இருண்ட வெளியில் மின்னல் சரங்கள் போல் ஒளிர்கின்றன.

பெருமழை அடித்து ஓய்ந்த பின்னான வீதிகளைப் போல பரிசுத்தமான உன் கன்னங்கள், சந்தனக் கரைசலில் கழுவிய பட்டுத்துணியா, எழுப்பும் மண் வாசனையை நிரப்பிச் செல்லும் திசையெல்லாம் பரப்பும் தென்றலைக் கட்டி செய்து பரவச் செய்த பளிங்குப் பழமையா அல்லது மனோகர சுகந்தம் மெல்லென கிளம்பும் பத்திகளைக் கரைத்துக் கரை கட்டிய வரப்பு வயலா?

No comments: