Monday, March 04, 2013

ஹைதைக்கு வந்தேன்.

க்டோபர் ஏழாம் தேதி காலை. விரைந்த குளிர் ஏர்பஸ்ஸில் திரையை விலக்கி வெளியே பார்த்தேன். வெயில் ஏறிக் கொண்டிருந்தது. வானம் ஆரஞ்சு நிறத்திலிருந்து பகலை அடைய, தூரத்து வீடுகள் துலங்கின. எதிர் வாகனங்கள் வேகமாய்க் கடந்தன. “சம்ஷாபாத்...சம்ஷாபாத்...” என்று முன்னிருக்கையிலிருந்து கூவினர். ஹைதராபாத் எல்லையை அடைந்தேன்.

இன்னும் கொஞ்ச காலத்திற்கு பெங்களூருவில் வேலை இல்லை, ஹைதை செல் என்று அலுவலகம் சொல்லி விட்ட பிறகு வீட்டைக் காலி செய்து விட்டு, மனைவியை ஊருக்கு அனுப்பி வைத்து விட்டு, அக் ஆறு சனிக்கிழமை இரவு மடிவாலாவில் ஏர்பஸ்ஸில் ஏறினேன்.

சம்ஷாபாத் என்பது ஹைதராபாத்தின் ஒரு நுழைவாயில். தெற்கிலிருந்து வருபவர்களுக்கான வாசல். இங்கே தான் நகரின் தற்போதைய பன்னாட்டு விமான நிலையம் அமைக்கப்பட்டுள்ளது. ராஜீவ் காந்தி பன்னாட்டு நிலையம். பரந்து கிடக்கும் பொட்டல் வெளியில் வெயில் தாண்டவம் ஆடும்.

அங்கிருந்து கிளம்பி சற்று தொலைவிலேயே பி.வி.நரசிம்மராவ் மேம்பாலம் துவங்குகின்றது. நாட்டின் நீளமான மேம்பாலங்களில் இதுவும் ஒன்று. கீழே ஓவ்வொரு பகுதியாக விழித்துக் கொண்டே வர அவற்றை ஒரு பாலப் பார்வை பார்க்கலாம். பாலம் மேதிப்பட்டினம் என்ற பகுதியில் முடிவடைகின்றது. அங்கே இறக்கி விட்டார்கள். நகரங்கள் சில கண்டதனால், குழுமிய ஆட்டோவாலாக்களிடமிருந்து விலகிக் காத்திருந்தேன். அலுவலகமே ஆரம்பச் செலவுகளைத் தந்து விடும் என்பதால், மேரு கேப்ஸை அழைத்து டாக்ஸி பிடித்தேன்.

ஐக்கிய நாடுகள் அவையின் சுற்றுப்புறச் சூழல் தொடர்பான ஒரு சர்வதேசிய கூட்டரங்கம் நடந்து கொண்டிருந்த நாட்கள் என்பதால், வழி முழுதும் காக்கிகள். மாதாப்பூரில் ஓர் ஏரிக்கரை ஓரமாக ஹோட்டல் அறை புக் செய்யப்பட்டிருந்தது. அங்கும் சில அறைகளில் வெளிதேசத்தார். வாசலில் போலீஸ் பரவியிருந்தனர். அடையாள அட்டையைக் காண்பித்து அறைக்குச் சென்றேன்.

குளிரூட்டப்பட்ட அறை. இரண்டாள் மெத்தை. சுவர் தாங்கும் தொலைக்காட்சி. டாடாஸ்கை. குளியலறையில் கர்டைன். கண்ணாடிச் சுவர். ஜன்னல் திரைகளை விலக்கினால் மலையும் ஏரியும். அங்கே மெல்ல படகு ஒன்று அசைந்து கொண்டிருந்தது.

மாலையில் குளித்து விட்டு ஒரு நடை செல்லலாம் என்று வெலீயே வந்தேன். ஒரு கூரைக் கடையில் வறுத்த சோறு தின்று விட்டு மேடேரி முக்கிய சாலைக்கு வந்தேன். அது மாதாப்பூர் போக்குவரத்து சமிக்ஞைப் பகுதி. அங்கே தான் இப்பகுதிக்கான காவல் நிலையம் உள்ளது. பக்கத்திலேயே ஓர் அனுமார் கோயில். ஞாயிற்றுக்கிழமைகளில் நிறைய பேர் வருகிறார்கள். நான் ஒரு முறை சென்றிருந்த போது புது காருக்கு பூஜை நடந்து கொண்டிருந்தது. செருப்பு விடும் இடத்தில் சில பிச்சைக்காரர்கள்.

மாதாப்பூர் என்பது நகரின் தொழில்நுட்பப் பகுதி. இங்கே பல கணிணி நிறுவனங்கள் இயங்குகின்றன. அவற்றின் அலுவலகங்கள். மர்றும் தேசிய நவநாகரீகத் தொழில்நுட்ப நிறுவனமும், சில்பராமம் எனும் அரசின் கைவினைப் பொருட்கள் கண்காட்சி மற்றும் விற்பனையகமும் அமைந்துள்ளன.

2003-ல் கல்லூரி வழியாக சுற்றுலா வந்த போது இப்பகுதி ஒரு வெறும் மலை. சைபர் டவர்ஸ் என்ற ஒரேஒரு கட்டிடம் மட்டும் தன்னந்தனியாக நின்று கொண்டிருக்கும். மொட்டை வெயில் உக்கிரமாய்க் காய்ந்து கொண்டிருந்த ஒரு மதியத்தில் நுழைந்து சில நிறுவனங்களைப் பார்த்து விட்டு, கீழே உணவகத்தில் வாங்கிய உணவைக் கண்ணில் நீர் வழியத் தின்றோம்.

இப்போது டவர்ஸின் அருகிலேயே ஒரு மேம்பாலம் போகின்றது. கணிணியர்களை நம்பி இயங்கும் பேக்கரிகள், அவசர உணவகங்கள், ஹோட்டல்கள், ட்ராவல்ஸ்கள், நகைக் கடைகள், ஆஸ்பத்திரி, மொபைல் ரீசார்ஜ் செய்பவர்கள், பூக்கடைகள், செருப்பு தைப்பவர்கள், டி.வி. விற்பவர்கள், பானிபூரி கூடையர்கள், பூமியைக் கொத்திக் கொண்டு எழும் அசுர கட்டிடங்கள், மால்கள், கேக் ஷாப்கள், சூப்பர் மார்க்கெட்டுகள். இவற்றின் நடுவே சாலையோர அரசு வெட்டி நிறுத்தி வைத்த ஓர் அரசு மரத்தின் அருகே, களைப்பான மாட்டின் பின்னே கவர் போட்ட கையை விட்டுப் பார்க்கும் ஒரு மாட்டாஸ்பத்திரி. அதன் ஓரங்களில் எப்போதும் ஒழுகியோடும் நகரவாசிகளின் சிறுநீர்த் தாரைகள்.

NIFT இருப்பதால் சில நூல், பேப்பர் கடைகள் உள்ளன. அழகான பையன்களும் அழகான பெண்களும் அங்கே வந்து ப்ராஜெக்டுக்கான இடுபொருட்களை வாங்கிச் செல்கிறார்கள். ஊசி, பாசி, கண்ணாடி, கலர் காகிதங்கள். வெள்ளிக்கிழமை மாலைகளில் சிறு மூட்டை சுமந்த இளமைகள் ட்ராவல்ஸ் வாசல்களில் காத்திருக்க, வேன்கள் வந்து அவர்களைக் கொத்திச் சென்று நகருக்கு வெளியே காத்திருக்கும் ஏர்பஸ்களுக்கு ஏற்றுமதி செய்கிறார்கள்.

நிறைய ஹாஸ்டல்கள் இருக்கின்றன. ஆண்களுக்கும் பெண்களுக்கும் தனித்தனியாக. காலை வேளைகளில் அலையலையாக வந்து பேருந்து நிறுத்தத்தில் கம்பெனி வண்டிகளைப் பிடித்து கலைந்த பின், சாலை சாதாரணமாக, போக்குவரத்துக் காவலர் நிதானமாக நிழலில் ஒதுங்குகிறார்.

ஷேர் ஆட்டோ என்ற ஒரு கருத்து இன்னும் இங்கு வலுப்பெறவில்லை. ஏனெனில் சாதாரண ஆட்டோவே இங்கே ஷேர் ஆட்டோ அவதாரம் எடுக்கின்றது. பின்புறம் மூன்று முடிந்தால், எளியோரை வலியார் வாட்டினால் நான்கு பேர். முன்னே ஓட்டுநர் இருக்கையின் இருபுறமும் பறவைகள் போல் இறக்கைகளைப் பொருத்திக் கொண்டு, துவாரபாலகர்கள் போல் அங்கும் இருவரை அடைத்துக் கொண்டு ஆட்டோ மொத்தம் ஏழு பேரோடு ஓடுகின்றது.

வியாழக்கிழமைகளில் ஒரு சாய்பாபா வண்டி நான் அலுவலகம் செல்லும் வழியில் வந்து விடுகின்றது. தெலுங்கா, மராட்டியா, இந்தியா என்று தெரியாத மொழியில் பஜனைப் பாடல்கள் ஒலிபரப்பாகும். ஒரு பையன் தட்டேந்தி வருவான். கவனிக்காதது போல் தாண்டிச் சென்றால், ஸ்ரீசாய் பாலாஜி ஓட்டல் அருகே கிழிந்த ஆடையோடு பெண்ணும் அவள் மடியில் எப்போதும் தூங்கிக் கொண்டேயிருக்கும் ஒரு குழந்தையுமாக நம்மிடம் கையேந்துவார்கள்.

ஆதார் அட்டைக்காக எப்போதும் கூட்டம் நின்று கொண்டிருக்கின்றது. டவர்ஸ் அருகிலேயே ஒரு வெங்கடாஜலபதி கோயில். ஒருதடவை போன போது சுண்டல் கொடுத்தார்கள்.

ஒரு கேரள ஓட்டல் இருக்கின்றது. விலையெல்லாம் தென்னை உயரம். அண்ணாந்து பார்த்தால் தொண்ணூறு முட்டை.

சமீப குண்டுவெடிப்பிற்குப் பிறகு இணையக் கடைகளில் இன்னும் கொஞ்சம் கண்டிப்பு. புகைப்படம், அடையாள அட்டை கண்டிப்பாக வேண்டும். 10H பேருந்து நிறைய ஓடுகின்றது. கொண்டாப்பூரிலிருந்து செகந்திராபாத் செல்கின்றது. இருமுறை செகந்திராபாத்தில் இருக்கும் ஸ்கந்தகிரிக்குச் சென்றேன். குன்றிருக்கும் இடமெல்லாம் இருக்கும் குமரக் கோயில். சுற்றி வர பிற சாமிகளும் இருக்கின்றார்கள். காஞ்சி காம்கோடி பீடத்தின் நிர்வாகத்தில் இயங்கும் கோயில் இது. சென்ற போது செப்பனிட்டுக் கொண்டிருந்தார்கள். மயிலாப்பூரிலிருந்து ஒரு கோஷ்டி வந்து ராம நாமம் சொன்னார்கள். மலைக்கு அடிவாரத்தில் கிரி புத்தக நிலையம்.

(தொடரும்)

2 comments:

மெனக்கெட்டு said...

கேரளா, கர்நாடகா, இப்போ ஆந்திரா...

ALL THE BEST

Gujaal said...

//வெள்ளிக்கிழமை மாலைகளில் சிறு மூட்டை சுமந்த இளமைகள் ட்ராவல்ஸ் வாசல்களில் காத்திருக்க,//

வெளங்கலையே!!! ;)