Sunday, April 21, 2013

12 கோபக்காரர்கள்.

மீபத்தில் இணையத்தில் இருந்து தரவிறக்கிப் பார்த்த படங்களில் ஒன்று 12 angry men. சர்வதேசத் திரைப்படத் தரவுத்தளத்தில் (IMDB) பார்க்க வேண்டிய 250 படங்களில் ஒன்றாக இப்படம் குறிப்பிடப்பட்டுள்ளது. 1957-ல் வெளியிடப்பட்டது.

கதை, நீதிமன்றத்தில் ஜூரிகள் என்ற அமைப்பு இருந்த காலகட்டத்தில் நடக்கின்றது. ஒரு வழக்கின் தீர்ப்பில் தீர்ப்பை முடிவு செய்வதற்கு முன்பாக, ஜூரிகள் என்ற மேலும் சில தகுதி வாய்ந்தவர்களுடைய ஆலோசனைகளையும் பெற்றுக் கொள்ளப்பட்ட காலம்.

தன் தந்தையைக் கொன்றதாக மகன் மேல் ஒரு வழக்கு. வாதப் பிரதிவாதங்களுக்குப் பின்பு, ஜூரிகள் 12 பேர் தம் விவாதத்திற்கு என ஒதுக்கப்பட்ட அறைக்குச் சென்று பேசி, ஒரு முடிவுக்கு வருவது தான் படம்.

படம் யூட்யூபில் முழுதாகக் காணக் கிடைக்கின்றது. :: http://www.youtube.com/watch?v=PNuSoK6g6VQ

முழுக் கதையும் விக்கியில். :: http://en.wikipedia.org/wiki/12_Angry_Men_(1957_film)

முதல் தளம்::

ஒரு திரைப்படம் சுவாரஸ்யமாக இருக்க ஒரே ஓர் அறை இருந்தால் கூட போதும் என்பதை இப்படம் காணும் போது உணர்ந்தேன். ஜூரிகளின் அறை மட்டுமே தான் படம் முழுதும். வேறு எந்த வகையான ஜிகினா வேலைகளும் தேவையில்லை, கதை கேட்காத பட்சத்தில்.

இரண்டாம் தளம் ::

ஒரு சாதாரண கொலை வழக்கு விசாரணையை ஒரு செவ்வியல் திரைப்படமாக மாற்றியது இந்தத் தளம் தான் என்று நினைக்கிறேன்.

ஒரு முடிவை நாம் எப்படி, எதன் மேல் எடுக்கின்றோம்? ஒரு தீர்ப்பை எதைக் கொண்டு அல்லது எவற்றைக் கொண்டு முடிவு செய்கின்றோம்?

ஒரு லட்சிய மனிதன் முடிவெடுக்க வேண்டிய தருணத்தில் எவ்வாறு செயல்படுவான்? முடிவெடுக்க வேண்டிய விஷயம் பற்றிய முழுமையான தகவல்களை வைத்தும், அவற்றுக்கான முழுமையான ஆதாரங்களை வைத்தும், கிடைத்த தகவல்களையும் ஆதாரங்களையும் முழுமையான பரிசோதனைகளுக்கு உட்படுத்தி, அவற்றின் நம்பகத்தன்மையை உறுதிப்படுத்திய பிறகு தம் பகுப்பைத் தொகுத்து ஒரு முடிவுக்கு வந்து சேர்வான்.

ஆனால், நடைமுறை வாழ்வில் நாம் இவ்வாறு ஒரு வழக்கில் அல்லது விவாதத்தில், முழுமையாகத் தன்னை விலக்கிக் கொண்டு வெறும் தகவல்களை மட்டும் வைத்தா ஒரு தீர்மானத்திற்கு வருகின்றோம்? இல்லை. பற்பல புற மற்றும் அகக் காரணிகள் தரும் நேர் மற்றும் எதிர் அழுத்தங்களும் நம் முடிவை பாதிக்கின்றன. இத்தகைய உளக் கோண அலசலே இப்படத்தில் நிகழ்கின்றது.

இந்த 12 ஜூரிகளும் ஆட்கள் அல்ல. ஒரு தீர்மானத்திற்கு வருவதற்குத் தகவல்களைத் தாண்டியும் நம் மனம் மற்றும் உடல் கொள்கின்ற காரணிகளே தான்.

ஒருவருக்கு நாளின் வெயில் தரும் எரிச்சல். மாலை செல்ல வேண்டிய ஒரு நிகழ்வுக்கு அவசரம். சீக்கிரம் இந்தக் கூட்டம் முடிந்தால் தேவலை.  - சொந்த வேலை காரணம்.

ஒருவருக்கு சேரிப் பையன்கள் என்றாலே குற்றவாளிகள் தான் என்ற கருத்து வலுவாக இருக்கின்றது. - முன் தீர்மானம்.

ஒருவருக்கு சளி பிடித்து இருமல் வந்து கொண்டே இருக்கின்றது. அந்த
எரிச்சலில் இருக்கின்றார். - உடல் தொந்தரவு எண்ணத்தைப் பாதித்தல்.

ஒருவருக்கு எல்லோரும் சொல்கிறார்களே, அப்படியானால் அது தான் சரியாக இருக்கும்.  - மந்தையில் ஓர் ஆடு. சிந்திப்பதற்கு சோம்பேறித்தனம்.

கொலை செய்யப்பட்டவரின் அருகில் இருந்த கத்தியைப் போல் வேறு எங்கும் தான் பார்த்ததில்லை. எனவே பையன் தொலைந்து விட்டது என்று சொன்ன கத்தி இது தான். அவன் பொய் சொல்கிறான். - தன் மைய சிந்தனை.

’நான் இத்தனை வருடங்களாக ஜூரியாக இருக்கின்றேன். நான் சொல்வது தவறாகுமா?’ - மிகை தன்னம்பிக்கை.

‘எல்லோரும் குற்றவாளி இல்லை என்று சொன்னாலும் ஒத்துக் கொள்ள மாட்டேன். நான் சொன்னது, சொன்னது தான்.’ - அடம். ஈகோ.

’அவன் முகத்தைப் பார்த்தாலே தெரிகின்றதே’ - முன் தீர்மானம்.

தற்செயல்களுக்கும் வாழ்வில் வாய்ப்புகள் இருக்கின்றன என்பதை ஏற்றுக் கொள்ளாத மனோபாவம்.

ஒரு சாதாரண வழக்குப் படத்தை இத்தகைய மனித உளப் பகுப்பாய்வுக் கோணத்தில் கொண்டு போய் பார்க்கின்ற முறையே இதனை செவ்வியல் வரிசையில் சென்று வைக்கின்றது.

சில தடவைகள் பார்த்த பின்பு மனதில் தோன்றிய மற்றும் ஓர் எண்ணம் : முதல் காட்சியில் மட்டும் தான் குற்றம் சாட்டப்பட்ட பையனைக் காட்டுவார்கள். அந்த பரிதாப முகமா குற்றவாளி என்று யோசிக்க வைத்தது. பிறகு சிந்திக்கும் போது தான் தெரிந்தது, அதுவும் ஒரு முன் தீர்மானம் தான் என்று! பால் வடியும் முகங்களும் குற்றவாளியாக இருக்கலாம். எனில், எப்படி உறுதி செய்வது? வெறும் தகவல்களை மட்டும் வைத்துத் தான் நாம் முடிவுக்கு வர வேண்டும். வேறு எத்தகைய காரணிகளும் நம் முடிவை பாதிக்காத வகையில் பார்த்துக் கொள்வதே, சிறந்த மற்றும் ஒரே வழி.

No comments: