Wednesday, June 05, 2013

விளிம்பெல்லாம் வளையல்கள்.



னிக்கிழமை மதியம் மெஸ்ஸில் உண்டு கொண்டிருந்த போது சட்டென “நாளைக்கு எங்காவது வெளியே போகலாமா?” என்று அறை நண்பனைக் கேட்டேன். பருப்பில் இருந்து தலை நீட்டியவன் “நாளைக்கென்ன நாளை, இன்னிக்கே போலாமே?” என்றான். தீர்ந்தது. ஹைதைக்கு வந்து இன்னும் சார்மினார் பார்க்கவில்லை. வாழ்நாளில் ஒருதரம் கூட இங்கே வராதவர்கள் எல்லாம் சார்மினாரை பாக்கெட் பாக்கெட்டாகக் கொளுத்தும் போது அவ்வப்போதைய வெடிகுண்டு மிரட்டல்களுக்கு இடையே ஐநூறு ஆண்டுகளுக்கு மேல் தப்பிப் பிழைத்துக் கொண்டிருக்கும் ஒரிஜினல் சார்மினாரைப் பார்க்காதது நரகத்தில் நா வறளும் சோகத்தைக் கொடுத்தது. உடனே கை கழுவி விட்டு எழுந்தோட....முடியாமல் இரண்டு விஷயங்கள் தடுத்தன. அ. உணவு. ஆ. கிரிக்கெட்.

சாம்பியன்ஸ் ட்ராபியின் முதல் சூடுபடுத்திக் கொள்ளும் போட்டி இந்தியா மற்றும் இலங்கை அணிகளுக்கு இடையே அன்று மதியம். சஞ்சய் ‘வானம் வெளுப்பாக இருக்கிறது; நேற்று மழை வந்தது; இன்று வெயில். sunny climate..' என்றெல்லாம் மைக்கை நனைத்துக் கொண்டிருந்தார். டாம் மூடி தன் பலமான ஆகிருதியுடன் காமிரா முன் வந்து மற்றுமொரு பலமான ஆகிருதியில் சிரித்தார். மைதானத்தில் பச்சை. வரிசைகளில் ரிலாக்ஸான வெள்ளையர்கள். மூவர்ணக் கொடியை முண்டாசாக்கி நம்மாட்கள் சிலரும் கையசைத்தனர். சிங்வாலாக்கள். டாஸ் வென்ற தோனி பவுலிங் என்றார், மெனக்கெட்டுப் போட்டுக் கொண்டு வந்த கோட்டைக் கழற்றி அம்பயரிடம் கொடுத்து விட்டு இர்பான் முதல் ஓவரைத் துவக்கினார். அண்டை நாட்டவர்களைத் தொலை தூரத் தேசத்தில் அம்போவென்று விட்டு விட்டுத் தொலைக்காட்சியை அணைத்தேன்.

மூன்றரை மணிக்கு மாதாப்பூர் பெட்ரோல் பங்க் பேருந்து நிறுத்தத்தில் நின்றோம். வழக்கமாக மே விடை பெற்றுப் போகும் போது அடம் பிடிக்கும் குழந்தையைத் தாய் போல் வெயிலையும் தரதரவென இழுத்துச் சென்று விடும். இங்கு இன்னும் சரிவரப் போகவில்லை. வெயில் காயவில்லை ஆனாலும் ஓயவில்லை, இங்கிருந்து சார்மினாருக்கு நேர்ப் பேருந்துகள் இல்லை. இருக்கும் மாற்று வழிகளில் இலகுவான வழி செகந்திராபாத் சென்று அங்கு பஸ் மாறுவது. மூர் விதிப்படி கோட்டிக்குச் செல்லும் பேருந்துகளே (127K) வந்தன. கால் மணி நேரக் காத்திருத்தலுக்குப் பின் ’இன்னும் மூன்று பஸ்கள் பார்ப்பது; செக்.குக்கு வராவிட்டால் இங்கிலாந்துக்குப் போய் விட வேண்டியது தான்’ என்று முடிவு செய்ய, மூன்றாவது பேருந்து 10H.

ஒரு நாள் பயணச் சீட்டு எடுத்துக் கொண்டேன். 60ரூ. ஸெகந்திராபாத் இங்கிருந்து ஒன்றேகால் முதல் ஒன்றரை மணி நேர தூரத்தில் உள்ளது. பெத்தம்மா கோயில், பஞ்சாரா ஹில்ஸ் செக் போஸ்ட், அமீர்பேட் வந்தது. அமீர்பேட்டை என்பது இன்று முழுக்க முழுக்க கணிணித் தொழில்நுட்ப கோர்ஸ்களுக்கான கற்பித்தல் மையங்களால் நிரம்பியுள்ளது. சுவர்களில் கட்டண விவரங்கள் ஒட்டப்பட்டுள்ளன. தரைகளில் பிட் நோட்டீஸ்கள். விதவிதமான ஆங்கில எழுத்துக்களின் கூட்டுகளில் பலவர்ண போர்டுகள். விலகி சர்தார் படேல் சாலையில் மேம்பாலங்கள் அரை ஸைன் அலை போல் எழும்பி அடங்கி எழும்பி அடங்கிய போது ஸெக் வந்திருந்தது.

செகந்திராபாத் இரயில்வே நிலையத்தின் பேருந்து நிறுத்தத்தில் இறங்கிக் கொண்டோம். ஓரமாய் வெட்கப்பட்டு நிற்பது போன்று ஒரு சுவரோரம் 8A காலியாகக் காத்திருந்தது. அஃப்ஸல் கஞ்ச் செல்லும் பேருந்து. ஏறி அமர்ந்து கொண்டோம். வெயிலில் ஒரு சதுரக் கண்ணாடிக் குவளையைப் போல் மினுங்கியது. சுமாராய்க் கூட்டம் சேர்ந்த பின் எங்கிருந்தோ முளைத்த ஓட்டு மற்றும் நடத்துனர்கள் 8A -வை நெரிசலிலிருந்து இன்னும் அதிக நெரிசலுக்கு நகர்த்தினர். பெயர் அறியாத நிறுத்தங்கள் ரஸ்தாக்கள் வழியாகச் சென்று கொண்டேயிருந்தோம். ஹுஸைன் சாகர் ஏரிக் கரை வந்தது. செய்த மேனிக்குக் கொஞ்சமும் குறைவில்லாமல் புத்தர் நடு ஏரியில் நின்று கொண்டிருந்தார். மோட்டார் படகுகள் விர் விர்ரென்று கரைக்கும் புத்தர் காலுக்கும் இடையே விரைந்தன. கொஞ்சம் கிடைத்த இடத்தில் பையன்கள் நீரில் மறையும் கதிரின் தங்கக் கரைசலில் மூழ்கி எழுந்தனர். சுற்றிக் கொண்டு ஒரே சமயத்தில் சந்துகள் போலவும் சாலைகள் போலவும் தோற்றமளிக்கும் பாதைகள் வழியாகச் சென்றோம். நிறைய வேகத் தடைகள். முழுக்கவே இஸ்லாமியர் ஏரியா. கறிக்கடைகள். மோட்டார் சரி பார்ப்பிக் கடைகள். மரச் சாமான்கள். மசூதி. அசைந்து கொண்டிருக்கும் கண்ணாடிச் சரங்கள். பர்தா பெண்கள்.

அஃப்ஸல் கஞ்ச் பேருந்து நிறுத்தத்தில் இறங்கினோம். இடது பக்கம் சார்மினார். சார் என்றால் இந்தியில் நான்கு, மினார் என்றால் தூண். (குதுப்மினார்? குதுப்ஷா மன்னர்களால் கட்டப்பட்ட தூண்) நான்கு தூண்களைக் கட்டி இணைத்து மேலே தொழுகை செய்யும் இடமும் உள்ளது. அருகே போன போது தான் தெரிந்தது. மேலே ஏறிச் சென்று பார்க்க நேரம் கடந்து விட்டது. மாலை ஐந்து மணி வரை தானாம். நாங்கள் வந்து சேர்ந்தது ஐந்தரைக்கு. ‘பரவாயில்லை’ (வேறு என்ன சொல்வது?) என்று சுற்றி வந்து செல்லில் படங்கள் சேர்த்துக் கொண்டேன். தூணை ஒட்டியே ஒரு அம்மன் கோயில் அமைக்கப்பட்டுள்ளது. அதற்குக் காவலுக்கு நாலு காக்கியர். குண்டு பரிசோதனைக்குக் கருவி. சமீபத்திய குண்டு வெடிப்பிற்குப் பின் இன்னும் பலமான ரோந்து.

நீர்த்தாரை வழிந்து ஓடு வழியின் கரைகளில் ஓதம் படர்ந்திருப்பது போல, சாலையின் விளிம்புகளில் தள்ளு வண்டிகளில் வளையல்கள் சரம் சரமாய்த் தொங்கின. ப்ளாஸ்டிக் குறும்பெட்டிகளில் கவரிங் நகைகள். பின்னலுக்கு வைக்கும் பின்னிலிருந்து நங்கையருக்குத் தேவையான அனைத்தும் இங்கே சல்லிய விலையில் கிடைக்கின்றன, பேரம் பேசத் தெரிந்தால். எடுத்த எடுப்பிலேயே இமயத்தில் சென்று அமர்கின்ற கடைக்காரர்களை இழுத்துக் கொண்டே வந்து தரையில் அமுக்கத் தெரிந்தால், இந்த சாலையில் மட்டும் அல்ல எந்த சாலையிலும் நீங்கள் பணம் மிச்சப்படுத்தலாம்.

உள்ளே பிரிந்து செல்லும் சந்துகளில் அதே நகைகளைக் குண்டு பல்பின் மஞ்சள் பூச்சின் கீழ் வைத்து முலாமடித்து நிலவுக்குச் சென்று அமர்ந்து விற்கிறார்கள். சேலைக் கடைகளில் மீப் பெரும்பாலும் ஜிலுஜிலு புடவைகளே உள்ளன. எம்ப்ராய்டரி செய்தவை, ஜரிகை நெய்தவை, கல் வைத்தவை, கண்ணாடி தைத்தவை போன்ற கோஷ்டிகளுக்கு நடுவே ’ப்ளைன் ஸாரி’ என்று கேட்டால் ’நோ’ என்கிறார்கள். வாசனைச் சாம்பிராணிகள், நாவற்பழ சைஸ் பாட்டில்களில் அத்தர், மல்லிகை மற்றும் செயற்கை மணங்கள் சிற்சில கடைகளில் விற்க உள்ளன. வகைக்கு ஒன்றாக எடுத்து கைகளில் தடவிக் கொண்டு நகர்ந்தேன்.

இரவு கவிழத் தொடங்க, ஜெனரேட்டர் பல்புகளில் விற்பனை ஜொலித்தது. ஹோட்டல்கள், பூக்கடைகள், பேக்கரிகள் எல்லாம் தயாராயின. மீண்டு அஃப்சல் கஞ்ச் பேருந்து நிலையத்திலேயே 8A பிடித்து ஸெகந்திராபாத் வந்தோம். அங்கேயே ஒரு குட்டி ஹோட்டலில் இட்லிகளை எடுத்துக் கொண்டு மாதாப்பூருக்குத் திரும்பும் போது ராத்திரி பத்தரை. வந்தது நித்திரை.

3 comments:

இராஜராஜேஸ்வரி said...


"விளிம்பெல்லாம் வளையல்கள்."
பயணம் ரசிக்கவைத்தது ..!

thamizhparavai said...

nice vasanth....! half sine wave flyovers :))

u didnt enter into charminar??? or its only for thozhugai..???could have been clarified...

இரா. வசந்த குமார். said...

நேரமாகி தாண்டி சென்றதால், எங்களால் மேலே போக முடியவில்லை

தொழுகைக்கும் வசதி இருக்கின்றது என்பது போல் தான் தெரிகின்றது. தொலைவில் இருந்து பார்க்கையில் மக்கள் சார்மினாரின் மேலே நடந்து கொண்டும் ஃபோட்டோக்கு போஸ் கொடுத்துக் கொண்டும் இருந்தார்கள்.