Tuesday, July 29, 2014

தீண்டாய்...மெய் தீண்டாய்.

குழலிலே மூச்சுக்காற்றைச் செலுத்தி ராகங்களைப் பிறப்பிக்கின்ற லாவகத்தைத் தீட்டிக் கொள்ளும் பயிற்சியாக இனிய மெட்டுகளுக்குப் புது வரிகள் எழுதத் தீர்மானித்து, இதோ.

'என் சுவாசக் காற்றின்' 'தீண்டாய்'க்கு ஒரு வடிவம்.

**

பூவாய்
மென் பூவாய்
பூவாய்
உடல் பூவாய்

குளிர் இதழ் ஒன்று கண்கள் மூடியதே
உள் அனல் கங்கை உள்ளம் மூட்டியதே
மடல் அகம் ஊறிப் புறம் ஏகி உயிர்த்திட்டதே (பூவாய்)

தளிர் இலைமேலே பூக்கள் தோன்றியதோ
பெண் சிலைமேலே ஜீவன் ஊன்றியதோ
விழி இடம் சென்று வலம் வந்து முகிழ்த்திட்டதோ (பூவாய்)

முதல் போர்வை பெண்மை கொள்ளும்
உடல் வேர்வை நம்மை உண்ணும்
பொழுதோடும் தேகம் உள்ளது

முதல் பார்வை முத்தம் கேட்கும்
முகத்தோடு முட்டிப் பார்க்கும்
முடியாமல் போகும் போர்க்களம்

தொலைவானக் காட்டின் மேலே
தொலை வான மேகம் போலே
என்னை உந்தன் கைகள் ஆளுவதோ?

தொலைவானக் காட்டின் உள்ளே
தொலைவோமே பிள்ளை போலே
மழை கொண்ட மேகம் மூளுவதோ?

தணலின் எழிலே எழிலே
எனை முழுதாய்க் கொள்க

பனியே நிழலே
என் வேகம் கொள்க (பூவாய்)

விளையாடிட நேரம் உண்டு
விளையாட்டில் கூடல் உண்டு
விளைவாக நம்மைச் செய்யவோ?

விளைகின்ற பூமி மேலே
விதைபோடும் வீரம் போலே
விருந்தொன்றை நீயும் கொள்ளவோ?

இலைமூடும் கூட்டுக்குள்ளே
இளம் ஜோடிக் கிளிகள் போலே
திரண்டோடித் திசைகள் சென்றிருப்போம்

இலைநீயும் இல்லை நானும்
நிலைசேர்ந்து ஜென்மம் யாவும்
தமிழ்தீர புதிய பாடல் பாடி வைப்போம்

கடலோ கடலில் நிலவோ
உன் உடலோ என்ன

சுழலோ தழலோ
நீ நுழைந்தால் என்ன (பூவாய்)

**

Thursday, May 29, 2014

கருநீலப் பூனைகள் அடர்ந்த வெளியில்.

ரு பனிப் பொழிவுக்கு இந்தப்பக்கத்திலிருந்து வெளியே ஜன்னலில் எட்டிப் பார்க்கும் ஒரு சாம்பல் நிறப் பூனை, தன் கண்களில் ஆச்சரியத்துடன் இதில் இறங்கத் துணிந்துள்ளது. பனி இறங்கி மறைத்துள்ள அப்பிரதேசத்தில் என்ன இருக்கும் என்ற வியப்பு கலந்த கேள்வி பூனையின் மனதில் கேட்டுக் கொண்டிருக்கின்றது. அது தன் வட்டத்திற்குள்ளேயே வாழ்ந்திருந்தது. அதற்குள் யாரையும் நுழைய விட்டதில்லையாதலால், அதற்குத் தெரிந்திருக்கவில்லை.

நான்கு கரங்களைத் தரையில் ஊன்றிய பழுப்பு நாற்காலி, அதற்கு ஒரு குழந்தையைப் போல் தெரிந்தது. வாலை முன்னிழுத்துக் கொண்டு மொத்த உடலையும் கால்களில் தாங்கிக் கொண்டு, கணப்பின் அருகே பழைய புத்தகம் கவிழ்ந்த குறுமேசையின் அருகே நாற்காலியின் அடியே படுத்துக் கொண்டு கண் மூடியிருக்கும், சில இரவுகளில். கணப்பு மெல்ல மெல்ல அணைந்து வெம்மை அறையெங்கும் பரவும் பின்னிரவு வரை தரை விரிப்பின் உள்ளே புகுந்து, விரிப்பின் நுண் துளைகள் வழியே விழும் ஒளித்துளிகள் உள்ளிருண்மைக்குள் ஊசிகள் போடுவதை, பார்த்துக் கொண்டிருக்கும் சில இரவுகளில்.

யாருமே தேடி வந்திராத இந்த மர வீட்டிற்குத் தேவையற்ற சுமையான பொருத்தமில்லாத பெயர் கொண்ட வரவேற்பறையின் மையத்திற்கு மேலே, நான்கு மெழுகுவர்த்திகளை ஒரே சமயத்தில் தின்னும் அலங்கார விளக்கு ஒன்று தொங்கிக் கொண்டிருக்கின்றது. அதன் வயலெட் வர்ண கண்ணாடிக் குடுவைகளுள் மெழுகுகள் உருகிப் படிந்த புகை, உள்ளிருப்பை மறைக்கின்றது. இப்பூனை தன் மென்முடி படர்ந்த வாலைச் சுருட்டி, விளக்குகளைத் தாங்கும் உலோக உடலில் படுத்துக் கொள்ளும், சில தினங்களில்.

மெளனம் பூண்டுள்ள பியானோ, தன் மேலான வருடக்கணக்கான தூசுகளைப் பற்றிக் கவலைப்பட்டுக் கொண்டிராமால், தீண்டும் பூனையின் விரல்களுக்குத் தன் குரல்களில் பதிலளிக்க முயல்கையில், பூனை தன் வட்டமான சின்னஞ்சிறிய தலையில் ஓர் ஆச்சரியத் திடுக்கிடலைத் தெரிவித்து விட்டு, தன் ஆழ்ந்த மோன நிலைக்குத் திரும்பி விடுகின்றது.

வாசலில் இடப்பட்ட வரவேற்புக் காலடி, யாராலும் மிதிக்கப்படாமல் இருப்பதை பூனை காலப்போக்கில் கவனிப்பதை நிறுத்தி விட்டது. போரின் போது கொள்ளையிட்ட சருகுத்& துணிகளால் மறைக்கப்பட்ட அறைக் கதவுகளையும், கண்ணாடி ஜன்னல்களையும் பூனை நினைத்தும் பார்ப்பதில்லை.

தன் தனிமையின் அழுத்தத்தைச் செரித்துக் கொண்டு உயிர்த்திருந்த பூனைக்கு, சலிப்புத் தட்டி விட்ட வாழ்க்கையின் அப்புறம் என்ன இருக்கின்றது என்ற வினா எழுந்த பின்பு, அதனால் இந்த வீட்டிற்குள் இருக்க முடியவில்லை. ஜன்னலுக்கு அந்தப் பக்கம் பனி இறங்கியுள்ள வெளிக்குப் போக நினைத்துள்ளது.

அங்கே அதனைப் போன்ற பூனைகள் அடர்ந்திருப்பதாக ஓர் இரவில் கனவில் கண்டது. அப்பூனைகள் அதனைப் போன்று இல்லாமல், கருநீல நிறத்தில் மேலும் கீழுமாய், வந்தும் போயும், குதித்தும் அழுதும் அடர்ந்தும் அந்த வெளியில் இருப்பதாகக் கண்டது. அதன் கனவுக்காகக் காத்திருந்த அப்பூனைகள், கனவில் நுழைந்த இதை தத்தம் அத்தனைக் கண்களாலும் ஒரே பார்வையாய்ப் பார்த்தன. இதன் பார்வை சென்ற மொத்தப் பகுதியிலும் வால்களை மடித்துக் கொண்ட ஆயிரமாயிரம் லட்சோபலட்சம் கருநீலப் பூனைகள் மணி மணியாய்ச் சுடர்ந்த கண்களாலும் இதை உற்று நோக்கின. முன்னங்கால்களை நீட்டியவாறு அத்தனை பூனைகளும் இதை நோக்கி நடந்து வர, நெருங்கி வர, வர இப்பூனை விழித்துக் கொண்டு உறைந்து நின்று விட்டிருந்த மரக் கடிகாரத்தின் முட்களைப் பயத்துடன் பார்த்தது.

ஆனாலும் இன்று அந்த வெளியில் இறங்கிச் செல்லத் துணிந்தே விட்டது.

***

இருபதாம் நூற்றாண்டின் முற்பகுதியில் வாழ்ந்த ஜெர்மானிய கவிஞர் வில்லியம் என்பவருடைய கவிதைத் தொகுப்பிலிருந்து.

Friday, May 23, 2014

இருப்பிலிருந்து இன்மைக்கு.

நேற்று ஜெயநகர் நான்காம் பகுதிக்குப் போயிருந்த போது ஒரு கோல விரிப்பைப் பார்த்தேன். அழகழகான பரிபூர்ண வடிவங்கள். இது போன்ற கோலங்களை ஒருவர் விரலெடுத்து வரைய வேண்டுமெனில், அக்கரங்கள் வருடக்கணக்கான பயிற்சியும் விரல் நுனிகளில் துல்லியமும் கைக்கொண்டிருக்க வேண்டும். இங்கே சிறு வடிவத் தட்டுகள் அப்பணியை நொடிகளில் செய்து விடுகின்றன. கோலமாவை அள்ளிப் பரப்பத்தெரிந்தால் போதும்.

கைகளால் கோலம் போடுகையில் இன்மையிலிருந்து ஓர் இருப்பை - கோலம் என்ற இருப்பை - உண்டாக்குகின்றோம். இத்தட்டுகள் இந்த தடத்தின் தலைகீழியைத் தம் நுட்பமாகக் கொண்டுள்ளன. தட்டு முழுதும் நிரம்பி, வர வேண்டிய வடிவப் பகுதி மட்டும் இன்மையாகத் துளைகளால் உள்ளது. இந்த சார்ந்த இன்மை வழியாக மூலப்பொருள் இடப்பட்டு ஓர் இருப்பு உண்டாகின்றது.

பிரபஞ்சத்தின் ஓர் உண்மை எளிமையாக இங்கே.

லட்சக்கணக்கில் வீடு கட்டுகிறோம். அங்கே பயன்படுத்துவது என்னவோ, உள்ளிருக்கும் காலி இடத்தைத் தான். தங்கச் செம்பில் அள்ளிப் பால் அருந்துகிறோம், உள்ளே இருக்கும் வெற்றிடத்தில் நிரப்பி.

இன்மையும் இருப்பும் தனக்குள் தன்னை நிரப்பிக் கொண்டுள்ளன. இரண்டு நிலைகளிலிருந்தும் நழுவிக் கொண்டிருப்பதாக நாம் நினைப்பதெல்லாம் மற்றொரு நிலையில் தான் சென்று சேர்கின்றது.

Thursday, February 06, 2014

மின் குடுவையில் மிதக்கும் கடல்.

ற்றையாய்த் தனிமையில் உறங்கத் தொடங்கியது சில காலங்களுக்கு முன் தான் கழண்டு விழுந்த ஒரு மின் குடுவை. அதன் ஒரு காலத்திய மெல்லிடை பெருத்துப் போன பின், அடைக்கலம் தேடி வந்த மாகடல் ஒன்றை அதனுள் அடக்கிக் கொண்டது. வெண்மையான நுரைகளைக் கிழித்துக் கொண்டு வந்த காட்டுமரக் கட்டுமரம் ஒன்றின் நுனியில் சிறகு குவித்திருந்த ஊர் தெரியாக் கூர்நாசி நாரை, கண்ணாடித் திரை மேல் முட்டிக் கொண்டது. வேருக்குத் தெரியாமல் மரத்தை விட்டு ஓடி வந்த இளம் இலைகள் இரண்டு, நூறாயிரம் லட்சோபலட்சம் கோடானுகோடி துளிகளால் அலைந்து அலைந்து நனைந்து நனைந்து பாதரசம் கரைந்து உருவாகியிருந்த ஒரு சிறு தீவில் ஒதுங்கிச் சருகாகும் நொடிக்குக் காக்கத் தொடங்கின.

கடல் தின்று செரித்திருந்த உயிர்கள் தம்முள் ஒன்றைத் தேர்ந்தெடுத்துக் கரைக்கு அனுப்பத் தீர்மானித்தன. அறிவிலும் புத்தியிலும் நடைமுறை ஞானத்திலும் சாமர்த்தியத்திலும் தந்திரத்திலும் சிறந்த முயலை அனுப்பலாம் என்றது பசியோடு காத்திருந்த புலி ஒன்று. அறிவிலும் புத்தியிலும் நடைமுறை ஞானத்திலும் சாமர்த்தியத்திலும் தந்திரத்திலும் சிறந்த, முயலை அனுப்பலாம் என்றது பசியோடு காத்திருந்த புலி ஒன்று. சரம் சரமாய்த் தொங்க விடப்பட்டிருந்த மின்மினிப் பூச்சிகள் ஒன்றையொன்று அடையாளம் கண்டு கொண்டு முத்தமிட்டுக் கொண்ட போது, ரேடியம் ஒளிக் கீற்றுகள் புறப்பட்டு, உடனே ஈரமாகி, பவளப் பாறை ஒன்றின் பின்னால் பதுங்கிய போது செம்பிழம்பு போல் ஒளிர்ந்தது பாறை.

மாவாக் கொத்து ஒன்று யாராலோ உமிழப்பட்டு உருண்டு வழிந்து சென்றது. தீர்மானம் இன்றி நீர்மானம் காக்க சரியான சேர்மானம் கொண்ட இரு தனிமங்கள் தொட்டுக் கொண்ட போது, பிரளயப் பெரு வெடிப்பு நிகழ்ந்து, எல்லோரும் தரையில் குதித்தார்கள்.

உறக்கம் கலைந்த பல்பு புரண்ட போது மஞ்சள் வெளிச்சம் அதன் வளைந்த வெளியெங்கும் சுயம்பிரகாசமாய்ச் சுடர் விட்டு எழுந்தது.

கங்கைக் கரையில் அற்ப மானிடர்கள் 'அஸ்யஸ்ரீ ஆதித்ய ஹ்ருதய ஸ்தோத்ர மஹா மந்த்ரஸ்ய அகஸ்தயோ பகவான்ரிஷி அனுஷ்டுப் சந்த:' என்று விழுந்து கும்பிட்டார்கள்.