Thursday, May 29, 2014

கருநீலப் பூனைகள் அடர்ந்த வெளியில்.

ரு பனிப் பொழிவுக்கு இந்தப்பக்கத்திலிருந்து வெளியே ஜன்னலில் எட்டிப் பார்க்கும் ஒரு சாம்பல் நிறப் பூனை, தன் கண்களில் ஆச்சரியத்துடன் இதில் இறங்கத் துணிந்துள்ளது. பனி இறங்கி மறைத்துள்ள அப்பிரதேசத்தில் என்ன இருக்கும் என்ற வியப்பு கலந்த கேள்வி பூனையின் மனதில் கேட்டுக் கொண்டிருக்கின்றது. அது தன் வட்டத்திற்குள்ளேயே வாழ்ந்திருந்தது. அதற்குள் யாரையும் நுழைய விட்டதில்லையாதலால், அதற்குத் தெரிந்திருக்கவில்லை.

நான்கு கரங்களைத் தரையில் ஊன்றிய பழுப்பு நாற்காலி, அதற்கு ஒரு குழந்தையைப் போல் தெரிந்தது. வாலை முன்னிழுத்துக் கொண்டு மொத்த உடலையும் கால்களில் தாங்கிக் கொண்டு, கணப்பின் அருகே பழைய புத்தகம் கவிழ்ந்த குறுமேசையின் அருகே நாற்காலியின் அடியே படுத்துக் கொண்டு கண் மூடியிருக்கும், சில இரவுகளில். கணப்பு மெல்ல மெல்ல அணைந்து வெம்மை அறையெங்கும் பரவும் பின்னிரவு வரை தரை விரிப்பின் உள்ளே புகுந்து, விரிப்பின் நுண் துளைகள் வழியே விழும் ஒளித்துளிகள் உள்ளிருண்மைக்குள் ஊசிகள் போடுவதை, பார்த்துக் கொண்டிருக்கும் சில இரவுகளில்.

யாருமே தேடி வந்திராத இந்த மர வீட்டிற்குத் தேவையற்ற சுமையான பொருத்தமில்லாத பெயர் கொண்ட வரவேற்பறையின் மையத்திற்கு மேலே, நான்கு மெழுகுவர்த்திகளை ஒரே சமயத்தில் தின்னும் அலங்கார விளக்கு ஒன்று தொங்கிக் கொண்டிருக்கின்றது. அதன் வயலெட் வர்ண கண்ணாடிக் குடுவைகளுள் மெழுகுகள் உருகிப் படிந்த புகை, உள்ளிருப்பை மறைக்கின்றது. இப்பூனை தன் மென்முடி படர்ந்த வாலைச் சுருட்டி, விளக்குகளைத் தாங்கும் உலோக உடலில் படுத்துக் கொள்ளும், சில தினங்களில்.

மெளனம் பூண்டுள்ள பியானோ, தன் மேலான வருடக்கணக்கான தூசுகளைப் பற்றிக் கவலைப்பட்டுக் கொண்டிராமால், தீண்டும் பூனையின் விரல்களுக்குத் தன் குரல்களில் பதிலளிக்க முயல்கையில், பூனை தன் வட்டமான சின்னஞ்சிறிய தலையில் ஓர் ஆச்சரியத் திடுக்கிடலைத் தெரிவித்து விட்டு, தன் ஆழ்ந்த மோன நிலைக்குத் திரும்பி விடுகின்றது.

வாசலில் இடப்பட்ட வரவேற்புக் காலடி, யாராலும் மிதிக்கப்படாமல் இருப்பதை பூனை காலப்போக்கில் கவனிப்பதை நிறுத்தி விட்டது. போரின் போது கொள்ளையிட்ட சருகுத்& துணிகளால் மறைக்கப்பட்ட அறைக் கதவுகளையும், கண்ணாடி ஜன்னல்களையும் பூனை நினைத்தும் பார்ப்பதில்லை.

தன் தனிமையின் அழுத்தத்தைச் செரித்துக் கொண்டு உயிர்த்திருந்த பூனைக்கு, சலிப்புத் தட்டி விட்ட வாழ்க்கையின் அப்புறம் என்ன இருக்கின்றது என்ற வினா எழுந்த பின்பு, அதனால் இந்த வீட்டிற்குள் இருக்க முடியவில்லை. ஜன்னலுக்கு அந்தப் பக்கம் பனி இறங்கியுள்ள வெளிக்குப் போக நினைத்துள்ளது.

அங்கே அதனைப் போன்ற பூனைகள் அடர்ந்திருப்பதாக ஓர் இரவில் கனவில் கண்டது. அப்பூனைகள் அதனைப் போன்று இல்லாமல், கருநீல நிறத்தில் மேலும் கீழுமாய், வந்தும் போயும், குதித்தும் அழுதும் அடர்ந்தும் அந்த வெளியில் இருப்பதாகக் கண்டது. அதன் கனவுக்காகக் காத்திருந்த அப்பூனைகள், கனவில் நுழைந்த இதை தத்தம் அத்தனைக் கண்களாலும் ஒரே பார்வையாய்ப் பார்த்தன. இதன் பார்வை சென்ற மொத்தப் பகுதியிலும் வால்களை மடித்துக் கொண்ட ஆயிரமாயிரம் லட்சோபலட்சம் கருநீலப் பூனைகள் மணி மணியாய்ச் சுடர்ந்த கண்களாலும் இதை உற்று நோக்கின. முன்னங்கால்களை நீட்டியவாறு அத்தனை பூனைகளும் இதை நோக்கி நடந்து வர, நெருங்கி வர, வர இப்பூனை விழித்துக் கொண்டு உறைந்து நின்று விட்டிருந்த மரக் கடிகாரத்தின் முட்களைப் பயத்துடன் பார்த்தது.

ஆனாலும் இன்று அந்த வெளியில் இறங்கிச் செல்லத் துணிந்தே விட்டது.

***

இருபதாம் நூற்றாண்டின் முற்பகுதியில் வாழ்ந்த ஜெர்மானிய கவிஞர் வில்லியம் என்பவருடைய கவிதைத் தொகுப்பிலிருந்து.

No comments: