சிறகுகளில் பூமுளைக்கும் சில தருணங்களை நீ அளிக்கிறாய்.
எதிர்வரும் ரயிலை முத்தமிடுவதன் முன்னம் உன் புன்னகையை எண்ணிக் கொள்கிறேன்.
வருடல் என வாரும் இளங்குளிரே! வெம்மை என்று கொந்தளித்துக் கிடக்கின்றது ஒருமனம்.
வெளியில் நிழல் தளும்பும் இரவில், வழியில் நில்லாது புரண்டு செல்வது எவ்விலையோ?
மண் நோக்கிய பார்வைகளில் மடித்துவைத்த சொற்களை எப்போது விழிமாற்றப் போகிறாய்?
சூழ்ந்திருப்பவற்றின் அலைகளுக்கு மேலே தனிமலரென மிதக்கிறேன். இரு விரல்களுக்கு இடையே என்னை ஏந்துவது என்று?
நீலாம்பல் நெடுமலரென சாய்ந்து நிற்கிறாய். இலை நுனிகளில் பனித்துளிகள் சொட்டுகின்றன.
வானோக்கி இறைஞ்சும் கணங்களில் இன்னும் மண்ணுடன் பிணைத்துக் கொண்டிருக்கின்றது ஒரு சுடர்முகம்.
மொட்டுகளைக் கதற விட்ட மெட்டுகளைத் தந்தவன் பெயர் ராஜா என்றால் நம்புதல் இயல்பே.
பெருமழைக்குப் பிறகு வரும் பின் சாரல் போல் கடந்தபின் திரும்பிப் பார்ப்பதில் துளி குளுமை.
சிறகுகள் முளைக்கும் பூனைகளை இருளில் காண்கையில், அள்ளி அணைத்து அன்பில் புதைத்து, வாசம் நுகர்கிறேன்.
நீராலானது என்னுலகு. உப்புநீரால்.
தருணமிது தவறிது.
சருகென சாலையோரம் சறுக்கிச் செல்கையில், இரவின் மழை என நீ நிலை செய்கிறாய்.
விண்ணிலிருந்து தவறி விழுந்த வெண்மலர், கண்ணிலிருந்து நழுவிச் சரிந்த அனல்துளி.
No comments:
Post a Comment