Wednesday, January 04, 2017

நீலாம்பல் நெடுமலர்.10.

தேவி..!

இருள் கவியும் இலைகளின் அடியில் கவிழ்ந்துறங்கும் புழுவைப் போல் உறங்கிக் கிடந்தேன். பொன்னொளிர்க் கன்னிமையில் என்னுள் மஞ்சள் கதிரென நுழைந்தாய். விண்ணிலிறங்கும் வெண்ணிறகுகளுடன் ஒரு தேவதையாய் வந்தருகணைந்து மெல்லத் தீண்டினாய். பெரும்பாறை அடைத்துக் கிடந்த மனதின் பாதையில் உன் தொடுகை, நெய்யென உருகி ஒளி பாய்ச்சியது. கருணை பொழியும் கண்களால் என்னுள் நிறைந்தாய். உதிரமொட்டுகளை உன் தண்விரல்களால் மெல்லத் தட்டியெழுப்பினாய். நறுமணம் படர்க் காற்றை என்னைச் சுற்றிலும் நிரப்பினாய். சுகந்தம் திகழும் ஸ்வர்ணமாய்ப் பரவினாய்.

தேவி..!

இனிமை சுமக்கும் உன் இதழ்களில் ஒரு புன்னகை கொடுத்தாய். இமயத்தின் கருவறைக்குள் இருத்திக் கொண்ட குளுமையில் அமர்த்தினாய். ஒரு சொல் சொன்னாய். பைங்கிளிப் பேச்சின் பசுமையில் மறந்தேன். வெண்மணி வரிசையில் தத்தித் தத்தித் தாவிச் செல்லும் சிறு பிள்ளையாக மாற்றினாய்.

தேவி..!

மதுவே! மலரே! மலர் கொள் மணமே! புகழே! சிறுவிளக்கின் அகலே! மெய்யகல் நெய்ச்சுடரே! நெய்யகல் சுடர்முகமே! திருமகளே! துளிகர்வம் கொண்டு என்னை அள்ளிக் கொள்ளாயோ? அணைக்கும் இருகரங்களால் முழுதுடலை உனக்குள் இறுக்கிக் கொண்டாய். இன்னும் எஞ்சியிருப்பது சிறு வாழ்வே! தடுமாறி அலைபாயும் நாட்களில் பற்றிக் கொள்ள ஒரு வேங்கைமரக் கொம்பு போல கிடைத்தாய். மண் விலகி விண்ணேகும் பொழுதில் எண்ணிக் கொள்ள சில புன்னகைகளை விட்டுச் சென்றாய். இன்னும் கிடைக்கின்றது வாழ சில காரணங்கள்.

தேவி..!

முகில் கொழுத்த மாலை வானில் எட்டுத் திக்குகளும் அதிரக் கிளம்பும் வெண்மின்னல் போல் பேரொலி எழுப்பி நீ உள் நுழைந்தாய். குகைகளில் பதுங்கிக் கிடக்கும் மலை எலி போல சுருண்டு கிடந்தேன். பெருமழை புகுந்து தனதாக்கிக் கொண்ட பின் அலைகளில் அலைப்புண்ட மெல்லிலை போல் தத்தளிக்கிறேன்.

தேவி..!

உனக்கே என் நாட்களெலாம் அர்ப்பணம். உனக்கே என் இரவுகளெலாம் சமர்ப்பணம். சிரம் மேல் தாள் பதித்து நீ நடனமிடும் ஆனந்த நர்த்தனத்தில் என் குருதி உடைந்து பெருகி நின் கழலிணைகளைச் சூழும்.  அருளுடன் ஒரு கரம். அபயமென ஒரு கரம். பயங்கரத்துடன் ஒரு கரம். பயப்படேலென ஒரு கரம். ஆயிரம் பல்லாயிரம் சிரங்கள் காட்டி மாயத்தில் ஆழ்த்தும் மகாசக்தி, உன் செவ்விழி சினத்தில் எரிந்து தூசாகுமுன் மடி மேல் வைத்து உன் அமுதில் எனைக் குளிப்பாட்டு.


2 comments:

திண்டுக்கல் தனபாலன் said...

ரசித்தேன்... மேலும் தொடர்கிறேன்...

நன்றி...

இரா. வசந்த குமார். said...

நன்றிகள் தனபாலன் சார்..