இவ்விரவில் சோகமயமான கவிதையை
நான் எழுத முடியும்.
எழுத, உதாரணமாக:
இரவு நட்சத்திரங்களால் நிறைந்துள்ளது.
மற்றும் நட்சத்திரங்கள் நீலமாய்த் தொலைவில் நடுங்குகின்றன.
இரவில் காற்று ஆகாயத்தில்
பாடிக்கொண்டே சுழல்கின்றது.
(இத்தகைய) இவ்விரவில் சோகமயமான கவிதையை
நான் எழுத முடியும்.
நான் அவளை விரும்பினேன்,
சிலசமயங்களில் அவளும் என்னை விரும்பினாள்.
இது போன்ற இரவுகளில்
நான் அவளை என் கைகளுக்குள் பொத்திக் கொண்டேன்.
முடிவேயில்லாத வானின் கீழே
நான் அவளைப் பலமுறை முத்தமிட்டுள்ளேன்.
அவள் என்னை விரும்பினாள்,
சிலசமயங்களில் நானும் அவளை விரும்பினேன்.
எப்படி அவளுடைய நீளமான நிலைத்த
விழிகளை
நான் விரும்பாமல் இருந்திருக்க முடியும்?
இவ்விரவில் சோகமயமான கவிதையை
நான் எழுத முடியும்.
நான் அவளை (என்னுடன்) வைத்துக் கொண்டிருக்காமல்
இருப்பதை நினைப்பதற்கு.
நான் அவளை இழந்து விட்டதை
உணர்வதற்கு.
மகத்தான இரவைக் கேட்பதற்கு, அவளில்லாமல்
மேலும் மகத்தானதாக ஆன இரவு.
மற்றும் கவிதை ஆத்மாவில் விழுகின்றது,
பனித்துளி புல் மேல் விழுவதைப் போல்.
அவளை என்னுடன் நிறுத்திக் கொள்ளாத என் காதலை
விட, வேறெது பொருட்படுத்தத் தக்கது?
இரவு நட்சத்திரங்களால் நிறைந்துள்ளது,
அவள் என்னுடன் இல்லை.
அவ்வளவு தான்.
தொலைவில் யாரோ பாடுகிறார்கள். வெகு தொலைவில்.
அவளில்லாமல் என் ஆத்மா தொலைந்து விட்டது.
அவளை என்னருகே கொண்டு வந்து விடுவதைப் போல,
என் கண்கள் அவளைத் தேடுகின்றன.
என் இதயம் அவளைத் தேடுகின்றது,
மற்றும்
அவள் என்னுடன் இல்லை.
அதே மரங்களை வெளிச்சப்படுத்துகின்ற
அதே இரவு.
நாங்கள்
யாராக இருந்தோமோ,
அவர்களாக இல்லாமல் போனோம்.
உண்மை,
நான் அவளை இப்போது விரும்பவில்லை தான்..
ஆனால், அவளை நான் எவ்வளவு விரும்பினேன்...!
என் குரல்
அவள் செவிகளைத் தொடுவதற்காகக்
காற்றைத் தேடியது.
வேறு ஒருவருடையவள்.
அவள் வேறு ஒருவருடையவள் ஆவாள்.
ஒருசமயம் என் முத்தங்களுக்கு
உடையவளாய் இருந்தவள் போல்.
அவள் குரல்,
அவள் மெல்லுடல்,
அவளுடைய கரைகாணவியலாக் கண்கள்.
உண்மை,
நான் அவளை இப்போது விரும்பவில்லை தான்..
ஒருவேளை நான் அவளை விரும்புகிறேன்.
காதல் கொண்டது குறைவு மற்றும்
மறதியோ வெகு காலம்.
ஏனென்றால்,
இது போன்ற இரவுகளில்
நான் அவளை என் கைகளில்
கொண்டிருந்தேன்..
அவளில்லாமல் என் ஆத்மா தொலைந்து விட்டது.
இருப்பினும்,
இதுவே அவள் எனக்குத் தரும்
இறுதி வலியாக இருக்கலாம்.
மேலும்,
இதுவே நான் அவளுக்காக எழுதும்
கடைசிக் கவிதையாக இருக்கலாம்.
- பாப்லோ நெருதா.
பாப்லோ நெருதாவின் The Saddest Poem கவிதையை மொழிபெயர்த்தது.
https://www.poemhunter.com/poem/the-saddest-poem/
Save to PDF
No comments:
Post a Comment