ஓங்கிப் பெருந்திசைகளை அளக்கும் விருட்சங்கள் நிறைந்த இப்பெருங்காட்டில், குகை முகடுகளில் தேன் நிறைந்து ஓயாமல் சொட்டிக் கொண்டிருக்கும் தேன் கூடுகள் அடர்ந்த இவ்விருள் பொழுதில், இடிகளும் மின்னல்களும் வான் நிறைக்கும் இப்பின் மாலை நேரத்தில், உன் காலடித்தடம் பதியும் எனச் சேற்றுக்குழைசல் கலங்கி வழியும் ஒற்றையடிப் பாதையைப் பார்த்துக் கொண்டிருக்கிறேன். மதியத்தில் துவங்கிய தூறல் பின் விரைவுற்று, பெருந்துளிகளாகி, சரங்களாகி, ஊற்றி இன்னும் நில்லாமல் பெய்து கொண்டிருக்கிறது. ஒரு சாக்கு மூட்டையைக் கவிழ்த்துக் கொண்டோ, இறுகப் பின்னிய கூடைக்குள் ஒளிந்து கொண்டோ நீ வருவாய் என, ஈரம் மறைக்கும் வெளியைக் காத்திருக்கிறேன்.
முல்லை மணம் மட்டுமே கிளர்ந்திருந்த ஒரு நாளில் நாம் இருவரும் உச்சிக்குச் செல்லலானோம். அப்பாதை, பசித்து வரையாட்டை விழுங்கிப் பின் களைத்துத் தளர்ந்து படுத்திருக்கும் ஒரு மலைப்பாம்பைப் போல் வளைந்து சுருண்டு சென்று கொண்டிருந்தது. விட்டு விட்டு தூறல்கள் விழுந்து கொண்டேயிருந்தன. ஓரங்களில் எல்லாம் துளிகள் சுமக்கின்ற பசும்புற்கள். விளிம்புகளில் புதர்களும், கொத்துகளுமாய் பச்சையின் பல ரகங்கள். பெயரறியாப் பறவைக் குரல்கள் கேட்டுக் கொண்டேயிருந்தன. பாதை சற்று வழுக்கலாக இருந்தது. விரல்கள் பின்னிக் கொண்டபடி நடந்தோம்.
விரைந்து செல்லும் மேகங்கள் முகட்டு நுனியைத் தொட்டுத் தொட்டுச் சென்றன. சட்டென ஒரு கொத்து மழையைச் சிந்தி விட்டு அகன்றன. அங்கும் சில சில் மரங்கள் முளைத்துக் காடாகியிருந்தன. அவற்றை நோக்கிச் செல்கையில், பாதையில் கொஞ்சம் குழைந்திருந்த சேறு வழுக்கிச் சரியப் பார்த்தாய். பின்னிய விரல்கள் இன்னும் இறுக்கமாகி, இடை வளைத்து நிறுத்தினேன். கொஞ்சம் மூச்சைச் சரி செய்து கொண்டு, நிதானித்து, விழ வாய்ப்பிருந்த அடிபாதாளத்தை ஒரு கணம் கண்ணுற்று, கண்களைப் பார்த்து மென் புன்னகை செய்தாய். தொடர்ந்தோம்.
கோடானு கோடி தவளைகள் ‘கொரக்..’, ‘கொரக்...’ என்று சொல்லிக் கொண்டிருப்பதை சற்று நேரம் கழித்தே கேட்டேன். எங்கோ பாறை ஒன்று முழுதருவி ஒன்றுக்குள் யுகயுகமாய் நனைந்து கொண்டிருந்தது; எனினும், முழுதும் கரைந்து விடவில்லை. தடாலென ஒரு பேரிடி. எங்கோ அருகில் மின்னல் இறங்கியிருக்க வேண்டும். வேகமாய் ஒரு மழை வந்து நம்மை முழுதணைத்து முழுதாய் நனைத்தது. தடவி விட்டுப் போகும் ஒற்றை மயில் தோகைப் பிசிறு போல் இம்மழை விலகவில்லை; மாறாக, கொத்துக் கொத்தாய்ச் சின்ன ஊசிகளால் தைத்து தைத்து எடுப்பது போல், கூர் நுனித் துளிகள் குத்திக் குத்திச் சென்றன.
நடுக்கம் மிகை கொள்ள, என்ன செய்தலென்று யோசித்தோம். மீண்டும் வழுக்கல் செறிந்த இறங்கு முகம் வழி சென்று, நாம் பத்திரமாய் அடைந்து கொள்ள அக்குடில் அறைக்குள் விட்டு வந்த கலைந்த படுக்கை போர்வைக்குள் புகுந்து கொள்ளலாம். அன்றேல், இன்னும் கொஞ்ச தூரமே என நெடுநேரம் போக்கு காட்டும் அம்முடியை அடைந்து, நம் பாதங்களுக்கு அடியில் விரியும் பசுங்கிராமங்களையும் விட்டு வந்த தொலை நகரத்தையும் ஒரு கடவுள் பார்வை பார்க்கலாம். இரண்டில் ஒன்று என்றேன்.
நீள் கரும் கூந்தல் திரித்திரிகளாய் நனைந்து ஒட்டி ஒட்டி சொட்டிக் கொண்டிருக்க, ஒரே ஒரு மச்சம் மட்டும் பதிந்த முகத்தில் மழை மச்சங்கள் சொட்டிக் கோடாகி விழுந்து கொண்டிருக்க, ஒற்றை மெல்லிய பொன் செயின், நிறைந்த இரு மார்புத் திரள்களுக்கிடையில் தத்தளித்துக் கொண்டிருக்க, உடலொட்டிய உடைகளோடு, உரசுகையில் சப்தித்து எச்சரிக்கும் வளையல்கள் வளைத்த அவ்விரு கைகளையும் முன் நீட்டி, ‘இனியும் நனையாதது எது?’ என்று கேட்டாய். நா நுனி வரை வந்த சொல்லைத் தவிர்த்து, ‘எதுவும் இல்லை’ என்றேன். ‘நீ நினைத்ததை அறிவேன்’ என்பது போல் ஒரு விஷமப் புன்னகை செய்து, முகட்டைச் சுட்டிக் காட்டினாய். மேல் நோக்கி நடந்தோம்.
மரங்களும் சிறு செடிகளும் ஒட்டுண்ணிகளாய்க் கொழுகொம்பை வளைத்து வளர்ந்திருந்த கொடிகளும் தரைப்புற்களும் அடர்பச்சை நிறக் காய்களுமாக, காடு தன் பசும் அரசுக்குள் பல்லாயிரம் பறவைகளும் பல்லாயிரம் விலங்குகளும் பலகோடி பூச்சிகளுக்குமாய் மழைப்பால் அருந்தியது. பின்மதியம் என்று ஒரு பேச்சுக்குச் சொல்லலாம் எனினும் கதிரின் ஒரு கரம் கூட உள் இல்லை. விரிந்த அகன்ற இலைகள் சுமந்த கொத்துப்புதர்கள் விளைந்த ஓரங்களில், மழைத்தண்ணீர் சிறு ஓடைகளாகிச் சலசலத்துச் சென்றது. அதன் தூய்மையும் செம்மண் நிறமும் வடிந்த குளுமைக்குள் கரைந்திருந்தன. பருத்த அடிமரங்களின் மேலே விரிந்த பேரிலைகள், சேகரித்த துளிகளை இன்னும் சேர்த்து ஊற்றிக் கொண்டிருந்தன.
ஒரு வளைவுக்குப் பின் வலப்பக்கம் திரும்பினோம். ஆம், உச்சியை அடைந்தோம். நிறைய கால் படாத புற்களும் கைபடாத பூக்களுமாக மழை வசந்தத்தின் கீழே நாமிருவர் தனித்துக் கிடந்தோம், ஒரு பெரு நாழிகை நேரம். குளிர் மேகங்கள் வந்து வந்து தீண்டிக் குளிரூட்டின. ஈரம் கசகசக்கும் ஆடைகள் சென்றடைந்தன ஓர் ஓரம். மீண்டும் பிள்ளைகள் போல் யாரும் காணவியலா அந்நெடுங்காட்டின் அந்த உயரமான முனையில், பசுந்தரை மண் சேறுகள் உடலொட்ட, மழைக் குளியலுக்கு உள்ளே மெல்ல கரைந்து கொண்டோம்.

No comments:
Post a Comment