Thursday, September 20, 2018

அகமெழு சந்தம்.தேவி,

சொற்சுழலில் மிதக்கும் ஒற்றை இலை, நீர் தாங்காது மிதக்கும் வெளி இது. மின்னல் ஒளியின் கணத்தில் ஓர் அறிதல், இம்முத்தம். பேரருவிக் கீழ் எப்போதும் ஒரு குளிர்ச்சி. பெருகும் ஆற்றங்கரையில் நகரும் நண்டின் கீறல் இவ்விரவு. போதும்...மோதும் என முட்டிக் கொள்ளும்  கொழுத்த முகில்களின் மின் அதிர்வு இக்கூடல்.

சிறு சிறகுகளால் உரசிக் கொள்ளும் சிட்டுக்குருவிகள் அலகு கோதும் அனல் இம்மாலை. தேடிச் சேர்த்த செல்வம் மேலேயே உறங்கும் கஞ்சன் கைநழுவ விடும் காசு இச்சொற்கள். வானவில் எழும்பும் எதிர்வானம் இவ்வூடல். முதல் குரலின் முதிர்மை இவ்விலகல். மழைக்காட்டின் மண் கவ்வும் அடிமர வேர் இத்தழுவல். கிளை வளர்ந்த மரம் மேல் படரும் கொடி இவ்விறுக்கம். கூழாங்கற்கள் பதிந்து கிடக்கும் பாதை இவ்விழி அழுத்தம்.

தேங்கிய வனத்தின் தேன் சுரங்கம் போன்றது இளமை முளைத்த முதல் சேர்த்த இவ்விருப்பம். மலை மூதூரும் மின்மினி கண்ட அளவில் இம்மேனி அறிதல். அடியாழப் பாறை மிதக்கும் சூடான மலைக்குழம்பின் அடர்த்தி இப்பார்வை. நீர் சுமக்கும் கலயம் போல் ஒரு தளும்பல். பின்னிரவுக் குளுமை போல் ஒரு தீண்டல். முன்மாலை மல்லிப் பாத்தியில் நடத்தல் போல் ஒரு தூண்டல். நீள் நகங்கள் எழுதும் முடியாக் காவியமொன்றின் அறியா அசைவுகள், குன்றா இவ்விசைவு.

திரும்பல் இல்லாக் காலநதி சுழித்துப் பெருகியோடும் இவ்வெளியில் ஒரு படகென உனை நினைத்து தினம் எழும் அடங்கும் இம்மனம் நிறைய, குழலென குழலிசையென நீள்சுருள் குழல் வந்துத் தீண்டித் தீண்டி மணங்காட்டும் ஒரு கனவுக்குள் விழிக்கிறேன்.

திசைகள் எல்லாம் மலர்களென மலர்ந்திட, வானும் நிலமும் வசந்தங்களால் நிறைந்திருக்க, உன்னிரு பாதத்தூளிகளைக் கண்டு சிரம் கொண்டு அதில் முட்டி, செங்குருதியால் நகங்களைக் கழுவ சித்தம் கொண்டு தேடியலைகிறேன்.

சிலையென நின் தேகம் செதுக்கிச் செதுக்கி பாறையிலிருந்து எடுத்த வெண்ணைக்குழைவென நிற்கும் வளைவெழிலில், தேவி, என் மனக்கன்று சுற்றிச் சுற்றி வருகிறது. பாதமுதல் சிரம்வரை ஒவ்வொரு கணுவிலும் அழகு பூத்த பசும்பொழில் அரசி நீ.

பாதமென எழுந்த இரு பூங்கொத்துக்கள் இம்மண்ணில் வைக்கின்ற நொடிகளில், என் மனதில் எழும் முதற்சொற்களால் அவற்றை அர்ச்சித்து நிரப்புகிறேன். பத்து மொட்டுகள். பத்து மகுடங்கள். ஐந்தைந்தாய்க் குழு அமைத்த புறாக்குஞ்சுகள். வைக்கின்ற ஓவ்வோர் அடியிலும் அலைகளை அமைதிப்படுத்தி, அருள்கின்ற அமுதக்கட்டிகள். கனிந்த கரைந்த செழுந்தொடைகள். தேவி, நீ பிறப்பிக்கும் இப்பிரபஞ்சத்தின் மூலம் உனதேயல்லவா. நீள்சுடர். அணைப்பின் வெம்மையின் ஊற்று. தீரா சுழல். கனிந்துருகும் கனல். அள்ளி எரிக்கும் அனல். முத்தியெடுக்க ஈரம் பதிகின்ற முத்துத்துளி. திகட்டா மணம். 

1 comment:

வலைப்பூக்கள் **** said...

உங்கள் பதிவுகளை http://valaippookkal.com தமிழ் திரட்டியில் இணைத்து உங்கள் எண்ணங்களையும், கருத்துகளையும் உலகமெங்கும் வாழும் தமிழர்களுடன் பகிர்ந்துகொள்ள வேண்டுகிறோம்