Saturday, April 21, 2018

நீலாம்பல் நெடுமலர்.35.

தீராப்பிறை.

சிறு இதழ் பிரித்து உள்நுழையும் பொன்வண்டு தேமதுரத்துளிகளை அள்ளித் திளைத்துக் கொண்டிருக்கையில் மலரின் இதழ்கள் மெல்ல சுருண்டு அதை உள்ளே சிறைபிடித்துக் கொள்ளும். இனித்து இனித்து மரணிக்கின்ற வண்டு, மலர் காய்த்துக் கனியாகி முழுக்கச் சுவையாகுகையில் மிதக்கின்ற மணமாகவும் வழிகின்றாக செழுஞ்சாறாகவும் திகட்டுவது உள் அமிழ்ந்து கரைந்த வண்டின் அமுதமே அல்லவா?

தேவி, நீங்கா இரு கழல்களாகவும் தூங்கா இரு விழிகளாகவும் தீரா இரு கலங்களாகவும் குன்றா அருள் கரங்களாகவும் நீ நின்றிருக்க, என் உளமின்றி வேறிடம் இருக்கின்றதா உனக்கு? செருக்கடித்து ஆணவ மலம் நிரம்பி துயர்க் குளமாய்த் தேங்கி நின்று புழுத்து சீழ்ப்புண்ணென நாறும் என் மனதில் நீ கால் பதிக்கவும் ஒரு செந்தாமரை அங்கே உதிக்காமலா போய் விடும்? மண் தொடாத சிவந்த உள்ளங்கால்கள் முத்துக்கள் கோர்த்த மணிச்சரங்கள் சப்திக்க இரு பாதங்களை எடுத்து வைத்து நீ அகம் புகும் அக்கணத்தில், அம்மலர் விரிந்து ஆயிரம் தசகோடி இதழ்களால் பூத்து குவிந்து, நிறைந்த அழுக்குகளை அள்ளி அகற்றித் தள்ளி விடாதா?

ஆடல் சலங்கைப் பரல்கள் தெறிக்கத் தெறிக்க விரல் மகுடமென விளைந்த கூர் நகங்கள் குத்திக் கிழித்து குருதி பொங்கிக் கொப்பளித்து உன் பாதங்களைச் செம்மை நிறம் பூசிக் கொள்ளச் செய்யும் ஆடற்களமென அமைய என் அகங்காரமின்றி வேறிடம் உனக்கேது? ஒன்றில் வாளும் ஒன்றில் சூலமும் ஒன்றில் முள் சாட்டையும் ஒன்றில் வேலுமாக நாற்கரங்களில் கொல்லாயுதங்கள் ஏந்தி, கீறி வெட்டிக் குத்திக் குதறிக் கிளறித் தாண்டவமாட, பராசக்தி உனக்கு, இறுகிக் கெட்டித்தட்டிப் போய் பாறையென ஆகி உலர்ந்து வறண்டு கிடக்கும் கடுவீச்செழும் இருண்ட என் ஆழ்மனம் போதாதா?

செந்நெருப்புச் சுடர் எண் திசைகளிலும் காய்ச்சும் உன் விழித்தீ சுட்டுப் பொசுக்க, செவ்வுழவு செய்து புரட்டிப் போட்டு ருத்ரவிழிப்பு கொள்ள ஆழ்ந்துறங்கிக் கனவுகளிலும் சோம்பல் களிப்பிலும் சுருண்டு செயலின்மையின் செம்மதுவில் ஊறிக் குருதியெங்கும் போதையும் நரம்புகளெங்கும் அலட்சியமும் ஊற்றுப் பெருக்கி ஓடும் இத்தேகம் போல் உகந்த நிலம் எங்கு கிடைக்கும் உனக்கு?

வந்து நில்; வந்து அமர்; வந்து எரி; வந்து அணை; வா.

தேவி, வீணை கொண்டு வருக. நாதம் எழுப்பி எரிந்து கரியும் உள்ளைக் குளுமை செய்க. வெண் மலர் ஏந்தி வருக. சுகந்தம் கரையும் காற்றாய் சுவாசத்தை நிரப்புக. சிம்மம் ஏறி வருக. பிடரி பறக்கும் திசைகள் அதிரும் அதன் பெரும் பிளிறலால் யுக யுக உறக்கம் கலைந்து, கூர் அகிர்களால் பேரறை வாங்கி இப்பேதைமை கலைந்து அழிக்க. குழலேந்தி வருக. மூங்கில் கம்பாய் இவ்வீண் உடலை ஆக்குக.

அரம்பையராய் வருக. அழகியராய் வருக. அன்னையராய் வருக. குழவிகளாய் வருக. ஆனந்தப்பேரொலி எழுப்பும் பெருஞ்சங்கம் ஊதி நடமிடும் பெரு மண்டபமாய் இப்பிறவியை நிரப்புக.

No comments: