Thursday, May 17, 2007

இரு நுனி எரி மெழுகு.ழை சடசடவென அடித்துக் கொண்டிருக்கின்றது. கரு மேகங்கள் விரைந்து வந்து கொண்டிருக்கின்றன. படபடவென முற்றத்தில் விழுந்த பெருந்துளிகள், மாளிகையெங்கும் அதிரச் செய்கின்றன. வெயில் தாழ்ந்து, மெல்ல மறைந்து கொண்டிருக்கின்ற இந்நேரத்தில், இருள் போல், கருக்கல் சூழ்கின்றது.

ஒவ்வொரு தூணிலும் ஏற்றப்பட்டிருந்த மணி விளக்குகள், ஒளியைச் சிந்தத் தொடங்கின.நெல் குவித்திருக்கும் குவலயறை, குதிரைகள் கட்டியிருக்கும் கொட்டகை, பசுமாடுகள் பாதுகாக்கப்படும் தொழுவம், பின்வாசல் அருகில் இருக்கும் கண்ணன் கோயில், தோட்டத்தின் துளசி மாடம்.... எங்கும் நனைகின்ற மதியப் பொழுதின் மழையில், ஜன்னலைத் திறந்து பார்க்கின்றேன்.

இது போன்ற மழையின் இரவில் நனைந்த என் மனதின் கதை சொல்லவா..?

ருளும் பனியும் பெய்து கொண்டிருந்த ஒரு மார்கழி நன்னாள். எங்கோ பெய்கின்ற பெருமழையின் சாரல் தூவிக் கொண்டு தென்றல் வீசிக் கொண்டிருந்தது. நிலவின் ஒளியோடு களித்துக் கொண்டிருந்தன தென்னங் கீற்றுகள். பனித்துளிகள் பூத்த ஈரப் புல்வெளியின் ஊடாக நடந்து செல்கிறேன்.

நிலவின் பிம்பத்தைத் தலையணையாக்கி, பிரபஞ்சத்தின் மீன்கள் பதித்த கரும்போர்வையை போர்த்திக் கொண்டு, செந்தாமரையும், வெண் தாமரையும் துயின்று கொண்டிருந்த குளிர்க் குளத்தின் படிக்கட்டுகளில் சென்று அமர்ந்தேன்.

சிறுசிறு கிண்கிணி மணிகள் பதித்த தூண்கள், வீசுகின்ற மென் காற்றிற்கு ஒலியெழுப்பிக் கொண்டிருந்தன. கரையெங்கும் வைத்திருந்த விளக்குகளின் தீபங்கள் சிமிட்டிக் கொண்டிருந்தன. பின்மாலையில் பெய்திருந்த சிறுமழையின் ஈரம் இலைகளில் இருந்து தெறித்துக் கொண்டிருந்தது. சிறுசிறு கூழாங்கற்களை எடுத்து, குளத்தில் போட்டுக் கொண்டிருந்தேன். என் மனதைப் போல, அலைவுற்றுக் கொண்டிருந்தது, குளம்.

எங்கிருந்தோ மென் குழலோசை என் செவிகளில் நுழைந்து, இதயத்தில் இறங்கியது. ஆஹா..! என் மாயக் கண்ணனின் மதுரகீதத்தில், நிறைகின்ற இம் மனம், வேறு எதனிடம் மயங்கும்? கண்ணன் அருகில் வந்து அமர்கின்றான்.

"ப்ரிய ராதே..! இந்த இரவில் குளக்கரையில் தனிமையில் ஏன் அமர்ந்திருக்கின்றாய்..?"

" என்னைப் போல், தனிமையில் வாடுகின்ற அந்த வெண்ணிலவைக் கண்டு ஆறுதலும், தேறுதலும் கூறிட வந்தேன் ப்ரபோ..!"

"நீ எனடி இனித் தனிமையில் இருக்க வேண்டும்? நான் வந்து விட்டேன் அல்லவா..?"

"கண்ணா! நீ இன்று இருக்கிறாய். நாளை கிள்ம்பி விடுவாய். துவாரகை உன்னை அழைக்கின்றது!"

"ராதே!.."

"முன்பொரு காலம், நாம் குழந்தைகளாய் இருந்தோம். மரங்களின் இடையிலே புகுந்து வருகின்ற காற்றைப் போல் இந்த வனமெங்கும் நாம் சுற்றித் திரிந்தோம். பாயும் நதியலைகள், கோகுலத்தின் வெயில் தீண்டும் தெருக்கள், ஒவ்வொரு இல்லத்தின் உறியடிப் பானைகளின் வெண்ணெய்ப் பாத்திரங்கள், ஆடு, மாடு மேய்க்கும் இடையர்களின் தொழுவங்கள், அடர்ந்த புழுதி பூண்ட நிலமெங்கும் நம் காலடித் தடங்கள் பதித்திருந்தோம். வெட்கமும், பயமும் அறியாத அந்த இளம் பருவத்தில் என் மனமெங்கும் நிறைந்த அன்பில் உன்னைக் குளிப்பட்டினேன், என் மனமோகனா!

பின்பு, சிறுவர்களானோம். வெண் கதிரின் ஒளியில் ஈர்க்கப்பட்டு, காணாமல் போய் விடுகின்ற ஈரப் பனித்துளி போல், நம் அறியாமைகள் வயதின் கரங்களால் உறிஞ்சப்பட்டு, நம்மைப் பிரித்து விட்டன. இதோ, இந்த குளக்கரையில், நாம் பேசாத கதைகளில்லை. பின் உன்னைக் காணும் போதெல்லாம், என் கண்களில் திரையிட்ட கண்ணீரில் நீ எப்போதும் நனைகிறாய். உன் பால்பொழியும் முகம் காண்கையில், என் மனமெங்கும் ஏதோ ஒரு வேதனை கவ்வியது. எப்போதும் உன்னைச் சேர்ந்து இருப்பது, நினைவில் மட்டுமே, நிஜத்தில் அல்ல என்பதை நினைக்கையில், என் உயிரின் துளிகள் எல்லாம் கண்கள் வழி கசிந்தோடின.

நீ ராதே என்று மதுரமாய் அழைக்கும் போதெல்லாம், மலரைச் சூழ்ந்த தேனியின் ரீங்காரம் போல் என் செவிகளில் எல்லாம் உன் குரலே நிரம்பியது. ஆதுரமாய் நீ என் கைவிரலகளைப் பற்றுகையில், கொதிநீரில் இட்ட மஞ்சள் தூளாய்ப் பரவுகின்றது உன் காதல்.

சென்றதொரு பிறவியில் ஈரேழு ஆண்டுகள் என்னைப் பிரிந்து வந்தாய். பின் கானகம் செல்லத் துடித்தேன். இப் பிறவியில் ஆதி முதல் அந்தம் வரை இணைந்தே வாழ்வோம் என்றனையே? இனி எப்போது உனைக் காணப் போகிறேன்...?"

"கலங்காதே ராதே! உனைப் பிரிகிறேன் என்று யார் சொன்னது? கதிர் வானை விட்டுப் பிரிந்தாலும், நிலவாய் மீண்டும் இரவில் ஒன்று சேர்வதில்லையா? மரத்தில் இருந்து பழம் கீழே விழுந்தாலும், வேரோடு, கலப்பதில்லையா..? அலை கடலை விட்டுப் பிரிவது போல் தான் வேகமாய்ச் செல்கிறது. ஆனால் பிரிகின்றதா? இல்லையே. கடலின் பேரன்பிற்கு உட்பட்டு மீண்டும் கடலோடு ஒன்றுவதில்லையா? மலையை விட்டு நீங்குவதாக அருவி சென்றாலும், மீண்டும் மழையாய்ப் பொழிந்து மலையோடு நனைவதில்லையா..? ராதா..! நான் எங்கு சென்றாலும், என் மனமெங்கும் நீயே நிறைந்திருப்பாய்..! இந்த இரவு வீணே கழிய வேண்டுமா? உன் தேன் குரலில் ஒரு கீதம் பட மாட்டாயா?"

"கண்ணா! நான் பாடுகிறேன். நீ உன் பூங்குழலின் நாதத்தில் துவக்கு..!"

ஒரு மதுர ஆலாபனை ஆரம்பமானது, மழைத் தூறலுடன்.

ன்றோடு எனைப் பிரிந்த கண்ணன், என்னைக் காண வருவான் என்று தினம் மாளிகையின் வாசலிலும் வந்து காத்து நிற்கின்றேன்.

2 comments:

malligai said...

wow..indha padamum unga karpanaiyum arumai..

///அலை கடலை விட்டுப் பிரிவது போல் தான் வேகமாய்ச் செல்கிறது. ஆனால் பிரிகின்றதா? இல்லையே. கடலின் பேரன்பிற்கு உட்பட்டு மீண்டும் கடலோடு ஒன்றுவதில்லையா? ///

indha maadhiri pirivuku vilakam solli irupadhu kalakal...vaalthukal!

வசந்த் said...

அன்பு மல்லிகை... நன்றிகள்... படம் இராஜா இரவிவர்மா அவர்களின் படம். அவரது படங்களுக்கு தொடர்பாக எனக்குத் தோன்றும் கதைகளை எழுதலாம் என்று ஆரம்பித்துள்ளேன். இது இரணடாம் படைப்பு. Please refer category at left side of the Blog...;-)