ஹைதராபாத்துக்கு வந்து இன்றோடு ஒன்பது மாதங்கள் நிறைகின்றன. தங்கியிருக்கும் ‘மாதாப்பூர்’ என்ற ப்ரதேசத்தைப் பற்றிக் கொஞ்சம்.
சோம்பி வழிந்து கொண்டிருக்கும் முகப்பை விக்ரம் ஹாஸ்பிடல்காரர்கள் மாற்றி அமைத்துள்ளார்கள். ரிசப்ஷனை உள்ளே தள்ளி வைத்து குளு குளு பண்ணி, அட்டோமேடிக் கண்ணாடி கதவு வைத்து, எதிர்ப்புறம் காலி மனையை பார்க்கிங் ஆக்கியுள்ளனர். பாலீஷ் அடித்து சுவர்களைப் பளிங்காக்கிப் புது டிசைனில் போர்ட் வைத்து விட்டார்கள். மென்மையாக விளக்கு ஒளீர்கிறது. நீலச் சீருடை செக்யூரிட்டி சுவரோரமாக அமர்ந்து டிபன் பாக்ஸை உண்கிறார். பக்கத்தில் மனைவி.
சாலை மீடியனில் கோலங்கள் தீட்டிய மட்பாண்டங்களில் சின்னச் சின்ன செடிகளும், செயற்கை புல் விரிப்புகளூம் இருந்தன; காலை ஆறு மணிக்கு லாரி வாலில் நீர்ச் சிதறல்கள் அவற்றைக் குளிப்பாட்டும். இப்போது மெட்ரோ வருவதாக, குழி தோண்டிக் கொண்டே இருக்கிறார்கள். வளைவில் ஒரே ஒரு கேரளா ஹோட்டல் இருந்தது. கட்டுப்படியாகவில்லையோ என்னவோ அது காலி செய்யப்பட்டு ஒரு பஞ்சாபி தாபா வந்திருக்கின்றது. HITECH ஒயின்ஸில் கூட்டம் அம்முகின்றது. பின்புறச் சந்துக்குள் போனால் சிகப்பாய் ஒரு சின்ன அம்மன் கோயில்.
கீழ்த்தளத்தில் உடுப்பி உணவகத்தில் சிங்கிள் தோஸா 25ரூபாய். மேலே அகர்வால் ஸ்வீட்ஸ். அங்கே எலெக்ட்ரிக் ஈக்கொல்லியின் ’ச்சிர்க்...ச்சிர்க்...’ ஒலிகளுக்கு இடையே வறு முந்திரி கிலோ 360ரூக்கு விற்கிறார்கள். வாசலிலே பானி பூரி வகையறாக்கள். சாலையை ஒட்டிச் சின்னக் கூடாரத்திற்குள் ஃபலூடா 40ரூ. எதிரே bawarchi. நிஜமான ஹைதராபாத் பிரியாணி நாங்கள் தருகிறோம் என்று சத்தியம் செய்கிறார்கள்.
ஸேவிங்ஸ் அக்கவுண்ட் ஆசாமிகளுக்கு ஆண்டுக்கு 100 ரூபாய் ப்ரீமியத்தில் விபத்து பாலிசி 4 லட்சம் வரைக்கும் என்று அறிவிக்கும் எஸ்.பி.ஐ.யின் நீல போர்டுக்குக் கீழே படர்ந்த படிக்கட்டுகளில் ஆறு மணிக்கு மேல் பையன்களும் பிள்ளைகளும் அமர்ந்து பேசிக் கொண்டு இருக்கிறார்கள்..... ஜிம் ஒன்று மூடிய திரைகளுக்குள் வேர்வையர்கள் ஏ.ஸி. குளிரில் நடக்கிறார்கள். வெளியே மைசூர் போண்டாவும், மசாலா தோசையும் ஆவி கிளம்ப ருசிக்கிறார்கள். கிராமத்தார் போல தோன்றிய ஆள் வாசமான வேர்க்கடலை 100 கிராம் 10ரூக்குத் தருகிறார்.
ஒரு தரைக்கீழ்த் தளத்தில் CHINA BAZAAR. கல்லாவில் ஒரு முஸ்லீம் தாத்தா. 10, dalhousie என்ற வங்காள ஹோட்டல் தொடரின் ஒரு கிளை முதல் தளத்தில் இருக்கின்றது. ராத்திரியிலும் சூடான வெள்ளை அரிசி மேல் மிகச் சூடான மீன் குழம்பு ஊற்றுகிறார்கள்.
ஏ.டி.எம்.கள் எந்நேரமும் ஒளிர்கின்றன. ஷேர் ஆட்டோக்கள் முடிந்த வரை அமர முடிந்தவரையெல்லாம் ஏற்றிக் கொண்டு பறக்கின்றன. அந்த செருப்பு தைப்பவரின் சாக்கு மூலையில் ட்ராஃபிக் காவலரைக் கண்டால் மட்டும் முன் வரிசையில் அமர்ந்திருப்பவரை இறக்கி விட்டு, தாண்டியவுடன் ஏற்றிக் கொள்கிறார்கள். சர்வீஸ் ரோடு இல்லாத குறையை வலது புறமாகவே ஓட்டித் தீர்க்கிறார்கள். சில சமயம் திக்கென்கிறது. weigh bridge-ல் லாரிகள் அர்த்த ஜாமத்தில் வந்து எடை பார்த்துச் செல்கின்றன.
மே இறுதி வரை வெளுத்துக் கொளுத்திக் கொண்டிருந்த வெயில் ஜூன் பிறந்ததும் காணாமல் போய், தாமரை மொட்டுக்கள் போன்ற முகில்கள் தலைக்கு மேலே தவழ்கின்றன. மைண்ட்ஸ்பேசின் பின் கதவைத் திறந்து விட்டதில், இரண்டு பெட்டிக் கடைகள் உடனே முளைத்து சிகரெட் மற்றும் ஃப்ளாஸ்க்கில் டீ கொடுக்கிறார்கள். எல்லை தெரியாத பின்புறம் சாணி ஒட்டிய இரண்டு எருமைகள் செயற்கைப் புல்வெளிகளை சுவைத்து மகிழ்வதற்குள் எஃப்.எம்.களில் ஹிந்தியும் தெலுங்கும் பாடல்களும் பேச்சுகளும் கேட்டுக் கொண்டிருக்கும் தொப்பை செக்யூரிட்டிகளால் விரட்டப்பட்டன.
கிட்டத்தட்ட 1000 கிமீ தள்ளி இருந்தாலும் ‘இதுவும் நம் ஊர் தான்’ என்று ஆசுவாசப்படுத்துபவை இரண்டு. சைபர் டவர்ஸ் அருகில் இருக்கும் பெருமாள் கோயில் மற்றும் தெருவெல்லாம் திரியும் நாய்கள். இரவு பதினோரு மணிக்கு மேல் அவற்றின் ராஜாங்கத்தில் கால் வரை முகர்ந்து பார்ப்பதன் நோக்கத்தைச் சந்தேகிக்காமல் நடந்து கொண்டே இருக்க வேண்டும்.
தூக்கம் வராத நேரத்தில் ரிமோட்டை மாற்றுகையில் வர்ணக் கோலாகலமான Colors, Life Ok போன்ற சானல்களைப் பார்த்திருக்கிறீர்களா..? அவற்றில் வருகின்ற ராமாயணத்தில் ஏன் ராமன் அவ்வளவு இறுக்கமாக இருக்கிறார்? சிக்ஸ் பேக் சிவன்..? அதீத அலங்கார சீதா..?
All her life, Mrs Foster had had an almost pathological fear of missing a train, a plane, a boat, or even a theatre curtain. In other respects, she was not a particularly nervous woman, but the mere thought of being late on occasions like these would throw her into such a state of nerves that she would begin to twitch.
சமீபத்தில் நூலகத்திலிருந்து எடுத்து வந்த ‘the completed short stories collection of roald dahl' என்ற நூலிலிருந்த ஒரு சிறுகதையின் துவக்கம் இது.
நம் காதுகள் கேட்கும் ஒலியின் அதிர்வெண் அகலம் என்பது 20 ஹெர்ட்ஸிலிருந்து 20கிஹெர்ட்ஸ் வரை என்பதை எட்டாம் வகுப்பில் ஒரு மதிப்பெண் விடையாகப் படித்திருப்போம். நைகிஸ்ட் என்பவர் ஆராய்ந்து சொன்னது ஓர் ஒலி அலையை டிஜிட்டலாக மாற்றி மீண்டும் அதை (கிட்டத்தட்ட!) அதே ஒலியாகக் கேட்க வேண்டுமெனில், அந்த ஒலி அலையின் அதிகபட்சமான அதிர்வெண்ணுக்கு இரண்டு மடங்கான அளவில் ஒலி மாதிரிகள் எடுக்க வேண்டும் என்றார். அதாவது நம் பேச்சில் இருக்கும் அலைகளில் அதிகபட்ச அதிர்வெண் 4கிஹெர்ட்ஸ். எனவே அதை டிஜிட்டலாக மாற்ற வேண்டுமெனில் குறைந்தபட்சம் 8கிஹெர்ட்ஸ் (ஒரு நொடிக்கு 8000 மாதிரிகள்) அளவில் ஒலி மாதிரிகள் எடுக்க வேண்டும்.
இப்போது ஒரு கேள்வி.
நம்மால் கேட்க முடிவதே அதிகபட்சம் 20கிஹெர்ட்ஸ் தான் என்னும் போது, அதிக பட்சமாக 40கிஹெர்ட்ஸ் (ஒரு நொடிக்கு 40000 ஒலி மாதிரிகள்) எடுத்தாலே போதும் எனும் போது, ஏன் DTS போன்ற அல்காரிதம்களில் 192கிஹெர்ட்ஸ் வரைக்கும் செல்கிறார்கள்?
ஏனெனில் அதிகமாக மாதிரிகள் எடுக்க எடுக்க ஒலித் துல்லியம் அதிகரிக்கின்றது. ஆனால் அதிகமாக எடுத்தால் அதைச் சேமிக்க நினைவக அளவு அதிகம் தேவைப்படும். குறைவாக எடுத்தால் ஒலியின் துல்லியம் பாதிக்கப்படும். என்ன செய்வது? Trade Off. நினைவக அளவும் அதிகம் தேவைப்படாமல், கேட்கும் ஒலியின் துல்லியமும் ரொம்பவும் அடிபடாமல் ஒரு சமநிலையில் தான் வேலை செய்யப்படுகின்றது.
’சமரசம் உலாவும் இடம்’ என்பது சயின்ஸிலும் கூடத் தான்!
Wednesday, July 10, 2013
Monday, July 01, 2013
ஏக்கர் நிலம் வேண்டும்.
ஏக்கர் நிலம் வேண்டும் - சக்தி
ஏக்கர் நிலம் வேண்டும் - அங்கு
பாக்குத் தோட்டமும் கயல்
பாயும் குளிர்ச் சுனையும்
தேக்குத் தூண்களில் மாளிகை
தெள்ளிய நீர்க் கேணியும்
பூக்கும் ஆயிரம் பூக்களும்
பூமி மேலெலாம் பச்சையும்
ஆற்றங் கரையிலே வாயிலும்
ஆடிக் களித்திட ஓடமும்
போற்றி வாழ்த்திடப் பெண்டிரும்
போரை வென்றிட நண்பரும் - பூச்
சாற்றிக் கும்பிட சாமியும் - பால்
சாறு தந்திட ஆக்களும் - கொடும்
கூற்றம் வாரா வேலியும் - நல்
கூறல் கேட்கும் மக்களும்
மாடி மேலெழு சந்திரிகை
மாதம் முழுவதும் பறவைகள்
கூடி வாழ்ந்திடக் கூரையில்
கூவி அமைத்த அறைகளும்
ஓடி ஆடிட ஆற்றலும்
ஓய்வில் அருந்திட தென்னையும்
ஏடி உன்னைக் கேட்கிறேன்
எனக்குத் தருவ தெப்போது?
#பாரதியாருக்கு நன்றியுடன்.
(Pic Courtesy : flickr.com )
Wednesday, June 05, 2013
விளிம்பெல்லாம் வளையல்கள்.
சனிக்கிழமை மதியம் மெஸ்ஸில் உண்டு கொண்டிருந்த போது சட்டென “நாளைக்கு எங்காவது வெளியே போகலாமா?” என்று அறை நண்பனைக் கேட்டேன். பருப்பில் இருந்து தலை நீட்டியவன் “நாளைக்கென்ன நாளை, இன்னிக்கே போலாமே?” என்றான். தீர்ந்தது. ஹைதைக்கு வந்து இன்னும் சார்மினார் பார்க்கவில்லை. வாழ்நாளில் ஒருதரம் கூட இங்கே வராதவர்கள் எல்லாம் சார்மினாரை பாக்கெட் பாக்கெட்டாகக் கொளுத்தும் போது அவ்வப்போதைய வெடிகுண்டு மிரட்டல்களுக்கு இடையே ஐநூறு ஆண்டுகளுக்கு மேல் தப்பிப் பிழைத்துக் கொண்டிருக்கும் ஒரிஜினல் சார்மினாரைப் பார்க்காதது நரகத்தில் நா வறளும் சோகத்தைக் கொடுத்தது. உடனே கை கழுவி விட்டு எழுந்தோட....முடியாமல் இரண்டு விஷயங்கள் தடுத்தன. அ. உணவு. ஆ. கிரிக்கெட்.
சாம்பியன்ஸ் ட்ராபியின் முதல் சூடுபடுத்திக் கொள்ளும் போட்டி இந்தியா மற்றும் இலங்கை அணிகளுக்கு இடையே அன்று மதியம். சஞ்சய் ‘வானம் வெளுப்பாக இருக்கிறது; நேற்று மழை வந்தது; இன்று வெயில். sunny climate..' என்றெல்லாம் மைக்கை நனைத்துக் கொண்டிருந்தார். டாம் மூடி தன் பலமான ஆகிருதியுடன் காமிரா முன் வந்து மற்றுமொரு பலமான ஆகிருதியில் சிரித்தார். மைதானத்தில் பச்சை. வரிசைகளில் ரிலாக்ஸான வெள்ளையர்கள். மூவர்ணக் கொடியை முண்டாசாக்கி நம்மாட்கள் சிலரும் கையசைத்தனர். சிங்வாலாக்கள். டாஸ் வென்ற தோனி பவுலிங் என்றார், மெனக்கெட்டுப் போட்டுக் கொண்டு வந்த கோட்டைக் கழற்றி அம்பயரிடம் கொடுத்து விட்டு இர்பான் முதல் ஓவரைத் துவக்கினார். அண்டை நாட்டவர்களைத் தொலை தூரத் தேசத்தில் அம்போவென்று விட்டு விட்டுத் தொலைக்காட்சியை அணைத்தேன்.
மூன்றரை மணிக்கு மாதாப்பூர் பெட்ரோல் பங்க் பேருந்து நிறுத்தத்தில் நின்றோம். வழக்கமாக மே விடை பெற்றுப் போகும் போது அடம் பிடிக்கும் குழந்தையைத் தாய் போல் வெயிலையும் தரதரவென இழுத்துச் சென்று விடும். இங்கு இன்னும் சரிவரப் போகவில்லை. வெயில் காயவில்லை ஆனாலும் ஓயவில்லை, இங்கிருந்து சார்மினாருக்கு நேர்ப் பேருந்துகள் இல்லை. இருக்கும் மாற்று வழிகளில் இலகுவான வழி செகந்திராபாத் சென்று அங்கு பஸ் மாறுவது. மூர் விதிப்படி கோட்டிக்குச் செல்லும் பேருந்துகளே (127K) வந்தன. கால் மணி நேரக் காத்திருத்தலுக்குப் பின் ’இன்னும் மூன்று பஸ்கள் பார்ப்பது; செக்.குக்கு வராவிட்டால் இங்கிலாந்துக்குப் போய் விட வேண்டியது தான்’ என்று முடிவு செய்ய, மூன்றாவது பேருந்து 10H.
ஒரு நாள் பயணச் சீட்டு எடுத்துக் கொண்டேன். 60ரூ. ஸெகந்திராபாத் இங்கிருந்து ஒன்றேகால் முதல் ஒன்றரை மணி நேர தூரத்தில் உள்ளது. பெத்தம்மா கோயில், பஞ்சாரா ஹில்ஸ் செக் போஸ்ட், அமீர்பேட் வந்தது. அமீர்பேட்டை என்பது இன்று முழுக்க முழுக்க கணிணித் தொழில்நுட்ப கோர்ஸ்களுக்கான கற்பித்தல் மையங்களால் நிரம்பியுள்ளது. சுவர்களில் கட்டண விவரங்கள் ஒட்டப்பட்டுள்ளன. தரைகளில் பிட் நோட்டீஸ்கள். விதவிதமான ஆங்கில எழுத்துக்களின் கூட்டுகளில் பலவர்ண போர்டுகள். விலகி சர்தார் படேல் சாலையில் மேம்பாலங்கள் அரை ஸைன் அலை போல் எழும்பி அடங்கி எழும்பி அடங்கிய போது ஸெக் வந்திருந்தது.
செகந்திராபாத் இரயில்வே நிலையத்தின் பேருந்து நிறுத்தத்தில் இறங்கிக் கொண்டோம். ஓரமாய் வெட்கப்பட்டு நிற்பது போன்று ஒரு சுவரோரம் 8A காலியாகக் காத்திருந்தது. அஃப்ஸல் கஞ்ச் செல்லும் பேருந்து. ஏறி அமர்ந்து கொண்டோம். வெயிலில் ஒரு சதுரக் கண்ணாடிக் குவளையைப் போல் மினுங்கியது. சுமாராய்க் கூட்டம் சேர்ந்த பின் எங்கிருந்தோ முளைத்த ஓட்டு மற்றும் நடத்துனர்கள் 8A -வை நெரிசலிலிருந்து இன்னும் அதிக நெரிசலுக்கு நகர்த்தினர். பெயர் அறியாத நிறுத்தங்கள் ரஸ்தாக்கள் வழியாகச் சென்று கொண்டேயிருந்தோம். ஹுஸைன் சாகர் ஏரிக் கரை வந்தது. செய்த மேனிக்குக் கொஞ்சமும் குறைவில்லாமல் புத்தர் நடு ஏரியில் நின்று கொண்டிருந்தார். மோட்டார் படகுகள் விர் விர்ரென்று கரைக்கும் புத்தர் காலுக்கும் இடையே விரைந்தன. கொஞ்சம் கிடைத்த இடத்தில் பையன்கள் நீரில் மறையும் கதிரின் தங்கக் கரைசலில் மூழ்கி எழுந்தனர். சுற்றிக் கொண்டு ஒரே சமயத்தில் சந்துகள் போலவும் சாலைகள் போலவும் தோற்றமளிக்கும் பாதைகள் வழியாகச் சென்றோம். நிறைய வேகத் தடைகள். முழுக்கவே இஸ்லாமியர் ஏரியா. கறிக்கடைகள். மோட்டார் சரி பார்ப்பிக் கடைகள். மரச் சாமான்கள். மசூதி. அசைந்து கொண்டிருக்கும் கண்ணாடிச் சரங்கள். பர்தா பெண்கள்.
அஃப்ஸல் கஞ்ச் பேருந்து நிறுத்தத்தில் இறங்கினோம். இடது பக்கம் சார்மினார். சார் என்றால் இந்தியில் நான்கு, மினார் என்றால் தூண். (குதுப்மினார்? குதுப்ஷா மன்னர்களால் கட்டப்பட்ட தூண்) நான்கு தூண்களைக் கட்டி இணைத்து மேலே தொழுகை செய்யும் இடமும் உள்ளது. அருகே போன போது தான் தெரிந்தது. மேலே ஏறிச் சென்று பார்க்க நேரம் கடந்து விட்டது. மாலை ஐந்து மணி வரை தானாம். நாங்கள் வந்து சேர்ந்தது ஐந்தரைக்கு. ‘பரவாயில்லை’ (வேறு என்ன சொல்வது?) என்று சுற்றி வந்து செல்லில் படங்கள் சேர்த்துக் கொண்டேன். தூணை ஒட்டியே ஒரு அம்மன் கோயில் அமைக்கப்பட்டுள்ளது. அதற்குக் காவலுக்கு நாலு காக்கியர். குண்டு பரிசோதனைக்குக் கருவி. சமீபத்திய குண்டு வெடிப்பிற்குப் பின் இன்னும் பலமான ரோந்து.
நீர்த்தாரை வழிந்து ஓடு வழியின் கரைகளில் ஓதம் படர்ந்திருப்பது போல, சாலையின் விளிம்புகளில் தள்ளு வண்டிகளில் வளையல்கள் சரம் சரமாய்த் தொங்கின. ப்ளாஸ்டிக் குறும்பெட்டிகளில் கவரிங் நகைகள். பின்னலுக்கு வைக்கும் பின்னிலிருந்து நங்கையருக்குத் தேவையான அனைத்தும் இங்கே சல்லிய விலையில் கிடைக்கின்றன, பேரம் பேசத் தெரிந்தால். எடுத்த எடுப்பிலேயே இமயத்தில் சென்று அமர்கின்ற கடைக்காரர்களை இழுத்துக் கொண்டே வந்து தரையில் அமுக்கத் தெரிந்தால், இந்த சாலையில் மட்டும் அல்ல எந்த சாலையிலும் நீங்கள் பணம் மிச்சப்படுத்தலாம்.
உள்ளே பிரிந்து செல்லும் சந்துகளில் அதே நகைகளைக் குண்டு பல்பின் மஞ்சள் பூச்சின் கீழ் வைத்து முலாமடித்து நிலவுக்குச் சென்று அமர்ந்து விற்கிறார்கள். சேலைக் கடைகளில் மீப் பெரும்பாலும் ஜிலுஜிலு புடவைகளே உள்ளன. எம்ப்ராய்டரி செய்தவை, ஜரிகை நெய்தவை, கல் வைத்தவை, கண்ணாடி தைத்தவை போன்ற கோஷ்டிகளுக்கு நடுவே ’ப்ளைன் ஸாரி’ என்று கேட்டால் ’நோ’ என்கிறார்கள். வாசனைச் சாம்பிராணிகள், நாவற்பழ சைஸ் பாட்டில்களில் அத்தர், மல்லிகை மற்றும் செயற்கை மணங்கள் சிற்சில கடைகளில் விற்க உள்ளன. வகைக்கு ஒன்றாக எடுத்து கைகளில் தடவிக் கொண்டு நகர்ந்தேன்.
இரவு கவிழத் தொடங்க, ஜெனரேட்டர் பல்புகளில் விற்பனை ஜொலித்தது. ஹோட்டல்கள், பூக்கடைகள், பேக்கரிகள் எல்லாம் தயாராயின. மீண்டு அஃப்சல் கஞ்ச் பேருந்து நிலையத்திலேயே 8A பிடித்து ஸெகந்திராபாத் வந்தோம். அங்கேயே ஒரு குட்டி ஹோட்டலில் இட்லிகளை எடுத்துக் கொண்டு மாதாப்பூருக்குத் திரும்பும் போது ராத்திரி பத்தரை. வந்தது நித்திரை.
Friday, May 24, 2013
தமிழ் - இனமா, மொழியா?
சமீபத்தில் தமிழ் மாநிலமெங்கும் நடந்த மாணவர் போராட்டத்தின் போது, ஒரு நண்பருடன் பேசிக் கொண்டிருந்த போது அவர் இவ்வாறு கேட்டார். தமிழ் என்பது மொழியா, இனமா? அப்போதைக்கு ‘தமிழ் என்பது ஓர் இனத்தின் மொழி’ என்று பதில் கூறினேன். பின்பு சிந்தித்துப் பார்க்கையில் இவ்வாறு எளிமையாக முடிக்கக் கூடிய கேள்வியாக அது தோன்றவில்லை.
முதலில் இவ்விரு சொற்களின் வரையறையைப் பார்ப்போம்.
Race is a classification system used to categorize humans into large and distinct populations or groups by anatomical, cultural, ethnic, genetic, geographical, historical, linguistic, religious, or social affiliation. (wikipedia)
உடற்கூறு, கலாச்சார, மரபு, புவியியல், வரலாற்றியல், மொழி, மதம் மற்றும் சமூக வாழ்வியல் ஆகிய கூறுகளின் அடிப்படையில் மனிதர்களை வகைப்படுத்தும் ஒரு அமைப்பு முறையே இனம் எனப்படுகிறது. (ethnic என்றால் இனம் தானே?)
Language is the human capacity for acquiring and using complex systems of communication, and a language is any specific example of such a system. (wikipedia).
பொதுவாக மனிதர்கள் தமக்குள் தொடர்பு ஏற்படுத்திக் கொள்ள பயன்படுத்தும் வழிமுறைகளில் ஒன்று மொழி எனலாம். (ஓரளவான மொழிபெயர்ப்பு)
நாம் தற்போது ‘தமிழினம்’ என்ற சொல்லை அடிக்கடி கேள்விப்படுகிறோம். இது சரியாக எதை அல்லது எவரைக் குறிக்கின்றது?
1. தமிழ் மொழியைப் பயன்படுத்துகின்றவர் (பேச மற்றும் எழுத மற்றும் படிக்க) தமிழர். அவர் தமிழினத்தைச் சேர்ந்தவர் ஆகிறார் என்று கொள்ளலாமா?
அ. மேற்கண்ட பயன்பாடுகளில் ஏதேனும் ஒன்று செய்ய இயலாதவர் தமிழர் அல்லரா? உதாரணமாகப் பேச மற்றும் படிக்கத் தெரிந்து ஆனால் எழுதத் தெரியாதவர்.
ஆ. ஒருவர் மேற்கண்ட பயன்பாடுகளைச் செய்யத் தெரிந்தவர் என்று எந்த அளவுகோலைக் கொண்டு முடிவு செய்வது? உதாரணமாக ஆயிரம் சொற்கள் பேசத் தெரிந்தால் போதும் போன்று.
இ. தமிழ் மொழியில் பல வட்டார மொழிகள் உள்ளன. நெல்லைத் தமிழ், குமரித் தமிழ், மதுரைத் தமிழ், கோவைத் தமிழ், ஆற்காட்டுத் தமிழ், சென்னைத் தமிழ், எழுத்து நடைத் தமிழ் போன்றன. இவற்றுள் எந்த மொழியைப் பேசுபவர் எல்லாம் தமிழர்? வட்டார மொழிகள் மட்டும் பேசத் தெரிந்த எழுத்து நடைத் தமிழ் தெரியாத மக்கள் தமிழர் ஆவரா, மாட்டாரா?
ஈ. தாம் பிறந்த சாதி மற்றும் செய்கின்ற தொழிலைப் பொறுத்துத் தமக்குள் தனிப்பட்ட தமிழ் மொழியைப் பல தலைமுறைகளாகப் புழங்கிக் கொண்டு வரும் மக்களை எவ்வாறு வகைப்படுத்துவது? உதாரணமாக பிராமணர் மற்றும் மீனவர்கள்.
உ. தமிழே இல்லாத மொழிகளைப் பேசுகின்ற பழங்குடியினர், நரிக்குறவர்கள் என்ன ஆவார்கள்?
2. தமிழ் நாட்டில் வாழ்கின்றவர் தமிழர். அவர் தமிழினத்தைச் சேர்ந்தவர் ஆகிறார் என்று கொள்ளலாமா?
அ. தமிழ்நாடு என்ற அரசியல் பகுப்பு 1956-ல் ஏற்படுத்தப்பட்டது. அப்பகுப்பின் காரணமாக வேறு மாநில எல்லைக்குள் சென்று விட்ட, தமிழ் பேசுகின்றவர் தமிழர் ஆக மாட்டாரா?
ஆ. வரலாற்றின் வழியே பல காலகட்டங்களில் இன்றைய தமிழ்நாட்டின் பல நிலங்கள் வேறு மொழி பேசுபவரின் ஆளுகையின் கீழ் இருந்து வந்துள்ளன. எனவே தற்போதைய அரசியல் நில எல்லைகளைக் கொண்டு அவற்றின் கீழ் வருபவர் மட்டும் தமிழர் என்று சொல்லலாமா? உதாரணமாகக் குமரி மாவட்டம், முதலில் கேரள மாநிலத்தில் சேர்க்கப்பட்டுப் பின் பல போராட்டங்களின் பின் தமிழ்நாட்டுடன் இணைக்கப்பட்டது. அம்மாவட்டம் கேரளத்துடன் இருந்த காலத்தில் ‘தமிழ் நாட்டில் வாழ்கின்றவர் மட்டுமே தமிழர்’ என்று வரையருக்கப்பட்டிருந்தால், குமரி மக்கள் தமிழர் ஆகியிருக்க மட்டார்கள் அல்லவா? இக்கோணத்தை இன்னும் நீட்டித்தால், ஒருவேளை இன்றைய தமிழ்நாட்டு அரசியல் எல்லை மாற்றி அமைக்கப்பட்டு, சில பகுதிகள் வேறு மாநிலம் என்று ஆனால், அவர்கள் தமிழினத்தார் என்ற வகைப்பாட்டில் இருந்து நீக்கப்படுவார்களா?
இ. தமிழ்நாடு என்ற அரசியல் பகுப்பில் பிறந்து தற்போது உலகமெங்கும் பறந்து பரந்து வாழ்பவர் தமிழினத்தார் ஆவாரா மாட்டாரா?
ஈ. தமிழ்நாட்டில் பிறந்த ஒரு வெளிநாட்டுக் குழந்தை, தமிழ்நாட்டிலேயே குடியுரிமை பெற்று வாழ்க்கையை அமைத்துக் கொண்டால் தமிழினத்தில் சேர்த்து கொள்ளப்படுமா?
உ. தமிழ்நாட்டில் வாழ்க்கை நடத்தும் வேறு மொழி பேசுபவர் தமிழினத்தார் ஆவாரா, மாட்டாரா?
3. தாய் மொழியாகத் தமிழைக் கொண்டவர் தமிழர், அவர் தமிழினத்தைச் சேர்ந்தவர் ஆகிறார் என்று கொள்ளலாமா?
அ. ஒருவருடைய பெற்றோர் பேசும் மொழி தமிழ் என்றால் அவருடைய தாய்மொழி தமிழ் ஆகும். அதனாலேயே அவர் தமிழினம் ஆவாரா?
ஆ. பெற்றோர் தமிழ் மற்றும் வேறொரு மொழியைத் தாய்மொழிகளாகக் கொண்டவர் எனில், குழந்தை தமிழினம் ஆகுமா?
4. பல தலைமுறைகளாகத் தமிழ்நாட்டில் வாழ்பவர் தமிழினத்தார்.
அ. பல தலைமுறை என்றால் எத்தனை?
ஆ. ஒருவர் தமிழ்நாட்டில் வாழ்ந்து வருகிறார். அவருடைய ஐந்து தலைமுறைக்கு முந்தைய முன்னோர் வரை வேறு மொழி பேசிக் கொண்டிருந்தவர்கள். காலப் போக்கில் தமிழ்நிலத்தில் வந்து பொருந்திக் கொண்டு தமிழ் பேசி வாழ்கிறார்கள். இவருக்கு இப்போது தமிழ் மட்டும் தான் தெரியும். இப்போது இவர் தமிழினம் ஆவாரா? நாளை இவருடைய முன்னோர் வாழ்ந்த பகுதிக்கும் தமிழ்நாட்டுக்கும் ஏதேனும் மோதல் வந்தால், இவர் யாருக்குச் சாதகமான நிலைப்பாடு எடுக்க வேண்டும்? (சமீபத்தில், தமிழ்நாட்டுக்குக் காவிரி நீர் வழங்கக் கூடாது என்று பெங்களூரு தமிழ்ச் சங்கத்தார் போராட்டம் நடத்தினார்கள். தமிழ்ப் பற்றே கிடையாதா என்று இவர்களைக் கடிந்து கொண்டார்கள் சிலர். தமிழ்நாட்டில் பிறந்து, வேறு மொழி பேசும் பகுதியில் வாழ்பவர்கள் எப்பகுதிக்குச் சாதகமாக நிற்க வேண்டும் என்பதை மாற்றுக் கோணத்தில் யோசிப்பது நல்லது.)
5. மொழி தவிர்த்து வேறு என்னென்ன காரணிகள் ’தமிழினம்’ என்று வரையறுக்கத் தேவை/ தேவையில்லை?
***
இது ஓர் அர்த்தமற்ற விவாதம் அல்ல. இன்றைய காலத்திற்குத் தேவையான ஒன்று. ‘தமிழ்நாட்டைத் தமிழரே ஆள வேண்டும்’ என்ற கோட்பாடு உறுதி பெற்று வருகின்ற நேரத்தில் அக்கோட்பாட்டை முன்னிறுத்துவோர், யாரெல்லாம் தமிழர் என்ற வகைப்பாட்டில் வருவார் என்பதை வரையறுத்தாக வேண்டும்.
மேலும் விடுபட்ட பகுதிகளை நிரப்பி, குறைகளைக் களைந்து இவ்விவாதம் நீள்வது, தெளிவைக் கொடுக்கும்.

Tuesday, May 14, 2013
பக்கத்தில் சேராத உந்தன் வெட்கத்தை என் செய்வது?
மலையாளத்தில் ‘ஓலங்ஙள்’ என்ற படத்தில் ‘தும்பி வா’ என்ற பாடல், தாய் குழந்தைகளை நோக்கிப் பாடுவதாக அமைந்திருக்கும். இசை இளையராஜா. அவர் அதே மெட்டில் ‘ஆட்டோ ராஜா’ என்ற தமிழ்ப் படத்தில் ஒரு காதல் இணைப் பாடலை இசைத்திருப்பார். தமிழ்ப் பாடலைக் கேட்கும் போது, தாளத்திற்கும் சந்தத்திற்கும் இசைந்தாற் போல் சொற்களைப் பின்னியிருப்பார் புலவர் புலமைப்பித்தன். அதே மெட்டிற்கு மாற்று வரிகளை அமைத்துப் பார்ப்பது நெடுநாள் கனவாக இருந்தது. நேற்றிரவு நிறைந்தது.
பல்லவி:
பக்கத்தில் சேராத உந்தன்
வெட்கத்தை என் செய்வது?
வித்தைகள் கூறாத மொழியொடு
முத்தத்தை யார் எய்வது? - இதழ்ப்
சரணம் 1:
பெண்மைக்குள் பூக்கின்ற இளமை
கண்மைக்குள் கூர் தீட்டுதோ?
வான்மைக்குள் ஆகாய நிலவென
ஆணமைக்குள் சேர்ந் தாடவருதோ?
என்னுள்ளும்
உன்னுள்ளும்
வெள்ளைப்பூ மீதூறும் இரவில்
முல்லைப்பூ போலான ஈரிதழ்ப் (பக்கத்தில்)
சரணம் 2:
முந்தைநாள் போய்விட்ட பழமை
இன்றேதான் நம் நர்த்தனம்
முந்திப்பாய் கொண்டாடும் உறவில்
முந்திப்பாய் கொண்டாடும் அழகை
அந்திப் போம் வரை
சந்திப் போம்
முன்னிற்கும் மெய்யென்ற மெய்யை
உன்வெப்பம் தீய்க்காத பூவிதழ்ப் (பக்கத்தில்)
சரணம் 3:
நேரம் ஏன் வெண்மேக நதிபோல்
நேராக செல்கின்றது?
மேலாடை மூள்கின்ற பெரும்போர்
மேலாடும் காலத்தின் கரங்கள்
என் மேலும்
உன் மேலும்
தீண்டாமல் நீங்காத பொழுது
தீயாகும் நீர்மேனிச் சிவப்பிதழ்ப் (பக்கத்தில்)

Subscribe to:
Posts (Atom)