Saturday, March 17, 2007

என்னய்யா... இப்படிப் பண்றாய்ங்க...

என்னம்மா கண்ணு படத்தில், வடிவேலு கோவை சரளாவிடம் கூறுவார்.


"அவன் குடும்பத்த நான் கேவலமாப் பேசுவான். என் குடும்பத்த அவன் ரொம்பக் கேவலமாப் பேசுவான். இத நாங்க ஒரு ஜாலியாவே எடுத்துக்கறது..."


என்பார்.


அது போல, இந்தப் பக்கம் இந்தியா இவ்வளவு கேவலமாக விளையாடுகிறதே என்று அடுத்த மேட்சைப் பார்த்தால், அயர்லாந்து பாகிஸ்தானுக்குத் தாண்ணி காட்டிக் கொண்டிருக்கிறது.


என்னய்யா... இப்படிப் பண்றாய்ங்க...

பார்க்க:


இந்தியா : வங்காளதேசம்,பாகிஸ்தான் : அயர்லாந்து.

Monday, March 12, 2007

ஓர் ஆய்வு.

காதல், வெயில், பருத்தி வீரன் போன்ற படங்களுக்கு கிடைக்கின்ற பிரம்மாண்டமான வெற்றிக்குக் காரணம் என்ன?

ஆர்குட்டில் மிகப் பெரும்பாலான தமிழ் மக்கள் அனைவரும் தத்தம் சாதிக் குழுவில் உறுப்பினராய் இருக்கும் நிலைக்குக் காரணம் என்ன?

ஒவ்வொருவரும் தத்தம் உள்ளம் தோன்றும் எண்ணங்களை, திறமைகளை வெளிப்படுத்தும் அற்புதமான களமான தமிழ்ப் பதிவுகள், சாதி வெறியோடு ஒவ்வொருவரும் அடித்துக் கொள்வதற்கான இடமாய்ப் போனதற்குக் காரணமென்ன?

சிந்தித்துப் பார்த்ததில், சில விடயங்கள் எனக்குத் தோன்றின.

வெளி உலகப் பழக்கமே இல்லாதிருந்த காலங்கள் கடந்து வந்து, இப்போது எல்லொரும், எங்கு வேண்டுமானாலும் யாரையும் தொடர்பு கொள்ள முடியும் என்ற காலத்திற்கு வந்துள்ளோம். தனி மனிதனாய், காட்டுமிராண்டியாய் இருந்து, பின் சமூகத் தேவையை உணர்ந்து குழுக்களாய் வாழ்ந்து, பின் எப்படியோ சாதி, இனம், மதம் எனும் கூட்ட உணர்வுகளுக்குள் வந்து வாழ்ந்தோம். சாதிக் குழுக்கள் தனித்தனியாய் வாழ்ந்து, இப்போது நகரங்களில் பக்கத்து வீட்டுக்காரர் யாரென்னும் அறிந்து கொள்ளாத நிலையில் வாழ்கிறோம்.

மனித மனம் 'இன்னும் வேண்டும், இன்னும் வேண்டும்' என்று தேடக் கூடிய சுபாவம் கொண்டது. இருப்பதோ ஒரேயொரு தனிமையான கிரகம். யாரும், எங்கும் செல்லலாம் என்ற நிலை வந்த பின்பு, மனித மனம் சலிப்புறத் தொடங்கியுள்ளது. இனி செல்வதற்கு எங்குமில்லை என்று உணர்ந்த பின்பு, உள்முகமாய்த் திரும்புகிறது.

'என் மதம்',' என் இனம்', 'என் மொழி', 'என் மண்', 'என் ஊர்' என்ற எண்ணங்கள் தலைதூக்குகின்றன.

புலம் பெயர்ந்து வாழ்கின்ற மனங்கள், மகிழ்வாய் இருந்த மீஇளம் காலங்களை அசை போடுகின்ற போது, அப்போது கழித்த ஊர் நினைவுகள் வருகின்றன. பின்னாலேயே வால் போல, மேற்சொன்ன 'என்..' களும் வருகின்றன.

வேறென்ன காரணம் இருக்க முடியும், பரந்து விரிந்த உலகில், தத்தம் சாதிக் குழுவில் உறுப்பினராகும் ஆர்குட் நண்பர்களுக்கு?

வேறென்ன காரணம் இருக்க முடியும், கிராமத்துப் படங்கள் வெற்றி பெறுவதற்கு?( மேலும் பல கிராமத்துப் படங்கள் ஊற்றிக் கொண்டுள்ளன என்பதும் கவனத்தில் கொள்ள வேண்டிய 1).

உயர்ந்த எண்ணங்களை, அற்புதமான கனவுகளை சொல்லும் இடத்தில், என் சாதி, என் மதம் என்று ஒருவர் மேல் ஒருவர் உமிழ்ந்து கொள்வத்று வேறு என்னதான் காரணம் இருக்க முடியும்..?

Thursday, March 08, 2007

மகளிருக்கு ஜே.

இரண்டு நாட்களுக்கு முன்பு எனது அக்கா ஒருவருக்குத் திருமணம். விழாவில் பங்கு கொள்வதற்காக ஊருக்குச் சென்றிருந்தேன். அதைப் பற்றிய சிறு பதிவு இது.

'நண்பரின் பிரிவை விட, நட்பின் பிரிவு வலிமிக்கது'. இம்மொழியை நாம் கேள்விப்பட்டு இருப்போம். அது போல் உறவுகளின் பிரிவும் என்பதைக் கண்டேன். கல்லூரியில் படிக்கும் காலத்தில், நெருக்கமான மரணங்களை நெருங்கிப் பார்த்து விட்டதால், பிரிதல்கள் பழகிப் போய் விட்டிருந்தன என நினைத்திருந்தேன்.

ஈரம் குழைத்துச் செய்த பானை, நெருப்பில் போட்டுக் காய்ச்சியதும் உருவாகும் பானை மீண்டும் ஈரம் பட்டால் களிமண்ணாய் குழைவதில்லை என்று நினைத்திருந்தேன்.

மனம் காய்ந்து போகும் பானை இல்லை, பாறை மறைவில் பதுங்கியிருக்கும் விதை என்று புரிந்தது. கால, காலமாய் ஒளிந்திருந்தாலும், விழுந்த முதல் துளி மழைக்கே மொட்டு விடும் என்று புரிந்தது.

இனிமேல் அவர் 'அக்கா' மட்டும் இல்லை. மரியாதைக்குரிய ஒரு மனைவி. இல்லத்தை நிர்வகிக்கப் போகும் நிர்வாகி. ஒரு புதிய தலைமுறைக்கு மூலம். இனிமேல் 'ஏ.. புள்ள..இங்க வா.. போ..' என்றெல்லாம் மிரட்ட முடியாது, என்றெல்லாம் நினைக்கையில் கொஞ்சம் வருத்தமும் , கொஞ்சம் சந்தோஷமும் நிறைகிறது உள்ளே.

புது மனிதர்கள்! புது வாழ்முறை! புதுக் குடும்பம்!

புலம் பெயர்தலின் வலி நிறைந்த கண்கள் கண்ணீர் வழி, வழிந்து விடக் கூடாதென்றே, பெண் தலைகுனிந்து நிற்கிறாள் என்று புரிகிறது.இத்தனை வருட வாழ்வில் பல திருமணங்களைக் கண்டு விட்டது. ஆனால் இந்த் நெருக்கமான மணம் கொஞ்சம் பார்வையை மாற்றித்தான் போட்டது.

இரவில் இரயில் ஏறிப் பணிக்குத் திரும்பி விட்ட எனக்கே, அந்த புதுமுகங்களைக் கண்டு இயற்கையான பயம் முளைத்தது என்றால், இனி வாழ்வு முழுதும் அங்கேயே இருக்க வேண்டிய பெண் மனதில் தோன்றும் பயங்கள்.. என்னால் எழுத முடியாதது. பெண்களால் மட்டுமே எழுதக் கூடியது. மகளிருக்கு ஜே.

மற்றொரு விஷயம் கவனித்தது:

"குழந்தைகள் கண்முன்னால் எப்படி வளர்ந்து விடுகிறார்கள்" என்று காம்ப்ளானோ, பூஸ்டோ விளம்பரம் வரும், நினைவிருக்கிறதா? அப்படி சில குழந்தைகளைக் கண்டேன். கொஞ்ச நாளைக்கு முன்னாடி, சிறு குழந்தையாய்ப் பார்த்த பையன் இன்று மேலுதட்டில் அரும்பு மீசையோடு, 'அண்ணா, நான் எட்டாவது படிக்கிறேன்' என்று நிற்கிறான். தோளில் தூக்கிக் கொண்டு திரிந்த குழந்தை, கல்லூரியில் அடியெடுத்து வைத்து விட்டது.

கொஞ்சம் பயமாய்த் தான் இருக்கிறது. ' நமக்கும் வயதாகிக் கொண்டு போகிறதோ...' என்ற நினைவு வருகிறது. ஹூம்....

அந்த முகங்களில் கண்ட கள்ளங்கபடமற்ற குழந்தைத்தனம், புன்னகை, பிரகாசம்.. இதெல்லம் எங்கே, எப்போது நாம் தொலைத்தோம் என்று ஆயாசம் வருகிறது. 'பிள்ளையாய் இருந்து விட்டால், இல்லை ஒரு தொல்லையடா' என்று பாடத் தோன்றியது.

Monday, February 26, 2007

கல்கி பதில்.

கே.ஜி.எஃப்.சி.பழனிச்சாமி, கிழக்குத் தாம்பரம்.

கே. தமிழக மக்களிடையே காணப்படும் மிகப்பெரிய மூட நம்பிக்கை எது?

கல்கி பதில். இலவசங்கள்! இலவசங்கள் மூலம் வாழ்க்கைத் தரம் உயரும் என்ற நம்பிக்கை. இலவசங்களுக்கு மயங்கி வோட்டுப் போடும் அவலம்.
( நன்றி: கல்கி இதழ். 04.மார்ச்.2007. பக்கம்:10)

ஜன நாயகவாதிகளாய் தங்கள் கடமைகளைச் சரியாகச் செய்துள்ள தமிழ் மக்கள் அனைவரையும் சற்று சிந்திக்குமாறு கேட்டுக் கொள்கிறேன். 'தி.மு.க. கூட்டணி அரசு அமையக் காரணமாய் இருந்தவர்கள் அனைவரும் இலவசங்களைக் கேட்டுத் தான் ஓட்டுப் போட்டார்களா..? முந்தைய அரசின் நடவடிக்கைகளால் வெறுத்துப் போனவர்களும், 'சப்பாத்தியை மாற்றிப் போடு' என்ற மொழியின் மேல் நம்பிக்கை கொண்டவர்களும் இந்தக் கூட்டத்தில் இல்லையா..?

என்ன சொல்ல வருகிறார்கள் இவர்கள்.?

உன்னோடு...!


ன்னோடு கொஞ்சம்

பேச வேண்டும்,

கிடைக்குமா தனிமை?

நீயும், நானுமற்ற தனிமை!


பேச்சில் கொஞ்சம்

பருக வேண்டும்,

இருக்குமா வெறுமை?

வார்த்தைகளும், வசனங்களுமற்ற

வெறுமை!


வெறுமையில் கொஞ்சம்

வசிக்க வேண்டும்,

அமையுமா இனிமை?

ஆசைகளும், ஓசைகளுமற்ற

இனிமை!


தனிமையில் கொஞ்சம்

தரிக்க வேண்டும்,

தகையுமா மெளனம்?

சப்தங்களும், அமைதியுமற்ற

மெளனம்!


எழுதியது : 02.Mar.2004