Thursday, October 07, 2010

Jai Hoooo....

Then....




...and now...



Cricinfo

Any differences could be found...? Nope...!!!

Tuesday, October 05, 2010

வருங்காலத்திற்கு எந்திரன் பற்றி..!



ந்திரன் என்றொரு திரைப்படம் பற்றியும் அதனைச் சுற்றிலும் நிகழ்கின்ற கூத்துக்களையும் பார்க்கிறோம். அவற்றைப் பற்றிய இரு பதிவுகளை வருங்காலத்திற்காக இங்கே சேமித்து வைக்கிறேன்.

1. தினமணி கட்டுரை ::

எந்திரன் என்றோர் ஏகாதிபத்தியன்!
----------------------------------------------

ஏறத்தாழ 5 ஆண்டுகள் உழைப்பில் - 6 மில்லியன் டாலரில் (இன்றைய மதிப்பில் ரூ. 140 கோடி) "ஜெமினி பிலிம்ஸ்' உருவாக்கிய இந்தியாவின் பிரம்மாண்டமான படமான "சந்திரலேகா' 1948-ல் தமிழிலும் தொடர்ந்து ஹிந்தியிலும் வெளியானது. இந்தியா முழுவதும் விநியோகிக்கப்பட்டது. படிப்படியாக 609 பிரதிகள் போடப்பட்டன. அமெரிக்காவிலும் திரையிடப்பட்டது, இடையிடையே ஆங்கிலத்தில் கதைச் சுருக்கத்துடன். இந்தியத் திரை வரலாற்றில் இவை எல்லாமே அப்போதுதான் முதல் முறை.

தஞ்சாவூரில் "சந்திரலேகா' வெளியானபோது கூடுதலாக தன்னுடைய திரையரங்கிலும் வெளியிட விரும்பினார் மற்றொரு திரையரங்கின் அதிபர். தஞ்சாவூர் மாவட்டத்துக்காரர் என்ற உரிமையில் வாசனை நேரடியாகவே அவர் அணுகினார். வாசனோ மறுத்துவிட்டார். அதற்கு அவர் சொன்ன காரணம்: ""ஒரு சின்ன நகரத்தில் பல திரையரங்குகளில் படம் வெளியிடுவது நல்லதல்ல. யாரும் நஷ்டப்பட்டுவிடக் கூடாது. நாம் மட்டும் வாழ்ந்தால் போதாது. எல்லோரும் பிழைக்க வேண்டும் அல்லவா?''

படம் மிகப் பெரிய வெற்றி பெற்றது. படத்தின் வெற்றியில் எல்லோருக்கும் பங்கு தரப்பட வேண்டும் என நினைத்தார் வாசன். படத் தயாரிப்புக் குழு மேலாளரிலிருந்து படம் ஓடிய திரையரங்குகளில் டிக்கெட் கிழித்த தொழிலாளிகள் வரை எல்லோருக்கும் சிறப்பு ஊக்கப் பரிசு அளித்தது "ஜெமினி ஸ்டுடியோ'. "சந்திரலேகா' வரலாறானது. தொழில் தர்மத்துக்காக இன்றளவும் வாசன் நினைவுகூரப்படுகிறார்!

ஏறத்தாழ ரூ.160 கோடி முதலீடு, ஒரே நேரத்தில் 3 மொழிகளில் 2,200 பிரதிகளுடன் உலகின் பல்வேறு நாடுகளிலும் வெளியீடு, ஹாலிவுட் படங்களில் பணியாற்றிய தொழில்நுட்பக் கலைஞர்களின் பங்களிப்பு, இதுவரை இந்திய கதாநாயகிகள் யாரும் பெற்றிராத ரூ. 6 கோடி சம்பளத்தில் கதாநாயகியாக முன்னாள் உலக அழகி ஐஸ்வர்யா ராய், ஆஸ்கர் விருதுபெற்ற ஏ.ஆர். ரஹ்மான் இசை, எல்லாவற்றுக்கும் மேலாக "சூப்பர் ஸ்டார்' ரஜினிகாந்த்...

வரலாறுதானா "சன் பிக்சர்'ஸின் "எந்திரன்'?

நிச்சயமாக "எந்திரன்' ஒரு வரலாறுதான். ஒரு ஜனநாயக நாட்டில் விஞ்ஞானத்தின் உதவியுடன், அரசாங்கத்தின் ஆசியுடன் வணிக மோசடியும் வணிக ஏகாதிபத்தியமும் எப்படி ஜனநாயகமாக மாற்றப்படுகிறது என்கிற வரலாறு.

மொத்தம் 3,000-க்கும் மேற்பட்ட திரையரங்குகள். முதல் நாளன்று சராசரியாக ஒரு திரையரங்குக்கு 500 இருக்கைகள்; 4 காட்சிகள்; டிக்கெட் விலை ரூ. 250 எனக் கொண்டால்கூட முதல் நாள் வசூல் மட்டும் ரூ. 150 கோடி. "சன் குழும' ஊடகங்கள் பறைசாற்றும் தகவல்களின்படி, தமிழகம் மட்டும் இன்றி ஐரோப்பாவின் மிகப் பெரிய திரையரங்கமான "கோலோஸியம்' உள்பட எல்லா இடங்களிலும் முன்பதிவில் புதிய சாதனைகளை "எந்திரன்' உருவாக்கி இருக்கிறது. ஆக, எப்படிப் பார்த்தாலும் ஒரு வாரத்துக்குள் மட்டும் குறைந்தது ரூ. 1,000 கோடி வருமானம்! எனில், மொத்த வருமானம்?

ஒரு தொழில் நிறுவனம் தன் புத்திசாலித்தனத்தைப் பயன்படுத்தி இப்படிச் சம்பாதிப்பதில் என்ன தவறு இருக்கிறது என்று நீங்கள் கேள்வி கேட்கலாம். நியாயம்தான். தொழில் நிறுவனம்தான், புத்திசாலித்தனமாகத்தான் சம்பாதிக்கிறார்கள்; "வால்மார்ட்'டுக்கும் "கோகோ கோலா'வுக்கும் "ரிலையன்ஸ் ஃப்ர'ஷுக்கும்கூட இந்த நியாயம் பொருந்தும். ஆனால், நாம் அவர்களை ஆதரிக்கவில்லையே, ஏன்? அவர்களை எந்தக் காரணங்கள் எதிர்க்க வைக்கின்றனவோ அதே காரணங்கள்தான் "எந்திர'னையும் எதிர்க்கவைக்கின்றன.

சென்னையில் 30-க்கும் மேற்பட்ட திரையரங்குகளில் "எந்திரன்' வெளியாகி இருக்கிறது. ஆனால், ஆச்சர்யம் இது இல்லை. தமிழகத்தின் மிக சாதாரண நகரங்களில் ஒன்றான (தமிழகத்தில் பொருளாதார ரீதியாக மிகவும் தங்கிய மாவட்டத்தின் தலைநகரமும்கூட) புதுக்கோட்டையில்கூட 4 திரையரங்குகளில் வெளியாகி இருக்கிறது. தமிழகத்தின் பல்வேறு பகுதிகளிலும் இதுதான் நிலை.இந்தச் சூழல் இதுவரை ஒருபோதும் இல்லாதது. இந்தியத் திரையுலகம் முன்னெப்போதும் எதிர்கொண்டிராதது. ரசிகனுக்கு "எந்திரன்' படத்தைத் தவிர, வேறு எந்தப் படத்தையுமே பார்க்க முடியாத சூழலை ஏற்படுத்தி, தங்களது பணபலத்தாலும், அரசியல் செல்வாக்காலும் பெருவாரியான திரையரங்குகளில் தங்களது படத்தை மட்டுமே திரையிட வைத்திருக்கும் ஏகபோக மனோபாவம்.

படம் வந்த சில நாள்களுக்குள் படத்தைப் பார்த்துவிட வேண்டும் என்ற ரசிகர்களின் ஆர்வமே பரந்துபட்ட "எந்திரன்' பட வெளியீட்டுக்கான வியாபார சூட்சமமாக மாறியிருக்கிறது. பொதுவாக, எந்த ஒரு வெற்றித் திரைப்படத்துக்கும் அதிகபட்சம் 10 நாள்களுக்குத்தான் கூடுதல் விலையில் டிக்கெட்டை விற்க முடியும். நூறு நாட்கள் ஓடக்கூடிய ஒரு வெற்றிப் படம் ஓர் ஊரில் ஒரேயொரு திரையரங்கில் திரையிடப்பட்டால், முதல் 10 நாட்களில் பார்க்கும் ரசிகர்கள்தான் கூடுதல் கட்டணத்தில் படம் பார்க்க நேரிடும். எஞ்சிய 90 நாட்களில் படம் பார்க்கும் ரசிகர்கள் சாதாரண கட்டணத்திலேயே படம் பார்த்துவிடலாம். ஆனால், ஒரு திரையரங்குக்குப் பதில் ஊரிலுள்ள 10 திரையரங்குகளிலும் படத்தை வெளியிட்டால், 100 நாள்களும் படத்தைக் கூடுதல் கட்டணத்திலேயே ஓட்டியதற்குச் சமம். இதுதான் "எந்திரன்' அறிமுகப்படுத்தி இருக்கும் "ஏகபோக' (மோனாப்பலி) வியாபார சூட்சமம்.


தயாரிப்பாளர்கள் சங்கம் சில ஆண்டுகளுக்கு முன்பு தயாரிப்பாளர்களைப் பாதுகாப்பதற்காக ஒரு எழுதப்படாத விதியை அறிவித்தது. அதன்படி, ரஜினி, கமல், விஜய், அஜித், சூர்யா, விக்ரம், சிம்பு, தனுஷ் போன்ற ஆரம்ப எதிர்பார்ப்பை ஏற்படுத்தும் கதாநாயகர்கள் நடித்த திரைப்படத்தை தீபாவளி, பொங்கல், சித்திரைப் புத்தாண்டு போன்ற விசேஷ தினங்களில் மட்டுமே திரையிட வேண்டும். ஏனைய நாள்களில் சிறிய திரைப்படங்கள் திரையிடப்பட்டு அவை குறைந்தது இரண்டு வாரங்களாவது ஓடி விநியோகஸ்தர்களுக்கு குறைந்தபட்ச லாபத்தையாவது ஏற்படுத்திக் கொடுக்கும். மற்றவர்களுக்கு நியாயம் சொல்லும் தமிழ்நாடு திரைப்படத் தயாரிப்பாளர் சங்கமோ, விநியோகஸ்தர்கள் சங்கமோ, "எந்திரன்' விஷயத்தில் வாயைத் திறக்கவே இல்லையே, ஏன்? பயமா இல்லை ஆட்சியாளர்களின் பாததூளிகளுக்கு சாமரம் வீசும் அடிமைத்தன மனோபாவமா!

"எந்திரன்' திரைப்படத்தை தீபாவளிக்கு வெளியிட்டிருந்தால் திரையிடக் காத்திருக்கும் பல சிறிய திரைப்படங்கள் வெளியிடப்பட்டு இரண்டு, மூன்று வாரங்கள் ஓடியிருக்கும். "எந்திரன்' வெற்றிப்படமாகவும் அமைந்துவிட்டால், பாவம் சிறிய படங்களைத் தயாரித்து வைத்திருக்கும் தயாரிப்பாளர்கள் தங்கள் படங்களை வெளியிட மேலும் இரண்டு மாதங்கள் காத்திருக்க வேண்டும். அதுவரை திரையரங்குகள் கிடைக்காது. கிடைத்தாலும் "எந்திரன்' படத்தின் வெற்றி ஜுரத்தில் அந்தப் படங்கள் ஓடாது. போட்ட முதலும், அதிகரித்த வட்டியும், அந்தத் தயாரிப்பாளர்களை திவாலாக்கி நடுத்தெருவில் நிறுத்தும். ஏகபோகத்தின் கோர முகம் இதுதான்!

(நன்றி :: http://deepaneha.blogspot.com/2010/10/blog-post_05.html)

2.



(நன்றி :: http://mathavaraj.blogspot.com/2010/10/blog-post_05.html)

படம் நன்றி :: http://www.wpromote.com/blog/wp-content/uploads/2009/04/pity-the-fool.jpg

Monday, August 09, 2010

மொக்ஸ் - 10.Aug.2010

பாழாய்ப்போன என்மனம் ஒரு நாய்க்குட்டி - அதைப்
பறித்துக் கொண்டாய் அடியே என் சின்னக்குட்டி
உன் மேனி ஒரு பூத்தொட்டி
உதடு தித்திக்கும் வெல்லக்கட்டி!

இந்த வரிகளை எழுதியவர் யாராய் இருக்கும்..?

ரோட்டுக்குப் போய்ச் சேர்ந்தேன். ... கட்டை வண்டி ஒன்று கிடைத்தது. கட்டை வண்டியில் ஒரு மனிதன் நிமிர்ந்து உட்கார இடமில்லை. ஒன்றரை அடி நீளம். மாடு ஒரு சிறு பூனைக்குட்டி போன்று இருந்தது. நான் ஒன்று; வண்டிக்குடையவன் இரண்டு; அவனுக்குக் கீழே கூலிக்கு வண்டி ஓட்டும் சிறுவன் ஒருவன்; எங்கள் மூவரையும் மூன்று பர்வதங்களாக நினைத்து அந்த மாட்டுப் பூனை இழுத்துக் கொண்டு போயிற்று.

மேற்கண்ட பத்தியைப் போல் இல்லாமல் ஞாயிற்றுக்கிழமை பகல் ஒரு மணி சுமாருக்கு ஈரோடு நூல் அழகத்திற்குச் சென்றேன். வழக்கம் போல் பேருந்து நிலையத்தின் அருகே வ.உ.சி. பூங்காவிற்குப் புறத்தில் அமைக்கப்பட்டிருந்தது. வழியெங்கும் நோட்டீஸ் சிதறல்கள். ஐஸ் வண்டிகள். இளநீர் அரிவாளிகள். வரவேற்கும் பதாகை. அன்றைய தினம் 89,90 ஸ்டால்களில் வழியே நுழைவாயிலாக இருந்தது. நுழைந்தேன்.

ஒவ்வொரு பதிப்பகத்தின் உள்ளும் சென்று, கண்களைக் கட்டவிழ்த்து விட, அவை நூல் அட்டைகளையும், விலையையும், அகத்தே சில வரிகளையும் மேய்ந்து விட்டு வந்தன. கொஞ்சம் நீளமான 'ப' போல் ஸ்டால்கள் இருந்தன. நிறைய பள்ளிக் குழந்தைகளைப் பார்த்தேன்; மகிழ்ந்தேன்.

கொஞ்சம் ரூபாய்களுக்குப் புத்தகங்கள் வாங்கினேன். அவற்றில் படிப்பவற்றைப் பற்றிப் பின் சொல்கிறேன். ஒரு ஸ்டாலில் பதிவர்கள் ஜாஃபர் மற்றும் மதுரை கார்த்திகை பாண்டியன் அவர்களையும் பார்த்துப் பேசினேன்.

வெளியே வந்து ஜிகர்தண்டா எடுத்துக் கொண்டு, திடீரென ஒரு விசிட் செய்த கொஞ்சம் மழையில் நனைந்து கொண்டு வெளியேறினேன்.

இன்னும் கொஞ்சம் படங்கள் மற்றும் செய்தி.

மாடுப்பூனை பத்தி, 'என் ஈரோட்டுப் பயணம்' என்ற கட்டுரையில் 14.8.1921. சுதேசமித்திரன் இதழில் வந்திருக்கின்றது. எழுதியவர் மகாகவி பாரதியார். அ.கருப்பண்ண செட்டியார் என்ற 'உலகம் சுற்றிய தமிழர்' ஏ.கே. செட்டியார் அவர்கள் தொகுத்த 'தமிழ்நாடு - நூறாண்டுகளுக்கு முந்தைய பயணக் கட்டுரைகள்' என்ற நூலில் இது போன்ற பல கட்டுரைகள் உள்ளன.

அழகத்தில் வாங்கிய நூல்களில் முதலில் படிக்கத் தொடங்கியிருக்கும் நூல் இது. சந்தியா பதிப்பகம் - ரூ.180.

காத்மா காந்தியடிகளின் கிராமசுயராஜ்ஜியம், தேவைகளை உள்ளூரிலேயே நிறைவேற்றிக் கொள்ளுதல் போன்றவற்றை அம்மா படித்ததில்லை என்று நினைக்கிறேன். ஆனால் அவர்களுக்குள் இந்த கருத்தாக்கம் எப்படியோ தோன்றியிருக்கின்றது. அவர்கள் மீஅடிப்படைக் கிராமத்திற்குச் சென்று வங்கிப் பணியாற்றிய காலகட்டத்தில் அங்கிருந்த கிராமப் பெண்கள் தத்தம் தேவைகளையும், குடும்பத்தின் தேவைகளையும் தாமே பூர்த்தி செய்து கொள்ளுதலையும், வங்கிக்கடன்கள், கூட்டுறவுப் பணிகள் ஆகியவற்றின் மூலமாகக் குடும்பம் சீராக நடைபெற முன் நிற்பதையும் கண்டிருக்கக் கூடும்.

'தாம் நுகர்வதற்கான பொருட்களுக்கான மூலப்பொருட்களைத் தாமே உற்பத்தி செய்து கொள்வதன் மூலம் வெளியுலகைச் சார்ந்திருக்கும் அளவைப் பெரும் அளவில் குறைப்பது' என்ற விருப்பத்தை அவர்கள் கொண்டிருக்கிறார்கள். குப்பாண்டம்பாளையத்தில் வீடு வாங்கும் போது, அவர்களின் கொள்கையை நடைமுறைப் படுத்துவதில் ஆர்வமாய் இருந்தார்.

கிராமப்புறத்தில் ஒரு வீடு வாங்கிய போது, அதுவரை பயிர்களை உருவாக்கிப் பல்லாயிரம் நுண்ணுயிர்களும் பூச்சிகளும் வாழ்ந்த செழுமையான ஒரு வாழ்விடத்தின் மேல் அது கட்டப்பட்டிருக்கின்றது என்ற குற்ற உணர்ச்சி எனக்கு இருந்தது. அதற்கான பரிகாரமாக என்ன செய்ய முடியும் என்ற கேள்விக்கு 'என்னால் முடிந்த அளவுக்கு அந்த வீட்டிற்குள்ளும் சுற்றியும் செடிகளை வளர்ப்போம்' என்பதே என் பதிலாக இருந்தது.

அம்மா மற்றும் என் எண்ணங்களுக்கு ஏற்ப வீட்டின் முன்புறம் சில செடிகளை வைத்திருக்கின்றோம். ரோஜா, மந்தாரை மரம், பாகற்காய், வாழை, பூசணிக் கொடி, சங்குப்பூ, கீரைகள், மாதுளஞ்செடி, பனை, வேம்பு, வெண்டைக்காய், வெங்காயம், தக்காளி ஆகியவை இப்போது விளைந்திருக்கின்றன.

தினசரி உபயோகக் காய்கறிகளுக்கான வெளிச் சந்தைச் சார்பை இப்போது குறைக்கும் முயற்சியில் இருக்கின்றார்கள். இது வெற்றிகரமாக நிறைவேற்றப்பட்ட பின் அடுத்த படிக் காய்கறிகள் மற்றும் பழங்களை விளைவிப்பது என்று நினைத்திருக்கின்றோம்.

மாடியிலிருந்து வடகிழக்குப் பார்வை ::

மாடியிலிருந்து தென்மேற்குப் பார்வை ::

மாடியிலிருந்து தெற்குப் பார்வை ::

மாடியிலிருந்து வடக்குப் பார்வை ::

மாடியில் ரோஜாச் செடிகள் ::

வாசல் கோலம் ::









ந்திரன் பாடல்களை டெக்னோ அதிரடி எனலாம். இப்போது பிடித்திருக்கும் பாடல் 'கிளிமாஞ்சாரோ...'. காரணம், அது பலமுறை கேட்ட வடிவிலும் இசைக் கோர்வைகள் எளிதில் பதிய வைத்துக் கொள்ளுவதாகவும் இருப்பதால் என்று நினைக்கிறேன். அடுத்தது 'அரிமா..' தான்.

ஜென்டில்மேன் வந்த போது 'சிக்குபுக்கு..'வும், காதலனில் 'முக்காலா...'வும் முதலில் பிடித்திருந்தன. சில மாதங்களில் வீட்டுத் தோட்டத்தில் பூக்களைக் கேட்டுப் பார்ப்பதும், என்னவளும் பிடித்திருந்தார்கள். எனவே எந்திரனிலும் இப்போது கேட்கவே கேட்காத 'காதல் அணுக்கள்...' சில காலம் கழித்து உள் ஊறலாம்.

முதல் பத்தியை எழுதியவர் யார் என்று கண்டுபிடித்து விட்டீர்களா..?

பாவேந்தர் பாரதிதாசன்.

Saturday, July 24, 2010

My Name ISKCON.



மிதந்து கொண்டிருந்த குளிர் மேகங்களை ஊடுறுவி வெண் பட்டுப் போன்ற கதிர்க் கோடுகள் பெங்களூர் வானில் ஒளியை பரவ விட்டுக் கொண்டிருந்தன. நகரம் சனிக்கிழமையும் ஓய்வுறாத சாலைகளில் இயங்கிக் கொண்டிருந்தது. இன்ஸெப்ஷனுக்கும் தில்லாலங்கிடிக்கும் உதிரிக் கூட்டங்கள் தியேட்டர்களுக்குப் புறப்பட்டுக் கொண்டிருக்க, கெம்பகெளடா பேருந்து நிலையத்தில் நண்பகல் பனிரெண்டு காலுக்கு இறங்கிக் கொண்டேன்.

80 இலக்கமிட்ட பேருந்து ஒன்றில் ஏறிக் கொண்டு, "இஸ்கான்..!" என்று வாங்கிக் கொண்டேன்.

ண்டர்நேஷனல் சொசைட்டி ஃபார் க்ருஷ்ணா கான்ஷியஸ் என்ற பெயரின் சுருக்கமே இஸ்கான். பக்தி வேதாந்த ஸ்வாமி பிரபுபாதா அவர்களால் நிறுவப்பட்ட அமைப்பு இது. பகவான் கிருஷ்ணனையே முழுமுதற்கடவுளாக கொண்டு இயங்குகின்றது. வெளியே பிரபலமாக 'ஹரே கிருஷ்ணா' இயக்கம் என்று சொல்லப்படுகின்றது. உலகெங்கும் பரவியுள்ள இந்த அமைப்பின் பெங்களூர்க் கிளை ராஜாஜி நகர் அருகே இஸ்கான் ஹில் என்றே பெயரிடப்படுள்ள சிறு குன்றின் மேல் அமைக்கப்பட்டிருக்கின்றது. இதை ராதாகிருஷ்ண மந்திர் என்றும் சொல்கிறார்கள்.

மிகத் தெளிவான வரையறுக்கப்பட்ட பாதை இருக்கின்றது. எண்ட்ரியிலிருந்து எக்ஸிட் வரை ஆங்காங்கே அம்புக் குறிகள் நடப்பட்டிருக்கும் பாதை எவர்சில்வர் தண்டுகளால் உருவாக்கப்பட்டிருக்கின்றது. தொலைந்து போகும் வாய்ப்பேயில்லை.

கொஞ்சம் மலை ஏறியதும் பாதக் காலணிகள் வைக்கும் இடம் உள்ளது. வரிசையாக அடுக்குகள் உள்ளன. அவற்றுக்குப் பெயர்கள் A, B, C என்று துவங்கி Z தாண்டிப் பின் AA, AB என்று நீள்கின்றது. நெற்றியில் நாமமும், சின்னக் குடுமியும் வெண்ணிற ஜிப்பாவும் அணிந்த இளம்பையன்கள் சிமெண்ட் சுமந்த பாலிதீன் மூட்டையை எடுத்துக் கொடுக்க நாம் நம் செருப்புகளை அதிலே போட்டுக் கொடுத்தால், அவர்கள் காலியாக இருக்கும் அடுக்கில் வைத்து விட்டு நமக்கு டோக்கன் கொடுக்கிறார்கள்.

கொஞ்சம் மேலே ஏறினால், கைகளை கழுவிக் கொள்வதற்குத் தண்ணீர் பைப்புகள். கால்களைக் கழுவிக் கொள்ள பாதையிலேயே ஒரு கிடைமட்ட பைப் வைத்து அதில் சில பொத்தல்கள் இருக்க, குளிர் நீர் கசிந்து படிக்கட்டை முழுக்க நனைத்துக் கொண்டிருக்க, நாம் அந்தச் சிறு நீர்ப்பரப்பில் நனைத்துக் கொள்ளலாம்.

இன்னும் கொஞ்சம் தூரம் வழியிலேயே சென்றால், கம்பித் தடுப்புகள் முடிந்து ஓர் அகன்ற வெளி வருகின்றது. அங்கே நின்று பார்த்தால், நமக்கு முன்னே கோயில் பெரிதாக நின்று கொண்டிருக்கின்றது. ஸ்பீக்கர்கள் 'ஹரே க்ருஷ்ண ஹரே க்ருஷ்ண க்ருஷ்ண க்ருஷ்ண ஹரே ஹரே; ஹரே ராம ஹரே ராம ராம ராம ஹரே ஹரே;' என்று திரும்பத் திரும்பச் சொல்கின்றன. பதிவு செய்யப்பட்டதா அல்லது ஒருவர் மைக் முன் அமர்ந்து சொல்லிக் கொண்டிருக்கிறாரா என்று தெரியவில்லை.

முதலில் வருவது நரசிம்மர் கோயில். இரணியனைக் கொல்லும் அதே கோபத்துடன் அமர்ந்திருக்கிறார். வரிசையாகச் சென்று பார்த்து வணங்கினேன். மஞ்சள் வெளிச்சத்தின் நடுவில் அத்தனை நகைகளுடன் தெரிந்தார்.

வெளியே வந்து கொஞ்சம் படியேறினால் வெங்கடாசலபதி நிற்கிறார். சொல்ல வேண்டுமா? தகதகதகவென ஜொலிக்கிறார். உண்டியலும் இருந்தது.

சங்கர் தயாள் சர்மா அவர்கள் குடியரசுத் தலைவராக இருந்த போது திறந்து வைத்த கோயிலாம். கல்வெட்டு சொல்கின்றது.

இன்னும் கொஞ்சம் படிக்கட்டுகள் வழியேறினால் ராதாக்ருஷ்ணர் கோயில்.

மிகப் பெரியதாக இருக்கின்றது. கூம்பு வடிவ உச்சி நம்மைச் சட்டென மிகச் சிறியவனாக உணரச் செய்யும் உயரம். அதன் உடலெங்கும் கண்ணன் ஓவியங்கள். மையத்தில் பிரம்மாண்டமான ஷாண்ட்லியர் மின் விளக்கு ஒன்று தொங்குகின்றது. உயரமான மாடங்களில் எண்ணெய் விளக்குகள். அவை ஏற்றப்படவில்லை. திருவிழாக்களில் திரிபடலாம். டைல்ஸ் தரை. முன்னே பார்த்தால் தங்கக் கோபுரங்களின் கீழே மூன்று பகுதிகள். வலப்புறம் கண்ணன், பலராமன். இடப்புறம் நித்ய கெளரங்கா. கெளரங்கா என்ற பெயர் ஸ்ரீ சைதன்ய மகாப்ரபுவையும், நித்ய என்ற பெயர் அவரது பிரதான சீடரான நித்யானந்த பிரபுவையும் குறிக்கின்றது. மையத்தில் ராதையுடன் கண்ணன். சிலைகளைப் பார்த்தால் வட இந்தியப் பாணி தெரிகின்றது. பூரியில் இருக்கும் பாண்டுரங்கனைப் போன்ற அடையாள உற்சவர்கள்.

இவை பஞ்ச லோகச் சிலைகள் (தங்கம், வெள்ளி, தாமிரம், பித்தளை மற்றும் இரும்பு). இவை கும்பகோணம் அருகில் உள்ள ஸ்வாமி மலையில் தேவஸ்தான ஸ்தபதி மற்றும் அவரது மகனான இராதாகிருஷ்ண ஸ்தபதிகளால் உருவாக்கப்பட்டதாக வலை சொல்கிறது.


நன்றி:: http://api.ning.com/files/7juhZFLXQaSOma8VHkiLhYw06RkJ3QvzFtIrog0bciiaSdWaGz24R6gKDpLiw**MR812kBvA6VcBAEju4kL4N9HM4g8W*x4h/DSCN2682.jpg

தங்கக் கோயில்களை நாம் நெருங்க முடியாது. தர்மதரிசனத்தில் கொஞ்சம் தொலைவிலிருந்து பார்க்கலாம். சிறப்பு தரிசனமும் இருக்கின்றது. வணங்கி விட்டு இடப்புறத்தில் புத்தகக் கடைகள் துவங்குகின்றன. ஆங்கிலம், இந்தி, வங்காளம், தமிழ், தெலுங்கு, கன்னடம், ஒரியா ஏன் சைனீஸிலும் புத்தகங்கள் உள்ளன. இரண்டு குறும் நூல்கள் வாங்கினேன். தமிழில் தான்.

சுற்றி வந்தால் தீர்த்தம் தருகிறார்கள். இதற்கென்றே டிசைன் செய்யப்படுகின்ற தீக்குச்சிக் கரண்டிகள். திரும்பினால் பிரபுபாதா அவர்களின் சிலை இருக்கின்றது. அவருக்கு முன்னே அமர்ந்து தியானம் செய்யத் தளம் இருக்கின்றது. இசைக்கருவிகள் வாசிப்பதற்காக வைக்கப்பட்டிருந்த மேடைக்கு அருகில் அமர்ந்து கண்ணனைப் பார்த்தேன்.


நன்றி::http://www.iskconbangalore.org/panihati-chida-dahi-festival-2010

'உனக்கு எதற்கு இத்தனை பிரம்மாண்டம்? பசுக்கள் மேய்த்துக் கொண்டிருந்த கரும்பயலே உனக்கு எதற்குத் தங்கக் கோபுரங்கள்? இந்தப் பொன் வர்ணப் பாவாடையும் ஜொலிக்கின்ற புல்லாங்குழலும், மின்னுகின்ற மகுடங்களும் உன்னைக் களைப்படையச் செய்யவில்லையா? இப்படி மஞ்சள் தூண்களுக்குள் உன்னை வைத்துக் கொண்டு என்னிடமிருந்து தள்ளி வைக்கப்பட்டுள்ள நீ என் கண்ணன் தானா? இருக்கவே முடியாது. இங்கே உன்னை மஹா செல்வந்தனாக நினைத்துக் கொண்டு அதையும் இதையும் கொடு என்று வேண்டிச் செல்கிறார்களே, இவர்கள் அறிவார்களா நீ ஒவ்வொருவரிடத்திலும் இருப்பதை? நீ வேண்டி இறைஞ்சி நிற்பதெல்லாம் உன் மேலான காதலையும், ஒவ்வோர் உயிரிடத்தும் அன்பையும் கருணையும் அல்லவா? உன்னிடம் எதை வேண்டிக் கொள்வது? நீயே சிறை பிறந்த கள்ளன் அல்லவா? உன்னைத் தெய்வமாக்கி அபிஷேகம் செய்து, குளிப்பாட்டி, அலங்கரித்து மாலை சூட்டிப் பூஜை செய்து எங்கள் மனதிலிருக்கும் ஒரு மாயக் குழந்தையை மறக்கச் செய்ய முடியுமா?'

இராதாக்ருஷ்ணர் கோயிலின் கதவுகளில் மேலிருந்து கீழாகத் தசாவதாரச் சிலைகள். அவற்றின் இரு புறமும் நாரதர், அழகுப் பெண்கள், யானைகள், பறவைகள். யாரும் கவனிப்பதாக இல்லை.

அங்கிருந்து கிளம்பி ஒவ்வொரு தளமாக இறங்க இறங்க மனதிற்குள் கசப்பு அதிகமாகிக் கொண்டே வந்தது. எங்கெங்கு காணினும் வணிகக் கடைகள். சிலைகளும், மாலைகளும், ப்ளாஸ்டிக் பூக்களும், போஸ்டர்களும், காலண்டர்களும், டைரிகளும், மின் அலங்காரங்களும். இல்லை இது என் கண்ணன் கோயில் இல்லை; ஒரு வணிக வளாகம் என்று சொல்லிக் கொண்டே வந்தேன்.

உணவும் விற்கிறார்கள். புளியோதரையும், சிறு மீல்ஸும், மசாலா இட்லி போலிருந்த மராட்டிய இட்லிகளையும் உண்டு விட்டுக் கீழே இறங்கினால் பருப்புச் சாதத்தை அன்னதானம் செய்து கொண்டிருந்தார்கள். அங்கேயும் இரண்டு குப்பிகள் தின்றேன்.

பச்சையாய்க் குளம் ஒன்று காற்றில் அசைந்தாடுகின்றது. வானில் நீர்ப் பொதிகள் உருண்டு கொண்டிருந்தன. எதிரே நகரின் அடுக்குமாடிக் கட்டிடங்களும், கண்ணாடி அலுவலகங்களும் தெரிகின்றன.

கீழே இறங்கி வந்து செருப்பு வாங்கிக் கொண்டு வெளியேறும் போது நான்கு மணி தரிசனத்திற்காகக் கூட்டம் காத்திருந்தது. வெளியேறும் போது தான் பார்த்தேன் எதிரே குருவாயூரப்பன் கோயில் ஒன்று சாத்தியிருந்தது. அங்கே தான் என் கண்ணன் நின்று கொண்டிருப்பான் என்று தோன்றியது. திரும்பிப் பார்த்தால், அலங்காரத் திருக்கோயிலின் கோபுர உச்சியில் நடுங்கிக் கொண்டிருந்த மஞ்சள் கொடி காற்றில் 'வாரல் என்பது போல் மறித்துக் கைகாட்டியது' என்று உணர்ந்தேன்.