Wednesday, March 25, 2015

புத்தகம் - சில எண்ணங்கள்.

BookBozz என்ற இணைய வழி நூல் விற்பனையகத்தின் ஃபேஸ்புக் பக்கத்தில் புத்தகம் பற்றி எழுதச் சொல்லியிருந்தார்கள். அங்கே எழுதியதை இங்கே ஒரு பிரதி எடுத்து வைக்கின்றேன்.

***

புத்தகம்.

சமீபத்தில் மொழி தொடர்பான இரு செய்திகளை அறிய நேர்ந்தது.
தமிழ்த் திரையிசைப் பாடல் இயற்றுனரான மதன் கார்க்கி, தமிழ் மொழியின் எழுத்து வடிவங்களில் சில சீரமைப்பு முயற்சிகளைச் செய்து வருவதாகப் படித்தேன். தற்காலப் பயன்பாட்டில் இருக்கும் எழுத்துக்களில் சில மாற்றங்களைச் செய்வதன் மூலம், நவீன கால மற்றும் வருங்கால மாற்றங்களுக்கு ஏற்ப நம் மொழியைத் தகவமைக்க அவருடைய யோசனைகள் பயன்படலாம் என்பது அவருடைய நோக்கம்.
மற்றொன்று, படுக மொழிக்கான தனித்துவ எழுத்து வடிவங்களை மற்றும் இலக்கணத்தை உருவாக்க வேண்டும் என்று கோரிக்கை படுக சமூகத்தினரிடையே எழுந்து வருக்கின்ற செய்தி. நீலகிரி வனப் பகுதியைச் சேர்ந்த பல பழங்குடியினரில் ஒரு குடி இம்மக்கள். நாடு விடுதலைக்குப் பின், அரசு அளித்த பற்பல சலுகைகளைப் பயன்படுத்தியும் தம் ஆர்வம் மற்றும் முயற்சிகளாலும் முன்னேறி வருகின்றனர். தம் நடைமுறை வாழ்வுக்குப் பெரும்பாலும் கர்நாடக வனப்பகுதியில் வாழ்ந்து வருவதால், இயல்பாகவே படுக மொழி கன்னட எழுத்துக்களையும் இலக்கணத்தையுமே பயன்படுத்தி வந்துள்ளனர். இன்று எழுந்து வரும் புதிய தலைமுறையினர் தமக்கான தனித்த வடிவத்தைத் தம் மொழி கொண்டிருக்க வேண்டும் என்ற இயல்பான விருப்பத்தைச் செயலாக்க முயல்கின்றனர்.
ஒரு மொழி என்பது அடிப்படையில் எண்ணப் பரிமாற்றத்திற்கான ஒரு கருவி. மொழி உருவாகத் தொடங்கிய காலத்தில் இந்த வரையறை பொருத்தமாக இருந்திருக்கலாம். ஆனால் இன்றைய காலகட்டத்தில் இந்த எளிமையான தேவை மட்டும் ஒரு மொழியின் இருப்புக்கான நோக்கமாகக் கருதப்படுவதில்லை. ஒரு மொழி வளர வளர, அதன் பயன்பாட்டுத் தளங்கள் விரிய விரிய, அம்மொழியைப் பயன்படுத்தும் சமூகம் பெருகப் பெருக, பிற சமூகங்களுடன் அச்சமூகம் கொள்ளும் நெடுங்கால உறவுகள் அம்மொழியை வளப்படுத்திக் கொண்டு வருகின்றன. அந்நிலையில் ஒரு மொழி, அச்சமூகத்தின் இறந்தகாலத்தின் பண்பாடு திரண்ட சாற்றைச் சுமக்கின்ற பெருங்குவளையாகவும், நிகழ்காலத்தின் உயிர்த்துடிப்பான கலந்துரையாடலுக்கான ரசவாத பானமாகவும், எதிர்காலத்தின் கனவுகளைப் புனைகின்ற கருவியாகவும் உள்ளது.
”நம்பிப் பணம் கொடுத்தேன்... இப்ப கேட்டா இல்லவே இல்லைங்கிறான்... நல்லா காது குத்திட்டான்...”. இந்த வாக்கியத்தில் இருக்கும் ‘காது குத்தல்’ என்ற சொற்பிரயோகம், ஒரு பண்பாட்டுச் செயலைக் குறிக்கின்றது. முற்காலத்தில் யாரிடமும் பொன் இருக்கின்றதோ, அவர்களே காது குத்திக் கொண்டு தம்மை ஆபரணங்களால் அலங்காரம் செய்து கொள்வார்கள். எனவே திருட்டுத் தொழில் செய்தவர்கள், காது குத்துபவர்கள் போல் வேடமிட்டுக் கொண்டு, பகலில் ஊருக்குள் யாரெல்லாம் தம்மை அழைக்கிறார்கள் என்று கவனித்து அவர்களுடைய வீடுகளைக் குறித்துக் கொண்டு போய் விடுவார்கள். பின்பு, இரவில் அந்த வீடுகளில் கன்னமிட்டுக் கொள்ளை அடித்து மறைந்து விடுவர். இதனாலேயே ஏமாற்றுதல் என்பதற்கு நம் மொழியில் காது குத்தல் என்ற மறைபொருள் சொல் வந்து சேர்ந்தது. எழுத்தாளர் சு.வெங்கடேசன் எழுதிய ‘காவல் கோட்டம்’ என்ற புதினத்தில் இது தொடர்பான அதிகத் தகவல்களைப் படிக்கலாம்.
ஒரு மொழி நெடுங்காலமாகப் புழக்கத்தில் இருந்து வந்துள்ளது என்பதை அறிவதற்கான ஒரு வழி, அதன் எளிமை. ஒரு வாகனத்தை ஓட்டப் பழகுகையில், விரைவே நம் இலக்காக இருக்கும். வாகனத்தின் இயக்கம் முழுக்க நமக்குப் புலப்பட்டு நம் கைகளுக்குப் பழகிய பின், விரைவு அல்ல, நிதானமான ஓட்டமே இயல்பான இயக்கமாக இருக்கும். அது போல, பழங்கால மொழி, பற்பல தலைமுறையினரால் செம்மைப் படுத்தப்பட்டு, செழுமை செய்யப்பட்டு, எளிமையாக இருக்கும். திருமணமான புதிதில் துணைவருக்கு நம் கருத்தைப் புரிய வைக்க, நம் மனநிலையைப் பகிர சில மணிநேரங்கள் எடுத்துக் கொள்ள நேரிடும். பல்லாண்டுகளுக்குப் பின் ஒரு சிறு செறுமலோ, புருவம் உயர்த்தலோ, உதடு பிரியாப் புன்னகையே போதுமானது, அல்லவா?
காற்றில் உலவும் ஓசையின் புற வடிவம் எழுத்து. எழுத்துக்களின் கூட்டிணைவு சொல். அவ்விணைவு, அச்சமூகத்தால் ஏற்றுக் கொள்ளப்படும் ஒரு பொருளைத் தாங்கி நிற்கின்றது. சொற்களின்தொடர் சொற்றொடர் அல்லது வாக்கியம். வாக்கியங்களின் வரிசை பத்தி. பத்திகளின் தொகுப்பு புத்தகம். ஒரு புத்தகத்தில் இருக்கும் ஒவ்வொரு சொல்லும் கூர்மையான நுனி கொண்ட ஒரு குறுவாள். ஒரு புத்தகத்தைப் படிப்பதன் மூலம், நம் மூளையின் மேல் அவ்வாட்களால் கீறிக் கொள்கிறோம் எனலாம். நவீன நரம்பியல், மனித மூளையில் எவ்வளவுக்கு எவ்வளவு அதிகமாகக் கீறல்கள் இருக்கின்றனவோ, அவ்வளவு இயக்கமும் அறிவும் கொண்டதாக அம்மூளை விளங்கும் என்கின்றனர்.
நிறைய புத்தகங்களைப் படிப்பது நிறைய நிகர் வாழ்க்கைகளை வாழச் செய்கின்றது. காலத்தாலும் இடத்தாலும் ஒரு புள்ளியில் பொருத்தப்பட்டிருக்கும் நம் உடல் மற்றும் எண்ணங்கள் இவ்வாழ்வை மீறிச் செல்ல இயலாது. ஆனால் நன்கு சொல்லப்பட்ட ஒரு புனைகதை மாற்று வாழ்க்கை ஒன்றில் நம்மை நிறுத்தும்.

நூல்கள், என்றும் விலகா நண்பர்கள். அவர்களை நிறைய சேர்த்துக் கொள்வோம்; வாழ்வை வண்ணமாக்குவோம்.





***





https://www.facebook.com/bookbozz/posts/812687202134759?pnref=story

Monday, February 02, 2015

வாழ்த்து.


ளியவர்கள் அவர்கள் எளியவர்கள் என்பதாலேயே எப்போதும் பெருங்கூட்டத்துடன் இணைந்து செயல்படுவார்கள். அவ்வாறு இணைதலுக்குப் பின் தங்களது சுயநலங்களைப் போர்த்தி வைத்துக் கூச்சலிடுவார்கள். அவர்களுடைய இணைவு, சூதாட்டத்துக் காய்களின் இணைவு ஒவ்வொரு நகர்த்தலுக்கும் மாறிக் கொண்டே இருப்பது போல் தெளிவாகத் தெரியும். கண்கள் வழியில் விரைந்து கணிக்கத் தெரிந்தவன், கணிக்கக் கற்றவன் அடுத்த நான்கு வெவ்வேறு அமைப்புகள் எவ்வாறு இருக்கும் என்று உருவாக்கிக் கொண்டே இருப்பான்.

வலுத்தவர்கள் எப்போதும் தனித்தவர்கள். அவர்களுக்குள்ளும் கூட்டங்களில் அவ்வப்போது கூடிக் களித்திருந்தாலும், அவர்களுடைய இணைவு திருவிழாக் கூட்டத்தில் நெரிசலிடும் மக்களைப் போல, ஒவ்வொரு நகர்வுக்கும் வேறுபாடே தெரியாது. ஆனாலும் அங்கும் ஒரு கணத்தில் இருந்த தொடர்பு, மறு கணத்தில் வேறொன்றாகி இருக்கும். அந்த வேறுபாட்டை அளக்கத் தெரிந்தவன், அளக்கக் கற்றவன் ஒவ்வொரு உடலும் எந்த கணத்தில் எங்கு இருந்தது, அடுத்த நான்கு கணங்களில் எங்கு இருக்கும் என்று உருவகித்துக் கொண்டே இருப்பான்.

வலுத்தவர்கள் எளியவர்களைத் தம் விருப்பங்களுக்கேற்பவும் வலிமைக்கேற்பவும் அணைத்தும் அகற்றியும் விளையாடிக் கொள்ளுதலே விழைவு. எளியவர்கள் வலுத்தவர்களைத் தம் தேவைக்கேற்பவும் எண்ணிக்கைக்கேற்பவும் நெருங்கியும் நெருக்கியும் விளையாடிக் கொள்ளுதலே சூழ்.

எளியவர்கள் வலுத்தவர்களாக ஆகுந்தோறும் தாங்கள் தனித்தவர்கள் என்று எண்ணத் தொடங்குவர். அதுவரை தாம் ஆடிவந்த பகடை ஆட்டத்தில் இப்போது தாம் எதிர்ப் பக்கத்தில் அமர்ந்திருப்பதை அவர்கள் அறியும் முன்னம், அவர்களை ஆட்டத்திலிருந்து விலக்கி விடுபவனே தொடர்ந்து அந்த ஆட்டத்தின் கள நிர்ணயிப்பாளனாகவும் முடிவிலாது நடக்கும் விதி மாறுதல்களில் மாறாதிருப்பவனாகவும் முடிவை நெருங்குந்தோறும் திசைகளைத் திருப்பி விடுபவனாகவும் தொடர்ந்து இயங்கிக் கொண்டேயிருக்கிறான்.

இந்த அலகிலா ஆடலின் நாயகன் முக்கண்ணனை வணங்குவோம்.”

“ஓம்..! ஓம்...! ஓம்...!”


”காற்றின் ருசி ஓசையில் இருக்கின்றது. ஓசையைக் கேட்கும் மனமில்லாதவர்க்கு அந்த ருசி கிடைப்பதில்லை. ஓரிடத்திலிருந்து அள்ளி வரும் ஓசையை ருசிப்பவர் நெஞ்சிலே இறக்கி வைத்து விட்டு காற்று விடுபடுகின்றது. பின் அந்த ஓசை அங்கே வித்தாகி முளைத்துக் கிளைத்துப் பேருரு கொண்டு விருட்சமாகின்றது.

ஓசையின் சுவை கேட்பவரின் சொல்லிலே இருக்கின்றது. விதைந்த ஓசை வெளி வரும் சொல்லில் சுவைத்தவரின் இச்சை வெளியாகின்றது. அவ்விச்சை தன்னைக் காட்டிக் கொள்வதன் அகங்காரம் வழியாக மேலும் ஓருரு கொண்டு காற்றில் மிதந்து மற்றொருவரை அடைகின்றது.

ஓசையற்ற பெரும்பாழில் அமைதியின் கூடு உள்ளது. அங்கே தன்னைச் சுருட்டித் தானும் துயில்கின்ற நீலநீர்வண்ணனை வாழ்த்துவோம்.”

“ஓம்..! ஓம்...! ஓம்...!”


“யாதுமற்ற சூன்யவெளி தன்னைத் தான் அறிதல் பொருட்டுத் தான் என்பதை உணர்ந்தது. உடனே தான் அல்லாத பிறன் என்பதைப் பிரித்தது. தானே தானும் தானே பிறனும் என்பதை உணர்தலுக்குள் இருந்த இடைவெளி காலம் என்று உண்டானது. காலம் தொடர்ந்து வளரத் தொடங்கியது. இரண்டு நிலைகளுக்குமான இடைவெளி அப்படியே விரிந்தது. அங்கே உருவான பிறனின் தான் தன் முதல் உதிர்ச் சொல்லாக ‘அம்மா’ என்று அழைத்தது. தான் தான் தன் தாய் என்பதை நினைவில் நிறுத்தியது. இரண்டுக்கும் இடையேயான விரிதல் மேலும் மேலும் நிகழ்ந்தது.

பிறன் மீண்டும் தன்னை அடைதல் பொருட்டு தான், தீரா மார்புகளாலும், குன்றா விழிகளாலும், திரும்பா விரல்களாலும், சுழிக்கா பாதங்களாலும் தன்னை ஆக்கிக் கொண்டது. காலத்தின் இடையே நின்ற ’காளி’ என்றானது. தாமரை ஒரு கரம் தாங்க, சூலம் மறு கரம் கொள்ள, அபயதரிசனம் ஒரு கரம் காட்ட, அருள் பொழிதலை ஒரு கரம் செய்ய அவள் மாவுரு கொண்டாள். அவள் நின்ற கோலம் விண்ணை நிறைத்தது. அவள அமர்ந்த கோலம் மண்ணை நிறைத்தது.

அவள் காமரூபிணி; செளந்தர்யசுந்தரி; அவள் காலவாஹினி; தூயஸ்வரமோஹினி; நிர்வாணபயங்கரி. அந்த அன்னையைத் துதிப்போம்.”

“ஓம்..! ஓம்...! ஓம்...!”


”மண்ணில் நெருப்பு ஒன்று தன்னை நிறுவிக் கொள்ள கரணியொன்று தேவைப்படுகின்றது. அது விழுந்த பிணமோ, வீழ்ந்த மனமோ, சரிந்த நாடோ, உளுத்த மரமோ. ஆனால் தன்னைத் தானே அறிந்து தானே சுழன்று தன்னில் மூழ்கி தன்னில் நிறைந்து பிறிதொன்றின் துணையொன்றும் கொள்ளாமல் எரிந்து கொண்டிருப்பவன் கதிரவன்.

மண்ணில் நீர் ஒன்று தன்னை நிறைத்துக் கொள்ள வழியொன்று தேவைப்படுகின்றது. அது படர்ந்த நதிப்பெருக்கோ, சுழித்த அருவிச்சாரலோ, திரண்ட குளமோ, உவர்ந்த பேராழியோ. ஆனால் தன்னைக் குறுக்கித் தன்னில் குளிர்ந்து தன்னைச் சுவைத்து பாதையொன்றின் தடமில்லாமல் நகர்ந்து கொண்டிருப்பவன் முகிலன்.

தன்மயக் குளிரும் தன் மையத் தகிப்பும் ஒன்றையொன்று சூழ்ந்து ஒன்றில் ஒன்றை நிரப்பி கொதிப்பும் தணப்பும் இணைந்து புணர்ந்த புகைமண்டலமே தனக்கென்று உருவற்ற உருவின் உயிர்களாய்த் தன்னைப் பங்கிட்டு தானும் தீராமல் மிதந்து கொண்டிருப்பவன் வாயு.

இம்மூன்றையும் சுமந்து அனைத்து களியாட்டங்களையும் அனுமதித்துத் தன்னில் நிகழ்த் தொடர்களைக் கண்ணுற்று நிகழ்பவன் பூமி.

பல்லாயிரம் கோடி கதிரவன்கள், பலநூறு கோடி முகிலன்களைப் புசித்துப் பிரித்துச் சேர்த்து வர்ணங்களால் இருளை நிரப்பி, ஆக்கியும் அழித்தும் அழித்தவற்றை ஆக்கியும் ஆக்கியவற்றை நிர்மூலமாக்கியும் நில்லா வெளியில் இல்லாதிருப்பவன் விண்.

பிசைந்து வைத்த கல் மேலே தெய்வங்கள் குடியேறுகின்றன. இவ்வைந்து பேராற்றல்களும் கலந்த தம் பல்கோடி வகைமுறைகளில் மீச்சில துளிகளான நம்மில் இவ்வைவரும் தத்தம் போக்கில் தம்மை நிகழ்த்திக் கொள்ளட்டும்.”

“ஓம்..! ஓம்...! ஓம்...!”

Tuesday, January 27, 2015

மன்த்லி பாஸ்.

பெங்களூருவில் மன்த்லி பாஸ் வாங்கினேன்.

மாநகரின் ஒரு பகுதியிலிருந்து மற்றொரு தொலைவுப் பகுதிக்கு மாற்றி இருக்கிறார்கள். நான் தங்கியிருக்கும் ஊரோ திப்பு காலத்தில் பெங்களூரு கோட்டைக்கு அசலூராக இருந்திருக்கும். அவ்வளவு தொலைவு. இறக்கைகளின் ஒரு நுனியிலிருந்து மறு நுனிக்குப் பயணிக்கையில் தலைமேல் சிறு இளைப்பாறல் கொள்ளும் சிற்றெறும்பைப் போல், இரு பேருந்துகள் மாற்றிப் போக வேண்டும். கணக்கிட்டுப் பார்க்க சுளையாக ஒரு நூறு தினம் செலவாகி விடும் போல் தோன்றியது. எனவே மாதப் பயணச்சீட்டு எடுத்து விடல் உசிதமாகப் பட்டது.

இன்று சனிக்கிழமையை முற்பகலை அதற்காக ஒதுக்கினேன்.

மேக மூட்டைகளை நிரப்பிய கூடையைக் கவிழ்த்துப் போட்டது போல் வானம் திரும்பியிருந்தது. எப்போதும் திறந்து கொள்வேன் என்று பயம் காட்டிக் கொண்டிருந்தது. நேற்று இரவின் மழை மிச்சங்கள் ஓரங்களில் பழத்தோல்கள், கிழிந்த டிக்கெட்டுகள், பேனா மூடி, ட்ரான்ஸ்பார்மரின் தலைகீழ் பிம்பங்களைச் சுமந்தது. ஆட்டோக்கள் வரிசை கலைந்து டிராவல்ஸ் வாசல்களில் பெட்டியர்களை அள்ளிக் கொள்ள நின்றன.

செய்ண்ட் ஜான்ஸ் சிக்னல் மாநகரின் எல்லா சிக்னல்களையும் போலே காத்திருப்போரின் பொறுமைகளை விழுங்கிக் கொண்டே மடை மாற்றியது. மெஜஸ்டிக் செல்லும் பேருந்துக்காகக் காத்திருக்கையில் வழக்கம் போல் ஏ.ஸி. தாங்கிகளே வந்தன; நின்றன; சென்றன.

பத்து நிமிடங்களுக்குப் பின் 360 வந்தது. அழுக்கடைந்த கண்ணாடிக் கதவுகள் முனகிக் கொண்டே திறக்க, அடைந்த கூட்டத்தை அடைந்து அடைந்தேன். மூக்கு மேல் நுனியில் குங்குமம் வைத்த ஸ்ரீனிவாசன் 20 ரூபாய் வாங்கிக் கொண்டு டிக்கெட்டுகளை (14+6) கிழித்துக் கொடுத்தார். ஷாந்தி நகருக்குப் போய்க் கொஞ்சம் பேரை உதிர்த்து விட்டு இன்னும் கொஞ்சம் பேரை உள்வாங்கிக் கொண்டு போஸ்டர்கள் தின்ற சுவர்களின் இடையே புகுந்து புகுந்து மெஜஸ்டிக் வந்து சேர்ந்தது. வழியில் கொஞ்சம் போல் தூறி விட்டு, வைப்பர்கள் இயங்குவதற்குள் காணாமல் போயின.

மெஜஸ்டிக் இன்னும் குளிர்வாய் இருந்தது. குளிர்பானக் கடை ஒன்றின் அருகே திருத்தமான அழகான முகம் கொண்டிருந்த இள நங்கை காத்திருந்தாள். அவள் போக வேண்டிய பேருந்து இன்னும் வாராதிருந்திருக்கலாம்; அவள் தந்தையோ தம்பியோ கழிப்பறைக்குச் சென்றிருந்திருக்கலாம்; அவள் சும்மா பேருந்துகளின் இயக்கங்களைப் பார்ப்பதற்காகவும் வந்திருக்கலாம்.

கர்நாடகா வங்கியின் ஏ.டி.எம் கூண்டுக்குள் பணம் எடுத்துக் கொண்டு பி.எம்.டி.சி. அலுவலகம் சென்றால், அங்கே கவுன்ட்டர்கள் டிக்கெட் வரிசையில் அமைந்திருந்தன.

ஏ.சி. அற்ற பேருந்துகள் என்றால் மாதம் 1050. அன்றேல் 2100. விண்ணப்பப் படிவம் வாங்கி நிரப்பி, கொஞ்சம் தள்ளி வேப்ப மரத்தடியில் இருந்த பெஞ்சில் சிந்தியும் சிதறியும் வழிந்தும் காய்ந்தும் குழம்பியும் நிரம்பியும் இருந்த பசை டப்பாவை ஒரு குச்சி வைத்துக் கலக்கி எடுத்து நம் புகைப்படத்தின் வெண் முதுகில் பூசி அப்பினால், வாங்கிக் கொள்கிறர்கள். கூட பணத்தையும். பாஸ் எண்ணைக் குறித்துக் கொண்டு அட்டையைத் தந்து விடுகிறார்கள். மேலே முதல் மாடிக்குக் கொண்டு சென்றால், லேமினேஷன் அடித்துப் பத்திரம் செய்கிறார்கள்.

நிறைய கல்லூரியர்கள். மாதத் துவக்கம் என்பதால் புதுப்பித்தல்கள் நடந்தன. விரல்கள் மறைத்த சிரிப்பில் பெண்கள் தங்களுக்குள் எதையோ மறைவாகப் பேசிக் கொல்கிறார்கள். வரிசை பட்டுப்பூச்சி பறவை ஆதல் போல் மெல்ல மெல்ல நகர்கின்றது. அக்குளில் கைப்பை வைத்த அந்தப் பெரியவர் புதிதாக மாத அட்டை வாங்கி என்ன செய்யப் போகிறார்? சந்தனப் பொட்டு துளியூண்டு வைத்த இரு மூத்த பெண்கள் படிக்கட்டுகளை எண்ணி எண்ணி இறங்குகின்றனர்.

Monday, January 19, 2015

கோட்டையின் கூரை மேல்.

(சோவியத் யூனியனின் வீழ்ச்சிக்குப் பின் கண் திறக்கப்பட்ட ஒரு கடிதம்.)

ன்புள்ள அலெக்ஸ்,

தற்கொலை செய்வதைப் போன்ற ஓர் இனிய நினைவு வேறில்லை. அது உடனடியாக மனதில் ஓர் இலகுவை ஏற்படுத்தி விடுகின்றது. வாழ்வின் உவப்பான நேரமாக அது எப்படியோ மாறி விடுகின்றது. பின் இனி நிகழும் எதுவும் இழப்பில்லை என்று தோன்றி விடுகின்றது. இனி எதுவும் துயராக நிகழப் போவதில்லை என்று மகிழ்வு ஏற்படுகின்றது.

இன்று இரவு மற்றுமொரு முறை அதை நினைத்துக் கொண்டேன். உருகி நிறைந்து படிந்த பனி மலைகளைப் போல மெழுகுகள் எரிந்து கொண்டிருந்தன. சின்னச் சுடர் ஒன்று இன்னும் சில மணிகளில் தற்கொலை செய்து கொள்வதை அறியாது ஒளிர்ந்து கொண்டிருந்தது. அதன் மென்மையான மஞ்சள் மடியில் நீல தகிப்பு. பாதம் பற்றி எழுந்த பரு உடல் நுனியில் கூர்மை கொண்டு, ஜன்னல் வழியே கசிந்து வந்த குளிர்க்காற்றுக்குத் துடித்து கொண்டிருந்தது.

என் ஜன்னல்களுக்கு வெளியே இந்த டிசம்பர் மாதம் இத்தனை பனிக்கு உள்ளே இந்த நகரம் எப்படித் தான் இயங்குகின்றது என்று ஒவ்வொரு நாளும் வியந்து கொண்டிருப்பேன். பொருக்கு பொருக்கான துகள்களை உதறிக் கொண்டு இளம்பெண்கள் நடந்து செல்வார்கள். மன்னரின் இலச்சினையைப் பதிந்து கொண்ட தோல் தொப்பியை அவ்வப்போது தலைகீழாக்கி அந்த பற்கள் எடுப்பான ட்ரம்பெட் இசைக் கலைஞன் மூன்று மாதங்களுக்குப் பின்னான வசந்தத்தை இப்போதே இசையால் உருக்கிக் கொண்டு அழைத்து வருகின்றான். நீல மணிகளாலான மாலைகள் சிலவற்றை அணிந்து கொண்டு இள நங்கையர் பனியால் மங்கலான தெரு விளக்குகளின் கீழே நின்று, அன்றைய வயிற்றுக்காக மேல் சட்டையின் இரு பொத்தான்களைத் திறந்து வைத்து, ஈரம் படியும் மென்மார்புகளைக் காட்டிக் கொண்டிருக்கிறார்கள். சாரட் ஒன்று வருகின்றது. இறுக்கப் போர்த்திய கண்ணாடிக் கூண்டுக்குள் கோழிக்குஞ்சுகளைப் போல் ஒரு சிறுவனும் சிறுமியும் கண்ணாடிகளில் முகங்கள் பதிய சாலையை வேடிக்கை பார்க்கிறார்கள். அவர்கள் தெற்குப் பிரதேசத்திலிருந்து வந்திருக்க வேண்டும். பழுக்கத் துவங்கியிருந்த சுருண்ட மயிர்கள் அவர்களுடைய களங்கமற்ற முகத்தில் இன்னும் களங்கமற்ற சிரிப்புடன் நிறைந்திருந்தன.

மதுச்சாலையில் மூன்று பேர் இன்னும் தங்களை மூழ்கடிக்காத திரவத்தின் முன் இறைஞ்சி கொண்டிருந்தார்கள். இழுத்துக் கட்டிய பூட்சு கால்களைக் கவ்வி பிடித்திழுக்கத் தங்களை இன்னும் பூமியிலேயே தக்க வைக்க வேண்டி, ஒருவரையொருவர் கைகோர்த்துக் கொண்டு போலன்ஸ்கியின் பாடலை உரக்கப் பாடினார்கள்.

போலன்ஸ்கியை நீ அறிவாய் தானே? நம் பள்ளிக் காலத்தில் கட்டாய ராணுவப் பயிற்சியில் இரவுகளில் எரியும் தீ முன் வட்டமாய் அமர்ந்து சேர்ந்து பாடுவோம் அவன் பாடல்களை. அவனுடைய தேசப் பாடல்களை.

"கூறுவோம் நம் தேசமே..
யாவிலும் பெரிதென்றே.."

என்று தொடங்கும் அவனுடைய பிரபலமான பாடல் பயிற்சியின் ஒவ்வொரு இரவிலும் இறுதிப் பாடலாக ஒலிக்கும்.

அவனுடைய பிரபலமான பாடல், "ஆதலினால் நாமெல்லாம் வாழ்த்துவோம் மன்னரையே..!" என்று முடியும்.

நம் கண்காணிப்பாளர், ரகசியமாகக் கிடைத்த வோட்காவைப் போன்ற பானத்தை அருந்தி விட்டு களிவெறியில் மிதக்கத் துவங்குகையில், நாம் போலன்ஸ்கியின் காதல் பாடல்களைப் பாடுவோம். உண்மையில் அவை காதல் பாடல்கள் தானா? தன் சிறுவயதில் முகத்தில் பிசிறடித்த பருக்கள் பதிந்த காலங்களில் அவன் கண்டு உடனே தொலைத்த ஒரு பெண்ணைப் பற்றி அல்லவா அவன் வாழ்நாளெல்லாம் பாடி அலைந்தான். அவளுக்கு இவனைப் பார்த்த ஞாபகமே இருந்திருக்காது. செயிண்ட் பால் தேவாலயத்தில் ஒரு சீமாட்டி போல் மனமகிழ்வோடு வந்திறங்கிய ஒரு பெண் அவள். இவன் கண்ட நொடிநுனியிலேயே விழுந்தான். அவன் இதயத்திலே முதல் முதலாக ஒரு தனி உணர்வு எழுந்து படர்ந்தது.

"பைன் மரங்களின் வரிசைகள் தொலைவினிலே..
பனி நிறை முகடுகள் தொலைவினிலே...

மழை சுமக்கும் முகில்களின் சூல்போலே
எல்லோராலும் விரும்பப்படுபவள் வந்தாளே..

சைபீரிய மான்களின் தோல்போலே
முழுதுமணிந்த உடைகளாலே...

எல்லாம் மறைந்து கிடந்தனவே...
புன்னகை மறைக்க மறந்தனவே..

அவள் கண்கள் நதியில் சுழல்போலே
தொட எண்ணி நினைத்தும் பயந்தனரே..

அவள் கரம் இரவில் துயர்போலே
அனைவரும் அறிவரே, பகிர முடியாதே...!"

எத்தனை பாடல்கள்..! எத்தனை தருணங்கள்..! அத்தனையிலும் அவன் அவளைத்தானே நினைத்துக் கொண்டான்!

நீல வானம் வெகு தொலைவில் எங்கோ நின்று கொண்டிருக்கும். ஆங்காங்கே வைரத்தை தொட்டு வைத்தது போல் சுடர்ந்து சுடர்ந்து அடங்கும் நட்சத்திரங்கள். கருநீலமோ கருப்பே தானோ பேதம் தெரியாத மலைச் சிகரங்களும் மலைத்தொடர் மடிப்புகளும் திசைகளெங்கும் நம்மைச் சூழ்ந்திருக்கும். கனத்த போர்வைகளுக்குள் நம்மை அமிழ்த்திக் கொள்ளும் முன் நாம் எல்லோரும் போலன்ஸ்கியின் அதே துயரத்தை நம் நெஞ்சில் தாங்கிக் கொண்டு, கண்ணீர் விட்டு அழுதவாறே கலைவோம்.

போலன்ஸ்கியும் தற்கொலை தானே செய்து கொண்டான். குதிரைகளைப் பயிற்றுவிக்கும் பயிற்சிக் கூடத்தில் கருஞ் சோளக்கதிர்கள் போன்ற சிகைகள் பறக்க விரைந்து ஓடிய கறுப்புக் குதிரை ஒன்றைத் தழுவ முயன்று, அது பிடிப்பின்றி அவன் மேலேயே சரிந்து, உயிரை விட்டான். அவனுடைய காதலும் அப்படித்தானே அவன் மேல் அவன் வாழ்வெல்லாம் சரிந்து கிடந்தது. குதிரைக்கு இணையாக ஓடும் முன் அவன் உரக்கக் கூவினான். "அவள் வந்து விட்டாள்... வந்து விட்டாள்..."

மதுச்சாலையின் அந்த மூன்று மனிதர்களும் கைகோர்த்துக் கொண்டு சுற்றிச் சுற்றி வரும் போது தங்களை போலன்ஸ்கியாக நினைத்துக் கொள்வதைக் காண்கிறேன். அவர்களில் ஒருவன் பாடி அழுது கொண்டிருந்தான். ஒருவன் பாடி சிரித்து கொண்டிருந்தான். இறுதியானவன் இருவரையும் மாற்றி மாற்றிப் பார்த்து கொண்டே பாடிக் கொண்டிருந்தான். "வானிலே தேவனும் அவன் மடியில் பிள்ளைகளும்" என்ற போலன்ஸ்கியின் பாடலை அவர்கள் பாடியதைக் கேட்க முடிந்தது.

இன்று இரவு நானும் அவனைப் போல தற்கொலை செய்து கொண்டு, கிளம்பி விடுவது என்று முடிவு செய்து வைத்திருக்கிறேன். முடிவெடுத்தவுடனே வாழ்க்கை இனிப்பாகி விட்டது போல் தோன்றுகின்றது. இனி ஒவ்வொரு நொடியும் விதிகள் எதுவும் எனக்கில்லை. மலையடிவார இடுக்கில் தன்னைக் கொண்டே துளைத்துத் துளைத்துத் தனக்கான பாதையை உருவாக்கிக் கொள்ளும் புழுக்களைப் போலே, தம் விதிகளை உருவாக்கிக் கொண்டு அவற்றின் மூலமே தம் வாழ்க்கையை அமைத்துக் கொள்ளும் மானுட வாழ்வு, இனி எனக்கு இந்த இரவில் மட்டுமே என்று எண்ணுகையில் பெருமகிழ்வு மனதில் பிறக்கின்றது.

இனி இடுங்கிக் கொண்டு செல்லும் வாழ்வு எனக்கில்லை; சொதசொதவென ஈரம் முயங்கும் துக்கங்களும் எனக்கில்லை; சங்கிலிக் கணுக்களின் கூர்நுனிகள் செருகி திசைகளெங்கும் இழுபட்டு குருதி கசிந்தொழுகும் கண்ணீரும் எனக்கில்லை. அனைத்திலிருந்தும் விடுதலை; அனைவரிடமிருந்தும் விடுதலை;

Tuesday, January 13, 2015

தனித்து ஒரு பாடல்.

ழை நகர்ந்த பின் வந்த மாலையில் அவன் மட்டும் பூங்காவில் அமர்ந்திருந்தான். விளையாடிய பையன்கள் வீடு திரும்பியிருந்தனர். அவர்களுடைய சின்னஞ்சிறு கூச்சல்கள் மட்டும் இன்னும் சுற்றி வந்தன. நகரம் செயற்கை ஜொலிஜொலிப்புகளால் போர்த்தப்பட்டிருந்தது. இருண்டு கொண்டு வந்த வானத்திற்கு மேலே அகண்டாகாரமான இருள்வெளி மெளனமாய் உறைந்திருந்தது. மேலிருந்து ஒரு தேவன் பார்த்தாலும் தனித்துத் தெரியுமளவுக்கு பூங்காவில் கழுவப்பட்டிருந்த பசிய இலைகளின் நடுவே, சேற்றுமணம் நிரம்பிய காட்டுக்குள் தனித்திருந்தான்.

சின்னச் சின்னப் பூச்சிகள் கிளம்பி, அந்தக் குளிர் இரவை நிரப்பத் தொடங்கியபின் அவன் சட்டைப்பையில் கொண்டிருந்த மவுத் ஆர்கனை வாய்க்குச் சூடினான். அவன் நெஞ்சில் கெட்டிப்பட்டிருந்த சோகக் கதுப்புகளை, மூச்சின் வெப்பத்தால் கரைத்து, உருக்கிக் கரைத்து, மென்னீராக்கி, இன்னும் வெப்பம் கொடுத்து ஆவியாக்கி, வெளித்தள்ளிய அனல்காற்றின் ஜதி, ஆர்கன் வழியாக மென்சூட்டில் துயரப்பாடல்களாகி வெளிவந்தன.

"மரங்களோ புதர்களோ பறவைகளோ பூக்களோ
மறந்திடாதீர் என்னையே...

பனிகளோ குளிர்களோ தளிர்களோ இலைகளோ
புதைத்திடாதீர் என்னையே..."

என்று அவன் பாடிக் கொண்டே பூங்காவை விட்டு வெளியேறினான். இனி அவன் அங்கு திரும்பப் போவதில்லை.

நகரம் தன் விருப்பங்களை மர்மங்களின் மேடையின் படுதாவுக்குள் நிகழ்த்தி இரவின் புதைகுழிக்குள் அமிழ்ந்து கொண்டிருக்க, மஞ்சள் தெரு விளக்குகள் கவிழ்ந்த நீர்த் தேக்கங்களைக் கலைக்காமல் அவன் செல்லத் துவங்கினான்.

அவனை அந்நகரம் அறிந்ததில்லை. அல்லது, அவனைப் போன்ற பல்லாயிரம் பேரை அது அறிந்திருந்தது; அழித்திருந்தது; மறந்திருந்தது. அவன் இருமை சரிந்திருக்கும் குறுக்குச் சந்துகளிலும், மேம்பாலங்களின் திரட்சியான பாதங்களிலும் சாய்ந்து நிற்கவில்லை. அவன் பாதை அவன்முன் செல்கின்றது. அவன் தன் வாத்தியத்தையும், வாத்தியமான உடலையும் சுமந்து கொண்டு நகரின் இரா வீதிகளில் இறுதி உயிராய் உலா சென்றான்.

அவனை யாரும் தடுப்பதில்லை; அவனால் யாருக்கும் தொல்லையுமில்லை. அவன் தன் பாட்டுக்குப் பாடுகின்றான். பனி வந்து போர்த்திக் கொண்டபின் அடைக்கப்பட்ட ஜன்னல்களுக்குள், சாத்தப்பட்ட கதவுகளுக்குள், மூடப்பட்ட கூரைகளுக்குள் அணைப்பின் சூட்டுக்குள் சுருண்டு கொள்ளும் நகரத்தில் அவன் பாடலை யாரும் கேட்பதுமில்லை. அவன் கேளாக் காதுகளை நம்பி நிறுத்தவுமில்லை. அவனுக்குத் திறந்திருக்கும் சாலைகளையும் காலியான தெருக்களையும் கொடுத்து விட்டு, நகரம் ஒதுங்கி வழிவிட்டபின், அவன் யாரையும் நினைத்துக் கொள்ளாமல் தன் பாடலை இசைத்துக் கொண்டு வெளிரிய வீதிகளில் சென்றான்.

மழையில் ஊறிப் போன காகிதங்கள் நகரத்தின் சுவர்களில் அழுக்காய் ஒட்டிக் கொண்டிருந்தன. கருப்புநதிச் சாலைகள் குளிர்ந்திருந்தன. பெருநகரத்தில் எங்கோ ஓரிடத்தில் பாதாளம் செல்லும் வழியைக் காவல் காத்திருக்கும் மூடி ஒன்று யாராலோ திறக்கப்பட்டிருக்கும். அவன் அதை நோக்கியே தான் பாடலைப் பாடிக் கொண்டு சென்றான். கீழ்மையின் அத்தனை அழுக்குகளும், கழிவுகளும் கொடும் நாற்றத்துடன் சீறிப் பாய்ந்து ஆக்ரோஷமாய் அடித்து ஓடும். அந்த பாதாள அனல்நதியின் படித்துறையில் அவன் தன் பாடலுடன் இறங்கினான். அடியாழத்தில் அவன் மூழ்கிப் போனான். அவனுடைய பாடல் மட்டும் நறுமண சுகந்தத்துடன், அந்த இருள் பாதையில் தன்னை நிகழ்த்திக் கொண்டேயிருக்கும்.