இந்த ஒற்றை ரோஜா இதழ்ப்பிசிறு எங்கிருந்து வந்து என் மேல் விழுந்தது? சரியும் ஒரு பட்டுத் திரையின் மெல்லிய வழிதல் போல், சொட்டுச் சொட்டாய்ச் சேர்ந்த நீர்த்தாரை ஒன்றின் வடிதல் போல், நமக்கிடையே நிரம்பியிருக்கும் குளிர்க்காற்றின் அடுக்குகளில் மெல்ல மெல்ல தவழ்ந்து படர்ந்து கடந்து வந்ததா உன் காதலை ஏந்தி?
இதன் அடர்சிவப்பு, உன்னுள்ளில் சேர்த்து வைத்திருக்கும் என் மீதான ப்ரேமையின் மெளனத்தைச் சொல்கிறதா? இதன் மேலே புகை போல் விரவியிருக்கும் குளிர்மணம், முன்னிரவில் நீ கொடுத்த முத்தமொன்றின் ஈரம் போல அத்தனை இனிக்கிறதே?
மலரிதழ் நுனியை என் நாவால் தடவிப் பார்த்தேன். உன் மென்சருமத்தின் பூமுடி போல் அத்தனை கூச்சம்; ஒரு மென் சூடு;
கொஞ்சமாய்க் கிள்ளி சுவைத்தேன். உன் சிறிய இளம் மார்புகளுக்கு இடையில் வைத்து அனுப்பினாயா, என்ன? அதே நடுக்கம், அதே வியர்வை வீச்சம்.
ஒரு இதழ் போதாது; இந்த இரவை நிரப்ப, உன்னிலிருந்து அனைத்து இதழ்களையும் விடுவி. ரோஜா செம்மழை என் மேல் பொழியட்டும். அதன் புதர்களுக்குள் என்னைப் புதைத்துக் கொண்டு, இந்த வாழ்வை நீந்திக் கழித்து விடுவேன்.
No comments:
Post a Comment