Monday, April 29, 2019

விண்முழு துளிர்பூச்சிகள்.

கொல்லும் தனிநிலவின்
வெண்ணிழல்
பனிநனைக் குளிரின்
கூர்நுனி கிரணங்கள்
விண்முழு துளிர்பூச்சிகள்
வீசுகாற்றில் மிதக்கும் ஓசைகள்
கருநிழல் உண்ணும்
வெம்மை உலர் சுவர்கள்
இருள்நிறை இல்லங்கள்
ஒற்றையொளி அறைச்சதுரம்
பஞ்சடைத்த படுக்கை
துஞ்சிடா இரு விழிகள்.

மொழித்துணை பிடித்து
விழித்துனை நினைத்து
விரல்வழி வழி சொல்நிரை
முரல்வர்ணச் சிதறல்கள்

மண்மேல் வெகுதூரம்
தீண்டியும் விலகியும்
பேசியும் மெளனித்தும்
வளர் உறவிது தளிர் மரமிது
களர் நிலமிதில் கான் பசியது

நினைவலை மிதக்கும் படகினில்
இருமனம் உலவிய கதைகள்
ஒளிவிழும் சாலையில்
ஒழுகிய மாலைப் பொழுதுகள்
ஒருவரி இருவரும்
ஒருமித்துளறிய வியப்புகள்
சொல்லிலா பரிமாற்றங்கள்
மெளனத்தின் பங்குதாரர்கள்

இன்றுனை இழந்ததன்
இறுகிய கணங்களில் இருப்பு
இனியொரு முறை காணுதல்
இயலுமா என்றொரு மலைப்பு

இன்னுமொரு இவ்விரவு
உறக்கம் விலகிய களைப்பு
இன்றோடு விலகிடுதல்
என்றோ என்னும் தவிப்பு

மலரணிச் சிறுகூந்தல்
பரவிய படுக்கையில்
உறங்கிடும்  எழில்பரலே,
உன் கனவினில்
உலைந்திடும் பொன் வண்டென நுழைந்தனன்;
மனமெனும் குடுவைக்குள் மறைத்திடுக;
தினமொரு சிறு சிறகளிப்பேன்; சூடிப் பறந்திடுக.

No comments: