Tuesday, September 19, 2006

மெளனம் கலைந்தே ஓட..

சில்லென்று மழைத் தூறல் அடித்துக் கொண்டிருந்தது. துளிகள் பாதையோர சின்னச் சின்னச் செடிகளில் இருந்து சொட்டிக் கொண்டிருந்தன. மஞ்சள் வண்ணப் பூக்கள் வீசுகின்ற மென் தென்றலுக்கு லேசாக ஆடிக் கொண்டிருந்தன..

ஒவ்வொரு முறையும் மழையில், போக்குவரத்து நெரிசலில் சிக்கிக் காத்திருக்கையில் நான் இப்படி நினைப்பதுண்டு. ஆனால் இங்கு மழை ஒருபோதும் இப்படி பெய்ததில்லை.

திறந்திருக்கும் பாதாள சாக்கடை மூடிகளைத் தாண்டி வழிந்து ஓடும். ரோட்டோரங்களில் தேங்கி எண்ணெய் நிறங்களைக் காட்டும். அடித்த வெயிலைக் கிளப்பி விட்டு, நச நசவென இருக்குமாறு செய்யும்.

சென்னை மழை.

ஒரு செப்டம்பர் மாத மழை நாள்.

நான் அருண். டைடலில் வெட்டி, ஒட்டிக் கொண்டிருக்கிறேன். இன்று மதியம் ராம்கோ வரை வந்தேன். அங்கே என் கல்லூரி நண்பன் ஆனந்தைப் பார்த்து, அருகில் இருக்கும் ஆந்திரா மெஸ்ஸில் மதிய உணவை முடித்து வருகையில், மழை தூற ஆரம்பித்தது.

TVS விக்டர் சர்வீஸுக்கு விட்டு விட்டேன். ஆனந்த் ட்ராப் செய்வதாகச் சொன்னதால், நம்பி வந்தேன். சாப்பிட்டு விட்டு வந்தால் கிளையண்ட் மீட்டிங் என்று கழண்டு விட்டான். அவனை....

நல்ல வேலை, அவனது புராஜெக்ட் மேட் ஒருவரிடம் லிப்ட் கொடுத்து அனுப்பி வைத்திருக்கிறான். அவருக்கும் டைடலில் ஏதோ வேலை இருக்கிறதாம். அவருடன் வந்ததில், மத்திய கைலாஷ் சிக்னலில் மாட்டிக் கொண்டோம்.

ஆனந்த் அவன் ஜெர்கின் குடுத்திருந்தான். அதைத் தான் இப்பப் போட்டுக்கிட்டு இருக்கேன்.

மழை சரியாகப் பிடித்துக் கொண்டது. ஆனந்த் ஜெர்கினும் நனைந்து விட்டது. நாளைக்குத் திருப்பிக் கொடுக்கணுமாம். போடானு சொல்லிட்டேன். வேணும்னா வீட்டுக்கு வந்து வாங்கிக்கட்டும். மதியம் 2.30க்கு சென்னையில் இப்படி ஒரு மழையில் மாட்டிக் கொண்டேன் என்று ஊரில் சொன்னால் நம்புவார்களா..? ஆர்த்தி நம்புவாளா..? ஆர்த்தி யார்னு கேக்கறீங்களா? வர்ற சனிக்கிழமை பொண்ணு பார்க்கப் போறோம். எனக்குத் தான். இன்னும் அம்மாகிட்ட சனிக்கிழமை போகலாம்னு சொல்லல. இன்னிக்கு நைட் தான் சொல்லப் போறேன்.

இங்க சிக்னல் போட மாட்டேங்கறான். மழையில நின்னுக்கிட்டு இருக்கோம். லிப்ட் குடுத்தார்ல,அவரு ரொம்ப ஜாலி டைப் போல. ராம்கோல ஏறுனதுல இருந்து ரொம்ப கலகலப்பாகப் பேசிக் கொண்டு வந்தார்.

இதோ.. சிக்னல் போட்டுட்டான். நல்ல மழை பெய்யறதால, எல்லாரும் பாய்ஞ்சு முன்னாடிப் போகப் பாக்கறாங்க. எங்க பைக் திருப்பத்துல திரும்பியது. எதிர்பார்க்காத நேரத்தில, எதிர் வரிசையில இருந்து, ஒரு பைக்காரன் எங்க பக்கம் வேகமா வந்தான். நாங்க சடன் ப்ரேக் போட்டோம். வண்டி பயங்கரமா ஸ்லிப் ஆகுது. நான் அப்படியே வழுக்கி விழுந்து, தரையைத் தேச்சுக்கிட்டே போறேன்.

"ணங்..."

தலை எதிலயோ பயங்கரமா மோதியிருக்குனு புரியுது. கண்ணு வேகமா இருட்டுது. அப்படியே தலையைப் பிடிச்சுக்கிட்டே சுருண்டு போறேன்.

"எப்பத்தான் இந்த இரும்பு உருளையெல்லாம் எடுப்பாங்களோ, தெரியல. இந்த பறக்கும் ரயில் வந்தாலும் வந்தது. மாசத்துக்கு ரெண்டு ஆக்சிடென்ட் நடந்துக்கிட்டே இருக்கு.."

யாரோ சொல்றது லேசா காது விழுது. அம்மா, அப்பா, புவனா எல்லாரும் கண்ணுல வர்றாங்க. ஆர்த்தி.. எனக்கு அடிபட்டதுனு தெரிஞ்சா அழுவாளா..? மயக்கம் வர்ற மாதிரி இரு....

12.Sep.2006
செவ்வாய்.


ன்னிக்கு டைரியில என்ன எழுதலாம்? தினமும் எனக்கு என்ன தோணுதோ அதை எழுதுவேன். இன்னிக்கு தோணறது எல்லாம் எழுதினா, அவ்வளவு தான். நாளப்பின்ன யாராவது கைக்குப் போய், படிச்சுப் பார்த்தாங்கன்னா, மானமே போயிடும். ஒண்னும் பெருசா நினைக்கல. கொஞ்ச நாள்ல என்னைப் பொண்ணு பார்க்க வர்றதா சொல்லியிருக்காங்கனு தரகர் அப்பாகிட்ட சொல்லிட்டு இருந்தாரு. போட்டோ நாளைக்குத் தர்றாராம். 'அவர்' எப்படி இருப்பாருனு நினைச்சுப் பார்த்துட்டு இருந்தேன். வேறொண்ணுமில்ல.

எப்படி இருப்பாரு? அஜீத் மாதிரி சிவப்பா.... விஜய் மாதிரி ஸ்டைலா இருப்பாரா? இல்ல பழைய கமல் மாதிரி ஸ்லிம்மா இருப்பாரா..? ஆமா.. இப்படி எல்லாம் இருந்தாருனா, அவரு ஏன் சொந்த ஊருல இருக்கிற என்னைத் தான் கட்டிக்கணும்னு இருக்கணும்? என் மூஞ்சியைப் பார்த்து அழகா இருக்கேன்னு சொன்னாராம். அவர் வேலை பார்க்கிற சென்னையில இல்லாத அழகுராணிங்களா? எப்படியோ நல்லவரா இருந்தா சரி. ராணிக்காவை அடிச்சுத் துரத்தின அவங்க புருஷன் மாதிரி இல்லாம எப்பவும், என் கூடவே அன்பா இருந்தா அது போதும்.

அம்மா 'ஆர்த்தி..ஆர்த்தி'னு கூப்பிடற மாதிரி இருக்கு. அம்மாக்கு இதே வேலையா போச்சு. இவ்ளோ வருஷமா தெரிஞ்சுக்காத சமையலை இந்த ஒரு வாரத்துல கத்துக் குடுக்கணும்னு நினைக்கிறாங்க.சரி, அவங்க கவலை அவங்களுக்கு. இதோட இன்னிக்கு முடிச்சுக்கிறேன். குட் நைட் டைரி.

லை 'கிண்ணு கிண்ணு'னு வலிக்கிற மாதிரி இருக்கு. எங்க இருக்கேன்னு தெரியல. தலைல யாரோ பெரிய சுத்திய வெச்சு அடிக்கிற மாதிரி இருக்கு. கை, கால்ல எல்லாம் எரியற மாதிரி இருக்கு. மெல்ல கண்ணைக் கசக்கி நினவுக்குத் திரும்பறேன். என்ன நடந்தது? ஒண்ணும் ஞாபகம் வரலை.டெட்டால் வாசனை வருது. ஆஸ்பிடலா தான் இருக்கணும். வீட்டுக்குச் சொல்லியிருப்பாங்களா? பக்கத்து வார்டுல இருந்து லேசா, ரொம்ப லேசா பாட்டு மட்டும் கேக்குது. FM-ஆ இருக்கணும்.

ஆர்த்திக்கு தெரியுமா..? அய்யய்யோ.. எவ்ளோ நாளா இப்படி இருக்கேன்னு தெரியலயே.

மெல்ல கண்ணைத் திறக்க முயற்சி பண்றேன். முடியல. ரெண்டு இமைகள்லயும், பாறாங்கல்லு வெச்சுக் கட்டுன மாதிரி இருக்கு. ரொம்ப கஷ்டப்பட்டுத் திறக்கறேன். அம்மா பக்கத்து சேர்ல உட்கார்ந்திட்டு தூங்கறாங்க. அப்பா பக்கத்திலயே உட்கார்ந்திட்டு இருக்கார். நான் 'அப்பா'னு கூப்பிட முயற்சி பண்றேன். பாத்திட்டார். ஏதோ சொல்லிட்டே கிட்ட வந்தார். மறுபடியும் மயக்கம் வர்ற மாதிரி இருக்கு.

15.Sep.2006
வெள்ளி.

ரெண்டு நாளா அம்மாகூட இருந்து கொஞ்சம் சமைக்கக் கத்துக்கிட்டதனால உன்கிட்ட எதுவும் சொல்ல முடியாமப் போயிடுச்சு. ஸாரி, என்ன?

நேத்து தான் தரகர் 'அவர்' போட்டோ கொண்டு வந்தார். எல்லார் கைக்கும் போய்ட்டு, அப்புறம் தான் என் கைக்கு வந்துச்சு. அதைத் தர்றதுக்குள்ள மீனா பண்ண அழிச்சாட்டியம் இருக்கே.. அப்பப்பா. இருக்கட்டும், அவ கல்யாண சமயத்துல நானும் இந்த மாதிரி போட்டோவை தராம இழுத்தடிச்சிடறேன். ஆமா.. அப்ப நான் இந்த மாதிரி சின்னபுள்ள மாதிரி விளையாடுவனா என்ன? என் குழந்தைங்க தான் விளையாடும்.

பொண்ணே பார்க்க வரல. இவ பாரு, குழந்தைங்க வரைக்கும் போய்ட்டானு நீ நினைக்கிறது புரியுது.

இதெல்லாம் உன்கிட்ட தான் சொல்ல முடியும். என் பிரண்ட்ஸ்கிட்ட சொன்னா, அவ்வளவு தான். என்னை ஓட்டிக் கிழிச்சுத் தோரணம் கட்டித் தொங்க விட்டிடுவாங்க. 'அவர்' பத்திச் சொல்லுங்கிறயா..? சரி சொல்றேன். உனக்கும் இவ்ளோ ஆர்வமா?

நல்லா தான் இருக்காரு. என்ன, கொஞ்சம் என்னை விட கலர் கம்மி. ஆமா, என்னை மாதிரி 'காலேஜ் முடிச்சு வீடுக்கு வந்தமா, கல்யாணத்துக்கு நாள் குறிச்சமா'னா ஆம்பளைங்க இருக்க முடியும்? நாலு இடத்துக்கு அலையணும். அதனால கொஞ்சம் கலர் கம்மியா இருக்கார்.

அதனால என்ன, கல்யாணம் ஆகட்டும். சிகப்பாக்கிட மாட்டேன்..?

ஓ.கே. அம்மா மறுபடியும் கூப்பிடறாங்க... குட் நைட், டைரி.

மெல்ல கண் விழிச்சுப் பார்த்தேன். அம்மா, அப்பா,புவனா கூட இருக்கா. அழுது, அழுது கண் எல்லாம் சிவந்திருக்கு. பக்கத்துல டாக்டர்ஸ் எல்லாம் இருக்காங்க.

"இப்ப, ஒண்ணும் பிராப்ளம் இல்ல. ரெண்டு ஆபரேஷன் பண்ணியிருக்கோம். பிழைச்சுக்கிட்டார். அருண், நான் சொல்றதை உங்களால கவனிக்க முடியுதா..? Can you hear me..?"

டாக்டர் தான் கேட்கிறார். மெதுவாகத் தலையசைத்தேன். எழுந்து உட்கார்ந்தேன். வழக்கமான அழுகையெல்லாம் முடிந்து, ஜூஸ் குடிக்க ஆரம்பித்த போது, கதவு திறந்தது. போலிஸ் உடுப்பில் ஒருவர் வந்தார். இன்ஸ்பெக்டர்னு நினைக்கிறேன்.

"ஆர் யூ ஆல் ரைட்,மிஸ்டர்.அருண்..?" கேட்டுக் கொண்டே அருகில் இருந்த சேரில் அமர்ந்தார்.

"கொஞ்சம் நல்ல இருக்கேன் சார்"

"ஓ.கே. ஒரு சின்ன விசாரணை, இந்த விபத்தைப் பற்றி.."

விபத்துனு சொன்னப்புறம் தான் எனக்கு 'சுரீர்'னு ஆச்சு. எனக்கு லிப்ட் குடுத்தவர் என்ன ஆனார்? அவர் பேர் கூட எனக்கு ஞாபகம் வர மாட்டேங்குது. யோசிக்கிறேன். ரேடியோல யாரோ பேசற குரல் கேட்குது.

'..இந்த நேயர்கள் விருப்பத்திற்கானப் பாடலைப் பாடுபவர்கள் எஸ்.பி.பி மற்றும்..'

எஸ்.பி.பி...

பாலசுப்ரமணியம்.

ஆமா.. ஆனந்த் இருவரையும் அறிமுகப்படுத்துறப்போ, இந்தப் பேர் தான் சொன்னான். திடுக்கிட்டு அமர்ந்தேன்.

"சார்.. என்கூட வண்டியில வந்தவர் என்ன ஆனார்..?"

"ரியலி வெரி ஸாரி டு சே திஸ். உங்க கூட விபத்தில அவருக்கும் பலமான அடிபட்டு, தலை அங்கேயே உடைஞ்சு, ஏகப்பட்ட ப்ளட் லாஸ். ஸ்பாட் டெத். அவரைப் பத்தி விசாரிக்கத் தான் இந்த சின்ன விசாரணை.."

எனக்குத் தலையைச் சுற்றியது.

நிறைய பேசிக் கொண்டு வந்தார். அடுத்த வாரம் பெண் பார்க்கப் போவதாகச் சொன்னாரே..

மெல்ல கண்ணை மூடிப் படுத்துக் கொண்டேன்.

16.Sep.2006
சனிக்கிழமை.

எல்லாரும் இப்பெல்லாம் நான் சரியா யார்கூடயும் பேச மாட்டேங்கறேனு அம்மாகிட்ட புகார் சொல்றாங்க. பேசினா ஏதாவது கிண்டலா ஓட்டுவாங்க. அதனால நான் மெளனமா இருக்கேன். 'அவர்' வரட்டும். அவர்கிட்ட மட்டும் தான் பேசுவேன். நீ கவலைப்படாத. உன்கிட்ட மட்டும் எப்பவும் போல பேசறேன், சரியா?

அவர் பேர் என்னனு கேக்கறியா? 'சீ போ! எனக்கு வெட்கமா இருக்கு'னு எல்லாம் சொல்ல மாட்டேன். ஆனாலும் கொஞ்சம் ஒருமாதிரியாத் தான் இருக்கு. க்ளூ சொல்றேன். நீயே தெரிஞ்சுக்கோ. எஸ்.பி.பி. இன்னும் புரியலயா? முழுப் பேர் சொல்ல மாட்டேன். நானா வெச்சுக் கூப்பிடப் போற செல்லப் பேர் மட்டும் சொல்றேன். யார்கிட்டயும் சொல்லிடாத.

'பாலு'.

நல்லாயிருக்கா? நல்லாயில்லாம இருக்குமா என்ன?

இன்னும் பொண்ணு பார்க்க வரலை. வந்தா கண்டிப்பா உனக்கு அவரைக் காட்டறேன். சரி, அப்பா 'ஆர்த்தி, ஆர்த்தி'னு கூப்பிடறா மாதிரி இருக்கு. குரல் உடைஞ்சு போயிருக்கு. கேட்டு வந்துட்டு என்னனு சொல்றேன். குட் நைட், டைரி.

(தேன்கூடு - செப் 06 - போட்டிக்கான பதிவு.)

1 comment:

முரட்டுக்காளை said...

வசந்த், இவ்வளவுதானா கதைகள்? சரி விடுங்க.. அடுத்த போட்டியில இன்னும் நிறைய்ய எழுதிடலாம். கலக்கீட்டிங்க போங்க.. இதுவும் சூப்பர்.

முரட்டுக்காளை