Tuesday, November 07, 2006

இணைத்த இலவசம்.

"சொல்கிறேன். ஆனால் நீ சிரிக்கக் கூடாது.." என்றாள் ப்ரியா.

"சொல்.சிரிக்க மாட்டேன்.." என்றேன் நான்.

"அப்ப நமக்கு ஏழு இல்ல எட்டு வயசு இருக்கும். தீபாவளிக்காக நான் உன் வீட்டுக்கு வந்திருந்தேன். தீபாவளி அன்னிக்கு நீ தலைக்கு எண்ணெய் தேய்ச்சுக்கிட்டு இருந்த. நிறைய எண்ணெய் கையில ஊத்திக்கிட்டதனால கையில எல்லாம் எண்ணெய் வழிஞ்சு ஓடுது. அதை அப்படியே தலையில தேய்ச்சுக்கிட்ட. அது ரொம்ப அதிகமாகி, முகத்தில எல்லாம் வழிஞ்சுது. அப்ப உன்னைப் பாக்க அசல் குரங்கு மாதிரியே இருந்துச்சு. 'எண்ணெய் சட்டி குரங்கு','எண்ணெய் சட்டி குரங்கு'ன்னு உன்னை கேலி பண்ணி பாடினதை நினைச்சா இப்பவும் சிரிப்பு தான் வருது.." என்றபடி சிரித்தாள்.

நானும் மெல்ல சிரித்தேன்.

"அதுக்கு பழி வாங்க நான் என்ன பண்ணினேன், ஞாபகம் இருக்கா..?" என்று கேட்டேன்.

"அதை மறக்க முடியுமா..? நான் குளிக்கப் போகும் போது, பின்ல சரவெடியைக் கட்டி, அதை என் தலைமுடியில கட்டி, பத்த வெக்கப் போறேன்னு பயமுறுத்தினாயே.. அதை மறக்க முடியுமா..? அன்னிக்கி நான் அழுதிட்டேன்.. தெரியுமா.." என்று சிரித்தாள்.

"எப்படி அழுத, தெரியுமா..?" என்று விட்டு நான் குரங்கு போல் செய்து காட்ட, இருவரும் கலகலவெனச் சிரித்தோம்.

இது போல் இருவரும் சேர்ந்து சிரித்து, பத்து வருடங்களுக்கு மேலாகி விட்டது.

ப்ரியா என் மாமா பொண்ணு தான். எங்களுக்கு பத்து வயது ஆகற வரைக்கும் ஒண்ணா தான் இருந்தோம். ரெண்டு குடும்பமும் சேர்ந்து சுற்றுலா போவோம். ஏதாவது கோயில் பண்டிகை, தீபாவளி, பொங்கல் என்றால் இரண்டு குடும்பமும் ஒன்றாகத் தான் கொண்டாடுவோம்.

அப்புறம் என்ன ஆனது என்றால், ரெண்டு குடும்பமும் சேர்ந்து ஊரில் கொஞ்சம் நிலம் வாங்கினோம். அதைப் பிரித்துக் கொள்வதில் துவங்கிய சண்டை, பின் பழைய மறைந்திருந்த கோபங்களையெல்லாம் கிளறி பெரிய பிரிவுக்கு வழி வகுத்து விட்டது. அன்று பார்த்தது தான், பேசிக் கொண்டது தான்.

பிறகு இரண்டு குடும்பமும் வெவ்வேறு ஊர்களுக்கு சிதற, புதுப்புது இடங்கள், புது நண்பர்கள் என்று மாறிப் போனதில் இருவரும் ஒருவரையொருவர் மறந்தே போனோம். அவ்வப்போது ஊரில் ஏதேனும் பண்டிகை, எவருடையவாவது நெருங்கிய இறப்பு என்று நிகழும் போது அப்பாவும், அம்மாவும் மட்டுமே போய் வருவார்கள். அவர்களிடம் மெதுவாகக் கேட்டுப் பார்ப்பேன், ப்ரியா வந்தாளா என்று. அவளும் படிப்பு தான் முக்கியம் என்று இதற்கெல்லாம் வருவதில்லையாம்.

எப்போதாவது அவள் பற்றி விசாரிப்பேன். அவளும் அப்படித்தான் விசாரித்தாள் என்பார்கள். கொஞ்சம் சந்தோஷமாகவே இருக்கும்.

இப்போது நானும், அவளும் சென்னையில் வசிக்கிறோம். ரெண்டு பேரும் கணிணியில் தட்டிக் கொண்டிருக்கிறோம். அவள் 'அன்புடன் வழியனுப்பும்' நிறுவனத்திலும், நான் ' உண்மை' நிறுவனத்திலும் பணியாற்றுகிறோம். அவ்வப்போது வார இறுதிகளில் சந்திப்பதை வழக்கமாகிக் கொண்டோம்.

முதலில் சந்தித்த போது ' நீங்க' என்று ஆரம்பித்து பிறகு ' நீ, வா, போ' என்றாகி', பின் 'போடி கழுதை' என்ற ரேஞ்சில் வந்து விட்டது.

"ப்ரியா.. இந்த வாரமாவது வீட்டுக்கு வரலாம்ல.. அம்மா உன்னைப் பார்த்தா ரொம்ப சந்தோஷப்படுவாங்க.." என்றேன்.

"இல்ல மனோ.. அம்மா, அப்பாகிட்ட சொல்லாம வந்தா.. அது நல்லாயிருக்காது.." என்றாள்.

"ஓ.கே. இந்த தீபாவளிக்கு என்ன துணி எடுக்கப் போற? எங்க?"

"அம்மாவும், அப்பாவும் இங்க வந்து சென்னை சில்க்ஸோ, போத்தீஸோ போவோம். இல்லைனா வழக்கம் போல ஊர்லயே சாரதாஸ் தான். க்ரீன் கலர்ல ஒரு சில்க் ஸாரி வாங்கணும்னு ரொம்ப நாள் ஆசை. அதுல தான் எடுக்கறதா இருக்கேன். நீ என்ன வாங்கப் போற..?"

" நீ ஏதாவது வாங்கிக் குடுத்தனா, ஓசியில வாங்கிக் போட்டுக்கலாம்னு இருக்கேன்.." முகத்தை அப்பாவி போல் வைத்துக் கொண்டு சொன்னேன்.

"தோடா..! ஆசையப் பாரு இதுக்கு.." என்று சிரித்தாள்.

பில் செலுத்தி விட்டு இருவரும் வெளியே வந்தோம்.

"சரி வா, ப்ரியா..! உன்னை உங்க கோட்டைக்கு கொண்டு போய் விட்டுடறேன்.. டைமுக்குப் போகாட்டி, உங்க எல்லைச்சாமி கண்ணாலயே மிரட்டிடுவார்.." என்றேன்.

அவள் பெண்கள் விடுதியில் தங்கியிருக்கிறாள். அந்த விடுதியின் வாட்ச்மேனைத் தான் நான் 'எல்லைச்சாமி' என்பேன்.

சிர்த்துக் கொண்டே, " வேற வண்டி இல்லையா..? இந்த 'பிங்க் பெப்' யாருது?" என்று கேட்டாள்.

"இது பக்கத்து வீட்டு ப்ரீத்தியோட வண்டி. எங்க வீட்டு இரும்புக் குதிரை, இன்னேரம் ஒர்க்ஷாப்ல கொள்ளு தின்னுக்கிட்டு இருக்கும்னு நினைக்கிறேன்.."

சந்தோஷமாகச் சிரித்துக் கொண்டே, என்னுடன் வண்டியில் ஏறிக் கொண்டாள். பெசன்ட் நகரிலிருந்து கிளம்பிய எங்கள் மீதே எல்லார் கண்களும் இருந்ததை என்னால் உணர முடிந்தது.

"னோ..! நிறுத்து..! நிறுத்து.." என்றாள் ப்ரியா.

ப்ரேக் போட்டு ஓரமாய் நிறுத்தினேன்.

"என்ன ப்ரியா..?" என்று கேட்டேன்.

"அந்த க்ளாத் ஷாப்புக்கு போ" என்றாள்.

இருவரும் நடந்து போனோம்.

"யெல்லோ சுடி ஒண்ணு எடுக்கணும்னு ரொம்ப நாள் ஆசை. இங்க இருக்கும்னு நினைக்கிறேன். நீ ரிசப்ஷன்கிட்டவே வெயிட் பண்ணு.." என்றாள்.

சரியென்று நானும் உட்கார்ந்து கொண்டேன். அவள் உள்ளே சென்று விட்டாள்.

ஒரு மணி நேரம் கழித்து கையில் இரண்டு துணி பார்சலோடு வந்தாள்.

"ப்ரியா..! என்னையவே இவ்ளோ நேரம் காக்க வைக்கிற. கல்யாணத்துக்கப்புறம் உன் கணவரை எவ்ளோ நேரம் காக்க வெப்பியோ..?" என்று கேட்டேன்.

" நான் அப்படி எல்லாம் பண்ண மாட்டேன். அவரையே வாங்கிட்டு வரச் சொல்லிடுவேன்.." என்றாள்.

"சரி.. என்ன ஒண்ணு மட்டும் எடுக்கறேன்ட்டு, ரெண்டு பேக் கையில வெச்சிருக்க..?"

"எனக்கு மட்டும் எடுக்க மனசில்ல. அதுதான் உனக்கும் சேர்த்து எடுத்திட்டு வந்தேன்.."

"ரொம்ப நடிக்காதடி. அங்க பாரு.." என்று கை காட்டினேன்.

அங்கே ஒரு போர்டில்
' இலவசம்.! இலவசம்..! ஒரு சுடிதார் எடுத்தால் மற்றொன்று இலவசம்..!'
என்றிருந்தது.

"பார்த்துட்டியா..?" என்று அசடு வழிந்தாள்.

"இந்தா, வயலட் கலர் சுடி நீ எடுத்துக்கோ..!" என்று கொடுத்தாள்.

"உன்னைப் பத்தி தெரியாதா என்ன..? என்னை யாருனு நினைச்சே..? எப்படி கண்டுபிடிச்சோம்லெ..!" என்று, போட்டிருந்த சுடிதாரில் காலர் இல்லாததால், துப்பட்டாவைத் தூக்கி விட்டுக் கொண்டேன், மனோன்மணியாகிய நான்.

எங்கிருந்தோ 'லூசுப் பெண்ணே.. லூசுப் பெண்ணே..' என்று பாட்டு கேட்டது.இருவரும் விழுந்து, விழுந்து சிரித்தோம்.

(தேன்கூடு - நவம்பர் 06 - போட்டிக்கான பதிவு.)

8 comments:

செந்தழல் ரவி said...

நல்ல கதை..வெற்றிபெற வாழ்த்துக்கள்..

வசந்த் said...

ரொம்ப நன்றி செந்தழல் ரவி...!

Phoenix said...

The anti-climax rocked.. I admit I fell for it... hehehe!

நெல்லை சிவா said...

சூப்பர் ட்விஸ்ட். நல்லாயிருந்தது.

வசந்த் said...

Hai Phoenix.. Great for your comment...

வசந்த் said...

நண்பர் நெல்லை சிவா-க்கு மிக்க நன்றிகள்...

Nandha said...

இந்த கதையை இப்பதான் பார்க்கிறேன். க்ளைமாக்ஸ் கலக்கல்

வசந்த் said...

அன்பு நந்தா.. தங்கள் வருகைக்கும், வாழ்த்துக்கும் நன்றிகள்...