"என்னங்க.."
"ம்.." என்றேன் இட்லியைப் பிட்டுக் கொண்டே.
"ஒண்ணும் இல்ல. தி. நகர்ல புதுசா ஒரு துணிக்கடை திறந்திருக்காங்களாம். நாம ஒரு விசிட் அடிச்சா என்ன..?" புகை வர ஆரம்பித்தது.
'ஒருவனின் செலவு, மற்றொருவனின் வரவு' என்ற அடிப்படைத் தத்துவத்தை கொல்கத்தாவில் சென்று கற்று வந்து, சென்னையில் ஒரு பன்னாட்டு (இது நல்ல வார்த்தையா, இல்லையா?) நிறுவனத்தின் மேலாண்மைப் பிரிவ்ல் இருக்கிறேன். போட் கிளப்பில் பெரிய வீடு. அழகான (இந்த உவமை வலுவிழந்து கொண்டே வருகின்றது) மனைவி. டி.ஏ.வி.யில் ஐந்தாவது படிக்கின்ற செல்லக் குட்டி. ஊரில் பெற்றோர். இப்படி அமைதியாக ஓடிக் கொண்டிருக்கின்ற வாழ்வில், அவ்வப்போது அடிக்கின்ற குட்டிச் சூறாவளி இவளது ஷாப்பிங்.
நகரில் ஏதாவது புது துணிக்கடை, நகைக் கடை, பாத்திரக் கடல் திறந்து விடக் கூடாது. உடனே இவளுக்கு அங்கே விசிட் செய்தாக வேண்டும். விசிட் என்றால், போய் வேடிக்கை மட்டும் பார்த்து விட்டு வருவாளா என்றால் அது தான் இல்லை. கிரெடிட் கார்டு தீர்ந்து விடும். இவள் ஒரு கடைக்குப் போய் விட்டு வந்தால், எப்படியோ இந்த பேங்க்காரங்களுக்கு மூக்கு வேர்த்து விடும். உடனே ஒரு கால் அடித்து 'மேடம். புது கிரெடிட் கார்டு வாங்கிக் கொள்ளுங்கள்' என்று எனக்கு செக் வைத்து விடுவார்கள்.
"ஆமாப்பா..! அந்தக் கடைக்குப் பக்கத்திலேயே புதுசா டாய் ஷாப் ஒண்ணு ஓபன் பண்ணியிருக்காங்களாம்பா..! ப்ளீஸ்பா.. போலாம்பா.." அம்மாவுக்கேற்ற பெண். முகத்தைக் குழந்தை போல் வைத்துக் கொண்டு அம்மா கேட்கையிலேயே மறுக்க மனம் வராத போது, என் குட்டிப் பெண் கேட்கும் போதா மறுக்கத் தோன்றும்?
"ஓ.கே. நெக்ஸ்ட் சண்டே போகலாம்.." என்றேன்.
வீட்டுப் பாடம் எழுதிக் கொண்டிருந்த அவள் ஓடி வந்து என் மேல் ஏறிக் கொண்டாள்."மை டாடி இஸ் குட் டாடி..." என்று இரண்டு கன்னத்திலும் மாறி, மாறி முத்தமிட்டாள்.
' நீ என்ன தரப் போகிறாய்' என்று கண்களால் கேட்டவாறு,மனைவியை நிமிர்ந்து பார்த்தேன்.
"சரி..சரி. பப்பி, நீ போய் மேத்ஸ் போடு. என்னங்க, நீங்க கொஞ்சம் கிச்சன் வரைக்கும் வாங்க.." என்றாள் கண்ணடித்தவாறு. கள்ளி.
ஞாயிற்றுக் கிழமை.தென் மேற்கு போக் ரோட்டில் காரை பார்க் செய்து விட்டு, மூவரும் இறங்கினோம். அப்போது தான் அந்தப் போர்டு என் கண்ணில் பட்டது.
"கண்ணம்மா. நீயும், பப்பியும் போய்ட்டு வாங்க. நான் இங்க ஒரு ப்ரெண்டைப் பார்த்துட்டு வரணும். இப்ப தான் ஞாபகம் வந்தது." என்றேன்.
எதிர்பார்த்தது போலவே " என்னங்க, எப்பவுமே ஆபிஸ், வேலைனு அலையுறீங்க. கொஞ்சம் நேரம் கிடைச்சு இப்படி வெளியே வந்தா, உடனே நண்பர்கள் பார்க்க போறேனு போயிடறிங்க. உங்க நண்பரை இன்னொரு நாள் பார்த்துக்கலாம். இன்னிக்கு எங்க கூட வந்தே ஆகணும்.." என்று அன்பு வழிய பேசினாள்.
இந்த மாதிரி பர்ஸுக்கு வேட்டு வைக்கும் நேரங்களில் மட்டும் பாசம் பொங்கும்.மற்ற நேரங்களில் பார்க்கணுமே..!
"இல்லம்மா..! இந்த நண்பனைப் பார்த்து ரொம்ப நாளாச்சு. நீங்க போய்ட்டு வாங்க. ஆனா கொஞ்சம் பார்த்து செலவு பண்ணுங்க." என்றவாறே என் கிரெடிட் கார்டை நீட்டினேன்.
அசடு வழிந்தவாறே அதை வாங்கிக் கொண்டு, இருவரும், ஸ்டாப் ப்ளாக்கில் மறைந்தார்கள்.அந்தப் போர்டு கை காட்டிய முதல் மாடியை நோக்கி நடந்தேன்.
"வாங்க சார்.! எப்படியிருக்கீங்க..?" என்று கேட்டபடி வந்தார் மருது.
" நல்லாயிருக்கேன் மருது சார்! நீங்க எப்படியிருக்கீங்க?" என்றேன்.
" நல்லாயிருக்கேன்.! வழக்கமான வேலை தான..?"
"ஆமா.! இன்னிக்கு யாரு இருக்கா?"
"இன்னிக்கு டேவிட் தான் இருக்கான்.டேவிட்! சார் வந்திர்க்கார் பாரு. உள்ள ரெடி பண்ணு" என்றார் உள் நோக்கி குரல் கொடுத்தவாறு.
டேவிட்டின் விஷ்ஷை ஏற்றுக் கொண்டு " சாரி மருது சார். வழக்கமான ரொட்டீன்ல கொஞ்சம் மிஸ்ஸாயிடுச்சு. கரெக்டான டைம்படி, போன சனிக்கிழமையே வந்திருக்கணும். கொஞ்சம் வேலை அதிகமாகிடுச்சு."என்றேன்.
"நெவர் மைண்ட் சார்! நீங்க வாலண்டியரா வந்து, மூணு மாசத்துக்கு ஒருதடவை இலவசமா இரத்தம் குடுக்கறீங்க. அதுவே பெரிய விஷயம்."
"ஓ.கே." என்றவாறு நான் அறையின் உள்ளே சென்றேன், சட்டையின் வலதுகையை மடித்து விட்டவாறே.
"கண்ணு..!"
"சொல்லுங்கப்பா..!"
"விடுதி யெல்லாம் நல்லாயிருக்காப்பா..?"
" நல்லாயிருக்குப்பா.என்னப்பா திடீர்னு போன் பண்ணியிருக்கீங்க..?"
"மனசை திடப்படுத்திக்கோ..! நம்ம கண்ணன் இப்ப நம்ம கூட இல்ல.."
"அப்பா.....! என்னப்பா சொல்றீங்க..?"
"ஆமாப்பா..! நேத்து கெணத்துல குளிச்சிட்டு இருந்தவன் கல்லுல அடிபட்டு, ரொம்ப ரத்தம் சேதாரம் ஆகிடிச்சு. எல்லாரும் அவனைத் தூக்கிட்டு, நம்ம ஜி.எச்.சுக்கு போனோம். ஆனா, அங்க அவனோட ரத்த வகை இல்லனுட்டாங்க. மறுபடியும் ஆட்டோ புடிச்சு, ஈரோடு கொண்டு போகறதுகுள்ள, நம்ம கண்ணன்..."
"அப்பா..! நான் உடனே கிளம்பி வர்றம்பா.."
"இல்ல..! நீ வர வேணாம். வந்து என்ன ஆகப் போறது? நீ செமஸ்டர் எல்லாம் முடிச்சிட்டு வாப்பா..!கண்ண்னை நெனச்சு பரிட்சையில கோட்டை விட்றாதப்பா. அது கண்ணனுக்கும் பிடிக்காதுனு உனக்குத் தெரியும். நீ நல்ல மார்க் எடுத்து, நல்ல வேலைக்குப் போகணுங்கறத் தான் உன் நண்பன் கண்ணனோட ஆசை. அதை எங்கிட்டயும் சொல்லியிருக்கான். அதை நீ காப்பாத்தணும். அப்பத் தான் அவன் ஆத்மா சாந்தியடையும். என்ன..?"
"சரிப்பா.."
"சரி.. உடம்பை கவனிச்சுக்கப்பா.. நான் வெச்சிடறேன்."
"என்னங்க...! எவ்ளோ கூட்டம் தெரியுமாங்க, அந்தக் கடையில..? புதுசு,புதுசா புடைவை, மேட்சா ரவிக்கை. சில்க்ஸுக்குனே தனி டிவிஷன் வேற ஓபன் பண்ணியிருக்காங்க. ரெண்டாவது மாடியிலேயே கோல்டு ஷாப். அங்க புதுப்புது டிசைன்ல நகைங்க. நீங்க வந்திருக்கணும். மலைச்சுப் போயிருப்பீங்க. ரெண்டாயிரத்துக்கு மேல பர்ச்சேஸ் பண்ணினா கிச்சன் கிட் ஒண்ணு இலவசம்னு சொன்னாங்க. நம்ம வீட்டுல எல்லாம் பழசா இருக்குனு நான் ரெண்டு கிச்சன் கிட் கிடைக்கற மாதிரி பர்ச்சேஸ் பண்ணினேன். அவ்வளவு தான். அதுவும் இல்லாம, இன்னிக்கு முதல் நாள்ங்கறதுனால, லஞ்ச் வேற ப்ரீயா அவங்களே ப்ரொவைட் பண்ணினாங்க. யாரும் வெட்கப்படவேயில்ல. கேட்டு, வாங்கிச் சாப்பிட்டாங்க. நீங்க இல்லாததுனால நான் கொஞ்சம் தான் சாப்பிட்டேன். உங்களுக்கு கால் பண்ணினேனே, கவனிக்கலையா..?"
ரெண்டாவது கீருக்கு மாறியவாறு, செல்லை எடுத்துப் பார்த்தேன். நான்கு மிஸ்டு கால்கள். எல்லாம் இவள் பண்ணினது தான். ஏதாவது சொல்ல வேண்டுமேயென்று வாய் திறந்தேன்.
"போறும். ஒண்ணும் சொல்ல வேணாம். ப்ரெண்ட்ஸைப் பார்த்த குஷியில என்னையும் மறந்திடுவீங்கங்கிறது தெரிஞ்ச விஷயம் தான" என்று அவளே சமாதானம் கூறிக் கொண்டாள்.
பப்பி, புதிதாக வாங்கிய கார் பொம்மையின் மேல் டெடி-பியர் பொம்மையை வைத்தி பின்சீட்டில் விளையாடிக் கொண்டிருந்தாள்.
இவள் இன்னும் பேசிக் கொண்டு வந்தாள்." நாலு பட்டுப் புடவை எடுத்தா, வேறெண்ணவோ இலவசம்னு சொன்னாங்களே.. பப்பி, என்ன அது..?"
என் கவனம் மெல்ல திசை மாறியது.இவள் எதை இலவசம் என்கிறாள்? மதிய ஒரு வேளை உணவா? நகை, பாத்திரங்களா..? மருது சார், என் கண்ணன் நினைவாக நான் ரொட்டீனாக இரத்தம் கொடுப்பதை இலவசம் என்கிறார். உண்மையில் அது இலவசம் தானா? இல்லை. அது கண்ணனுக்கு என் சம்பாத்தியத்தில் ஒரு வாய் சாப்பாடு ஊட்ட முடியவில்லை என்கின்ற என் எண்ணத்திற்கு, நானே கொடுத்துக் கொள்கின்ற திருப்தி. அவ்வளவு தான்.
கார் வேகமாகச் சீறிப் பாய்ந்தது.
(தேன்கூடு - நவம்பர் 06 - போட்டிக்கான பதிவு.)
No comments:
Post a Comment