Saturday, December 30, 2006

ரொம்ப நாள் கழித்து...!


புகைப்படம் நன்றி : தினமலர்
மிக்க வேலை கொடுத்து விட்ட திட்ட மேலாளரை திட்டி விட்டு (மனதிற்குள் தான்) இப்பதிவை இடுகிறேன். ரொம்ப வருத்தமாய் இருக்கிறது. தேன்கூடு போட்டிகளின் கடைசிப் போட்டியில் பங்கு கொள்ளமுடியாமல் போனதை நினைத்து.

இனி தவறாமல் அவ்வப்போது பதிவு இட வேண்டும் என்று முடிவெடுத்துள்ளேன்.

இன்று மனம் சரியில்லாமல் தான் இந்தப் பதிவை எழுதுகிறேன். ஈராக் 'முன்னாள்' அதிபர் சதாம் தூக்கிலப்பட்டார் என்ற செய்தி கொஞ்சம் எல்லாரையும் பாதித்துள்ளது போல் என்னையும் கொஞ்சம் . ஒருவேளை அவரைப் பற்றி நான் அறிந்துள்ள செய்திகளின் அடிப்படையில் தான் எனக்கு அவர் தூக்கிலிடப்பட்டதில் அனுதாபம் தோன்றுகிறதோ? அவர் எனது இனத்தை அழித்திருந்தால் நானும் அவர் மரணத்திற்கு பட்டாசு வெடித்தும், இனிப்புகள் வழங்கியும் கொண்டாடியிருப்பேனோ, என்னவோ?

மிகச் சமீபத்தில் தான் பா.ராகவன் அவர்களின் 'டாலர் தேசம்' நூலைப் படித்து முடித்தேன். அதிலிருந்து அறிந்து கொண்ட வரையில், உலக தாதா என்ற பட்டத்தைப் பெற்ற பின்னால், அதைத் தக்க வைத்துக் கொள்ள வேண்டி அமெரிக்கா ஆடுகின்ற ஆட்டங்களில் ஒன்று தான், இந்த ஈராக் ஆக்ரமிப்பும் என்பதை உணர முடிகின்றது.

இதனை ஈராக் மேல் போர்த் தொடுக்கையில் கூட்டாளியாக இருந்த பிரிட்டனின் பிளேர், அதற்காக வருத்தம் தெரிவித்ததில் இருந்து அறிந்து கொள்ளலாம்.

இனி அடுத்த இலக்கு என்னவாக இருக்கும்?

ஈரான், வட கொரியா... இந்தியா..?

ஏன் இருக்க முடியாது? இதேபோல் தான் வட கொரியாவிற்கும் முன்பு அமெரிக்கா அணு தத்துவம் பற்றி மாய்ந்து,மாய்ந்து உத்வியது. இப்போது அதன் மேல் பொருளாதாரத் தடைகள். இப்போது நமது நாட்டிலும் அது தான் நடந்து வருகிறது.

உஷாராக இருக்க வேண்டியதாகிறது.

புத்தாண்டைத் துவக்க வேண்டிய நேரத்தில் இப்படி ஒரு செய்தி.

இந்த ஒரு வருடத்தில் நான் என்ன செய்துள்ளேன், என்ன வெல்லாம் எனக்கு நடந்துள்ளது என்பதை நினைத்துப் பார்க்கிறேன்.

கொஞ்ச நாள் பெங்களூரு சென்று பணிபுரிந்து விட்டு மீண்டும் சிங்காரச் சென்னைக்கே வர வேண்டியதாகிப் போய் விட்டது. பரவாயில்லை. ஆனாலும் இலக்கு வைத்திருந்த பணி ஊதியத்தை அடைய முடிந்ததில் மகிழ்வே.

மீண்டும் சென்னை வந்து பணி தொடங்கியதில் இருந்து என்ன என்ன செய்ய வேண்டும் என்று நினைத்து வைத்திருந்தேனோ, அவற்றில் ஒவ்வொன்றாக மேற்கொண்டு வருவதில் மகிழ்வாகவே இருக்கிறது.

வரப்போகும் ஆண்டிற்கான திட்டங்கள் வகுப்பதிலும், அதற்கான செயல்களை பகுப்பதிலும் கொஞ்சம் நேரம் செலவிடப் பட வேண்டியுள்ளது. திட்டப்படி நடந்தால் நமது வலையுலக அன்பர்கள் பலரை நேரில் சந்திக்க வாய்ப்புக் கிடைக்கும் என்று நினைக்கிறேன்.

இந்த ஆண்டு நடந்த மற்றுமொரு முக்கிய நிகழ்வு, வலைப் பதிவு உலகத்தில் நானும் ஒரு மின்மினியாகப் பறக்கத் தொடங்கியது. என்னால் சிறுகதைகளும் எழுத முடியும் என்று எனக்கே புரிய வைத்த தேன்கூடு மற்றும் பல நண்பர்கள் அறிமுகம்.

மீண்டும் விரைவில் சந்திப்போம்.

அனைவருக்கும் எனது இனிய ஆங்கிலப் புத்தாண்டு நல்வாழ்த்துக்கள்.

No comments: