Friday, April 13, 2007

நகராமை.

"ந்தினி..பிரேம் இன்னும் வரலையா..?" என்று கேட்டார் ராகவன்.

அவுட்லுக்கில் இருந்து பார்வையை அகற்றி அவரைப் பார்த்தேன். "இன்னும் வரலை போலிருக்கு மாஸ்டர்.." என்றாள். ஏனோ அவரை மாஸ்டர் என்று அழைத்தால்தான் அவருக்கு மிகப் பிடிக்கின்றது.

"என்ன மறுபடியும் உங்களுக்குள்ள சண்டை வந்திடுச்சா..?"
புன்னகைத்தவாறே கேட்டார்.

நான் வந்து நிற்பது மாஸ்டருக்குத் தெரியவில்லை போலும்.மெளனப் புன்னகைத்தேன். நேற்று நடந்த நிகழ்வு கண்ணில் நிழலாடியது.

ந்தினி என் கல்லூரி இரண்டு வருட இளையள். கல்லூரியில் அவ்வளவாகப் பார்த்த ஞாபகம் இல்லை. நான் பணிபுரியும் அலுவலகத்திற்கே வந்த பின்புதான், அறிமுகம் கிடைத்ததே. பின் மெல்ல, மெல்ல பழகி இருவரும் ஒரே பணிகையில் அமர்த்தப்பட்ட பின் நெருக்கம் இன்னும் அதிகரித்தது. இப்போது வயது வித்தியாசங்கள் எல்லாம் மறைந்து போய், இணைந்து ஊர் சுற்றுவது வரை வந்திருக்கிறது.இந்த கிளையில் தமிழகத்திலிருந்து பணிபுரிபவர் சொற்பமே என்பதால் கூட இன்னும் நெருக்கம் அதிகரித்திருக்க வேண்டும்.

இருந்தாலும் எங்களைப் போல் சண்டை போடுபவர்கள் இங்கு கிடையாது.

ருமுறை ' நடராஜ்'ல் சில்லென்று.. பார்க்கும் போது நடந்த விளையாட்டு , மறக்க முடியாத ஒன்று.

வழமை போல் இடைவேளையில் ஸ்னாக்ஸ் வங்கிவரச் சென்றேன். எனக்குப் பாப்கார்னும், அவளுக்கு ஐஸ்க்ரீமும் வாங்கிவிட்டு, பாப்கார்னைப் பொடி செய்து, ஐஸ்க்ரீம் மேல் தூவி விட்டேன். அவள் சாப்பிடும் போது முகம் போன போக்கைப் பார்க்க வேண்டுமே..!

"டேய் குரங்கு..! இது உன்னோட வேலை தான..?"

"எதுடி பிசாசு..?"

"பாப்கார்ன்ல ஐஸ்க்ரீம் போட்டது..?"

"இல்லயே! நான் ஐஸ்க்ரீம்ல தான கார்ன் போட்டேன்.."

"இதை மனுஷன் சாப்பிடுவானா..?"

"அதுதான் உனக்குக் குடுத்தேன்.."

"ஓல்டு ஜோக்!"

ஃபாரமில் காபிஷாப்பில் காஃபி குடித்து விட்டு, இருவரும் கிளம்புகையில் சண்டை வந்து விட்டது.யார் ஸ்ப்ளெண்டர் ஓட்டிச் செல்வது என்று.

"சொன்னாக் கேக்கணும் நந்தினி! இது ஸ்கூட்டி கெடயாது..! ஸ்ப்ளெண்டர்..!"

"அது தான் பார்த்தாலே தெரியுதே! நீ வேற தனியாச் சொல்லணுமா..?"

"இன்னிக்கு சன்டே..! ட்ராஃபிக் கொஞ்சம் அதிகமாவே இருக்கும்! உன்னால பேலன்ஸ் பண்ணமுடியாது! வேணா அடுத்த சண்டே கப்பன் பார்க் போலாம். அங்க நீ இத ட்ரைவ் பண்ணக் கத்துக்கோ.."

"தோடா! இவரு சொல்ல வந்திட்டாரு..! போன மாஷம் ஆட்டோக்கு கீழப் படுத்துக் கிடந்தியே, நீயா பேலன்ஸ் பத்திப் பேசற..!"

"சரி..! நீ மட்டும் என்ன! ஸ்கூட்டி வாங்கின புதுசுல, ஹெச்.ஏ.எல் பக்கத்துல சறுக்கிட்டு விழல..?"

" அப்ப நான் சின்னப் பொண்ணு..! இப்பக் குடுத்துப் பாரு! எப்படிப் பறக்கறேனு..!"

"அம்மா..! தாயே..! அந்த விளையாட்டெல்லாம் உன்னோட ஸ்கூட்டிலயே வெச்சுக்கோ..! இப்ப என்னை ஆளை விடு..!"

இன்னும் ரொம்ப நேரம் பேசி, அவளை ஆட்டோவில் ஏற்றி அனுப்பி வைத்தேன். அந்தக் கோபத்தில் தான் இன்று காலை 'ஹேப்பி வீக் ஸ்டார்ட்' மெஸேஜ் வரவில்லை போலும். பார்த்துக் கொள்ளலாம்.

கூக்க்க்கூக்கு....கூக்க்க்கூக்கு.. கூவியது அவளது செல்.

"ஹலோ..!"

"..."

"ஏய்..! என்ன சுரேஷ் சொல்ற...!உண்மையாவா..! ஓ மை காட்..!"

ஏன் நந்தினி அழ ஆரம்பிக்கிறாள் என்று தெரியவில்லை. ஒருவேளை அவர்கள் வீட்டீல் ஏதாவது..? ஒரு பாடி ரொம்ப நாளாக இழுத்துக் கொண்டிருப்பதாகச் சொல்லியிருக்கிறாள். அவர்தான் டிக்கெட் வாங்கி விட்டாரோ..?



" நந்தினி என்ன ஆச்சு..?" மாஸ்டர் பதறியபடி வந்து கேட்டார். நானும் ஆவலாக இருந்தேன், அவள் சொல்வதைக் கேட்பதற்கு.


"மாஸ்டர்..! பிரேம்... பிரேம்..."


"என்னம்மா ஆச்சு பிரேமுக்கு..?"


நான் நல்லாத்தான இருக்கேன். என்ன சொல்ல வருகிறாள் இவள்?


"காலையில ஆஃபிஸ்க்கு வரும் போது, அவுட்டர் ரிங் ரோட்டில லாரியில மோதி, ஸ்பாட் டெத்தாம் மாஸ்டர்.."


"என்ன..?" அதிர்ந்தார்.


அதிர்ந்தேன்.




No comments: