தமிழ்ப் புதினங்களின் ஆதி நூலாகிய 'பிரதாப முதலியார் சரித்திரம்' (மாயூரம் வேத நாயகம்பிள்ளை) பற்றிய பரிச்சயம், பள்ளியில் ஒரு மதிப்பெண் அளவோடு நின்று போனது.
இவ்வாண்டு சென்னைப் புத்தகக் கண்காட்சியில், இந்தப் புத்தகத்தைக் கண்டதும், வாங்கி வந்து, படிக்கத் தொடங்கியது தான் தாமதம். நாவல் போக்கு என்னை அள்ளிக் கொண்டது. ஒரே வார்த்தையில் சொல்ல வேண்டுமானால், 'அற்புதம்'.
அக்காலத்துக் கதைகளைப் போலவே எதிர்பாராத திருப்பங்கள், நடக்கவே இயலாத 'தற்செயல்' நிகழ்வுகள், நாடகத்தனம் என்று இருந்தாலும், மலரைச் சுற்றி இருக்கும் கண்ணுக்குத் தெரியாத மணம் போல, பரவி இருக்கும் நகைச்சுவை, உயர் கருத்துக்கள், நீதி நெறிகள் நம்மை கதையோடு அணைத்துச் செல்கின்றன.
முதலில் நமக்கு என்ன தகுதி இருக்கிறது என்றே தெரியவில்லை, இது போன்ற விமர்சனங்களை எழுதுவதற்கு! அக்காலத்து தமிழர்களின் வாழ்வு முறை அவ்வாறு இருந்திருக்கிறது. நாம் வேறு ஒரு மாதிரியான காலகட்டத்தில் வசிக்கிறோம். இதில் எது சரி, எது தவறு, எது உயர்ந்தது என்று யார் கூற முடியும்? எல்லம் அவரவர் மனப்பாங்கைப் பொறுத்ததே..!
கதை நாயகர் படித்தவர், பண்பாளர், நகைச்சுவைக் கருத்துக்களோடு தம் வாழ்வின் பல நிகழ்வுகளைப் பற்றிப் பேசும் இப் புதினம் மேலும் பல அறத்துறைக் கருத்துக்களையும் போகிறபோக்கில் தெளித்து விட்டுச் செல்கின்றது.
அவர்தம் அன்னையும், மனைவியும் நன்னெறி கூறி அவர் வாழ்வை நடத்தும் பாங்கு, பெண்கள் முன்னேற்றத்தைப் பற்றி ஆசிரியர் கொண்டிருந்த கனவை உணர்த்துகின்றது. கதையின் மொழி நடை நமக்குச் சென்ற நூற்றாண்டின் மொழி உபயோகிப்பைக் காட்டுகின்றது.
புதினத்தில் இருந்து ஒரு நகைச்சுவை வரி.
.....
அந்த உபாத்தியார், எங்களைப் பார்த்து "உயிரெழுத்து எத்தனை? மெய்யெழுத்து எத்தனை?" என்று கேட்டார். அதற்கு உத்தரவு சொல்லத் தெரியாமல், நான் கனகசபை முகத்தைப் பார்த்தேன்; அவன் ஆகாசத்தைப் பார்த்தான். பிற்பாடு ஏதாவது சொல்லித் தொலைக்க வேண்டுமே என்று நினைத்து "உயிரெழுத்து 50; மெய்யெழுத்து 100" என்றேன்.
உடனே உபாத்தியார் அதிகாரஞ் செய்து " நீ சொல்வது சரியல்ல. ஞானாம்பாளை அழைத்து வா" என்று உத்தரவு கொடுத்தார். நான் ஞானாம்பாளிடத்தில் போய், "உயிரெழுத்து எத்தனை? மெய்யெழுத்து எத்தனை?" என்று கேட்க, அவள், "உயிரெழுத்துப் பன்னிரெண்டு, மெய்யெழுத்துப் பதினெட்டு" என்று சொன்னாள். " நான் ' உயிரெழுத்து ஐம்பது, மெய்யெழுத்து நூறு' என்று அவ்வளவு அதிகமாய்ச் சொல்லியும் உபாத்தியார் ஒப்புக் கொள்ளவில்லையே? நீ குறைத்துச் சொல்லுகிறதை அவர் ஒப்புவாரா?" என்று சொல்லி அவளை அழைத்துக் கொண்டு போய் உபாத்தியார் முன்பாக விட்டேன்.
.......
தமிழ் படிக்கத் தெரிந்த, இரசிக்கத் தெரிந்த, உருசிக்கத் தெரிந்த தமிழ் மக்கள் அனைவரும் இப்புதினத்தை ஒருமுறையாவது படித்துப் பார்க்க வேண்டும் என்பது என் விருப்பம். நல்ல நீதிக் கருத்துக்கள், அக்கால இயல்பான நடை, சிரிப்பூட்டும் பகுதிகள் என தமிழின் முதல் புதினமே அன்னைக்கு அணிகலனாய்த் திகழ்கிறது.
புத்தகம் : பிரதாப முதலியார் சரித்திரம்.
புத்தக வகை : சமூகப் புதினம்.
ஆசிரியர் : மாயூரம் வேத நாயகம்பிள்ளை.
கிடைக்குமிடம் : நியூ செஞ்சுரி புக் ஹவுஸ் ( நான் வாங்கிய புத்தகத்தின் பதிப்பாளர். கல்கி அவர்கள் புதினங்கள் போல், இப் புதினம் பெருவாரியான புத்தகக் கடைகளில் ( இரயில் நிலையக் கடைகள், சாலையோரக் கடைகள் )காணக் கிடைப்பதில்லை.)
விலை : ரூ.60/- மட்டுமே.
No comments:
Post a Comment