Tuesday, August 14, 2007

அன்னை தேசத்தின் விடுதலை விழா...!



சுவாமிஜி கன்னியாகுமரி ஆலயத்தில் இருந்து வெளியேறினார். சமுத்திரக்கரையை அடைந்தார். மூன்று கடல்களும் கூடிய கடலிலும் இறங்கி நீந்தலானார். சிறிது தொலைவில் கடலில் இருந்த ஒரு பாறை மீதேறி அமர்ந்து கொண்டார்.

நாற்புறமும் அவரைச் சுற்றி அலைகள் எழும்பி எழும்பிப் பாறையில் மோதிக் கொண்டிருந்தன. அவற்றை விட உயரமாக அவர் உள்ளத்தில் சிந்தனை அலைகள் எழும்பிக் கொண்டேயிருந்தன. கடலை விடக் கொந்தளித்தது அவர் உள்ளம். அதோ அவருக்கு எதிரே இந்தியா முழுவதும் கிடக்கிறது! பாரதமாதா வாடிச் சோர்ந்து போய் அவர் கண்ணெதிரே படுத்துக் கொண்டிருக்கிறாள்!

பாரதத்தின் கடைசி மண்ணில் அமர்ந்து கொண்டிருந்த சுவாமிஜிக்குப் புல்லரித்தது.



...

இந்தியாவை அல்லவா அவர் காண்கிறார். பாடநூல்களில் படித்த , பேச்சாளர்களின் சொற்பொழிவுகளில் கேட்ட , தேசப் படங்களில் கண்ட இந்தியாவை இதோ பிரத்தியட்சமாக அல்லவா உயிருடன் கூடியதாகக் காண்கிறார்? அப்போது அவர் கண்முன் தமிழகத்தின் ஒரு கோடியாகிய கன்னியாகுமரி தெரியவில்லை. தமிழகமே தெரியவில்லை. ஏன் கேரளம், கர்நாடகம், ஆந்திரம், உத்கலம், வங்காளம், மகராஷ்டிரம், கூர்ஜரம், மத்தியப் பிரதேசம், பாஞ்சாலம், ம்கோன்னதமான க்ஷீமாசலம் உட்பட எதுவுமே அவருக்கு அப்போது தெரியவில்லை. பாரதம் என்ற ஒன்றே அவர் கண்களுக்குத் தெரிந்தது. இத்தனை பகுதிகலிலிருந்தாலும், அவரவர்களுக்கென்று தனித்தனி மொழிகளும், பழக்கவழக்கங்களும் இருந்தாலும் அவற்றுக்கெல்லாம் ஆதாரமான வேதமும், வேதாந்தமும், ஆகமமும், புராணமும், ஒன்றேயல்லவா..? இந்திய மக்கள் வெறுமனே இந்த உலக வாழ்க்கையை அனுபவித்துவிட்டுச் சாகவா பிறந்தவர்கள்? இத்தனை பகுதிகளுக்கும் பொதுவான ஆன்மீக அமுதத்தைப் பருகி அமரத்துவம் பெற அல்லவா பிறந்தவர்கள்?



.......

பாரதத்தின் புராதன மேன்மை, அந்த மேனமை சிதைந்து அது இழிந்து நிற்பது, இனி இந்த இழிவை வென்று அது வீறுகொண்டு எழப்போவது எல்லாம் அலை அலையாக அவருடைய கண்முன் தோன்றின.

(நன்றி : சுவாமி விவேகானந்தர் - பக்கம் : 317 - ரா.கணபதி - இராமகிருஷ்ண மடம்)



அந்நியர் ஆட்சியிலிருந்து விடுதலை பெற்று ஆண்டுகள் அறுபதாகின்றன.

எத்தனை பெரிய தேசம்..! எத்தனை விதமான மனங்கள்..! இணைப்பது எது?

கலாச்சாரம்..! பண்பாடு..! நாட்டின் அனைத்து மனங்களிலும் பூரித்திருக்கும் நாம் இந்தியர் என்ற உணர்வு..!

சுதந்திரம் பெற்று, ஒரு முழுச் சுற்று முடித்து, அடுத்த சுற்றில் அடியெடுத்து வைத்திருக்கின்ற அன்னை பூமியே, உன்னை அன்புடன் முத்தமிடுகிறோம். உன்னை இன்னும் செழுமைப்படுத்த, எங்களால் ஆன வாழ்வை அர்ப்பணிக்கிறோம்..!

வந்தே மாதரம்..!

No comments: