ஓ..! யாரது இலைகளின் இடையில் எல்லாம் பனித்துளிகளைப் பதியன் போட்டு வைத்தது? மேனி முழுதும் தடவி, வழிந்து சென்ற மழைக் காதலனா? இல்லை, இரவு முழுதும் கூடிக் களித்து விட்டு, இறங்கிச் செல்கின்ற பனிப்பாடகனா?
இருளின் ஆடையில் சுமக்கின்ற எண்ணிலா துளைகள் வழி, எட்டிப் பார்க்கிறாள் இயற்கையன்னை! மோகனக் குயிலோசைகளும், மதுரமான ரீங்காரங்களும் அடங்கிய பின் அடர்ந்து எழுகின்ற, மோனக் கோலத்தைச் சூடியதில், அமைதியில் ஆழ்கின்றது, பெருங்காடு!
குளிரின் ஜதியோசையில் நனைகின்ற ஊதற்காற்று, மெதுவாய் வீசுகின்றது. துளித்துளியாய்த் திரள்கின்ற வெண்பனித்துகள்கள் நிரம்பிய இப்பெரும் இரவின் பேராடை முழுதும் பாலாடை போல் பரவி வழிகின்றது நிலவின் வெண்ணொளி..!
No comments:
Post a Comment