Sunday, December 30, 2007

மழைத்துளி போல் ஒரு காதல்..!



சில சமயங்களில் நம் மேல் நாம் கொள்கின்ற காதல்கள் மழையில் நனைகின்ற வானவில்லின் வர்ணங்களோடு வகைப்படுத்தக் கூடியதாய் இருக்கின்றன.

மெல்லிய புன்னகையில் பிரிந்து சென்ற இதழ்களின் கோடியில் தெறித்த உன் காதலின் இருப்பிடம் வந்து என் காதலைக் கலக்கையில், இன்னும் உயிர்ப்போடு உருகிச் சென்ற அந்த இளஞ்சிவப்பு நிறம் எனக்கு நினைவூட்டும்.

உறக்கமில்லாத இரவுகள் விட்டு விட்டுப் போகின்ற தடங்களாய் கண்களின் பரப்பில் போட்டுச் செல்கின்ற சிவந்த வரிக் கோலங்கள், அதிகாலையில் நீ கோலம் போடும் அழகைக் காண்கையில், உன் கன்னங்களுக்கு இடம் பெயர்கின்றது, என்ன ஒரு விந்தை...!

வானும், கடலும் சந்தித்துக் கொள்கின்ற நேர்க் கோட்டிற்கு இணையாக நாம் நடந்து போகையில், நமது காலடித் தடங்களில் வந்து நிறைகின்ற நீர் அலைகள் இன்னும் எனக்கு சொல்லிக் கொண்டிருக்கும் நீல நிறம் வேறெதுவுமில்லை, காலம் நீள நீள நீள்கின்ற அன்பெனும் தத்துவத்தை..!

மஞ்சள் பூசிக் கொண்டு வசீகரித்து பின் மாலையில் வெட்கத்தால் நிரம்பிக் கொள்கின்ற அந்த வானம் இன்னும் எனக்குச் சொல்கின்றது அதனைப் போல் மஞ்சள் பூசிக் கொண்டும், வெட்கப்பட்டும் சிரிக்கின்ற மற்றொரு முகத்தை...!

நெல் மணிகளைச் சுமந்து நிறைந்த கனத்தால் கவிழ்ந்திருக்கும் பச்சை வயலின் நிறைந்த பசுமை, நினைவூடும் முன்னொரு நாளின் இரவில் கண்கள் பருகிய பச்சை தேகத்தை...!

கருமை பூசிய இரவில், கருமை பூசிய கண்கள் என இருமை நிறைந்த காலங்களில் கழிந்த நினைவுகள் வீசிக் காட்டும் வர்ணங்கள் அனைத்தையும் உறிஞ்சிக் கொண்ட கரிய நிறத்தை..!

வர்ணக் கலவையைப் பூசிக் கொள்கின்ற பொம்மைகள் போல் இன்னும் ஆட்டம் நின்றபாடில்லை.

No comments: