Sunday, December 30, 2007

காதல் போல் ஒரு மழைத்துளி..!



மிதச் சூடாக மழை பெய்து கொண்டிருந்தது.

மாலை வெயிலில் பொன் முகடுகளைக் குளிர்வித்து பெய்கின்ற மழை நமது நிலத்தை அடைகையில் மட்டும் சூடு அடைந்து விட்டிருந்தது. நெருக்கமாக நின்றவாறு குசலம் விசாரித்துக் கொண்டிருக்கிந்தன மா-மரங்கள். கிளைகளைக் கிளைத்துக் கொண்டிருந்த சின்னச் சின்ன இலைகள் மழையின் குளிர்மையில் மெளனமாக நனைந்து கொண்டிருந்தன.

சற்று தூரம் நடந்து வரக் கிளம்பினோம்.

இன்னும் தூறிக் கொண்டு தான் இருந்தது. நடைபாதையின் ஓரங்களில் எல்லாம் பூத்திருந்த மஞ்சள் நிறப் பூக்களின் இதழ்களில் எல்லாம் மொட்டு மொட்டாய் திரண்டிருந்தது மழைத் துளி. பச்சை அலை நனைத்தது போல் ஈரமாக இருந்த புல்வெளியின் மேனியெங்கும் படர்ந்திருந்தது குளிர்.

நமது நடையின் நிழல் போல் பக்கங்களில் தெறித்தவாறு வந்த பழுப்புச் சிதறல்கள் பொழிந்து கொண்டிருக்கும் மழையின் மாறிப் போன குழந்தைகளாய்த் தோன்றின, நிறம் மாறிப் போன நம் நேசம் போல்..!

இதே போன்றதொரு மழை நாளின் மதியப் பொழுதில் தான் நாம் முதலில் சந்தித்தோம்.

பொறுக்கி எடுத்த சிலரைக் கொண்டு மாலை கோர்த்துக் கொண்டிருந்த ஒரு பேருந்து நிறுத்தத்தில், நாமும் ஓடோடி வந்து இணைந்தோம் மாலையின் இரு முனைகளில்..! மொத்தம் நால்வர் மட்டுமே இருந்த இடத்தில் ஒரு கிழவர், அவர் விரல் பற்றிய சிறுமி, நாம்..! வாழ்வின் அத்தனை நிலையின் பிரதிகளாய் நம்மை இணைத்துக் கொண்ட நிறுத்தம், மழையைப் பார்த்து புன்னகைத்த கடைசி நொடிகளில் ஒளி இழந்தது.

விரைந்து பறக்கின்ற வாகனங்களின் முன் விளக்கொளியில் மட்டுமே தெரிந்து கொண்டிருந்தது, நம் உடனடி காலம். மற்றபடி இருள் மட்டுமே போர்த்தியிருந்த இடத்தில் போர்வைக் கிழிசல்களாய் எட்டிப் பார்த்துக் கொண்டிருந்தன மின்னல் கீற்றுகள்..!

குறுக்கிக் கிடந்த குடையின் வாயைத் திறக்க நீ முயற்சி செய்து, திணறத் தொடங்கினாய். பலமுறை முயன்றும் அப்பாங்கு உன் விரல்களில் கூடி வரவில்லை. மெல்ல என்னைப் பார்க்கிறாய் நீ என்று நான் உணர்வதற்குள், என் உளம் வந்து நிறைந்து கொண்டனை.

நம் இருவரை மட்டும் பார்த்துக் கொண்டிருந்த சிறுமி அவ்வப்போது மழையின் கம்பிச் சரங்களைத் தட்டிப் பார்த்து விளையாடினாள். கிழவரின் விரல் நுனிகளில் இருந்து விடுவித்துக் கொண்டு, உனது குடையின் ஒற்றைக் கால விரலைப் பிடித்து என்னிடம் கொண்டு வந்தாள்.

உன்னிடமிருந்து இதயத்தை எடுத்து வந்து, என்னிடம் கொடுக்கின்ற ஒரு குட்டி தேவதை போல் இன்னும் மிருதுவாக, இன்னும் பத்திரமாக, இன்னும் அணைத்துக் கொண்டு...!

ஒரு மென் மல்லிகை மொட்டைத் திறக்கின்ற வண்டின் இலாவகத்தோடு, ஒரு மேகத்தின் ஈரமான இடங்களைத் தட்டி எழுப்பித் திறக்கும் குளிர்க் காற்று போலவும், தேன் கூட்டின் அறைகளில் நிரம்பிய தேன் துளிகளின் இனிப்பைத் திறக்கும் நாவின் வலு போலவும் குடையைத் திறந்து கொடுத்தேன்.

என் விரல் பட்ட குடைக் காலின் மேல் நீ விரல் பதித்து நடந்து சென்றாய், சற்று குறைந்து விட்ட மழையை வாழ்த்திக் கொண்டும், வரவே வராத பேருந்தை சபித்துக் கொண்டும், என்னை நன்றியுடன் பார்த்துக் கொண்டும்...!

ங்கே சற்று அமரலாம் என்று எண்ணிக் கொண்டு நனைந்து கிடந்த நடைபாதை மேடையில் அமர்ந்தோம்.

ற்றுமொரு நாளின் மாலை நேரம்.

எந்நேரமும் பெய்யலாம் என்ற நினைப்போடு நடை போட்டுக் கொண்டிருந்தன மேகங்கள். ஈரமான குளிர்க் காற்றில் அசைந்து கொண்டிருந்த பச்சை இலைகளின் ஊடாக சிதறிக் கொண்டிருந்த மாலை வெயிலின் கிரணங்கள் பூங்காவின் உடலோடு விளையாடிக் கொண்டிருந்தன.

ஒரு நடைபாதை மேடையில் அமர்ந்திருந்தோம். இன்னும் நம்முள் திறக்காத இரகசிய மொழியின் ஆடைகள் ஒவ்வொன்றும் உருவப்பட்டுக் கொண்டிருந்தன. அந்த கடைசி நிர்வாண வார்த்தைகள் மட்டும் இன்னும் உள்ளே உள்ளே சென்று ஒளிந்து கொண்டிருந்தன.

இருளின் மெல்லிய நூல்கண்டுகள் தம்மை உதிர்த்துக் கொண்டு சிதறி வந்து கொண்டிருந்தன. திசைக்கொன்றாய்ப் பிரிந்து உருண்டு வந்த அவற்றின் பாதையெங்கும் புள்ளி புள்ளியாய் தெறித்து இருந்தன மீன்கள்.

நம் சொற்களின் ஆட்டம் முடிந்த பின், வார்த்தைப் பஞ்சத்தால் நாம் பீடிக்கப்பட்ட பின், நம் கரங்களைக் கோர்த்துக் கொண்டோம். அந்த இறுக்கம், அந்த நெருக்கம் மொழிந்து விட்டுப் போனது வாய் வழி உதிர மறுத்த, மறந்த அந்த வார்த்தைகளை நரம்புகளின் வழி நழுவ விட்டபடி, மெளனப் புன்னகையோடு...!

ரு நீண்ட பெருமூச்சோடு, நம் நினைவுகளின் நிஜத்தை மீண்டும் வாழ்ந்து விட்டு வந்த பின், உலகுக்குத் திரும்பி வர, நம் கைகள் தாமாகக் கோர்த்திருந்த நிலை கண்டு சிரித்துக் கொண்டோம்.

இன்னும் நாட்கள் இருக்கின்றன. நம் ஊடல்களின் உள்ளர்த்தங்கள் எல்லாம் உதிர்ந்து போகும். கோபங்களின் குரல்வளை நெறிக்கப்படும். அந்த இளம் கால நினைவுகளின் பாத ரேகைகள் மேல் நடக்கையில் எல்லாம் தொலைந்து போகும் இந்த வயதின் கவலைகளும், எண்ணங்களும்...!

உணர்த்திக் கொண்டே இருக்கின்றார்கள், அங்கே தூரத்தில் தெரிகின்ற நம்மைப் போல் சிரித்து விளையாடும் சிறுவனும், சிறுமியும்...!

No comments: