Thursday, May 29, 2008

நினைத்த நேரம்.

"...!" என்றேன்.

மாலை ஐந்து முப்பதைப் பார்த்து ரொம்ப நாள் ஆகின்றதே என்று ஒரு கவலை வந்தது. இன்று கிளம்பினேன். ஆஃபீஸ் பேருந்துகளில் ஒன்றில் தொற்றிக் கொண்டேன். கடைசி நீள இருக்கையில் வலது புறம் அமர்ந்து கொண்டேன். கழக்குட்டம் ஜங்க்ஷனில் திரும்பி, கொல்லம் நெடுஞ்சாலையில் நுழைந்து, கேரளா யூனிவர்ஸிடி (கழக்குட்டம் கேம்பஸ்), காரியவட்டம், சாவடிமுக்கு கடந்து ஸ்ரிகார்யம் நெருங்குகையில் வழக்கமான சாலை நெருக்கடி. எஸ்.பி.ஐ.யின் ஏ.டி.எம்-ஐப் பார்த்து எழுந்து கொண்டேன். பேருந்து டிஸ்க்ரீட் புள்ளிகளாய் நின்று நின்று நகர்ந்து கொண்டிருக்க, ஒரு புள்ளியில் இறங்கினேன். ஒரு நடையில் கொஞ்சம் வெம்மை பூத்திருந்த கஃபேயில் நுழைந்து, ப்ளாக்கரைத் திறக்கையில், அவளைப் பார்த்தேன்.

மே மாதத்தின் அந்திம நாட்களில், வெயில் நாடெங்கும் நாற்பது டிகிரியைத் தொட்டுக் கொண்டிருக்க, இங்கு மஞ்சு பூத்திருந்தது. கருப்பின் குடைகள் மூடி, லேசாகத் தூறல் விழத் தொடங்க, அவள் நுழைந்தாள்.

மெல்லிய சந்தனக் கீற்று. காது மடல்களின் மேலே இரு, முடிக்கற்றைகளை எடுத்து, பின்னலிட்டு, பூச்சூடி இருந்தாள். சாமந்தி. கட்டம் கட்டமாய்ப் போட்டிருந்த பாவாடை, சட்டை இறுக்கிப் பிடித்திருக்க, துப்பட்டாவின் அவசர அவசியத்தை யாரும் சொல்லாததை எண்ணி வியந்தேன். சிரிக்கும் கண்கள். இரண்டு க்யூபிக்கிள்கள் தள்ளி இருந்த சிஸ்டத்தில் அமர்ந்தாள்.

ஜிமெயில், தேன்கூடு, தமிழ்மணம், மாற்று, டெக்னோரட்டி, என்றெல்லாம் ஒரு பார்வை பார்த்துக் கொண்டு, யாரோ உற்றுப் பார்ப்பதன் செல்கள் அலாரம் அடிக்க, சுற்றிப் பார்க்க, அவள் பதற்றத்துடன் பார்த்துக் கொண்டிருப்பதை அறிந்தேன். கஃபேக்காரர் அருகின் மெடிக்கல் ஷாப்புக்கோ, பேக்கரிக்கோ, மளிகைக் கடைக்கோ சென்றிருக்க வேண்டும். கதவு சாத்தப் அப்ட்டிருக்க, மொக்கையாக இயங்கிக் கொண்டிருந்த ஏ.ஸி.யின் 'பம்'மென்ற சத்தமும், வெண்டிலேட்டரின் ஏலியாஸிங்கை மீறிய முக்கரங்களின் சுழலும் மட்டுமே இருந்தன.

"எந்தா ப்ரஸ்னம்..?"என்று கேட்டவாறே அருகில் இருந்த ப்ளாஸ்டிக் சேரை இழுத்துப் போட்டு அமர்ந்தேன்.

குடிகுரா, சாவ்லான், மல்லிகை, ரோஸ் மில்க் எல்லாம் கலந்த ஒரு கூர்மையான வாசம் மிதந்தது. நாசியின் இரண்டு துவாரங்களுக்கும் இடையின் சின்ன எலும்பை ப்ளேடால் கீறிச் செல்லுவது போல், மணம் ந்யூரான்களை நிரப்பியது.

மெயிலின் திரையைத் திறக்க திணறிக் கொண்டிருந்தாள். யாஹூ மெயிலின் அ முதல் ஃ வரை சொல்லிக் கொடுத்தேன். பாஸ்வேர்டைப் பற்றிக் கேட்டதும் ********** என்று அடித்தாள்.

சற்று நேரத்தில் மழை நின்று போனது. 'தாங்க்ஸ் அங்கிள்' என்றாள். அவளது பெயர் 'அனிருத்தா' என்றாள். எதற்காக இந்த மெயில் ஐ.டி. என்று கேட்டேன். பெங்களூருவில் இருக்கும் அவள் உட்பியுடன் சாட் செய்வதற்கு என்றாள்.

வழி விட்டேன். வெளியே சென்ற பின் ஒரு முறை பார்த்து மையமாகச் சிரித்தாள். சிரிக்கும் போது தான் கவனித்தேன். அவள் ஒன்றும் அவ்வளவு அழகில்லை என்று தோன்றியது.

மீண்டும் வந்து கவனம் திருப்புகையில், மற்றுமொரு கொலுசொலி கேட்டது.

"ஹ...!" என்றேன்.

No comments: