Saturday, May 31, 2008

நா.எ.செ.வே.?

நான் என்ன செய்திருக்க வேண்டும்?

இருங்கள். முதலில் இந்த ஸினேரியோவைச் சொல்லி விடுகிறேன்.

நான் எங்கிருக்கிறேன்? ஓர் ஒற்றை அறையில். பிரம்மச்சாரி வாழ்க்கையின் சர்வ லட்சணங்களும் பொருந்திய அறையில். இரண்டு கட்டில்கள். பாய். தலையணை. அழுக்கின் அடையாளங்களைச் சுமந்த சட்டை, பனியன்கள், உள்ளாடைகள். ஊசித்துளைக்கு எது வெளிப்புறம், உட்புறம் என்பது போல், உள்ளே / வெளியே எட்டிப்பார்க்க ஒரு ஜன்னல். குறுக்குக் கம்பிகளே எலும்புகளாகக் கொண்ட ஒரு சதுரப் பிண்டம், அது.

என்ன நடந்தது? நல்ல மழை. இரண்டு மணி நேரம் விடாது பெய்து தள்ளியது. எனக்கு மழை மிகப் பிடிக்கும். ஜன்னலின் அருகே ஒரு சிறிய ப்ளாஸ்டிக் சேரை இழுத்துப் போட்டுக் கொண்டு, ஒரு கையில் சூடான டீயையும், மறு கையில் வில்ஸையும் குடிக்க, சொர்க்கம் கொஞ்சம் கிட்டத்தில் தெரிந்தது.

அப்போது தான் அதை கவனித்தேன். பச்சைத் தாள். முழு ஐநூறு ரூபா நோட்டு. கீழே வீட்டு உரிமையாளர் வீடு. ஒரு மளிகைக் கடை. கண்ணாடிக் கூண்டுக்குள் அடைபட்ட எஸ்.டி.டி. பூத். கம்பி கேட். வெளியே ஸ்ரீ முருகன் ஸ்டோர்ஸ் என்று மஞ்சள் பெய்ண்டில் எழுதப்பட்ட A ஷேப்பில் ஒரு போர்டு.

போர்டு மழையில் நனைந்து கொன்டே இருந்தது. என் கவனம் அதில் இல்லை. Aயின் இரண்டு செவ்வக முதுகுகளுக்கும் இடையில் ஒரு கொக்கி இருந்தது. அதன் தலைக்கும், வாலுக்கும் இடையில் சிக்கிக் கொண்டிருந்தது. புது நோட்டு. மழை ஈரம் கூட தீண்டாமல் படபடத்துக் கொண்டிருந்தது.

கோவலன் தம்பதியை 'வாரல் என்பது போல் மறித்துக் கைகாட்ட' என்று மீன் கொடி அசைந்ததைப் போல், இந்த பச்சை நோட்டு என்னை ஆசையோடு அழைத்து அசைந்தது.

'வா! என்னை பயன்படுத்து! உன் நெடுநாள் ஆசை என்ன? கால் ப்ளேட் பிரியாணி, ரெண்டு ப்ளேட் லெக் பீஸ், பச்சை நிறத்தில் கோடு போட்ட இரண்டு சட்டை, கறுப்பு பேண்ட். என்னைக் கொண்டு உன் ஆசைகளைக் கொள்'.

எட்டிப் பார்த்தேன். ஈரச் சாலையில் யாரும் இல்லை. மசூத் கறிக்கடை, சரவணா லாட்டரி மற்றும் டீ ஸ்டால், அம்மா மளிகைக் கடை.. எல்லாம் இறுக்கச் சாத்தி இருந்தன.

முடிவெடுத்தேன். இந்த நோட்டு எனக்குத் தான். கதவை இழுத்துச் சாத்தினேன். படிகளில் சத்தமே இல்லாமல் இறங்கினேன். பதுங்கிப் பதுங்கி வந்து விட்டேன்.

அப்போது தான் அது நிகழ்ந்தது.

ன்னா வெக்க சார், இது? சை...

வெய்யக் காலத்துல ஒரே சல்ல. வெளிய போனா அனலு மாரி காத்து வீசுது. சர்தான்னு வூட்டுக்குள்ள ஒக்கார முடியுதா? அதுவும் முடியல. ஃபேன போட்டா அதுவும் நெருப்ப மேல கொட்டுது. ரொம்பக் கொடும சார் இங்க இருக்கறது...

போன தபா வெயிலு கொஞ்சம் கம்மி மாதிரி இருக்கு. இப்போ இந்த போடு போடுது சார். மனுசன் இந்த ஊருல இருக்கறதா என்னன்னே புர்ல. பேசாம தூத்துக்குடி பக்கமா போயிரலாமானு நெனக்கறேன். எனக்கு இன்னா வேலன்னா, ஹார்பர்ல சரக்கு வந்து எறங்கும். சரக்குன்னா நீ என்னமோ நெனச்சிக்காத சார். கரி. அப்பால நெறய வரும். அத்தையெலலம் உன்னாண்ட சொல்ல முடியாது. எல்லாம் சீக்ரெட்டு.

போட்டுல இருந்து, லாரிங்களுக்கு கை மாத்திக் குடுக்கணும். நடுவுல பூந்து கொஞ்சம் சரக்குல கை வெக்க எல்லாம் முடியாது. பெண்டு களட்டிடுவாங்க. அப்பால ஹார்பருக்குள்ளயெ நொளய முடியாது. அதான் செரி, இந்த வெயிலுக்கு பயந்துகினு கொஞ்ச நா, தூத்துக்குடி பக்கம் இல்ல கொச்சின் பக்கமா போலாம்னு பாக்கறன்.

எங்க. குடும்பம்னு ஒண்ணு ஆயிட்டாலே ரோதன சார். கல்யாணமாகாம இருக்க சொல்லோ, எத்தினி சாலியா இருந்துச்சு. நானு, சோசப்பு, கபாலி அல்லா பேரும் போட்டு எட்த்துக்கினு கடலுகுள்ளாற போய்டுவம். அப்பால ஒரு நாலு நாளைக்கு தண்ணி தான் நம்ம நாடு, ஊரு அல்லாமே!

இப்ப என்ன ஆச்சு? கடலுக்குள்ள எல்லாம் போகக் கூடாது. துறைமுகத்துலயே போய் வேல பாருன்னுட்டா! இன்னா பண்றது? சை...

யப்பா..! கொஞ்சமாச்சும் மழ வந்துச்சு. இன்னா மழ இது! சும்மா பின்னிப் பெடலெடுத்திடுச்சு! ரெண்டு மண் நேரம். இப்பத் தான் நின்னுருக்கு.

கொஞ்சம் வெளிய போய்ப் பாக்கலாம். இன்னாது? பச்சை நோட்டு. ஐநூறு ரூபா. போய் எடுத்துறலாமா? வேணாம். ரோடு எப்டி இருக்கு. சைலண்டா இருக்கு. எல்லாரும் நல்லாத் தூங்கினு இருக்காங்க போல இருக்கு.

வெய்ட் பண்ணலாம்.

அட, இன்னா இது? யாரு வர்றது?

ரு நீளக் கார் வந்து நின்றது. காண்டெஸா. சின்னக் கரடி பொம்மை தொங்கிக் கொண்டிருந்த முன் இருக்கையில் இருவர் அமர்ந்திருந்தனர்.

"ஸ்வப்னா! நீ சொல்றதெல்லாம் உண்மையா..?"

"எஸ்..!" அந்த ஸ்வப்னா எனப்பட்டவள் கூறினாள். அழகான பல்வரிசை இருந்தது, தெரிந்தது.

"எப்படி தெரிந்தது..?"

"தெரியல! இதுக்குத் தான் நான் அப்பவே சொன்னேன். வீட்டுக்கெல்லாம் வராதீங்கனு. கேட்டீங்களா? இப்ப பாருங்க. எப்படியோ அவருக்குத் தெரிஞ்சிடுச்சினு நினைக்கிறேன். இப்ப என்ன செய்யட்டும்..?"

"பேசம நீ எங்கூட வந்திடு. ராணி மாதிரி வெச்சுக் காப்பாத்தறேன்."

"ஐயோ.. குழந்தைங்களை விட்டுடா..?"

"பார் ஸ்வப்னா. உனக்கு குழந்தைங்க தான் முக்கியம்னா, அவன் கூடவே இருந்துக்கோ. இல்ல, நான் வேணும்னா எங்கூட வந்திடு, அவனோட குழந்தைங்களை மறந்திட்டு. என்ன சொல்ற..?"

"..."

"எனக்கு உன் மெள்னத்தோட அர்த்தம் தெரியல. பட் நாம சீக்கிரம் முடிவு செஞ்சாகணும். நாளைக்கு காலையில பதினொரு மணிக்கு கால் பண்ணுவேன். ஒரு முடிவைச் சொல். இப்ப கிளம்பலாம்..."

A முன் நின்று கொண்டிருந்த கார் கிளம்பியது. மழைத் தண்ணீர் தேங்கியிருந்த குழியில் இறங்கி எழ, சேறு பாய்ந்தது. ரூபாய் நோட்டின் மேல் விழுந்தது. சிக்கிக் கொண்டிருந்த நோட்டு, விடுபட்டது. காற்றின் போக்கில் மிதந்தது. காரின் பின் பானெட் மீது சென்று ஒட்டிக் கொண்டது.

கார் சீனில் இருந்து நீங்கியது, ரூபாய் நோட்டுடன்.

இருவரும் யோசித்தார்கள்.

'நான் என்ன செய்திருக்க வேண்டும்..?'

2 comments:

Anonymous said...

ENNAAA......
WILLSAAA.....

இரா. வசந்த குமார். said...

AAMAA... WILLS THAAN...