Tuesday, June 17, 2008

பால்கோவா பாவைகள்.

சென்ற ஞாயிற்றுக்கிழமை.

அதிகாலை ஐந்து மணிக்கெல்லாம் அறையை விட்டு வெளி வந்து விட்டோம். உப்புக்காற்று கரிப்புச் சுவையோடு வீசிக் கொண்டிருந்தது. கதவைத் திறந்தவுடன், கொஞ்சம் சிலுசிலுப்பாக இருந்தது. பரந்து விரிந்த பாரத தேசத்தின் பாத நுனி. குமரி.

இருள் இன்னும் விலகி இருக்கவில்லை. காந்தி மண்டபத்தை ஒட்டிய ஒற்றைச் சந்தில் கீழிறங்கி கொஞ்சம் கிழக்காக நடந்து, கீழிறங்க, 'ஹா'என்று பரந்து விரிந்திருக்கின்றது கடல். எந்தக் கடல்? தெரியாது. மூன்று பெரு நீர்ப்பரப்பும் அலைகளை எடுத்து வீசிக் கொண்டிருந்தன.

நிறைய பேர் இருந்தனர். சைக்கிள் டீ, காபி வியாபாரம் சூடாக நடந்து கொண்டிருந்தது. கழுத்தில் மஃப்ளர், தலையில் துண்டு, இத்யாதிகளோடு நிறைய பேரைப் பார்க்க முடிந்தது.

விதவிதமான மனிதர்கள்.

பெரு மீசையோடு பெருத்த மனிதர்கள், கலர் கலராக சேலைகள் அணிந்த வடபாரத பெண்கள், சின்னஞ்சிறு வர்/மி கள், கல்லூரி கலர்கள், தூக்கக் கலக்கத்தில் உட்கார்ந்தவாறே உறங்கும் கணவர்கள், கடலில் குளிக்க நச்சரிக்கும் குழந்தைகள்.. எதிர்பார்த்தது விட சுவாரஸ்யமாகவே இருந்தது அதிகாலைக் கடற்கரை.

நேரமாக, நேரமாக விவேக் மண்டபத்திற்கு கொஞ்சம் கிழக்கே ஆரஞ்சு கலர் படரத் தொடங்கியது. மக்கள் ப்ளாட்பாரத்தில் பாய்கின்ற எலெக்ட்ரிக் ட்ரெயினைப் பிடிக்கப் போகும் அவசரத்தில் கிழக்குப் பக்கமாக ஓடினர். மற்றவர்களை விட அரைக் கால் இஞ்ச் நொடிகள் முன்பே சூரியனைப் பார்த்து விட வேண்டும் என்ற அல்ப ஆசையில் கடல் மணலில் இரங்கி, பாசிப்பாறைகளின் மேலும் படையெடுத்துச் சென்றனர்.

பெரும்பாலும் நார்த் மக்கள் தான் இருந்தனர். தம் வாழ்நாளிலேயே கடலைப் பார்த்திராத ராஜஸ்தான் மக்கள் தான் நிறைய இருந்தனர். மிக்க லூசாக கட்டப்பட்ட கலர்ஃபுல்லான புடவைகள், பெயர் தெரியாத வர்ணங்களில் எல்லாம் மூக்குத்திகள், தோடுகள் எல்லாம் அந்த நேரத்திலும் அணிந்து குந்தி இருந்தனர்.

பஞ்சாப் பால்கோவா பாவைகள் பலரைப் பார்த்தேன். டைட் டீ-ஷர்ட், ஜீன்ஸ் பாண்ட். தூக்கக் கலக்கத்திலும் அழகாகவே இருந்தனர்.

சூரியன் மெல்ல மெல்ல வந்தான். கடலில் இருந்து அல்ல. திடீரென வானத்தில் இருந்து தான் உதித்தான். யாரைப் பற்றியும் கவலை இன்றி 8 நிமிடம் 20 செகண்டுகள் கழித்தே எங்களுக்குக் காட்சியளித்தார் ஆதித்யர். எல்லோரும் சடார், புடாரென காமிராக்கள், செல் போன்கள் மூலம் அவனைப் படம் பிடித்தனர்.

எனக்கு ஆச்சரியமாக இருந்தது. இதே ஆளைத் தானே தினமும் பார்க்கிறோம். இங்கு வந்து கடலில் பார்ப்பதில் அப்படி என்ன ஆர்வம். வழக்கமாக இதே வேளையில் வீட்டில் இழுத்துப் போர்த்திக் கொண்டு தூங்கிக் கொண்டு இருப்போம். இல்லாவிடில் சென்னையிலேயே பீச்சில் பார்த்திருக்கலாம். அதே சூரியனை, அதே வங்கக் கடலில் உதிப்பதை 1000 கி.மீ. தாண்டி வந்து பார்ப்பதில், சில செகண்டுகள் காலத்தில் பின் போயிருப்போமா என்ற ஐயம் வந்தது.

நாங்கள் கிழக்குப் பக்கம் பார்த்து நிற்கும் போது, "இப்ப திடீர்னு சூரியன் பின்னாடி உதிச்சா எப்டி இருக்கும்?" அம்மா கேட்டார்கள்.

"என்ன பண்றது..? திரும்பி நின்னு பாக்க வேண்டியது தான்.." என்றேன்.

"சூரியனே வர்லைனா என்ன பண்றது..?"

" நல்லதாப் போச்சு..! இன்னும் சண்டே வர்லைனு போய் தூங்க வேண்டியது தான்.." அதுக்கப்புறம் அம்மா எந்தக் கேள்வியும் கேட்கவில்லை.

அடுத்த அரை மணி நேரத்திற்கு கூட்டமாக நின்று, தனியாக நின்று பலப்பல போஸ்கள் கொடுத்து போட்டோக்கள் எடுக்கப்பட்டுக் கொண்டே இருந்தன.

நாங்கள் கிளம்பி வந்து விட்டோம்.

காலை 8 மணிக்கு விவேக் மண்டபத்திற்குச் செல்ல வரிசையில் நிற்கும் போது, அதிகாலையில் கடற்கரையில் பார்த்த ஒரு பால்கோவா சொன்னது புரிந்தது.

"ச்சே..! என்ன வெயில்..!"

4 comments:

MADCOVI said...

Nothing special. No twist, no theme..enna solla varre endru theriyala...!

இரா. வசந்த குமார். said...

அன்பு madcovi...

இது கதை இல்லீங்க... போன வாரம் குமரிக்கு சுற்றுலா போயிருந்தோம். அங்க பார்த்ததை எழுதி இருக்கேங்க...

Anonymous said...

supper comment

இரா. வசந்த குமார். said...

அருமை அனானி... மிக்க நன்றிகள்.