Tuesday, June 17, 2008

காக்கா தூக்கிட்டுப் போயிடுச்சு...



ரு ஊரில ஒரு பாட்டி இருந்தாளாம். அந்தப்
பாட்டி வடை சுட்டுக்கிட்டு இருந்தாளாம். அப்ப அந்தப் பக்கமா ஒரு காக்கா வந்துச்சாம். அது என்ன பண்ணுச்சு? பாட்டி அந்தப் பக்கமா திரும்புன போது, டக்குனு ஒரு வடையைத் தூக்கிட்டு பறந்துச்...

ஹோல்டான்..! ஹோல்டான்..!

ரொம்ப நாளா இந்தக் கதையைச் சொல்லிட்டு இருக்காங்க. இப்ப இருக்கற காக்காக்கள் எல்லாம் வடையை மட்டும் எடுத்துக்கிட்டு பறக்கறதில்ல. இன்னிக்கு என்ன ஆச்சுன்னு சொல்றேன், கேளுங்க.

வீட்டை விட்டு வெளி வந்தேன். பூட்டினேன். ஒரு புக்கையும், கர்ச்சீஃப்பையும் உள்ளேயே வைத்து விட்டதை உணர்ந்தேன். ஒரு கையில் செல்போன், ஒரு கையில் பெரிய வீட்டுச் சாவி. விதி வேலை செய்ய ஆரம்பித்தது. மறுபடியும் இவற்றைத் தூக்கிக் கொண்டு உள்ளே செல்ல சோம்பல். வெளியில் இருந்த திட்டில் செல்போனையும், சாவியையும் வைத்து விட்டு, உள்ளே சென்றேன். புக்கை எடுத்து விட்டு, வெளியே வர கதவைத் திறக்க, பார்த்தேன்.

ஒரு காகம், என் செல்போனை கவ்வியது. என்னைப் பார்த்தது. ஒரு கண் சிமிட்டியது. மறு கண்ணையும் சிமிட்டி இருக்கலாம். எனக்குத் தெரியவில்லை.

பறந்தது.

நிஜமாகப் பறந்தது. இரண்டு நொடிகளுக்குப் பிறகே நிலைமை எனக்குப் புரிந்தது. நடந்த நிகழ்வின் உண்மை மூளையில் பதிந்து, உணர அவ்வளவு நேரம் பிடித்தது. அசந்தர்ப்பமாக 'காக்கா செல்போன் எடுத்துட்டு போச்சுனு சொன்னால், யாராவது நம்புவார்களா..?' என்ற சந்தேகம் வந்தது. உதறி விட்டு, சுற்றுமுற்றும் பார்த்தேன்.

கொஞ்ச தூரத்தில் ஓர் அரசமரம் இருக்கிறது. அதன் ஒரு கிளையில் அமர்ந்திருந்தது. காலில் செல்போனை வைத்து, அதன் மேல், கீழ் இரு கால்களை வைத்து, ஒரு மாதிரி பாலன்ஸில் அமர்ந்து சுற்று முற்றும் பார்த்து கொண்டிருந்தது.

போன தடவை, ஜப்பானில் இருந்து வந்த ஒரு சொந்தக்காரப் பையன் கொடுத்த ஸ்ஸ்ஸ்லிம் போன் அது. எடுத்துச் செல்லும் போது கையில் இருப்பதன் பளுவே இருக்காது. பல சமாயங்களில் அதை எடுத்துச் செல்லாமலே, எடுத்து செல்கிறோம் என்று நினைக்கும் அளவிற்கு குழப்பி அடிக்கும் மென் வஸ்து.

காக்கா என்ன, ஒரு கொசு கூட தூக்கிச் செல்லும் என்று தோன்றியது.

இப்போது, எப்படி அதன் கையில் இருந்து... இல்லை, காலில் இருந்து என் போனை பிடுங்குவது என்று யோசிக்க வேண்டும். என்னை கவனித்து விட்டது. ஒரு மாதிரி முறைத்தது. இந்த காக்கா யாரா இருக்கும் என்று யோசித்தேன்.

இந்த முறை முறைக்கிறதே... தெருக்கோடி கோபாலாக இருக்குமோ? அவன் தான் நோ பால் போட்டு விட்டு ஒத்துக் கொள்ளவில்லை என்றால் இதே போல் முறைப்பான். இல்லை, எதிர் வீட்டு பாட்டியாக இருக்குமோ? அவள் தான், கொட்டைப் பாக்கை இடித்துக் கொண்டே இருப்பாள். அதைப் போலவே, இந்தக் காகமும் பட்டன்களைக் கொத்துகிறது.

"சூ.. கொத்தாத...." கத்தினேன்.

சம்பந்தமே இல்லாமல், சின்ன வயதில் பாட்டி சொன்ன ஒரு டெக்னிக்கலான கதை நினைவுக்கு வந்தது. வேறென்ன? அந்த குரங்கு - குல்லா கதை தான்.

குரங்குக்கு ஒரு குல்லான்னா, காக்காக்கு கைப்பேசியா?

எங்கிட்ட வேற செல்போன் இல்லையே..? என்ன பண்றது...?

பக்கத்தில் ஒரு மெடிக்கல் ஷாப். முருகன் துணிக்கடைகடல். வீரபாண்டியன் அரிசிக் கடை. எஸ்.டி.டி. பூத். ராஜா ஸ்நாக்ஸ் அண்டு டீ பார். அங்கே பஜ்ஜி சுட்டுக் கொண்டிருந்தனர்.

போனேன். இரண்டு வடைகள் வாங்கினேன். அரச மரத்தடைக்கு வந்தேன்.

காக்காவைக் கூப்பிட்டேன். படித்த சி, சி++, ஜாவா, ஏ.எஸ்.பி., ஜெ.எஸ்.பி, எதுவும் உதவிக்கு வரவில்லை. இப்போது பயன்படுத்த வேண்டியது ஒரே பாஷை தான்.

'கா...கா..க்கா....க்கா....'

'அட அற்பமே...' என்பது போல் என்னை ஒரு பார்வை பார்த்தது. 'போன தலைமுறைக் காகங்கள் போல் நான் இல்லை' என்பது போல் ஒரு பக்கமாகத் திரும்பி முறைத்தது. இறுக்கமாக செல்போனைப் பிடித்துக் கொண்டது. பறந்தது. பறந்தது. அந்த மரத்தை விட்டே பறந்து சென்றது. கண்ணில் இருந்தே மறைந்தது.

வேறென்ன செய்வது..? அலுவலகத்திற்கு வந்தேன்.

"உனக்கு கால் பண்ணிட்டே இருந்தேனே..? ஏன் எடுக்கல...?"

"செல்போன் மிஸ் ஆகிடுச்சு..."

"அப்படியா..? எப்படி..?"

"காக்கா தூக்கிட்டு போயிடுச்சு..."

படம் நன்றி :: http://www.stardel.com/fiveacres/image/20050316crow.jpg

2 comments:

MADCOVI said...

Sema bore

இரா. வசந்த குமார். said...

அன்பு ... மிக்க நன்றி. கூடுதல் உழைப்பைக் கொணர முயல்கிறேன்.