Thursday, August 14, 2008

மணி விழா +2.



பாரத தேசத்திற்கு இனிய சுதந்திர நன்னாள் வாழ்த்துக்கள்.

இந்நன்னாளில் என்ன செய்யலாம்?

சில உறுதிமொழிகள் எடுத்துக் கொள்ளலாம்.

அ. முதலில் ப்ளாஸ்டிக் விவகாரம். குப்பைகளில் மிக அதிகமாக இடம் பிடிக்கின்ற வஸ்து ப்ளாஸ்டிக். இதன் உபயோகிப்பை எப்படி குறைக்கலாம்? ஒவ்வொரு முறை கடைகளில் பொருட்கள் வாங்கும் போதும் வாங்குகின்ற ப்ளாஸ்டிக் பைகள் வாங்குகிறோம். அதற்குப் பதிலாக ஒரு முறை வாங்கிய ப்ளாஸ்டிக் பையையே மறுபடியும், மறுபடியும் உபயோகப்படுத்தினால் என்ன? மறு உபயோகப்படுத்துவோம்.

அதிகமாக அதிகமாக வீட்டிலும் குப்பை. நாட்டிலும் குப்பை. சுற்றுப்புறத்திற்கும் சீர்கேடு.

ஆ. பீடி, சிகரெட் உபயோகம். கொஞ்சம் கொஞ்சமாக குறைக்க முயல்வோம். ஒரு நாளில் 20 முறை குடிக்கிறோம் எனில் அதை 10 முறை என்று குறைக்க முயற்சி செய்வோம். புகை பிடிக்க வேண்டும் என்ற உணர்வு தோன்றும் போது அதை நிறுத்தி, 'அடுத்த முறை புகைக்கும் உணர்வு தோன்றுகையில் பிடிக்கிறேன்' என்று தள்ளிப் போடுவோம்.

என்ன பயன்? உடல்நலம் கெட்டுப் போவது கொஞ்சம் தள்ளிப் போகும். பாக்கெட்டில் இருந்து பைசா குறைவது கொஞ்சம் தள்ளிப் போகும். காற்று மாசுபடுவது கொஞ்சம் குறையும்.

இ. சாராயம் குடித்தல். இதற்கு பல காரணங்கள் இருக்கின்றன. இப்பழக்கத்தை விடுவதும் தொடர்வதும் அவரவர் முடிவு! ஆனால் நாம் கவலைப்படுவது குடித்த பின் பாட்டிலகளை என்ன செய்கிறோம் என்பதே! அப்படியே குடித்த இடத்திலேயே போட்டு விட்டு வருவது இடத்திற்கும் குப்பை; நம் பைசாவுக்கும் இழப்பு. பின்னே, நாம் பாட்டிலுக்கும் சேர்த்து தானே பைசா கொடுக்கிறோம். எனவே குடித்து முடித்த பின் பாட்டில்களை பத்திரமாக வீட்டிற்கு கொண்டு வருவோம். பாட்டில் பொறுக்கும் பாரதச் சிறார்கள் வருகையில் அவர்களுக்கு கொடுத்தால் இரண்டு இட்லிக்கு ஆகும். எடைக்கு போட்டால் கஷ்ட காலங்களில் சிறு துரும்பாய் உதவும்.



ஈ. தெருவில் துப்புதல். மிக மிக அவசரத்தை தவிர நாம் தெருவில் பலர் பார்க்க சிறுநீரோ, மலமோ கழிப்போமா? மாட்டோல் அல்லவா? எச்சில் துப்புதலும் அத்தகைய ஒரு செயல் தானே? அதை மட்டும் ஏன் செய்கிறோம். அதையும் நிறுத்துவோமா? தாய்நாடு என்கிறோம். ஆனால் அதன் முகத்திலேயே துப்புதல் என்ன நியாயம்? மிகக் குழந்தையாய் இருக்கையில் தாயின் மீதே சிறுநீர் அடித்திருப்போம். அவர் நமது கழிவுகளை சுத்தம் செய்திருப்பார். ஆனால் தாயின் மேல் 'த்தூ..."என்று எச்சில் துப்பி இருப்போமா?

உ. சிக்கனம். வீட்டை விட்டு கிளம்பும் போது ஜன்னல்கள், பின் கதவு எல்லாம் சாத்தியாகி விட்டதா என்று செக் செய்யும் போது, அப்படியே எல்லா ஸ்விட்சுகளும் அணைக்கப்பட்டு விட்டதா, கேஸ் இறுக்க மூடப்பட்டு விட்டதா வாட்டர் டேப்புகள் மூடப்பட்டு விட்டதா என்று தவறாமல் உறுதிப்படுத்திக் கொள்வோம். குறிப்பாக மின்சாரம் இல்லாமல் போன பின்பும், பைப்பில் தண்ணீர் வராமல் இருக்கும் போதும் வெளியே கிளம்ப நேரிட்டால் மறக்காமல் இந்த சோதனைகளை செய்து விட்டே கிளம்புவோம்.

என்ன பலன்?

நாட்டிற்கு எரிபொருள் கொஞ்சூண்டு மிச்சம். நமக்கு கரண்டு பில், வாட்டர் பில் தக்குணூண்டு மிச்சம்.



ஊ. கணிணி முன் அமர்ந்து வேலை செய்பவராயின் சீட்டை விட்டு வெளியே போகும் போது, மானிட்டரை அணைத்து விட்டு செல்வோம். பலமுறை பட்டன் அழுத்தப்படுவதால் அது பயனற்றுப் போகும் வாய்ப்பு இருக்கின்றது என்பவர்களுக்கு, பட்டன் போனால் பட்டன் வரும்; பவர் போனால் பவர் அது திரும்பி வருமா?

எ. முடிந்த அளவிற்கு நம்மிடம் இருக்கும் பொருட்களை ரீ-யூஸ் செய்யும் வழிகளை சிந்திப்போம். பனியன் - > பழசாகி, கரித்துணி -> அழுக்காகி சைக்கிள் துடைப்பான் -> இன்னும் அழுக்காகி -> ஒட்டடைக் கம்பு நுனி. ஒரு பேப்பரின் எல்லா பக்கங்களையும் எழுதி தீர்க்கப் பார்ப்போம். வீட்டில் சும்மா இருக்கையில் எதையாவது கிறுக்க வேண்டும் போல் இருந்தால், சிலேட்டு, பல்ப்பம் பயன்படுத்தலாமே! (சிரிக்காதீர்கள்! முயலலாம், தவறில்லை.) நீங்கள் இன்னும் யோசித்தால் இது போல் உபயோகமான பல ஐடியாக்கள் கிடைக்கும்.

ஏ. சுதந்திரத் திருநாளில் மிக அவசியமாக ஒன்று செய்வோம். நம்மால் முடிந்த அளவிற்கு ஒரு சின்ன செடி நடலாம். மரமோ, செடியோ, கொடியோ, பயறோ எதாவது ஒன்று! அழுகிப் போன தக்காளியைப் பிழிந்து போட்டு, நான்கு நாட்கள் தண்ணீர் ஊற்றினால் தக்காளிச் செடி நமக்கு! கம்பு, அவரை விதை, கத்திரிக்காய் விதை, பூசணி விதை, பூச்செடிகள்... ஏதாவது வைப்போம். சுற்றுப்புறச் சீர்கேட்டிற்கு நம்மால் முடிந்த நல்லது இது தான். நமக்கும் கடைகளில் வாங்காமல் கையிலேயே கறிகாய்கள் இருப்பது போல் ஆச்சு.

ஐ. காலையில் கொஞ்ச நேரம், ஒரு ஐந்து நிமிஷம் சுதந்திரம் வாங்கிக் கொடுத்த பெரியவர்களை (நீங்கள் யாரை நினைத்துக் கொண்டாலும் சரி! காந்தியோ, பகத் சிங்கோ, அம்பேத்கரோ!) நினைத்துப் பார்ப்போம். இவர்கள் அளவிற்கு நம்மால் செய்ய முடியா விட்டாலும், நம்மால் செய்ய முடிந்த சின்னச் சின்ன விஷயங்களில் அப்பெரியவர்கள் காட்டிய ஆழ்ந்த உழைப்பை கொண்டு வர முடிந்தால் போதும். பிறகு தொலைக்காட்சியில் தொலைந்து போகலாம்.

தெருவில் போடப்பட்டு இருக்கும் சாகக் கிடக்கும் பீடித்துண்டை செருப்புக் கால்களால் மிதித்துக் கொல்லலாம். பின்னால் வெறுங்கால்கள் வரலாம். அது உங்கள் மகனுடையதாகவும் இருக்கலாம். வருடத்திற்கு நான்கு முறைகள் முடியாவிட்டால் குறைந்தது இரு முறையாவது இரத்த தானம் செய்யலாம். அது உங்கள் நாட்டின் சகோதரனுக்காக இருக்கலாம்.

நீங்களும் இது போல் சிந்தித்தால் நிறைய தோன்றும். பத்தில் இரண்டாவது செய்தால், நாட்டிற்கு நான் இது செய்தேன் என்று சர்ச்சிலுக்கு தைரியமாக ஈ-மெயில் அனுப்பலாம்.



இனிய நீர்ப் பெருக்கினை! இன்கனி வளத்தினை!
தனிநறு மலயத் தண்காற் சிறப்பினை
பைந்நிறப் பழனம் பரவிய வடிவினை (வந்தே)

வெண்ணிலாக் கதிர் மகிழ் விரித்தாடும் இரவினை!
மலர்மணிப் பூத்திகழ் மரன்பல செறிந்தனை!
குறுநகை யின்சொலார் குலவிய மாண்பினை!
நல்குவை இன்பம், வரம்பல நல்குவை! (வந்தே)

முப்பது கோடி வாய் (நின்னிசை) முழங்கவும்
அறுபதுகோடி தோ ளுயர்ந்துனக் காற்றவும்
திறனிலாள் என்றுனை யாவனே செப்புவன்?
அறுந்திற லுடையாய்! அருளினைப் போற்றி!
பெருந்தலர் படைப்புறத் தொழித்திடும் பொற்பினை! (வந்தே)

நீயே வித்தை நீயே தருமம்!
நீயே இதயம் நீயே மருமம்
உடலகத் திருக்கும் உயிருமன் நீயே (வந்தே)

தடந்தோ ளகலாச் சக்திநீ அம்மே!
சித்தம் நீங்காதுறு பக்தியும் நீயே!
ஆலயந் தோறும் அணிபெற விளங்கும்
தெய்விக வடிவமும் தேவியிங் குனதே (வந்தே)

ஒருபது படைகொளும் உமையவள் நீயே!
கமலமெல் லிதழ்களிற் களித்திடுங் கமலை நீ!
வித்தை நன் கருளும் வெண்மலர்த் தேவிநீ! (வந்தே)

போற்றி வான்செல்வி! புரையிலை நிகரிலை!
இனிய நீர்ப் பெருக்கினை! இன்கனி வளத்தினை!
சாமள நிறத்தினை சரளமாத் தகையினை!
இனியபுன் முறுவலாய்! இலங்குநல் லணியினை
தரித் தெமைக் காப்பாய், தாயே; போற்றி (வந்தே)

(பங்கிம் சந்திர சட்டோபாத்தியாயரின் வந்தே மாதரத்தின் மொழிபெயர்ப்பு - மகாகவி பாரதி)

வாழிய செந்தமிழ்

வாழிய செந்தமிழ்! வாழ்கநற் றமிழர்!
வாழிய பாரத மணித்திரு நாடு!
இன்றெமை வருத்தும் இன்னல்கள் மாய்க!
நன்மைவந் தெய்துக! தீதெலாம் நலிக!

அறம்வளர்ந் திடுக! மறம்மடி வுறுக!
ஆரிய நாட்டினர் ஆண்மையோ டியற்றும்
சீரிய முயற்சிகள் சிறந்துமிக் கோங்குக!
நந்தே யத்தினர் நாடொறும் உயர்க!
வந்தே மாதரம்! வந்தேமாதரம்!

- மகாகவி பாரதி


Get Your Own Hindi Songs Player at Music Plugin

No comments: