நண்பர் அகரம் அமுதா அவர்களின் 'வெண்பா எழுதலாம் வாங்க' என்ற பதிவின் பெயரைக் கண்டதும், மிக்ஸி, குக்கர் செலவில் பல வகை வீட்டு இனிப்புகளையும், காரங்களையும் ஒருவாய் பார்க்கின்ற வசந்த் அன் கோவின் 'சாப்பிட வாங்க' நினைவுக்கு வந்தது.
உடனே சென்று பார்த்து மிகச்சிறு ஓரளவு கற்றுக் கொண்டேன் என்று நினைக்கிறேன். அங்கு எழுதிய சில வெண்பாக்கள் கீழே!
எதையெழுத யென்றெண்ணி யேதுந்தோன் றாமல்
உதையேதும் வந்துவிழு தற்குமுங்க தையேதும்
நான்குவரி சொல்லிவைப்போம் நையுமன மேவருந்தா
நாளை நமதென்று நம்பு!
இயந்திரங்கள் வந்துமிங் கேயுரங்க ளிட்டுந்தம்
வயமிருந்த தேசெல்ல லேதுமோ? - ஓய்ந்த
பழகிய மாடுசர்வை வற்கஞ்சிக் கூறும்
உழவின்றி உய்யா(து) உலகு.
வெறுமனே எதுவும் இறுதிப்புள்ளி இல்லாமல் எழுதுவதை விட, நமது வழக்கமான சிறுகதையைச் சொல்லலாம் என்று இரு சம்பவக் கதைகளை வெண்பா வடிவில் எழுத முயன்றதில்,
இருபத்தொன் றொன்றுகிண்டி பேருந்து இஸ்டாப்பி
லூரும் நிலையிலெம்பிப் பாய்ந்து, முருகன்
கபாலென பர்சடித்து(த) பாலென வீழவங்க
பாலமுன் வேகக் கார்.
நான்காம்மா டிச்சுவர் வேதனைத்து நின்றவன்முன்
நன்குகற்கும் புத்திரந கைசிந்தித்(து) - வேண்டாங்
கடம்போக் கமுயல்வோங் காற்றடித்து நகர
விடறியது வேர்வையீரக் கால்.
நமக்கு என்றுமே அவ்வளவாக கைவராத காமெடியை முயலலாம் என்று முயன்றதில்,
குரங்குதான் முன்னோர் குறிப்பிட்டார் டார்வின்
அரங்கை நிறைத்ததுகை தட்டல டங்கியபின்
எல்லாம் அறிவேன் எழுந்தொருவர் சொல்லிய
தில்லாளால் முன்பேயே யான்!
கொஞ்சூண்டு நாஸ்டால்ஜியாவாக,
ஏரோப்ளேன் ஏர்பஸ் எடுத்துச் சரித்த
பீரோபோன் மின்வண்டி பந்தாவாய்க் காரெனினும்
கைக்கிளைக் காதலியைக் கண்போற் சுமந்தெனது
சைக்கிளை எண்ணுகிறேன் நான்!
நிரல் படுத்தும் வெண்பா என்று ஒன்று உள்ளது. அதைக் கொணர முயல்கையில்,
சிமற்றும் சிபிபியும் ஜாவா பிஎச்பிபே
சிக்ஜே டுஈஈ டிசிஎல்பெர்ல் சிப்பில்
கொசகொசகூட் டங்கள னைத்திற்கும் அன்னை
அசம்ப்ளியே என்ப தறி.
போன ராஜா வருகை கதையில் உபயோகப்படுத்திய வெண்பாக்கள் அனைத்திற்கும் குரு அகரம் அமுதா தான். அங்கு கற்ற பாடங்கள் கொண்டு தான் ,கதைப் போக்கிற்கு உதவிய வெண்பாக்களை எழுத முடிந்தது என்பதை நன்றியுடன் தெரிவித்துக் கொள்கிறேன்.
நீங்களும் மிக எளிதாக வெண்பா கற்றுக் கொள்ளலாம். அவ்வளவு எளிமையாகச் சொல்லித் தருகிறார். எத்தகைய சிறிய கேள்வியானாலும் அழகாகத் தீர்த்து வைக்கிறார். அருமையான வாய்ப்பு இது! ஆர்வமுளோர் வாருங்கள்.
நன்றி அகரம் அமுதா...!
12 comments:
//இயந்திரங்கள் வந்துமிங் கேயுரங்க ளிட்டுந்தம்
வயமிருந்த தேசெல்ல லேதுமோ? - ஓய்ந்த
பழகிய மாடுசர்வை வற்கஞ்சிக் கூறும்
உழவின்றி உய்யா(து) உலகு.//
தலை அருமை. எப்படி இப்படி எல்லாம்..? சூப்பர்...
//ஏரோப்ளேன் ஏர்பஸ் எடுத்துச் சரித்த
பீரோபோன் மின்வண்டி பந்தாவாய்க் காரெனினும்
கைக்கிளைக் காதலியைக் கண்போற் சுமந்தெனது
சைக்கிளை எண்ணுகிறேன் நான்!
//
'நச்'... ஆமா.. 'கைக்கிளை' என்பது 'பொருந்தாக்காதல்' வகைதானே..
மறந்து விட்டது. இய்லுமானால் விளக்குங்களேன்.
அந்த காமெடி வெண்பா எனக்குப் புரியவில்லையென பண்பாய்க் கேட்டுக்கொள்கிறேன்.
வெண்பா அவ்வளவு எளிதா என்ன? கஷ்டம் என்றுதான் கேள்விப்பட்டிருக்கிறேன். உங்களுக்கு எளிதோ என்னவோ? ஓகே...நானும் 'அகரம்' பக்கம் சென்று வருகிறேன்.
உங்க அட்டென்டண்ஸ் பக்கம் பார்த்தேன்.. இன்னும் 'தமிழ்.நெட்' ல டிக்கெட் வாங்கி 'ஸாரி ஆன்ட்டி' பார்க்குற கூட்டம் குறையல போல...
உங்க காட்டுல மழைதான்...
அன்பு தமிழ்ப்பறவை...
மிக்க நன்றிகள் தங்கள் வருகைக்கும், வாழ்த்துக்களுக்கும்..!
கைக்கிளை என்றால் "பொருந்தாக் காதல்" எனலாம். உதாரணமாக மாணவப் பருவத்தில் மனதைக் கவரும் டீச்சர் மீது கொள்ளும் ஈர்ப்பு, அன்பாய்ப் பேசும் அக்கா வயது பெண்கள் மீது கொள்ளும் ப்ரேமம், எ.காட்டாக, செல்லமே படத்தில் ரீமா மீது பரத் கொள்ளும் வெறி கலந்த பொசஸிவ்னெஸ் நிறைந்த காதல்.
சில சமயம் கைக்கிளை என்றால் "ஒருதலைக் காமம்/ஒரு தலைக் காதல்" என்றும் கொள்ளலாம். பார்க்க :: http://hometamil.com/tamilnudpam/ilakijam/tamil-gramatik/page-7.html
இந்த ஒருதலைக் காதல் வகையறாவுக்கு நம் வாழ்விலேயெ பல உதா'ரணங்கள்' இருக்கும் என்பதால், மேலும் விளக்கம் தேவையில்லை.
நான் 'ஒரு தலைக் காதல்' நினைப்பில் தான் எழுதினேன். உங்கள் கேள்விக்குப் பின் யோசித்துப் பார்த்தால், பொருந்தாக் காதலும் ஒத்து வரும் என்றே படுகின்றது. டீச்சர் ஆண்டு விடுமுறையில் ஊருக்குப் போகையில், பஸ் ஸ்டாப்பிற்கு சைக்கிளில் கொண்டு போய் விட்டு டாட்டா வருத்தத்துடன் திரும்புகையில், அவரது டிபன் பாக்ஸை நமது சைக்கிள் கேரியரில்
(சைக்கிள் கேரியரில்
டீச்சரின்
டிபன் கேரியர்!!!!)
மறந்து வைத்து விட்டுச் செல்கிறார்.
(ஆஹா...! ஒரு கதை!)
***
காமெடி வெண்பாவை பதம் பிரித்து தந்தால் இன்னும் கொஞ்சம் எளிதாகப் புரியும் என்று நினைக்கிறேன்.
"குரங்கு தான் முன்னோர்!" குறிப்பிட்டார் டார்வின். அரங்கை நிறைத்தது கைதட்டல். அடங்கிய பின், "எல்லாம் அறிவேன்" எழுந்து ஒருவர் சொல்லியது, "இல்லாளால் முன்பேயே நான்!".
இப்போது எளிதாக இருக்கும் என்று நினைக்கிறேன்.
சிறுகதை வெண்பாக்களைப் பதம் பிரித்து அறிய முடிகின்றதா..?
***
தமிழ்ப்பா வகைகளில் வெண்பா தான் எளிது என்று அகரம் அமுதா பயிற்சியினால் தெரிகின்றது. நீங்களும் எழுதலாம்.
***
/*
உங்க அட்டென்டண்ஸ் பக்கம் பார்த்தேன்.. இன்னும் 'தமிழ்.நெட்' ல டிக்கெட் வாங்கி 'ஸாரி ஆன்ட்டி' பார்க்குற கூட்டம் குறையல போல...
உங்க காட்டுல மழைதான்...
*/
ஒரே வயித்தெரிச்சலா இருக்குங்க..! நல்ல நல்ல கதை, கவிதைகள் எழுதும் போது வராத கூட்டம் இது போன்ற மகா மொக்கைக்கு தேடி வருகின்றதை நினைத்தால், அழுகாச்சி, அழுகாச்சியா வருது...!
நான் tamil.netக்கு ஒரு மெயில் கூட பார்த்த அன்றைக்கே அனுப்பினேன். 'தயவு செய்து திரைப்படம் தொகுப்பில் இருந்து எடுத்து விடுங்கள் 'என! ம்ஹூம். நோ ரெஸ்பான்ஸ்.
அதை பார்த்து விட்டு வருகின்றவர்கள் கடுப்பில் என் மேல் சாபம் விடுத்துச் செல்வதை என்னால் உணர முடிகின்றது. என் கவலையெல்லாம், இந்த லிங்க் மூலம் வருபவர்கள், என்னையும் 'தலைப்பை மட்டும் சுண்டியிழுக்குமாறு வைத்து விட்டு சரக்கு காலியாக எழுதுபவர்கள் லிஸ்ட்டில் சேர்த்து விடுவார்களோ' என்பது தான்.
'கைக்கிளை' விளக்கத்திற்கு நன்றி...ஒருதலைக்காதல் என்பதைவிட 'சிறியவர் வயதில் மூத்தார்மேல் கொள்ளும் பொருந்தாக்காதல்' எனப் படித்ததுபோல் நினைவு..
(முதல் மரியாதை படத்தில் வருவது 'பெருந்திணை' என எண்ணுகிறேன்.'மூத்தார்,இளையாள் மேல் கொள்ளும் பொருந்தாக்காதல்')
//சைக்கிள் கேரியரில்
டீச்சரின்
டிபன் கேரியர்!!!!) // ('அழியாத கோலங்கள்...?)
அருமை... ஆனா அது பின்னாடியே அலைஞ்சிருந்தா நம்ம கேரியர் ????தான்...
(நானும் பல டீச்சர்களை மானசீகமாகக்(??!!) காதலித்திருக்கிறேன்)...
//"குரங்கு தான் முன்னோர்!" // இப்போது புரிகிறது. நன்று...
சிறுகதை வெண்பாக்களில் 'முருகன் பர்ஸ்' பர்ஸ் புரிந்தது.
'நான்காம்மாடி' முயற்சித்தேன்..பிரித்துப் பார்ப்பதில் சிரமமாக உள்ளது...
அன்பு தமிழ்ப்பறவை...
மிக்க நன்றிகள் தங்கள் வருகைக்கும், வாழ்த்துக்கும்...!
சிறுகதை வெண்பாக்களை பிரித்துத் தருகிறேன்.
***
இருபத்தொன்று ஒன்று, கிண்டி பேருந்து இஸ்டாப்பில் ஊரும் நிலையில், எம்பிப் பாய்ந்து, முருகன், 'கபால்' என பர்ஸ் அடித்து, 'தபால்' என வீழ, அவன் கபாலம் முன் வேகக் கார்.
வேகமாக வந்த கார் பிக்பாக்கெட் அடித்த முருகன் தலை மேல் ஏறியதா, இல்லையா என்பது வாசகர் முடிவிற்கே..! (சிறுகதை அல்லவா..?)
***
நான்காம் மாடிச் சுவர். வேதனைத்து நின்றவன் முன், நன்கு கற்கும் புத்திரனின் (புன்)நகை. சிந்தித்து, வேண்டாம் (இம்முடிவு). கடன் போக்க முயல்வோம். (திரும்பி இறங்க முயல்கையில்) காற்று அடித்து நகர, இடறியது வேர்வை ஈரக் கால்.
விழுந்து இறந்தானா, பிழைத்தானா என்பது வாசகர்கள் கற்பனைக்கே...!! ;-)
வணக்கம் திரு வசந்தகுமார். வெண்பாக்கள் அத்தனையும் அருமை. எனது நண்பர் முகவைமைந்தன்.இராம்குமார் அவர்கள் தங்களின் "நான்காம்மா டிச்சுவர்" வெண்பாவைப் படித்துவிட்டு மிகவும் வியந்து என்னிடம் தங்களைப்பாராட்டிச் சொன்னார். அவர் சார்பாக உங்களை வாழ்த்துகிறேன். மேலும் பல முயற்சிகளைத் தொடர்ந்து செய்து பார்க்கவும். வாழ்த்துகள்.
அகரம் அமுதா
அன்பு அகரம்.அமுதா மற்றும் அன்பு முகவைமைந்தன்.இராம்குமார் அவர்களுக்கும் மிக்க நன்றிகள்.
தங்கள் வாழ்த்துக்களுக்கு மிக்க நன்றிகள்.
தங்களது ஆதரவு இருந்தால், இன்னும் புதிய முயற்சிகளைச் செய்து பார்க்கலாம்.
நன்றி.
இதிலென்ன அய்யம் நண்பரே. என் ஆதரவைத் தங்களுக்கு நிச்சயம் உண்டு. வெண்பா எழுதலாம் வாங்க வலையின் நோக்கமே மரபறிந்த கவிஞர்களை ஊக்கப்படுத்துவதும் ஒன்றிணைந்து உயர்த்துவதும் உயர்வதுமே!
இதிலென்ன அய்யம் நண்பரே. என் ஆதரவைத் தங்களுக்கு நிச்சயம் உண்டு. வெண்பா எழுதலாம் வாங்க வலையின் நோக்கமே மரபறிந்த கவிஞர்களை ஊக்கப்படுத்துவதும் ஒன்றிணைந்து உயர்த்துவதும் உயர்வதுமே!
இது என் தனிமடல் முகவரி. மின்மடலிடவும். நேரம்கிடைக்கும் போது சாட்டிங் செய்து நிறைய பேசுவோம். நன்றி
மன்னிக்கவும் மின்மடல் முகவரி இணைக்காமல் அனுப்பிவிட்டேன். இதோ agramamutha08@gmail.com
அன்பு அகரம்.அமுதா...
மிக்க நன்றிகள் தங்கள் வருகைக்கும், வாழ்த்துக்கும்...! தங்களது நல்ல நோக்கத்திற்கு எனது வாழ்த்துக்கள்.
Post a Comment