Friday, September 05, 2008

உயிர் இறங்கும் கண்கள்!மிகு ஸ்வரங்கள் ரிதம், ரிதமாய் இசையை இறக்கும் கணங்கள் நிதம் நிதம் பெருக்கும் இதம் இதம், பரவசங்கள்! போர் எனும் ஓர் நிகழ்வின் மூலம் யார் என எட்டிப் பார்க்கின்ற சிறு இரு விழிகள்!

பல கணங்கள் சேர்ந்து கட்டமைக்கும் காலத் துளிகளில் காணாமல் போகின்ற மெளன சரத்தில் விழித்துக் கொண்டிருக்கும், நினை நினைத்துக் கொண்டிருக்கும் ஏதோ ஒரு மூலையில் என் மனம்!

முற்றிலும் இருள் படிந்திருக்கும் பின்னிரவு நேரத்தின் வீடுகள் மீதெல்லாம் எனது மெளன ஓசை மெல்ல மெல்ல குளிரோடு ஊடுறுவிப் பாய்கின்றது.

சலசலக்கும் தென்றலின் மூச்சுப் பிடிவாதத்தால், அசைகின்ற அழகுப் பச்சை மரங்களின் இடைவெளிகளில் எல்லாம் நிறைகின்ற பால்வெள்ளை அமுத நிலவொளி, பாதி அர்த்தங்களைச் சொல்லும் எனது பேசா ஒரு நிலையை!

ஒற்றைத் தனிமைக் குளத்தின் ஈரக் கரைகளில் தடம் பதித்த நம் காதலின் அச்சுக்கள், அலையாடும் பச்சை நீரால் தினம் நனைக்கப்பட்டிருக்கட்டும்! தளும்பும் முத்துத் துளிகளென தாமரை இதழகளில் நிறைந்தாடும் பின்பனித்துளிகள் நடுங்கும் இந்தக் குளிர் வேளையில், சொல்லட்டும் அலைபாய்கின்ற தனி இரு மனங்களை!

சலசலப்பாய்ப் பெருஞ்சத்தமாய் சிறுகற்களையும், பெரும்பாறைகளையும் உருட்டி, திரட்டி, வேறுவேறு பாதைகளில் விளையாடி, உறவாடி, தாவித் தாவித் ததும்பி, கரைகளில் நிறைந்து கலந்து பின் பெருவேகமாய்ப் பாய்கின்ற பேரருவியின் அடிவாரக் கரைகளில் அடங்கி நிற்கட்டும் நமது நிலை பெயராக் காதல்! சாரலென்ன, சிறுதூறலென்ன, நுரைக் காற்றோடு நீங்கா குளிரென்ன, ஓர் இதழ்ச்சூடு குலைத்துப் போட்டு விடும் இந்த நடுங்கும் மூச்சுக் காற்றை!

உச்சி முகடுகளில் முத்தமிட்டுச் செல்லும் வெண் மேகங்களைக் கிள்ளிப் பார்க்கையில் சிவந்த குருதிப் புள்ளியாய், மொட்டுப் பூவாய் மழைத்துளிகள்! பச்சை மரங்கள் அடர்ந்த நெடுங் காட்டில் பூத்திருக்கும் நமது இச்சை நிறைந்த காலங்கள் என்றென்றைக்கும், அதன் தனிமை போல்!

உடைந்த சருகுகளின் மேல் மெல்ல மெல்ல எட்டு வைத்து நடக்கையில் பனிக் காற்றின் ஊடுறுவலுக்கு தோலின் துளைகள் இடங் கொடுத்து சிலிர்க்கையில் எட்டிப் பார்க்கும், விரல்களைக் கோர்த்து, அதன் வழி உயிர்ப்போடு ப்ரவாகிக்கும் தீராக் காதல்!

ஒற்றைக் குடிசையின் கால்களோடு நடனமாடும் புயல் காற்றைச் சொல்லிக் குறையென்ன? கற்றைக் கூந்தலில் மலர்கள் முகிழ்த்திருக்கும், மாலை நிறம் தெறித்திருக்கும் முகம் செய்யும் தடுமாற்றத்தினை விடவும் பெரிதா செய்து விடும் சுழற்புயல்?

பச்சை வயல் நடுவே தன்னந் தனிமையில் நீண்டிருக்கும் பாதையில் நாம் நடந்து சென்ற போது, தலையாட்டிச் சிரித்துக் கொண்டன மஞ்சள் காய்ந்திருந்த பயிர்கள்! 'அங்கே பாருங்கள்' என விரல் நீட்டிச் சொன்ன காக்கை பொம்மையை அல்லவா சொல்ல வேண்டும்?

உச்சிக் கோயிலுக்குச் செல்லும் அச்சில் வார்த்த பாறைப் படிக்கட்டுகள் என்றும் பதிவு செய்து வைத்திருக்கும் ஆயிரமாயிரம் பாத நினைவுகளில், ரெட்டை கொலுசொலிகள், கடந்து சென்றதையும், ஒரு தேவதையின் பொன் மென் விரல்களைப் பிடித்த பேரின்பப் பெருவெளியில் மிதந்து சென்ற ஓர் ஆடவனின் மிதத்தலுக்குரிய எடையற்ற படர்தலையும்!

நீங்கா போதை தரும் மதுரசம் வழிந்தோடும் ஒரு பார்வையில் உறைகின்ற யாவும், யாதும் அறிந்திராத பற்பல ஜென்மங்களின் தொடர்கின்ற கயிறன்றோ?

No comments: