Thursday, October 16, 2008

தொடர் பயணம்.

னுஷனா சார் இவன்.. அசுரன்!

எப்படி வர்றான் பாருங்க..! கண்களை மூடிக்கிட்டு, கைகளைக் கட்டிக்கிட்டு, நல்லா சாஞ்சுக்கிட்டு, ஏதோ தியானம் செய்யறாப்ல!

அத்தனையும் வேஷம்... நடிப்பு! இப்படி தூங்கறதுக்கு எதுக்கு பஸ்ல வரணும்? வீட்லயே நல்லா படுத்து, கால்களை நீட்டி, சுகமாத் தூங்கலாமே! அப்படி பண்ணாம, ஒரு மாதிரி இடுக்கிட்டு, ஜன்னலோர சாம்ரஜ்யத்தை முழுசா ஆக்ரமிச்சிட்டு, பக்கத்தில் இருப்பவனுக்கு சரிபாதி சீட்டைக் கொடுக்காம...!

ஆமாம் சார்! இது தான் பிரச்னை! அசுரன் முழுசா எடுத்துக்கிட்டு, 'ஒழிஞ்சு போ'னு கொடுத்த மிச்ச இடத்தில் நான்!

எப்படி உட்கார்ந்திருக்கேன்? பாதி உடம்பு வெளியில தொங்க, மீதி அவனை நெருக்கி! சேர, பாண்டியர்கள் கூட இப்படி எல்லைப் பிரச்னைகளுக்கு முட்டிட்டு இருந்திருக்க மாட்டாங்க! அப்படி கால்களால் ஒரு தள்ளு! தொடைகளால் ஒரு நெருக்கு! ரெண்டு கைகளாலயும் முன் சீட் கம்பிகளைப் பிடிச்சு, ஸ்டிஃபா, இறுக்கமா, நிமிர்ந்து...!

ம்ஹூம்..! அசையவேயில்லையே! போதி அடி புத்தனாக அசங்காம அப்படியே புடிச்சு வெச்ச பிள்ளையாராட்டம் உட்கார்ந்திட்டு வர்றான்..! கல்லுளி மங்கன்.

ஸார்! உண்மையை ஒத்துக்கறேன். நமக்கு கொஞ்சம் பெரிய உடம்பு தான். இல்லேங்கல! அதுக்காக எனக்கான ரைட்ஸை விட்டுக் கொடுத்திட முடியுமா? நானும் டிக்கெட் எடுத்து தானே ட்ராவல் பண்றேன்...? ஈக்வாலிட்டினு ஒண்ணு இருக்கா இல்லியா? இது டெமாக்ரடிக் கண்ட்ரி தான ஸார்..?

இந்த கவர்ன்மெண்ட்டை சொல்லணும் நாம! பத்து வருஷத்துக்கு ஒரு தடவ சென்ஸஸ் எடுக்கறாங்க இல்லியா? அப்பவே 'பாடி மாடிஃபை' ஆனவங்க எத்தனை பேர்னு ஒரு லிஸ்ட் எடுக்கக் கூடாதா? அதுக்கேத்த மாதிரி பஸ்ல சீட்ஸ் என்லார்ஜ் பண்ணி வெச்சிருக்கணும்! இதுல சில பஸ், சிலபஸ்ல ஒவ்வொரு சீட்டுக்கும் நடுவில கை வெச்சுக்கறதுக்காக 'காது குடையறாப்ல' ஒரு கம்பி! இதை தான் 'உழக்குக்குள்ள கிழக்கு மேற்கு'னு பெரியவங்க சொல்லி இருக்காங்க!

கை ஸ்டேண்ட் வெச்சவங்க (கை எப்படி ஸ்டேண்ட் ஆகும்? கால் தானே ஸ்டேண்ட் ஆகும்!), அதை யாருக்குனு ஒரு வார்த்தை எழுதி வெச்சிருக்காங்களா, இந்த ஜன்னல் சீட்டுக்கு நம்பர் குடுத்தாப்ல! இல்லை. அது இல்லை. அப்புறம், யாரு கை வைக்கிறதுன்னு அதுக்கு ஒரு பாட்டம் தகராறு.

ட்ரெய்ன்ல ஜெனரல் கம்பார்ட்மெண்ட்ல போனா இன்னொரு பிரச்னை. ஆல்ரெடி சீட் பிடிச்சு வெச்சிருக்கவன், மிச்ச இடத்துக்கு ஒரு சிவப்பு காட்டன் துண்டை விரிச்சு வெச்சிட்டு, கேக்கறவங்க கிட்ட எல்லாம், 'ஆள் வருது... ஆள் வர்றாங்க'னு சொல்லி டபாய்ச்சிக்கிட்டே வர்றது. ட்ரெய்ன் கிளம்பற வரைக்கும் யாரும் வர மாட்டாங்க. ரன்னிங் ஆரம்பிச்சதுக்கப்புறம், சுத்திமுத்தியும் பார்த்து, ஒல்லிப் பிச்சானா இருக்கற யாரையாவது கூப்பிட்டு உட்கார வைக்க வேண்டியது. அதிலும் ஸ்பேஸ் கால்குலேஷன் பார்த்து உட்கார வைக்கிறது பருமனா இருக்கறவங்க தான். 'ஒரு பொண்ணோட கஷ்டம் இன்னொரு பொண்ணுக்குத் தான் தெரியும்'ங்கறது பழமொழி. அது எல்லா கேட்டகிரிக்கும் பொருந்தாது.

"ஏன் இடிச்சுக்கிட்டே வர்றீங்க..?"

"தள்ளி உட்காருங்க..!"

"இதுக்கு மேல எங்கங்க தள்ளறது? ஜன்னல் வழியா தோள் வரைக்கும் தள்ளி வெச்சுக்கிட்டா தான் உண்டு!"

"(எழுந்து நின்று) இங்க பாருங்க. எத்துணூண்டு இடம் இருக்குனு! இதுல எப்படிங்க ஒரு மனுஷன் உட்கார்ந்திட்டு வர்றது?"

"நான் என்னங்க பண்றது? நானே எவ்ளோ கஷ்டப்பட்டு உட்கார்ந்திட்டு வர்றேன் தெரியுமா?"

"பரவால்ல! கொஞ்சம் அட்ஜஸ்ட் பண்ணி உட்காருங்க!"

"(கொஞ்சம் அசைந்து) அவ்ளோ தாங்க முடியும்!"

"ஏங்க! நகர்ந்து உட்காரச் சொன்னா, கொஞ்சம் போல அசைஞ்சிட்டு, சிம்மாசனத்துல பாதி குடுத்த மாதிரி உட்கார்ந்துக்கோங்கறீங்க...!"

மீண்டும் அசுரன் புத்தனாக மாறி தியானியானான்.

சுற்றுமுற்றும் பார்த்தேன். கூட்டம் ஏறிக் கொண்டே இருந்ததே ஒழிய இறங்கும் வழியைக் காணோம். இந்த பாதி சீட்டு கிடைத்திருப்பதே அதிர்ஷ்டம் போல் தோன்றியது.

'பாறையைப் பிளக்கும் வேரைப் போல' கண்டக்டர் கூட்டத்தைப் பிளந்து கொண்டு முன்னும் பின்னும் சென்று வந்து கொண்டிருந்தார்.

கடைசி நீள சீட்டில் இருந்து ட்ரைவர் சீட் வரை ஒவ்வொரு முறையும் சென்று வரும் தொலைவுகளின் கூடுதல் தான் கண்டக்டர் பயணம் செய்யும் தொலைவா, இல்லை டிப்போவில் இருந்து டெர்மினஸ் வரை உள்ள தூரமா என்று ரிலேட்டிவிடி சிந்தனையில் நான் இறங்கிய நேரம் பார்த்து, சூடாய் ஒரு டிஃபன் பாக்ஸ் மேலே விழுந்தது.

"சாரி சார்..!" என்றபடி ஒரு மாணவன் எடுத்துக் கொண்டு ஒதுங்க முயல, கூட்டம் அவனை என் மேலேயே தள்ளியது.

"சாவுகிராக்கி!" வசையோடு ஒரு சடன் ப்ரேக்கிட்ட ட்ரைவர் வலப்புறம் வெட்ட, கூட்டம் மொத்தமும் என் மேல் சாய்ந்தது போல் இருக்க, நான் அசுரன் மேல் விழுந்தேன். அசந்த நேரம் பார்த்து கிடைத்த சொற்ப ஐம்பது பிக்ஸல் இடத்தைக் கைப்பற்றினேன். பிரசவ அறை வாசல் தகப்பனாய் நடை போட்ட கண்டக்டர் மிகச் சரியாக என் சீட் மேல் சாய்ந்து நின்று டிக்கெட் போட, நான் நெருக்கித் தள்ளப்பட்டு, முன் பக்கம் சாய, அங்கு முன்பே கஷ்டப்பட்டு நின்று கொண்டிருந்த அம்மணியோடு முகம் மோத... ஏக களேபரம்!

அசுரனின் தியானம் கலையவேயில்லை!

எனக்கே இவ்வளவு கஷ்டமாய் இருக்கின்றதே! பெண்களுக்கு இன்னும் எவ்வளவு கஷ்டம் என்று நினைத்தேன். ஒரு ஸ்டாப்பில் நிற்கையில், ரோட்டின் அந்தப்புறம் தெரிந்த க்வாலிட்டி பார்லரின் கண்ணாடி வழியே மூன்று ஜீன்ஸ், டீஷர்ட் 16+ பேபிகள் ஐஸ்க்ரீமோடு விளையாடுவது தெரிந்தது.

'அடி பெண்களே! இவ்வளவு வேண்டாம்' என்ற என் கூக்குரலை, ஹாரன் அடித்து சாப்பிட்டார் ட்ரைவர்.

ஒரு வழியாக அசுரன் அமைதி கலைந்து, ஸ்கூல் ஸ்டாப்பில் இறங்க எழுந்தான். 'ஆஹா! எழுந்தது பார் யுகப்புரட்சி!' என பாய்ந்து, ஜன்னல் சீட்டை அடைந்தேன். ஏதோ முனகிக் கொண்டே செல்வது போல் தெரிந்தது.

'தொம்!'

யாரெனப் பார்க்க, ஒரு மெகா உருவம் என் அருகில் அமர்ந்தது!

அடக் கடவுளே! இவன் பாபிலோனின் 'தொங்கும் தோட்டம்' போல் முக்கால்வாசி சீட்டிலிருந்து தொங்குகிறானே! ஏங்க நீங்க எல்லாம் பஸ்ல வர்றீங்க! பாருங்க, ஒருத்தன் நிம்மதியா சீட்ல உக்கார்ந்திட்டு வர முடியல!'

முழிச்சுக்கிட்டு இருந்தா, 'நகருங்க! நகர்ந்து உட்காருங்க!'னு இம்சை பண்ணி உயிரெடுத்திடுவானே! சீட் காலியாகும் போதே அந்த +1 பையனைக் கூப்பிட்டு பக்கத்தில் உட்கார வெச்சிருக்கணும். ஓ! அவன் ஸ்கூல் ஸ்டாப்பிங்கிலேயே இறங்கிப் போய்ட்டான் போல!

இப்ப என்ன பண்றது? ஒரே வழி! கண்ணை மூடிக்கிட்டு தூங்கற மாதிரி, இவன் என்ன பேசினாலும் காதிலயே விழாத மாதிரி நடிக்க வேண்டியது தான். வேற வழியே இல்ல!!

இன்னும் ரொம்ப தூரம் போக வேண்டி இருக்கு!

ஆசிரியர் குறிப்பு ::

இந்த கதையின் அடுத்த பாகத்தை விரும்புவோர் அந்த மகா பருமரைக் கேட்கலாம். சொல்ல முடியாது... அவரும் இதே கதையை, இதே முதல் வரியில் இருந்து சொல்லலாம்...!

12 comments:

வெண்பூ said...

நல்ல கதை.. அருமையான ஓட்டம்.. பாராட்டுக்கள் வசந்த்.

இந்த வாரம் என்ன இந்த மாதிரியான கதைகள் வாரமா? ஏற்கனவே வலைச்சரத்துல இதே மாதிரி வால்பையன் ஒரு கதையை எழுதியிருக்காரு.

இரா. வசந்த குமார். said...

அன்பு வெண்பூ...

அட, ஆமா...! வால்பையனும் இந்த ஃபார்மட்டில் எழுதி இருக்கிறார்.

பார்க்கத் தவறியவர்களுக்கு :: இங்கே!

தமிழ்ப்பறவை said...

நண்பர் வசந்துக்கு...
கதை சூப்பர்.பேருந்துப்பயணத்தை அழகாகச் சொல்லி இருக்கிறீர்கள்.
//அப்பவே 'பாடி மாடிஃபை' ஆனவங்க எத்தனை பேர்னு ஒரு லிஸ்ட் எடுக்கக் கூடாதா//
//கை ஸ்டேண்ட் வெச்சவங்க (கை எப்படி ஸ்டேண்ட் ஆகும்? கால் தானே ஸ்டேண்ட் ஆகும்!), அதை யாருக்குனு ஒரு வார்த்தை எழுதி வெச்சிருக்காங்களா, இந்த ஜன்னல் சீட்டுக்கு நம்பர் குடுத்தாப்ல! இல்லை. அது இல்லை. அப்புறம், யாரு கை வைக்கிறதுன்னு அதுக்கு ஒரு பாட்டம் தகராறு.//
நல்லாக் கிளப்புறீங்கையா பிரச்சினைய...
//ரோட்டின் அந்தப்புறம் தெரிந்த க்வாலிட்டி பார்லரின் கண்ணாடி வழியே மூன்று ஜீன்ஸ், டீஷர்ட் 16+ பேபிகள் ஐஸ்க்ரீமோடு விளையாடுவது தெரிந்தது.//
நல்ல தொலைநோக்கு இருக்குங்க உங்ககிட்ட. இந்த ரணகளத்திலயும் கிளுகிளுப்பு...

//'அடி பெண்களே! இவ்வளவு வேண்டாம்' என்ற என் கூக்குரலை, ஹாரன் அடித்து சாப்பிட்டார் ட்ரைவர்.//
நல்ல சமுதாய அக்கறை..நோட் பண்ணிக்கோங்கடா....
வால்பையனின் கதையையும் படித்து வந்தேன்.'ஒரே ரூம் போட்டு யோசிப்பீங்களோ...?!'

இரா. வசந்த குமார். said...

அன்பு தமிழ்ப்பறவை...

வரிக்கு வரி அட்டாக் பண்ணுவீங்க போல!

வெண்பூ அவர்களும் இதே போன்ற ஃபார்மட்டில் ஒரு சுழல் கதை எழுதி உள்ளார் பாருங்களேன் :: இங்கே!

ஆயில்யன் said...

//கடைசி நீள சீட்டில் இருந்து ட்ரைவர் சீட் வரை ஒவ்வொரு முறையும் சென்று வரும் தொலைவுகளின் கூடுதல் தான் கண்டக்டர் பயணம் செய்யும் தொலைவா, இல்லை டிப்போவில் இருந்து டெர்மினஸ் வரை உள்ள தூரமா என்று ரிலேட்டிவிடி சிந்தனையில் நான் இறங்கிய நேரம் பார்த்து, சூடாய் ஒரு டிஃபன் பாக்ஸ் மேலே விழுந்தது.
///

ரசித்தேன்!

:)

ஆயில்யன் said...

இது போன்றே டென்ஷன் மிகுந்த இன்னுமொரு இடம் சினிமா தியேட்டர் வர்றவன் நல்லபடியா வந்து உக்காந்து சத்தமில்லாம ரசிச்சிட்டு போனா 1ம் பிரச்சனையில்ல இதுவே தலைகீழாகி வரிக்கு வரி வசனம் பேசற ஆரம்பிச்சான்னா அவ்ளோதான் :((

இரா. வசந்த குமார். said...

அன்பு ஆயில்யன்...

நிஜமாகவே எனக்கு ரொம்ப நாளா இந்த சந்தேகம் இருந்திட்டு இருக்கு. இயற்பியல் பதிவுகளில் எழுத வேண்டும் என்றிருந்தேன். கதையில் சொல்லாமல், கொள்ளாமல் நுழைந்து விட்டது. நோட் செய்ததற்கு நன்றிகள்.

தியேட்டர்ல நிறைய அனுபவம் பட்டிருக்கீங்க போல...!!!!

;-)

வீரசுந்தர் said...

Recursive?

Return point எங்க!?, ரோட்டோர புளியமரம்!!?? :-)))

இரா. வசந்த குமார். said...

அன்பு சுந்தர்...

இது recursive அல்ல. infinite for loop.

வெண்பூ said...

மனமார்ந்த வாழ்த்துக்கள் வசந்த். அறிவியல் சிறுகதைப் போட்டியில் முதல் பரிசு பெற்றதற்காக.

யோசிப்பவர் said...

உங்களுக்கும் அப்படித்தானா? நான் எனக்கு மட்டும்தான் இப்படியெல்லாம் நடக்குதுன்னு நினைச்சேன்!!;-))

இரா. வசந்த குமார். said...

அன்பு யோசிப்பவர்...

ஹி...ஹி...! நான் சிறுகதைன்னு தானே சொல்லி இருக்கேன். கரெக்ட்டா அனுபவம்னு கண்டுபிடிச்சிட்டீங்களே...!

பின்னே... யோசிப்பவராச்சே...! சும்மாவா...?