
மீனாட்சியும் சுந்தரேஸ்வரரும் கள்ளழகரும் எழுந்தருளி இருக்கும் தலம்; அலாவுதீன் கில்ஜியின் தளபதி மாலிக்கபூர் கைப்பற்றிய தென்னக எல்லை; மூன்றாம் மற்றும் நான்காம் தமிழ்ச்சங்கம் அமைத்த நகரம்; ஐந்து பேருந்து நிலையங்கள் எல்லைகளில் கொண்ட ஊர்; கிருஷ்ண தேவராயரின் பிரதிநிதியாக வந்து அவரது ஆளுமையால் சிறப்பாக ஆண்ட திருமலை நாயக்கரின் நாடு; சொக்கநாதரும், இராணி மங்கம்மாளும் செங்கோலோச்சிய தேசம்; மீன் கொடி பட்டொளி வீசிய பாண்டிய பூமி; பட்டு நெசவில் கைவண்ணம் திகழும் செளராட்டியர் முதல் ஆதிகுடித் தமிழர்களின் மொழி வளத்திற்கும், 'நெற்றிக்கண் திறப்பினும் குற்றம் குற்றமே' என்ற நேர்மைத் திறமும், திருவாலவாயனின் அறுபத்து மூன்று திருவிளையாடல்களும் நிகழ், தென் மாவட்டங்களின் தலைப்புள்ளியாகவும் இருக்கின்ற தூங்கா நகரம்.
'மதுரை மாநகராட்சி தங்களை அன்புடன் வரவேற்கிறது' ஆர்ச் வளைவில் நுழைந்து, 'தமிழ் வாழ்க' நியான் லைட் போர்ட் வெளிச்சத்தில் மாட்டுத்தாவணி பேருந்து நிலையத்தை அடைகையில் சனிக்கிழமை அதிகாலை 05:10.
ஆனைமலை அடிவாரத்தில் அமைந்திருக்கும் வேளாண் பல்கலைக் கல்லூரி மற்றும் ஆராய்ச்சி மையத்தில் வசிக்கும் உறவினர் வீட்டிற்குச் செல்லும் வழியெங்கும் இருள். பவர் கட். விதவிதமான டைம் ஸ்லாட்களில் உயிர் இழக்கும் விளக்குகள்.
கல்லூரி க்வார்ட்டர்ஸ் வளாகத்தில் மயில்களின் அகவல்கள். ஆராய்ச்சி வயல்கள். குளம். ஆனைமலை. மிக இலேசான குளிர்.
பகல் பொழுதில் திருமோகூர் சென்றோம்.
கல்லூரி வளாகத்தில் இருந்து வெளியேறி, நகரம் செல்லும் வழியில் ஒத்தக்கடையில் லெப்ட் டர்ன் எடுத்து விரைகையில் திருமோகூர் கோயில் வருகின்றது. 108 வைணவத் திருத்தலங்களில் ஒன்று. பெருமாள் காளமேகப் பெருமாள் மற்றும் தாயார் மோஹனவல்லித் தாயார்.
வெயில் காய்ச்சிய மதியப் பொழுது. தீர்த்தக்குளத்தை ஒட்டிய கோயில் மதிலை ஒட்டி இடம் தேடிப் பிடித்து, காரை நிறுத்திய விநாடியே எங்கிருந்தோ முளைத்தனர் டோக்கன் சிறுவர்கள். 10 ரூபாய்.
குளம் பச்சையாக இருந்தது. மேகங்களே குழுமியிருந்த வானின் நிழல் விழுந்து அலையடித்துக் கொண்டிருந்தது. கரையெங்கும் ப்ளாஸ்டிக் பூக்கள். பால் கவர். ஃப்ரூட்டி. வாழைத் தோல். காகிதக் குப்பைகள். படிகளில் ஈரம். இங்கிருந்து பார்க்கையில் ஆனைமலையின் வடிவம் ஒருவாறு பெயர்க்காரணத்தோடு புலப்பட்டது.


கோயில் பழைய காலத்தது. உள்ளே நுழையும் முன்பே குட்டித் தொன்னைகளில் பொங்கல் கொடுத்துக் கொண்டிருந்தனர். 'திரும்பி வருகையில் மிச்சம் இருக்குமா?' என்ற கேள்வி தொக்கி நின்றாலும், அலட்சியத்து உள் சென்றோம்.
கொடிக்கம்பத்தை வணங்கி கொஞ்சம் மேலேறிச் செல்ல, கூட்டத்தின் இடையே பெருமாள் தனது இரு துணைவியருடன் நிற்கும் அழகுத் திருக்கோலம் முற்றிலும் மலர்மாலைகளால் தெள்ளெனத் தெரிந்தது. உற்சவமூர்த்தியும் அழகாக அலங்கரிக்கப்பட்டிருந்தார். உள்ளே சென்று பார்க்க, டிக்கெட் தலைக்கு இரண்டு ரூபாய்கள். இது எந்த வகை வசூல் என்று புரியவில்லை. இந்த டோக்கன் கொடுத்த சிறுவர்கள் அடர் நீல யூனிஃபார்ம் அணிந்திருந்ததனர்.
மூலவரைப் பார்த்த பின், தாயார் சன்னிதிக்குச் சென்றோம். அங்கே சக்கரத்தாழ்வாருக்குத் தனி அலங்காரங்கள் இருந்தன. சுற்றி விட்டு வந்து, வணங்கி மீண்டும் கோயிலின் முன் வளாகம் வர, பிள்ளையார் இருந்தார். அருகிலேயே பாதி கட்டப்பட்ட மண்டபம் இருந்தது.
முன் வளாகத்திலேயே பிரசாத ஸ்டாலின் எதிர்ப்புறம் 'பள்ளி கொண்ட பெருமாள்' உள்ளார். ரங்கநாதர் திருக்கோலம்.
அங்கே சற்று அமர்ந்து விட்டு, தூண் சிலைகளைக் கண்டேன்.




கோயிலின் முன் வாசலில் இப்போது பெருங்கூட்டம். காரணம், குப்பித் தொன்னைகளில் கொடுக்கப்பட்டிருந்த பொங்கல் + புளிசாதக் கூட்டணி, பெரிய தட்டிற்கு மாறியிருந்தது. வரிசைகளில் நின்று வாங்க முயலாத நம் மக்கள், அடிதடி. முட்டி மோதி கைகளை நீட்டிக் கொண்டிருந்தனர். காவல் துறையினர் இருவர் என்ன செய்ய முடியும்? சொல்லிச் சொல்லிக் கொண்டிருந்தனர். மக்கள் மசிவதாய் இல்லை. நாங்கள் சிறிது நேரம் காத்திருந்து, இந்த சந்தடியில் வாங்க முயல்வது வீண் என்று முடிவெடுத்து, கோயிலுக்கு சற்று அருகே, வெளியே குளக்கரையின் அப்புறத்தில் இருக்கும் பிள்ளையார் மற்றும் நாகதேவர் கோயில்களுக்குச் சென்று, பின் வந்து நம் அதிர்ஷ்டத்தைச் சோதிப்போம் என்று நகர்ந்தோம்.



காரையும், சுண்ணாம்பும் ஒன்று விட்டு ஒன்று அடித்து ஒன்றி விட்ட குளக்கரையின் திட்டுக்களை ஒட்டி குறுஞ்செடிகள். சைக்கிளில் ஐஸ் விற்பவர். சாக்கிட்டு இளநீர் விற்கும் பாட்டியின் முன் வெயிலைச் சாக்கிட்டு வியாபாரம் செய்வோர். கிளி ஜோசியக்காரர். சில இரந்துண்போர். பூ கட்டி விற்கும் சிறுபெண். அருகு கல்லூரியின் பேருந்து.
ஒரு இரந்துண்பவரிடம் ஒருவர் டர்க்கி டவல் துண்டால் பொங்கும் வியர்வையை அவ்வப்போது துடைத்தவாறே தத்துவ விளக்கங்கள் பேசிக் கொண்டிருக்க ('உலகமே கெட்டுப் போச்சு பெரியவரே!'), நாங்கள் சில படிகள் ஏறி, மரத்தடிப் பிள்ளையாரை வணங்கினோம். சுற்றி வருகையில், எத்தனை எத்த்னை சிறு தொட்டில்கள், மரத்தில்!
பின் மீண்டும் ஒரு முறை கோயிலின் முன் வாயிலுக்கு வந்து பார்த்தோம். பொங்கல் கொடுக்கும் பகுதிக்கு எதிர்ப்புறம் சென்று, கொடுப்போரை பின்புறமாக அட்டாக் செய்ய முயல, அவர்கள், 'சார்! நீங்க எவ்ளோ நேரம் நின்னாலும் இங்கிட்டு தர மாட்டம். முன்னாடி வந்து வாங்கிக்கிடுங்க' என்றனர்.
ஒரு பெண் சற்று உயரமாய் இருந்ததால் கையை எல்லோரையும் விட மேலே நீட்டி, நீட்டி தட்டுக்களைத் தட்டிப் பறித்துக் கொண்டே இருந்தார். ஒரு கையில் வாங்கி, மறு கைக்கு மாற்றி, தன் குடும்பத்தினருக்கு கொடுத்துக் கொண்டே இருந்தார்.
கும்பலில் மோதி மோதி வாங்கும் பலர் அதை பத்திரமாக வெளியே எடுத்து வருதல் என்பதில் கோட்டை விட, வலுக்கரங்கள் சில சமயம் பிடுங்கின; சில சமயம் நெரிசலில் அப்படியே கொட்டிப் போய், தரையெங்கும் பொங்கல் வாசம்.
சிறிது நேரம் கழித்து நான் சென்று வாங்கி வந்தேன்.
எத்தனை பொங்கல்! எத்தனை சூடு! பொங்கல் வைத்த இடம் போக, கிடைத்த இடைவெளியில் வைக்க முடிந்த பகுதியில் புளிசாதம்.
பின் உறவினரோடு அவரது காருக்கு வந்து சாப்பிட்டோம். அவர் குடும்பத்தினருக்கென மற்றொரு முறை சென்று அவர் மட்டும் வாங்கி வந்தார். அதற்குள் என்னால் சாப்பிட முடியாமல் போக, அருகில் இருந்த ஒரு ட்ராவல்ஸ் வண்டி ட்ரைவரிடம் நீட்ட, அவர் 'இல்லீங்க, ஸ்வீட் சாப்பிடற்தில்லைங்க' என்று மறுத்து விட்டார். (உண்மையான காரணம் பிறகு எனக்கே புரிந்தது.)
பிறகு நானே கஷ்டப்பட்டு அத்தனையையும் சாப்பிட்டேன். பாருங்கள் ஒரு தட்டில் எவ்வளவு என்று ::

கேம்பஸுக்குள் அடிக்கடி மயில்களின் அகவல்கள் சத்தம் கேட்டுக் கொண்டே இருந்தது. சில மயில்களை படம் எடுக்க முயல அவை பிகு பண்ணிக் கொண்டு ஓடிப் போயின. 'ச்சே! என்ன இது இப்படி வெயில் அடிக்கின்றது! மேகம் கொட்டி மழை பெய்தால் மட்டும் அல்லவா மயில்கள் தோகை விரித்தாடும்' என்று காலையிலேயே நினைத்திருந்தேன்.
நம்ப மாட்டீர்கள். கோயில் விசிட் முடித்து வீட்டுக்கு வந்து மதியம் இரண்டு மணிக்குத் துவங்கிய மழை இன்னும் மதுரை, திருச்சி பகுதிகளில் பெய்து கொண்டிருப்பதாகத் தகவல். நான் கிளம்பும் வரையும் குளிர்க்காற்று; பெருமழை!
ஆனை மலையின் மேல் நீர் ஊற்றி ஊற்றி பெய்து கொண்டிருந்தது. ஆனால, என்ன சோகம் மயில்கள் எல்லாம் அதற்குப்பின் கண்ணிலேயே படவில்லை.
இரவு முழுதும் அகவல் சத்தங்கள் மட்டும் கேட்டுக் கொண்டே இருந்தன.

ஞாயிறு காலை 9 மணி அளவில் அங்கயற்கண்ணி திருக்கோயிலைச் சென்றடைந்தோம். கோபுரங்களில் பணி மேற்கொள்வதால், நாற்றிசைகளிலும் தென்னை ஓலைகள்.



புது மண்டபம் வழியாகச் சென்று முதலில் அம்மையைக் கண்டோம். மூக்குத்தி மின்ன மின்ன தீப ஒளியில் திவ்ய தரிசனம். மனதுக்குள்,
கொண்டைமுடி அலங்கரித்து
கொஞ்சும் கிளி கையில் வைத்து
கொண்டைமுடி அலங்கரித்து
கொஞ்சும் கிளி கையில் வைத்து
அஞ்சுக மொழி உமையாள் வீற்றிருந்தாள்
அந்த அழகிய மாநகர் மதுரையிலே......மதுரையிலே
மதுரையிலே......மதுரையிலே
என்ற வரிகள் மட்டும் மீண்டும் மீண்டும் ஊறிக் கொண்டே இருந்தன.

பொற்றாமரைக் குளத்திற்குச் செல்லும் வழியில் சில ஸ்டில்கள் எடுத்தோம்.

குளத்தில் நீர் கொஞ்சம் குறைவாக இருந்தது. திருநீற்றுப் பிள்ளையாரையும் கண்டு களித்து, காசி விஸ்வநாதர் - விசாலாட்சி அம்மையையும் கண்டுணர்ந்து, திருக்கோயிலின் மாடலைத் தாண்டிச் சென்று எழில் சுந்தரேஸ்வரரையும் தரிசித்தோம்.

அனைத்து ஆலயங்களுக்கும் சென்று, தெற்கு வாசல் வழியாக வெளிவந்தோம். கோயிலுக்குள் எடுத்த மற்றும் சில படங்கள் ::




இந்த சிக்கலான அமைப்பு எதைக் கூறுகின்றது? யாருக்கேனும் தெரியுமெனில் சொல்லுங்கள். மற்றுமொரு தொடர்புடைய வளையங்கள் இங்கே!


புது மண்டபத்தில் ஒரு சிலை ::

புது மண்டபக் கடை வாசல்கள் ::

நகரா மண்டப வாசல் ::

எத்தகைய கருமேகம்!! ::

தெற்கு வாசல் தாண்டி மேற்குப் பகுதிக்குச் சென்று விசாரித்துப் பார்த்துச் சென்ற ஒரு குறுகிய சந்தில் தேடித் தேடி வாங்கிய பழைய புத்தகங்கள் ::
: தாகூரின் The Wreck - Macmillan's Stories to Remember Series.
: டாக்டர் நரேந்திரனின் விநோத வழக்கு - சுஜாதா - குமரிப் பதிப்பகம்.
: Stephen Hawking's Universe - John Boslough.
: அறிவோம் சிந்திப்போம் - சுஜாதா - பாரதி பதிப்பகம்.
வழக்கம் போல் வாத்தியாரின் பலபட்டறை அறிவு வீச்சு பிப்ரவரி 18, 1993-ல் வெளிவந்த இந்த ஒல்லி புத்தகத்தில்! க்ளோபல் வார்மிங், 100 ஆண்டுகளுக்குப் பின் தமிழ், க்வார்க், பிக் பேங், இறப்பு, சிந்திக்கும் இயந்திரம், புறநானூறு, ஸ்பினோஸா, தாவர அன்பு, தவளைக் குஞ்சுகளின் தியாகம், கடவுள், அரசோடு ஒத்துப் போகாத ஆர்க்கிமிடிஸ், காலத்துக்கு முந்தியவர்கள் என!
: தண்ணீர் தண்ணீர் - கோமல் சுவாமிநாதன் - வானதி.
என்ன ஆச்சரியம்! ஜெயமோகன் அவர்களும் கோமல் அவர்களைப் பற்றி எழுதியுள்ளார் இதே சமயத்தில்!
: Stephen Hawking Quest for a theory of everything.
: அப்பா சிறுவனாக இருந்த போது - அலெக்ஸாந்தர் ரஸ்கின் - ராதுகா.
மதியத்திற்கு மேல் ஐயர் பங்களாவில் (இது ஒரு ஏரியா பேருங்க! நத்தம் போகின்ற வழியில் இருக்கின்றது.) இருக்கும் மாமா வீட்டுக்குச் சென்றேன்.
நெடுநேரம் இலக்கியம் பற்றிப் பேசிக் கொண்டிருந்தோம். 'உனக்கு இந்தப் பேர் வைக்கச் சொல்லி அம்மாவிடம் சொன்னதே நான் தான்! வாத்தியாருக்கு அப்படியொரு இரசிகனாக இருந்தோம் அக்காலத்தில்!' என்றார். 'தன்யனானேன்' என்றேன்.
எதிர்பாராத சமயத்தில் எதிர்பாராத இடத்தில் எதிர்பாராத ஒருவரிடமிருந்து எதிர்பாராத ஒருவரைப் பற்றி வரும் அபிப்ராயங்களில் தான் எழுத்தாளராக இருப்பதன் அர்த்தம் உள்ளது என அறிகிறேன்.
சென்ற முறை சென்ற போது பவானியில் ஒருவரைச் சந்தித்தேன். குறைந்த வகுப்பே பள்ளியில் படித்திருந்தாலும், இவ்வருட ஈரோடு நூல் அழகத்தில் அவர் வாங்கி வந்த அத்தனை புத்தகங்களும் நாஞ்சில் நாடன் அவர்களுடையது! மேலும் அவருடன் பேசிக் கொண்டிருக்கும் போது, 'நான் கம்மியாத் தாங்க படிச்சேன். ஆனா சுஜாதா சொல்லிக் கொடுத்தது நிறைய! மகராசன் போய்ட்டான்!' என்றார்.
மாமாவும் அவரது நண்பர் ஒருவரும் இளம் வயதில் வாத்தியாரின் எழுத்துகளுக்கு அப்படியொரு ப்ரேமையோடு இருந்தனராம். இரவெல்லாம் கதைகள் பற்றிப் பேசுவராம். நண்பர் தான் வாத்தியாரின் மறைவை போனில் சொன்னாராம். சொல்லும் போதே வயர்லெஸ் செல்போன் வழி அழுகை ஈரம் இவருக்கு கேட்டதாம். அவரும் கேட்டிருப்பார்.
கேட்டவுடன் எனக்கு எஸ்.ராமகிருஷ்ணன் அவர்களின் வாத்தியார் அஞ்சலி நினைவுக்கு வந்தது.
ஒரு நிறை வாழ்க்கை வாழ்ந்த ஆத்மா அவர் என்பதை உறுதிப்படுத்தும் அனுபவம் எனக்கு கிட்டிக் கொண்டே இருக்கின்றது.
'என் ப்ளாக்கை அவ்வப்போது படித்து வருகிறீர்கள். எந்தக் கதை சட்டென உங்களுக்கு ஞாபகம் வருகின்றது. உடனே சொல்லுங்கள்!' என்று கேட்டேன். மூன்று நொடிகள் எடுத்துக் கொண்டு, இக்கதையைச் சொன்னார். எனக்கு அப்படியொன்றும் மிகப் பிடித்தமான கதை இல்லை. எனினும் இதில் இருந்து ஒன்றைப் புரிந்தேன்.
உழைப்பின் பலன் எப்படியும் கிடைக்கும், நாமே உணராமல் இருந்தாலும்!
இந்த ப்ளாக்கின் கதைகளைப் படித்து விட்டு அவரது பிள்ளைகளிடம் சொல்லுவாராம். 'இந்தக் கதையை மாமா தசாவதாரம் ஸ்டைல்ல எழுதி இருக்கார்' என்று பதில் வந்ததாம்.
இரண்டும் பையன்கள்.
இன்னும் கொஞ்சம் படங்கள் இருக்கின்றன. மிச்சம் வைப்பானேன், அதையும் பார்த்து விடுங்கள்!!!
மாட்டுத்தாவணி நிலையத்தில் 'தமிழ் வாழ்க'வும் அருகிலேயே வசந்தமும்! ;-).

சாத்தூர் நிறுத்தம் ::

மோட்டலில் நிற்கையில் ::

நெல்லை புதிய பேருந்து நிலையம் ::

***
தொடர்புடைய மற்றொரு பதிவு ::
நீயாட்சி செய்யும் மதுரையில் மீனாட்சி என்ற பெயர் உனக்கு.
10 comments:
r u coming to the barcamp chennai event this weekend
http://barcampchennai.org/index.php?title=BCC2_Register
regds
srini
நல்ல வர்ணனை வசந்த்.. ஆனைமலை படத்தையும் போட்டிருக்கலாமே..
நண்பர் வசந்த்துக்கு....
பதிவு இன்னும் முடியவில்லை அல்லவா...? எங்க ஏரியா பக்கம் போயிட்டு வந்திருக்கீங்க... சொல்லவே இல்லையே...புகைப்படங்கள் தெளிவாக,அழகாக உள்ளன.(சின்ன சீனச்செல்லில் எடுத்ததா..?)நான் கோயில் பக்கம்லாம் அதிகம் போறதில்லை.
//விதவிதமான டைம் ஸ்லாட்களில் உயிர் இழக்கும் விளக்குகள். //ஹி..ஹி..
//பின் வந்து நம் அதிர்ஷ்டத்தைச் சோதிப்போம் என்று நகர்ந்தோம்.//
இப்படி சஸ்பென்ஸ்ல விட்டுட்டீங்களே...மதுரையில ஜில்ஜில் ஜிகர்தண்டா சாப்பிட்டீங்களா....?
ஒரு வழியா பொங்கல் சாப்பிட்டாச்சு...
//. (உண்மையான காரணம் பிறகு எனக்கே புரிந்தது.)
//
எனக்கும் புரிந்தது.
//நம்ப மாட்டீர்கள். கோயில் விசிட் முடித்து வீட்டுக்கு வந்து மதியம் இரண்டு மணிக்குத் துவங்கிய மழை இன்னும் மதுரை, திருச்சி பகுதிகளில் பெய்து கொண்டிருப்பதாகத் தகவல். நான் கிளம்பும் வரையும் குளிர்க்காற்று; பெருமழை!//
பெய்யெனப் பெய்யும் மழை...பிரமாதம்.
வசந்த்.. புகைப்படங்கள் அருமை.பலமுறை மீனாட்சி அம்மன் ஆலயம் சென்றும்,நான் இதுபோல் கவனித்ததில்லையே என வெட்குகிறேன்.
அந்தச் சிக்கலான வளையங்கள்,பண்டைய காலத்திய 'குடும்ப உறவுச்சங்கிலியை'க் குறிப்பதாகவே எனக்குப் படுகிறது.
ஏகப்பட்ட புத்தகங்கள் வாங்கிட்டீங்க.விரைவில் விமர்சனம் எதிர்பார்க்கலாம்.இன்னும் ஜமீலா புத்தகத்தை நீங்க முடிக்கலைன்னு நினைக்கிறேன். இல்லை பயண நேரங்களில் படித்துவிட்டீர்களா...?
ஆயிரங்கால் மண்டபம்,இசைத்தூண் பற்றியெல்லாம் சொல்லாம விட்டுட்டீங்க போலிருக்கே...
Dear Srini...
Thanks for your visit and invitation.
Sorry, I have some important works here. So i cant able to attend this memorable event.
Thanks.
***
அன்பு வெண்பூ...
ஆனைமலை படம் வந்து தூரத்தில் ஏதாவது ஒரு மாடியில் நின்னுக்கிட்டு, எடுக்கணுங்க. நமக்கு அந்த மாதிரி யாரையும் தெரியாததால் இந்த முறை எடுக்க முடியவில்லை. மன்னிக்கவுங்க...!!
***
அன்பு தமிழ்ப்பறவை...
நீங்க மதுரைக்காரவுகளா..? தெரியவே தெரியாதே!!!
ட்ரைவர் பொங்கலை மறுத்த காரணம் என்னவெனில், சனிக்கிழமை மதியம் முதல் மாலை வரை கண்கள் செருகிக் கொண்டே இருந்தது தான். இதனை முன்பே உணர்ந்து தான் அவர் வேண்டாம் என்றிருக்கிறார் என்பது லேட்டாகப் புரிந்தது.
புகைப்படங்கள் எல்லாம் நோக்கியா வழி நோக்கிய படங்கள். ;-)
ஆயிரங்கால் மண்டபம், இசைத்தூண் பற்ற்யெல்லாம் தொடர்புடைய மற்றொரு சென்றாண்டுப் பதிவிலேயே சொல்லியாகி விட்டதால், இம்முறை அங்கே செல்லவுமில்லை; இங்கே சொல்லவுமில்லை!
அந்த Complex Structure குடும்பச் சிக்கல்கள் என்று நீங்கள் கூறுவதற்கு Solid Proof வேண்டும் ஐயா...!! பின்பே ஒத்துக் கொள்வோம்.
ஜில்ஜில் ஜிகர்தண்டா மீனாட்சி கோயிலை விட்டு ஷாப்பிங் முடித்து விட்டு வரும் போது வாங்கி அடித்தோம். கிர்ர்ர்ர்...!!
Vasanth:
Nice write-up.
Looking at a spot just to the left/bottom of the center of the complex structure picture, I could "see" a faded Lord (Bala) Krishna shape. The "complex structure" could be a Kalinga Narthanam (the snapshot of the dance of Lord Krishna on snake Kalinga, a regular feature for sculptors in Temples).
But even if it is that, it IS intriguing why the complex structure for the snake...
Again, I could be wrong...
Regards,
Arunn
ஏலே எங்க ஊருக்கு வந்துருக்க ?
என்கிட்ட ஒரு வார்த்தை சொல்லலையேடா
நானும் போன வாரம் மதுரைல தான் இருந்தேன்
அபோரம் அந்த சிக்கலான பாம்புகள் போன்ற அமைப்பை நானும் பார்த்து இருக்கேன்
இங்கு சீனாவில் - வூஹான் அருங்காட்சியகத்தில்
இந்த குறியிடுகள் விளக்கும் பல விஷயங்கள் மர்மமானவை
ஏலே எங்க ஊருக்கு வந்துருக்க ?
என்கிட்ட ஒரு வார்த்தை சொல்லலையேடா
நானும் போன வாரம் மதுரைல தான் இருந்தேன்
அபோரம் அந்த சிக்கலான பாம்புகள் போன்ற அமைப்பை நானும் பார்த்து இருக்கேன்
இங்கு சீனாவில் - வூஹான் அருங்காட்சியகத்தில்
இந்த குறியிடுகள் விளக்கும் பல விஷயங்கள் மர்மமானவை
Dear Arunn sir,
Thanks for you kind infor and observation.
நாடோடி கண்ணா...
சாரிப்பா. நீ அங்கன தான் இருந்தேங்கறது தெரியாமப் போய்டுச்சு.
சரி வுடு. அடுத்த தபா வரச் சொல்லோ, பாத்துக்கலாம்.
உங்க ஊர்லயும் இது போல ஸ்ட்ரக்ட்சர் இருக்குன்னு சொல்றதனால, அது இன்னா மேட்டர்னு கொஞ்சம் விசாரிச்சு எளுது...!
என்னத்த எளுதறதுனு நீ கேட்டுக்கினு கீற இல்ல...?? ;-)))
Post a Comment