Friday, December 12, 2008

எந்தக் கேள்வி கேட்டாலும்..!

28.Jan.2006

ந்தக் கேள்வி கேட்டாலும், சில துளிகளில் விடையளைக்கிறது வானம்! எத்தனை முறை பூத்தாலும் அலுப்பதேயில்லை, ஈரம் குளித்த புல்வெளி! கருமையான கரு மையில் கரைந்த தார் ரோடுகளின் மேல் மஞ்சள் சாயம் அடிக்கின்றது மதிய வெயில்! நடக்கின்ற பாதையெங்கும் வாழ்ந்த வாழ்க்கையை விளம்பிச் செல்ல்ம், உதிர்ந்த சருகு!

நில்லாமல் நகர்ந்து கொண்டே இருக்கின்றது, வழியெங்கும் ஈரப்பந்தல் போடுகின்ற நதியலை! ஓயாமல் பறந்த பின்னும் ஓய்வு எடுப்பதில்லை வெள்ளை நாரைகள்! பழமை படர்ந்த சிலைகளை விழுங்கியவாறு காலத்தின் பாதங்களில் மிதிபட்டு வாழ்கின்றன கோயில்கள்!

ஏதும் சொல்லத் தோன்றாமல் மெளனத்தின் பாற்பட்டு நிற்கின்ற, மண்குதிரைகளாய், எல்லைகளில் காவல் நிற்கின்றன, என் வார்த்தைகள்! பற்றிக் கரைந்த கறுப்புத் திரைகளின், சாயல் அருகில் காலங் காலமாய்க் காத்திருக்கின்றன காவல் தெய்வங்களின் வாகனங்கள்!

மென்னொளி வந்து நனைக்கின்ற மேகத் தூறல்களில் சிதறுகின்றது, போன வருடம் காய்ந்து போன, தோட்டக் கிணற்றின் தண்ணீர்! வேறென்ன செய்ய, என்று கேட்டவாறு, மலைமுகடுகளின் பின்புறம் ஒளிந்து கொள்கிறது, துக்கத்தால், உன்னைத் தீண்டியும், தீண்டாமலும் இறந்து போகின்ற, இந்த மதிய ஒளியின் சூரியக் கதிர்..!

4 comments:

Karthik said...

POETIC PROSE?!
Nice.

//மென்னொளி வந்து நனைக்கின்ற மேகத் தூறல்களில் சிதறுகின்றது, போன வருடம் காய்ந்து போன, தோட்டக் கிணற்றின் தண்ணீர்!

:)

இரா. வசந்த குமார். said...

அன்பு கார்த்திக்...

நன்றிகள். உனக்கு இது போன்ற கவிதை வரிகள் பிடித்திருக்கின்றனவா..? மிக்க மகிழ்ச்சி.

இன்னும் பழைய கவிதைப் பதிவுகளை 'நீ... நான்... காதல்' பகுதியில் படித்துப் பார்க்கலாம்..!

பூச்சிபாண்டி said...

\\ஏதும் சொல்லத் தோன்றாமல் மெளனத்தின் பாற்பட்டு நிற்கின்ற, மண்குதிரைகளாய்\\

நிழலுக்குள் நுழைந்த நிஜம் .

நல்லா இருக்கு உரைநடை கவிதை

இரா. வசந்த குமார். said...

அன்பு பூச்சிபாண்டி...

நன்றிகள் தங்கள் வருகைக்கும், வாழ்த்துக்கும்..!