Sunday, December 14, 2008

IFFK - திரைகள் சொன்ன கதைகள்.

ரு படைப்பு என்பதன் காரணமும், காரியமும் என்ன..?

அனுபவக் கடத்தல். படைப்பாளி தான் அனுபவித்த ஒரு சிறு நிகழ்வையோ, ஓர் உறுத்தலையோ, ஒரு கற்பனையையோ யாருக்காவது 'இதைப் பாருங்களேன்.' என்று காட்டி மகிழ்தலே படைப்பின் காரணமாகவும், அந்த உணர்ச்சியை முடிந்த அளவிற்கு மனதில் ஏற்றி விடுவதும் தான் அதன் காரியமாக இருக்க வேண்டும் என்று நினைக்கிறேன்.

கதை, கவிதை, ஓவியம், இசை, நடனம் முதலான அத்தனை கலைகளின் அடிப்படை சாராம்சம் இந்தப் பகிர்தலே!

சினிமா என்ற மற்றுமொரு கலை வடிவத்தின் முற்றான அர்த்தமும் இது தான் என்பதை இந்த இரண்டு நாட்களில் கண்ட படங்களின் வழியாக உணர முடிந்தது.

கேரளத்தின் சர்வதேச திரைப்பட விழா, சூப்பர் ஸ்டார் ரஜினியின் பிறந்த நாள் அன்று துவங்கி, 19.டிசம்பர் அன்று முடியுமாறு இவ்வருடம் ஏற்பாடு செய்யப்பட்டிருக்கின்றது. நகரின் மையப்பகுதியில் இருக்கும் கைரளி, ஸ்ரீ, அஜந்தா, க்ருபா, ரெம்யா, தன்யா, நியூ மற்றும் கொஞ்சம் தள்ளி உள்ள கலாபவன், தாகூர் தியேட்டர்களிலும், நிஷாகந்தி என்ற திறந்த வெளி அரங்கிலும் தினமும் ஐந்து காட்சிகள் உலகப் படங்கள் திரையிடப்படுகின்றன.

காலை 9, முற்பகல் 11, மதியம் 3, மாலை 6, இரவு 9 நேரங்களில்.

நேற்றும் இன்றும் பார்த்த படங்களில் இருந்து பிரமித்த காட்சிகள், கலங்கிக் கொண்டு நாசூக்காக கண்களைத் துடைத்துக் கொண்டேயிருந்த கணங்கள், வேறு ஏதேதோ நிலங்களுக்கு பயணித்துச் சென்ற பயணங்கள்....

வெளியே இருக்கும் உலகத்தினோடு முற்றிலுமாக மன அளவில் துண்டிக்கப்படுகிறோம். மெல்லிய ஏ.ஸி. குளிர் காற்றில் தடவுகின்றது. விரவியிருக்கும் எர்ர் ஃப்ரெஷ்னர் வாசம் நிரடுகின்றது. சற்று சாய்ந்து உட்கார்ந்து கொள்கிறோம். அரங்கின் மத்தியில் எரிந்து கொண்டிருக்கும் பிரகாச விளக்குகள் அணைக்கப்படுகின்றன. குட்டியாய்த் துளிர்த்துக் கொண்டிருக்கும் மின்மினி விளக்குகள் உயிரழக்கும் போது, திரையில் காட்சிகள் விரிகின்றன. மெல்ல அந்த உலகத்துக்கு நாம் இடம்பெயர்கிறோம்; அல்லது நமக்குள் அந்த உலகம் ஊடுறுவுகின்றது.

வாருங்கள்... IFFK திரைகள் எனக்குச் சொன்ன கதைகளைப் பார்ப்போம்.

2 comments:

Karthik said...

//வாருங்கள்... IFFK திரைகள் எனக்குச் சொன்ன கதைகளைப் பார்ப்போம்.

காத்திருக்கிறேன்.

இங்கே சென்னையிலும் ஒரு சினி ஃபெஸ்டிவல் வருகிறது என்று நினைக்கிறேன். முடிந்தால் செல்கிறேன்.
:)

இரா. வசந்த குமார். said...

அன்பு கார்த்திக்...

நெட் கனெக்ட் ஆகவில்லை கொஞ்ச நாட்களாக..! கூடிய விரைவில் படக் கதைகள், அனுபவங்கள் அணிவகுக்கும்.