Wednesday, December 24, 2008

சிராப்பள்ளிச் சிற்றுலா.

ன்று உடையானை, தீயது இலானை, நரை-வெள்ஏறு
ஒன்று உடையானை, உமை ஒருபாகம் உடையானை,
சென்று அடையாத திரு உடையானை, சிராப்பள்ளிக்-
குன்று உடையானை, கூற, என் உள்ளம் குளிரு(ம்)மே.

பதிகம்: 1:98
பண்: குறிஞ்சி
தேவாரம்.

முன்னிரவு 21:30க்கு வர வேண்டிய ஏர்பஸ் மிகத் தாமதமாக 22:30 மணிக்கு ஸ்டேஷன் ஃபவுண்டனில் திரும்பி, கைரளி தியேட்டர் ரோட்டில் கொஞ்சம் சென்று, ரிவர்ஸில் வந்து, களைத்த பயணியரைக் கொட்டி நின்ற போது, உள்ளே டி.வி.க்களில் ஸ்ரீமன் பேசிக் கொண்டிருத்தார். 'அருமை பெருமையா வளத்தமே என் தேசிங்கு ராசா.. இப்படி அக்ரகாரத்துல போய் வாக்கப்படப்..'

'யாரும் ஏறாதீங்க. எல்லார்க்கும் சீட் இருக்கு. வண்டிய கொஞ்சம் வாஷ் பண்ணிட்டு தான்..' கண்டக்டர். ட்ரைவர் இறங்கி முகம் கழுவிக் கொடார். என்னோடு, ஒரு இந்திக் குடும்பம். இறுக்கமான பேட், கவுனில் ஒரு சிறுமி. கையடக்க வீடியோ கேம்ஸ் கைப் பையன். சுடிதார் மனைவி. ஒரு கல்லூரி மாணவன். இரு கிழவர்கள்.

கொஞ்ச நேரத்தில் எல்லோரும் ஏறிக் கொண்டு, சிதறி அமர்ந்து கொண்டோம். ஜன்னல்கள் திறக்கப்பட்டும், அடைக்கப்பட்டும்! சீட் புஷ்பேக் வேலை செய்கிறதா என்று பரிசோதனை.

22:50க்கு பஸ் உறுமியது. மெல்ல நகர்ந்தது. திருவனந்தபுரம் சென்ட்ரல் ரெயில்வே ஸ்டேஷனில் கலைந்து கிடக்கும் ட்ராக்குகளின் மேல் தாவி நழுவும் ஓவர்பிரிட்ஜைக் கடந்து, கிள்ளிப்பாலத்தின் மீதேறி, நாகர்கோவில் ரோட்டில் சீராக ஓடத் துவங்கும் போது, கண்டக்டர் அருகில் வந்து, சீட் கம்பிகளில் சாய்ந்து நின்றார். முன்னூறு ரூபாய்களைக் கொடுத்து, ஏற்கனவே கணக்கிட்டு வைத்திருந்த போதும்,"லேட்டா கிளம்பறதுனால, சுமாரா எத்தனை மணி சார் ஆகும்..?"

"காலைல பத்து மணி ஆகும் திருச்சி போய்ச் சேர..!" என்றார்.



நெல்லையைக் கடந்து, விருதுநகர் தாண்டி, சாத்துரை நீங்கி, மதுரை செல்லும் நெடுஞ்சாலையில் பாதியை விழுங்கும் போதே, பூமியின் இந்தப் பகுதி சூரியனைப் பார்க்கத் துவங்க, வானத்தின் கீழ் எல்லை சிவக்கத் தொடங்கி விட்டது. பாதி வழியிலேயே சேதுவை நிறுத்தி விட்டிருந்ததால், புதிதாக வாங்கி இருந்த இயர்போனில் (ஒரிஜினல் ப்ரைஸ் 250 ரூ. உங்களுக்காக 10 ரூ. ரிடக்ஷன் பண்ணிக்கறேன்.), தொகுத்து வைத்திருந்த கதம்பப் பாடல்கள் மீண்டும் மீண்டும் லூப்பில் உலா வந்து கொண்டிருக்க, அவ்வப்போது இடையே எஸ்.வி.சேகர் எம்.எல்.ஏ.வின் 'யாமிருக்க பயமேன்'.

மாட்டுத் தாவணியில் நுழைந்தது.பொலபொலவென புலர்ந்து விட்டிருந்தது. டீக்கடைகளில் சூடாக நுரைகள் பொங்கிக் கொண்டிருந்தது. சூடான மெது வடைகள், பக்கோடாக்கள், நாளிதழ்கள், மறைவான சிறுநீர்க் கழிப்பிடங்கள். நீல குப்பை ப்ளாஸ்டிக் பக்கெட்கள் அழுக்கடைந்திருந்தன. தாடியும், சந்தனப் பொட்டுக்களுமான மாலை போட்டிருந்த ஆட்டோ டிரைவர்கள், இறங்கியவுடன் சூழ்கிறார்கள். களைத்த காற்றுப் பேருந்துகள் ஆங்காங்கே செருகிக் கொண்டு நின்றன. சி.டி. கடையில் இருந்து 'வில்லு' கிளம்புகின்றது.

பசித்ததால், சில வடைகள் வாங்கி உள்ளே தள்ளிக் கொண்டேன். அது தான் வம்பாகிப் போய் விட்டது.

வண்டி ஸ்லோ பிக் அப் என்பதால் தான் இவ்வளவு லேட் என்றார் ட்ரைவர். "பத்து மணிக்குப் போயிடலாம்..."

கூட ஒரு மாணவர் வந்தார். சின்னப் பையனாய், ஒல்லியாய், வெடவெடப்பாய், பூனை மீசைகள் போல் வைத்திருந்தவரிடம்,

"நீங்க ஃபர்ஸ்ட் இயரா..?"

"இல்ல. fourth year. ஏரோநாட்டிகல் எஞ்சினியரிங்.."

ஜெர்க்கடித்து, "பார்த்தா அப்படி தெரியலயே. ஸ்கூல் பையன் மாதிரியே இருக்கீங்க. எப்படி இப்படி யூத்தாகவே இருக்கீங்க..?" வடைப் பொட்டலத்தைப் பிரித்தவாறே கேட்டேன்.

ஆட்காட்டி விரலால் வடைகளைச் சுட்டிக் காட்டி,"இதை எல்லாம் நான் சாப்பிடறதில்லை.."

மேலும் கிழக்கு நோக்கிப் பயணம் துவங்கித் தொடர்ந்து, மேலூர், துவரங்குறிச்சியைத் தொலைத்து, திருச்சி ஜங்ஷனை அடைந்து, மத்திய பேருந்து நிலையத்தைத் தொட்டு நிற்கும் போது, சரியாக சனிக்கிழமை காலை 10:10. வடைகளின் புண்ணியத்தில் வயிறு கலக்கத் தொடங்கி இருந்தது.



திருச்சிராப்பள்ளி ஒரு வசீகரமான ஊர்.

நகரப் பேருந்து நிலையம் சுற்றி எத்தனை கல்லூரிகள்! ஒரு குளத்தைச் சுற்றி, மூன்று நான்கு அறைகளில் சரக்குகள். கவிழ்த்துப் போட்ட குடைகளில் வட்ட வரிசைகளில் வாட்சுகள். சாலைகளில் அலட்சியமாக கடக்கும் மாடுகள். கறுப்பாய், வெடவெட கால்களோடு சிக்னலை மீறும் ஆடுகள். அகண்ட காவேரி என்ற வெண் மணல் பிரதேசம். தியேட்டர் காம்ப்ளக்ஸ்கள். ரெயில்வே ட்ராக்குகள். கந்தக வெயில். கால் ரிக்ஷாக்களும், ஸ்க்ரீன் மூடிய ஒல்லி ஆட்டோக்களும் உயிர்த்திருக்கின்ற மிகச் சில நகரங்களில் ஒன்று. மலை உச்சி சைவக் கோயில்கள். ஆற்றுத் தீவில் வைணவப் பெரும் கோயில். நீரிலேயே மூழ்கி இருக்கும் சிவத் தலம். ஆடி வெள்ளிகளில் நிறையும் மாரி ஆலயம். நகரின் நிழல்கள் சட்டென்று மடிந்த பிறகு பச்சை வயல்கள் படர்ந்திருக்கும், மலைக்கோட்டையைச் சுற்றி அமைந்திருக்கும் மகாநகர்.



இரண்டு நாட்களில் சனிக்கிழமை இரவு ஸ்ரீரங்கமும், ஞாயிறு காலை மலைக்கோட்டையும் சென்று வந்து விட்டு, மதியம் கிளம்பி விட்டேன்.



அண்ணா சிலை பஸ் ஸ்டாப்பில் 1-ம் தட பஸ்ஸைப் பிடித்து, காவிரிப் பாலத்தைக் கடந்து, இடது புறம் வெட்டி (பெரியார் நகர்... திருவானைக்கா கோயில் போறவங்க எறங்கிக்கோங்க..!) சென்று, தெற்கு கோபுரத்தில் இறங்கிக் கொண்டோம்.

திருவரங்கத்தில் கூட்டம் அள்ளுகின்றது. மார்கழி மாதம். சனிக்கிழமை. ஐயப்ப பக்தர்கள் கூட்டம் தான் எங்கிலும்! நாங்கள் சென்ற நேரம் தரிசனம் இல்லாத நேரம் (18 - 19:00). இலவசத் தரிசனத்தில் நீண்ட நேரமாக நின்று, தெலுங்குப் பெண்களின் இடைபுகுதலைத் தடுத்து, கருஞ் சட்டைக் காரர்களின் பல கோஷங்களைக் கேட்டு, பொதுக் க்யூவில் நுழைந்தோம். இரண்டு சுற்றுகள் கடந்து, பள்ளி கொண்ட பெருமாளை, அரங்கநாதனைக் கண்ணாரக் கண்...அதற்குள் வெளியே திருப்பப்பட்டு, தங்கக் கோபுர பிரகாசத்தின் அடியில் விழுந்தோம்.

அணியார் பொழில்சூழ் அரங்க நகரப்பா!
துணையேன் இனிநின் அருளல்ல தெனக்கு
மணியே! மணிமாணிக்கமே! மதுசூதா!
பணியா யெனக்குய் யும்வகை, பரஞ்சோதீ!
- பெரிய திருமொழி 11-8-8
(திருமங்கையாழ்வார்)

இரவு நெடு நேரம் ஆகி விட்டிருந்தபடியால், தாயார் சன்னிதியை மூடி இருந்தார்கள். கோதண்டராமர், பட்டாபிராமர் சன்னிதிகளும் அவ்வணமே இருந்தன. சனிக்கிழமை சக்கரத்தாழ்வார் தரிசனம் நல்லது என்று சொல்லப்பட்டிருந்ததால், அவசர அவசரமாகச் சென்று 21:40க்கு மேல், நாளின் கடைசி பூஜையை அட்டெண்ட் செய்தோம்.

சுற்றி வரும் போது, பகல் பத்து விழாக்கள் நடந்து கொண்டிருந்தன. மஞ்சல் சோடியம் வேப்பர் லைட்டின் ஒளியின் கீழ், சுற்று மதில் அருகில் ஒருவர் கதாகாலேடபம் செய்து கொண்டிருக்க, மொட்டை அடித்த கூட்டம் ஒன்று ஆயிரம் கால் மண்டபத்தில் என்ன இருக்கின்றது என்று தேடிக் கொண்டிருந்தது.

தயிர் சாதம், புளியோதரைப் பிரசாதங்கள். அன்னமூர்த்தி ஃபோட்டோ. ஏறத்தாழ சாத்தி விட்ட கதவைத் திறந்து கொண்டு வெளியே வந்தோம். நல்லவேளை காலணி பாதுகாப்பிடம் இன்னும் அடைக்கவில்லை. அணிந்து கொண்டு, மீண்டும் தெற்குவாசல் வழியாகவே பஸ் ஸ்டாப்பை அடைந்த போது, இரண்டடுக்கு கம்பி வேலிகளோடு படித்துக் கொண்டிருக்கும் பெரியார் சிலை.

திருவரங்கத்தில் சில ஸ்நாப்கள்::













தெப்பக்குளத்தின் கிழக்குக் கரையில் பல புத்தக நிலையங்கள் இருக்கின்றன. அகஸ்தியர், இண்டர்நேஷனல், லிப்கோ, சைவ சித்தாந்த மட புத்தகாலயம். ஆங்காங்கே சில புத்தகங்கள் வாங்கிக் கொண்டு வந்து, சாரதாஸில் சில துணிகள் பொங்கலுக்காக எடுத்துக் கொண்டோம்.

பின் மலைக்கோட்டை சென்றோம்.

இந்தப் பதிவிலேயே விளக்கமாக எழுதி விட்டதால், இங்கே சில போட்டோக்கள் மட்டுமே!













* ஒரு மலேஷிய சுற்றுலாக் கூட்டம் வந்திருந்தது. பக்திப் பரவசம் மேலிடப் பாடல்கள் பாடினார்கள். கழுத்தில் தொங்கிக் கொண்டிருந்த அடையாள அட்டைகள். நெற்றி முழுதும் பல அடையாள்ச் சின்னங்கள். மலேஷியச் சிறுவர்கள் கைகளில் வைத்திருந்த நவீன கேமிராக்களில் மகேந்திரவர்மர் செதுக்கிய கல்வெட்டுகளைச் சிறைப்பிடித்தார்கள். கனம் ஏறிய சுடிதார் ஆண்ட்டிகள், டிஷர்ட் பிதுங்கிய அங்கிள்கள் என நகரச் சுவடுகள் பூண்டிருந்தனர்.



* காற்று பிய்த்துக் கொண்டு போகின்றது, ஜன்னல்கள் வழியாக. வேப்ப மரங்களின் அடியிலிருந்து பார்க்கும் போது, மாநகரத்தின் பல் வரிசை வீடுகளையும், பரந்த காவேரி நிலத்தையும், ரயில் மற்றும் ரோட்டுப் பாலங்களையும், கோபுரங்கள் எழுந்த திருவரங்க நிலத்தையும் பார்க்க முடிந்தது.



* உச்சிப் பிள்ளையாரின் கருவறையின் மேல் வைத்திருந்த போர்டில், ஆங்கிலப் பிள்ளையார், பிள்ளியாராக ஆகியிருந்தார். இவ்வளவு நாளாக ஏன் யாருக்கும் இது கண்ணில் படவில்லை..?

* தாயுமானவர் சன்னிதிக் கதவில் வாத்சாயனர் சொன்ன ஒரு முறையின் சிற்பம் பார்த்தேன்.

* படி ஏறும் போது, ஓரிடத்தில் தாயுமானவர் கதையை விளக்கி ஒரு வினைல் போர்டு வைத்திருக்கிறார்கள். நம் தமிழ்க் குலக் கொழுந்துகள் பால் பாய்ண்ட் பென்களால் தம் உளம் கவர் கள்ளிகளின் திருப்பெயர்களை இணைத்துக் கிறுக்கி இருந்தார்கள். ஓர் இடம் பாக்கி இல்லை. சிவலிங்கம், அம்மன் முகம்..! ம்ஹூம்..! எதுவும் தப்பவில்லை. கல்வெட்டு வைக்கும் அளவிற்குச் செய்ய இயலாத இவர்கள் செய்யும் இது போன்ற காரியங்களையும், அதனைக் கண்டுகொள்ளாது இன்னும் அப்படியே வைத்திருக்கும் திருக்கோயில் நிர்வாகத்தையும் என்னவென்று வைவது?



* மெளனகுரு மடத்தைச் சேர்ந்த பசுபாதுகாப்புத் தொழுவத்திற்குச் சென்று, வாங்கி வைத்திருந்த கீரைத் தண்டுகளைக் கொடுத்து மகிழ்ந்தோம். பசு மாடுகளைத் தடவிக் கொடுத்தோம். கொஞ்ச நேரம் ராமராஜன் ஃபீலிங் வந்தது.





திருச்சியில் இருந்து நான்கு மணிக்குக் கிளம்பி மதுரை வந்து சேர்ந்து, ஊருக்கு வந்திருந்த தமிழ்ப்பறவையைச் சந்தித்துப் பேசினேன். அவர் எனக்காக வெகு நேரமாகக் காத்திருந்து, சுற்றி விட்டு, மதுரை காந்தி ம்யூசியம் சென்று சில புத்தகங்கள் வாங்கி வந்திருந்தார். கொடுத்தார். சந்தித்த ஞாபகத்திற்காக நாங்கள் அமர்ந்து பேசிய இடத்தின் அருகில் இருந்த ஒரு குப்பைத் தொட்டியைப் படம் எடுத்துக் கொண்டேன். சில விஷயங்கள் பேசி விட்டு, பதினொரு மணிக்கு நாகர்கோயில் பேருந்தைப் பிடித்தேன்.



***

ஹிஷாம் அப்பாஸின் ஒரு பாடல்.

11 comments:

Karthik said...

நிறைய ட்ராவல் பண்ணுவீங்களோ? தொடர்ந்து பண்ணுங்க. அட்டகாசமான பதிவுகள் படிக்க கிடைக்குது.
:)

//ஆற்றுத் தீவில் வைணவப் பெரும் கோயில்.

வாவ், ஸ்ரீரங்கம் போயிருந்தீங்களா? எனக்கு ரொம்ப பிடிச்ச கோயில், பிடிச்ச கடவுள்.

//அகண்ட காவேரி என்ற வெண் மணல் பிரதேசம்.

:(

Karthik said...

//மணவர்

ஒல்லியா இருந்ததாலா?

தப்பா எடுத்துக்காதீங்க. ச்சும்மா தோணுச்சு.
:)

இரா. வசந்த குமார். said...

அன்பு கார்த்திக்...

நன்றிகள். ஊர்சுற்றி என்றே சொல்லலாம். லேபிளில் 'பயணம்' க்ளிக் செய்தால், இன்னும் கொஞ்சம் ஊர் சுற்றிய அனுபவங்கள் படிக்கக் கிடைக்கும். மற்றுமொரு திருச்சிப் பதிவை, இப்பதிவிலேயே க்ளிக்கிப் படிக்கலாம். எனக்கும் திருவரங்கம் மிகப் பிடிக்கும்..!

மணவர் இப்போது கால் முளைத்து, மாணவர் ஆகி விட்டார். :)

anujanya said...

சுவாரஸ்யம். சுவாரஸ்யம். வாத்தியார் நெடி இருந்தாலும் இது இன்ன இலக்கியப் படைப்பா! பயணக் கட்டுரை தானே. ஆதலால் சுவாரஸ்யம் மிக அவசியம். ரொம்ப நல்லா இருக்கு வசந்த்.

அனுஜன்யா

இரா. வசந்த குமார். said...

அன்பு அனுஜன்யா...

மிக்க நன்றிகள்..!!

மணிகண்டன் said...

vasanth, you have written it beautifully !

வினோத் கெளதம் said...

அழகா சுவரஸ்யமா எழுதி இருக்கீங்க..

இரா. வசந்த குமார். said...

அன்பு மணிகண்டன்...

very much thanks for your kind words....!!!

***

Dear Vinoth Gowtham...

மிக்க நன்றிகள்....!!!

Unknown said...

Great attempt
Keep going my dear friend
V people who stay away from these palces live with these images.
Thank you

Kannan said...

மிகவும் அருமை

Anonymous said...

ரசித்து படித்தேன். அழகாய் எழுகிறீர்கள்.

சில இடங்களில் கொஞ்சம் judgmental-ஆக எனக்கு தோன்றுகிறது. சிறுமியின் இறுக்கமான உடை, மலேசியப்பெண்மணிகளின் கனத்த உடல், பற்றிய விமர்சனங்களை தவிர்த்திருக்கலாம்.